LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இவர்களுக்குப் பின்னால் (Behind These People)

இவர்களுக்குப் பின்னால் (அன்னை சாரதாதேவி) - பகுதி 2

 

இவர்களுக்குப் பின்னால் - பகுதி 2  
behind-these-people-2
சூர்யா சரவணன் 

இவர்களுக்குப் பின்னால் -  (அன்னை சாரதா தேவி) பகுதி 2 


-சூர்யா சரவணன் 

 

 

              ஷோடசி பூஜை  

                     

 

   பலஹாரிணி காளி பூஜை அன்று வழிபட்டால் தனது வினைப் பயன்கள் அனைத்தையும் அழித்துவிடும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் அந்நாளில் இருந்தது.  

 

     காளி பூஜை அன்று ஸ்ரீராமகிருஷ்ணர் சாரதா தேவியை அழைத்தார். காளி அமர வேண்டிய இடத்தில் சாரதாதேவியை அமரவைத்தார். அவருக்குப் பூக்களைச் சூடிக் காளிக்குச் செய்யவேண்டிய அனைத்து பூஜைகளையும் தனது மனைவிக்குச் செய்தார். மனைவியை பராசக்தியின் உருவமாகவே பாவித்தார்.  

 

  ‘‘ அம்மா! அண்ட சராசரங்களை ஈன்ற பின்பும் நித்தியக் கன்னியாகத் திகழ்பவளே! அனைத்து ஆற்றல்களின் உறைவிடமே! அழகின் இருப்பிடமே! பூரணத்துவத்தின் கதவுலகை எனக்குத் திறந்துவிடு. இந்த மங்கையின் உடலையும் உள்ளத்தையும் புனிதப்படுத்து. எது மங்களமானதோ அதை அருள்’’ என்று பிரார்த்தனை செய்தார்.  

 

   பதினாறு வகையான பூஜைகளை செய்தார். முதலில் மந்திரங்கள் ஓதினார். அன்னையின் அங்கம் ஒவ்வொன்றையும் தன் மனதில் இருக்கும் காளி தேவியின் ஒவ்வொரு அங்கமாகக் கருதும் நியாஸம் என்ற சடங்கை செய்தார். அதற்கான மந்திரங்களை ஜபித்து வழிபட்டார். அன்னையின் பாதங்களுக்கு செம்பஞ்சுக் குழம்பைத் தீட்டினார். நெற்றியில் திலகமிட்டார். புதிய ஆடைகளை போர்த்தினார். இனிப்புப் பண்டங்களையும் தாம்பூலத்தையும் அன்னைக்கு ஊட்டினார். அன்னை அனைத்து வழிபாடுகளையும் ஏற்றார். பூஜையின்போது ஸ்ரீராமகிருஷ்ணரும் அன்னையும் பரவசநிலை அடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதாவை பராசக்தியாகப் பாவித்துவந்தார்.  

 

   ‘‘தேவியே... சிவபெருமானின் துணைவியே, மூன்று கண்களைப் படைத்திருப்பவளே, எல்லாக் காரியங்களையும் முடித்துத் தருபவளே! மங்களமான பொருட்கள் அனைத்திற்கும் மங்களகரமாக விளைபவளே! உன்னுடைய திருவடிகளில் மீண்டும் மீண்டும் விழுந்து வணங்குகிறேன்!’’

என்று ஓதியபடி அன்னையின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

 

    பராசக்தியின் உருவமாகவே அன்னையை பாவித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். இது இருவர் வாழ்க்கையிலும் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது. இருவரும் ஒன்றாக சமாதி நிலையையும் பரவச நிலையையும் அடைந்தனர்.

 

      திருமணமான புதிதில் அன்னையைப் பார்த்து என்னை உலக பந்தத்தில் இழுக்க வந்தாயா என்று கேட்டதற்கு அன்னை இல்லை உங்கள் ஆன்மிக வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்க வந்தேன் என்று கூறியிருந்தாரல்லவா? அதன்படியே சாரதா, ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்விற்கு உறுதுணையாக இருந்தார்.

