|
|||||
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புதிய தென் மண்டலத் தலைவரானார் பி.அமுதா |
|||||
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புதிய தென் மண்டலத் தலைவராக பி.அமுதா சனிக்கிழமை பொறுப்பேற்றார். சென்னை ராணி மேரி கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்ற பி.அமுதா, 1991-ம் ஆண்டு முதல் வானிலை ஆய்வு மையத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு பி.எச்டி பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016-ம் ஆண்டு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றவர் எஸ்.பாலசந்திரன். 2018-ம் ஆண்டு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் என்ற உயர் பதவியையும் அடைந்தார். 6 ஆண்டுகளுக்கு மேல் இப்பதவியில் பணியாற்றிய இவர், 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். இவர் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருந்தபோது, வானிலை நிலவரங்களை, அதன் இணையதளத்தில் தமிழில் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தினார்.
அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை நிலவரம் வெளியிடுதல், சமூக வலைத்தளங்களில் வானிலை முன்னறிவிப்புகளை உடனுக்குடன் தமிழில் வெளியிடுதல் போன்ற சேவைகளையும் அறிமுகப்படுத்தினார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் அதிக அளவில் வானிலை தரவுகளைப் பெறுவது மற்றும் வானிலை கணிப்பை மேம்படுத்த ஏராளமான கருவிகளை நிறுவினார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின், சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள எக்ஸ்-பேண்ட் வகை ரேடாரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது, வானிலையைக் கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அப்போது இஸ்ரோவுடன் இணைந்து, உள்ளூர் தொழில்நுட்பத்தில் உதிரிப் பாகங்களை உருவாக்கிச் செயல்பட வைத்தவர். மேலும் எக்ஸ்-பேண்ட் வகை ரேடாரையும் பள்ளிக்கரணையில் நிறுவ நடவடிக்கை எடுத்தார். இவரது நடவடிக்கையால் சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவது மேம்பட்டது குறிப்பிடத்தக்கது.
|
|||||
by on 01 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|