 

    துறவு, இல்லறம் என்னும் இரு வாழ்வின் உயர்ந்த தத்துவங்களும் இணைந்த வாழ்க்கை ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை. பெண்ணாசை, பொன்னாசை இரண்டையும் துறக்க வேண்டும் என்பதே ஸ்ரீராமகிருஷ்ணரின் முக்கிய போதனையாக இருந்தது. ஒருவேளை ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் அன்னையின் வரவு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவர் உணர்வுகளைத் துறந்த கடின உள்ளம் படைத்த துறவியாக மட்டுமே இருந்திருக்கலாம். அவர் அன்னையிடம் கொண்டிருந்த அன்பு நிறைந்த இயல்பான உறவு, மண வாழ்க்கையை உடல் உணர்வைக் கடந்த ஆன்மிக வாழ்வாக அமைத்தது. ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதா தேவியை தன்னுடைய முதன்மையான சிஷ்யையாகவே கருதினார். அன்னை தூய வாழ்க்கை வாழ வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

 

      சாரதா தேவிக்கு மாதம் தோறும் ரூ.6 தேவைப்பட்டது, அதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் பலராம் போஸ் என்பவரிடம் ரூ.600 கொடுத்தார். அதற்கான வட்டி  ரூ.6ஐ மாதம் தோறும் சாரதாதேவிக்கு கிடைக்கச் செய்தார். அந்தத் தொகை அன்னையின் சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்தது.  அவருக்கு தங்க வளையல்கள் அணிய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன்படி அன்னைக்கு ரூ.300க்கு தங்க வளையல்கள் வாங்கிக் கொடுத்தார்.

 

   சீடர் யோகின்மா கூறுகையில், ‘‘அன்னை அகலமான சிவப்புக் கரையுடன் கூடிய புடவை அணிந்திருப்பார். தலை வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்வார். அவருடைய நீண்ட கருங் கூந்தல் ஏறக்குறைய  பாதத்தை தொடும் அளவிற்கு இருக்கும். தங்க அட்டியையும் மூக்கில் பெரிய தங்க வளையம் ஒன்றும் கைகளில் வளையல்களும் காதுகளில் கம்மலும்  அணிந்திருப்பார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

    ஒருநாள் அன்னை சாரதா, ஸ்ரீராமகிருஷ்ணருக்கு உணவு எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது அண்ணனின் மகள் லெட்சுமி வருவதாக கருதி, ‘துயி என்றார். வங்காளத்தில் துயி என்ற சொல், வேலைக்காரர்களை அழைக்கும் ‘‘அடி’’ என்ற பொருள் படியான மிகவும் மரியாதைக் குறைவான சொல்லாகும். ஆனால் அன்னை அதை அவமரியாதையாக நினைக்கவில்லை. ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர்.

 

   ‘‘ வந்தது நீயா? நான் லெட்சுமி என்று எண்ணிவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடு!’’ என்று கூறினார். ஆனாலும் ஸ்ரீராமகிருஷ்ணரின் மனம் சமாதானம் அடையவில்லை.

 

    மறுநாள், ‘‘ நான் உன்னை மரியாதை குறைவாக அழைத்துவிட்டதை நினைத்து எனக்கு இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் போய்விட்டது’’ என்று கூறி வருந்தியிருக்கிறார்.

 

 அன்னை சாரதா, ‘‘அடி’’ என்றுகூட தன்னை அழைக்க விரும்பாத தனது கணவரை எண்ணி மிகவும் மனம் நெகிழ்ந்துள்ளார். தனக்குப் பொன்னாசை இல்லாதபோதும் அன்னை ஆசைப்பட்டார் என்பதற்காக  வளையல் வாங்கித்தந்துள்ளார். அன்னையின் உணர்வுகளை மதித்து நடந்துள்ளார்.

   

   ஒருமுறை சாரதா தேவியின் அன்னை சியாமா சுந்தரி தன்னுடைய மகளுக்கு குழந்தைகள் இல்லையே என்று வருந்தினார். ஆனால் அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

 

   ‘‘ உங்கள் மகளுக்கு எண்ணற்ற குழந்தைகள் கிடைக்கப் போகிறார்கள். அவள் சலித்துப்போகின்ற அளவுக்கு ‘‘அன்னை! அன்னை!’’ என்று இரவு பகலாக இடையறாது அழைக்கப் போகிறார்கள்.’’ என்றார். ஸ்ரீராமகிருஷ்ணரின் வாக்குப்பளித்தது இன்று நாம் அனைவரும் சாரதாதேவியை அன்னை என்றுதானே அழைக்கிறோம்.

 

    ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணர் நோய்வாய்ப்பட்டிருந்தார். பிறர் உதவி இல்லாமல் நடக்கமுடியாத நிலையில் இருந்தார். அப்போது அன்னை சாரதா, ஸ்ரீராமகிருஷ்ணர் தனது அறையிலிருந்து ஓடுவதைக் கண்டார். அவருக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது அந்த நிகழ்ச்சி. நாம் பார்த்தது உண்மைதானா? என்ற கேள்வி  எழுந்தது. இது குறித்து அன்னை ஸ்ரீராமகிருஷ்ணரிடம் விசாரித்தார். அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்பதுபோல் முதலில் மறுத்தார். ஆனால் அன்னை விடவில்லை. தொடர்ந்து அந்த நிகழ்ச்சி குறித்துக் கேட்டார். அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன்னுடைய சீடர் ஒருவர் பேரீட்சை மரத்தில் இருந்து சாறு எடுக்க முயன்றார். அப்போது அந்த மரத்தின் கீழ் கொடிய பாம்பு ஒன்று இருந்தது. அவரைக் காப்பாற்றும் பொருட்டே தான் சென்றதாக கூறினார். தனது நோய்க்கு எதுவும் செய்யாமல் தனது சீடரை காப்பாற்றிய ஸ்ரீராமகிருஷ்ணரின் உயரிய உள்ளம் அன்னைக்குப் புரிந்தது.

 

    ஒருநாள் அன்னை சாரதாதேவொ உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பானை உடையும் சப்தம் கேட்டது. அன்னை கண் விழித்துப் பார்த்தார்.

அப்போது, கணவன் யார்? மனைவி யார்? இவ்வுலகில் யார் என் உறவினர் என்று பல்வேறு கேள்விகளுக்கு அவருக்கு விடை கிடைத்தது. மெல்ல மெல்ல சமாதி நிலைக்கு சாரதாதேவி சென்றதுடன் ஞானத்தை நோக்கி பயணமானார் அன்னை.

  

      ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அன்னை சாரதா செய்த சேவை அவரை ஞான நிலையை  அடையச் செய்தது. ஸ்ரீராமகிருஷ்ணருக்குப்பின் மடத்தை நடத்திச் செல்ல அனைத்து சக்தியும் அவருக்கு கிடைத்தது.

 

 

                 அன்னையெனும் நிரந்தர அடைக்கலம்

 

சகோதரி நிவேதிதை

 

 

  17 மார்ச் 1898.  என் வாழ்வில் ஒரு பொன் நாள். ஸ்ரீராமகிருஷ்ணரின் துணைவியான அன்னை ஸ்ரீசாரதாவை நானும் என்னுடன் வந்த மேலை நாட்டு சிஷ்யைகளும் அன்றுதான் முதல் முதலாக சந்தித்தோம்.

 

   சாரதாதேவி அப்போது 50 வயதை தாண்டாதவர் இந்து விதவையைகளைப்போல் வெள்ளைச்சேலை உடுத்தியிருந்தார். சேலையை முதலில் பாவாடையைப் போல் இடுப்பில் சுற்றி, அப்படியே மார்புப் பகுதிக்குக் கொண்டுவந்து தலையில் முக்காடு இட்டிருப்பார். பெரும்பாலான கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளைப் போல, ஆண்கள் வந்தால் முக்காடை இழுத்துவிட்டு முகத்தை முற்றிலுமாக மூடிக் கொள்வார். அவர்களுடன் நேரடியாக பேச மாட்டார், அங்கே நிற்கின்ற வயதான பெண்கள் யாராவது அவரது பக்கத்தில் நின்றுகொள்வார்கள். அவர்களிடம் மிக மெல்லிய குரலில் பேசுவார். அவர்கள் அதனை உறக்கக் கூறுவார்கள்.

  ஆண்கள் அவரை வணங்க வரும்போது பொதுவாக அறையின்வாசல் வரை மட்டுமே அனுமதிப்பார்கள். சில வேளைகளில் மட்டும் அவர்கள் உள்ளே வருவது உண்டு. பெண்கள் மட்டும் இருக்கும்போது அன்னை இருக்குமிடம் ஒரே அமர்க்களமாக இருக்கும். திடீரென ஒரு பக்தரொ துறவியோ வந்து, அன்னையை வணங்க ஆண்கள் வரப்போதாகத் தெரிவிப்பார்கள். அவ்வளவுதான் அறையின் நிலைமையே மாறிப்போய்விடும். பேச்சு மூச்சு நிற்கும். அங்குமிங்குமாகப் போவதும் வருவதும் நிற்கும். அனைத்துப் பெண்களின் முகத்திரைகளும் இறங்கும். எங்கும் ஓர் இறுக்கமான சூழ்நிலை உருவாகிவிடும். அன்னை அறையின் நடுவில் வாசலைப் பார்த்தபடி அமர்ந்து முகத்தைத் திருப்பி பக்கவாட்டில்

திருப்பிக் கொள்வார். எல்லாம் ஒரு கணத்திற்குள் அறை நிசப்தமாகிவிடும்,

 

    வருகின்ற பக்தர்கள் சிலர் வாசற்படியில் தலைவைத்து வணங்குவார்கள், சிலர் உள்ளே வந்து அன்னையை வணங்கி அவருடன் பேசுவார்கள். அன்னை தமது அருகில் நிற்கின்ற பெண்ணிடம் மிக மெல்லிய குரலில் தாம் தெரிவிக்கவேண்டியதைத் தெரிவிப்பார். அந்தப் பெண் அதைச் சற்று உரக்க கூறுவார். கடைசியில் அந்தப் பக்தர் விடைபெறும்போது அன்னை தமது கைகளைக் குவிப்பார். ஆசீர் வதிக்கிறார் என்பது அதன் பொருள்.

   அன்னையின் முன் யோசனையும் செயல்முறை அறிவும் அபாரமானது. ஸ்ரீராமகிருஷ்ணர் கூட தாம் எதையும் செய்யும் முன்பு அவரிடம் கலந்து ஆலோசிப்பது உண்டு. ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களோ அவரது அறிவுறைபடியே நடப்பார்கள்.

 

  எல்லையற்ற இனிமையின் இருப்பிடம் அன்னை. என்னவொரு தூய அன்பு! சிறுமியைப் போன்ற குதூகலத்துடன் அவர் சிரிக்கின்ற சிரித்தார்.

 

   சுவாமிஜி உடனடியாக வந்து எங்களைக் காணவேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வீட்டிற்குப் போய்விடுவோம் என்று கூறினேன். கூறியது மட்டுமல்ல புறப்படுவதற்காக செருப்பை அணிந்து கொள்வதற்கும் தயாராகிவிட்டேன். ஒரு துறவி, நான் புறப்படுவதைக் கண்டதும் அவசர அவசரமாகக் கீழே ஓடினார். அதைக் கண்டதும் அன்னை சிரித்த சிரிப்பு இருக்கிறதே எத்தனை இயல்பானது.  மென்மை என்றால் அப்படியொரு மென்மையானவர் அன்னை என் மகளே என்று என்னை அழைத்தார்.

 

  மிகுந்த ஆசாரம் படைத்தவர் அன்னை. ஆனால் மிசஸ் புல், மிஸ் மெக்லவுட்ன் ஆகிய இரண்டு வெள்ளையர்களைக் கண்டதும் ஆசாரம் எல்லாம் பறந்துவிட்டது! அவர்களை உற்சாகத்துடன் அழைத்து அவர்களுடன் அமர்ந்து உண்வருந்தினார். மற்றவர்கள் அதைக் கண்டு பிரமித்ததை அவர் பொருட்படுத்தவில்லை. இதையெல்லாம் கண்டபோது எங்களுக்கே எங்கள் மீது தனி மரியாதை தோன்றியது. இந்தியாவில் எனது பணி சிறப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு வேர் விட்டது. வேறு எதுவும் இத்தகைய ஒரு நம்பிக்கைத் தந்திருக்க இயலாது. இது சாதாரண விஷயமா என்ன?

 

  இந்தியப் பெண்மையின் லட்சிய நிறைவாக அன்னையை ஸ்ரீராமக்கிருஷ்ணர் கண்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. லட்சிய நிறைவு என்றால் அவர் பழைய தலைமுறையின் இறுதிச் சின்னமா? அல்லது புதிய தலைமுறையின் ஆரம்பமா? ஒரு மிகச் சாதாரணப் பெண் அடையக்கூடிய அறிவொளியும் இனிமையும் அவரில் கலந்திருப்பதைக் கண்டேன். அவர் ஒரு புனிதப் பெண்மணி. அந்தப் புனிதத்தைப் போலவே அவர் பிறருடன் பழகும் பாங்கும் பரந்து விரிந்த அவரது மனமும் அற்புதமானவை மிகச் சிக்கலான கேள்விகளுக்கு கூட பரந்த கருத்தை உள்ளடக்கிய பதில் தயக்கமோ தாமதமோ இன்றி அவரிடம் இருந்து வெளிவருவதைக் காணலாம். அந்த அமைதியின் ஒர் அற்புதப் பிரார்த்தனை அவரது வாழ்க்கை.

 

 பக்தருடன் நடந்த உரையாடல் 

 

 பக்தர்: அம்மா! பல அவதாரங்களில் அவதார புருஷர்கள் தங்கள் சக்தி அதாவது மனைவி மறைந்த பிறகே தன் உடலை விட்டார்கள். ஆனால் இந்த முறை ஏன் ஸ்ரீராமக்கிருஷ்ணபரம ஹம்சர் உங்களுக்கு முன்னதாக சென்றுவிட்டார்.

 

 அன்னை: மகனே! ஸ்ரீராமகிருஷ்ணர் உலகையே அன்னை வடிவமாகக் கண்டார். தாய்மையை உலகிற்கு எடுத்துக்காட்டவே என்னை விட்டுச் சென்றுவிட்டார். 

 

 

  -தொடரும்..............

 

 

by Swathi   on 30 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.