LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இவர்களுக்குப் பின்னால் (Behind These People)

இவர்களுக்குப் பின்னால் (கஸ்தூரிபாய் காந்தி) - பகுதி 3

 

இவர்களுக்குப் பின்னால் (கஸ்தூரிபாய் காந்தி) - பகுதி 2  
behind-these-people-ganthi-kasthuribai-3
சூர்யா சரவணன் 

இவர்களுக்குப் பின்னால் (கஸ்தூரிபாய் காந்தி) - பகுதி 3

 
-சூர்யா சரவணன் 

 

      ஆடவனும் பெண்ணும் அடிப்படையில் ஒன்றாயிருப்பதால் அவர்கள் பிரச்சனையும் முக்கியமான அம்சங்களில் ஒன்றே என்பது என் அபிப்ராயம். இருவருக்கும் ஆன்மா ஒன்றே. இருவரும் ஒரே வகையில் வாழ்கிறார்கள். இருவர் உணர்ச்சிகளும் ஒன்றாகவே உள்ளன. ஒருவர் மற்றவர் குறையைப் பூர்த்தி செய்பவர்: ஒருவரது உதவி இல்லாமல் மற்றவர் வாழ முடியாது.  

 

                                  மகாத்மா காந்தி. 

 

    காந்தியும், கஸ்தூரிபாயும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். இருவருக்கும் பத்து மாதங்கள்தான் வித்தியாசம். கத்தியவார் மாவட்டத்தில், போர்பந்தரில் கோகுலதாஸ் மகான்ஜி என்னும் புகழ் பெற்ற வியாபாரி செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். அவரது மகளாக 1869ல் கஸ்தூரிபாய் பிறந்தார். காந்தியின் தந்தை காபா காந்தி என்று அழைக்கப்பட்ட கரம் சந்த் காந்தி. போர்பந்தரில் திவான். மிகவும் புகழுடன் வாழ்ந்தவர். காந்தியின் தந்தையும், கஸ்தூரிபாயின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள். அவர்களது நட்பின் காரணமாக காந்திக்கும் கஸ்தூரிபாய்க்கும் திருமணம் செய்துவைக்க இருவரும் விரும்பினர். காந்தியின் 8வது வயதில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அந்நாட்களில் பால்ய விவாகம் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த சிறுவயதில் தங்களுக்கு நடப்பது நிச்சயதார்த்தம் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்தபோது காந்திக்கு 13 வயது. காந்தி, தனக்குப் படிப்புதான் முக்கியம் என்றும் திருமணம் வேண்டாம் என்றும் மறுத்தார்.  

ஆனால் காபாகாந்தி, ‘‘இந்த திருமணத்தால் உன் படிப்புக்கு எந்த இடையூறும் ஏற்படாது. திருமணம் என்ற சடங்கைத்தான் நாங்கள் நடத்தி வைக்கப் போகிறோமே தவிர நீங்கள் இருவரும் இல்லற வாழ்க்கை நடத்தப் போவதில்லை. என்னுடைய நண்பர் கோகுல்தாஸ் என்னைப்போலவே வயதானவர். எங்கள் காலம் முடிவதற்குள் உங்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க விரும்புகிறோம். எந்த விதத்திலும் உன்னுடைய படிப்புக்கு எந்த இடையூறும் ஏற்படாது’’ என்று உறுதியளித்தார்.  

 

    1882ல் காந்தி, கஸ்தூரிபாய் திருமணம் நடந்தது. இருவரின் குடும்பத்தினரும் செல்வந்தர்கள், புகழ்பெற்றவர்கள் என்பதால் இவர்கள் திருமணம் மிகவும் சிறப்பாகவே நடந்தது. விருந்து, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று இரண்டு நாட்கள் நடந்தது. ஏழை, எளிய மக்கள் தங்கள் வீட்டுத் திருமணம்போல் கருதி, மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். ஏழைகளுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டன. காந்தி, தான் விளையாடுவதற்கு ஒரு பெண் கிடைத்துவிட்டதாக நினைத்து மகிழ்ந்தாரே தவிர அது தனது வாழ்க்கைத் துணைவி என்று நினைக்கும் பக்குவம் அப்போது அவருக்கு ஏற்படவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் தொடரப்போகும் பந்தம் என்று காந்தி கருதவில்லை. 

 

    காலங்கள் உருண்டோடின. காந்தியும், கஸ்தூரிபாயும் கணவன், மனைவியாக வாழத் தொடங்கினர். அப்பொழுதுதான் காந்தியின் ஆணாதிக்கம் மெல்ல மெல்லத் தலைதூக்க ஆரம்பித்தது.  

 

  காந்தி திருமணமான புதிதில் தனது வாழ்க்கைப்பற்றி சத்திய சோதனையில் கூறியது.....   

 

  ‘‘எனக்கு திருமணமான காலத்தில் காலணா அல்லது ஒரு தம்படி விலையில் (அன்றைய விலை) வெளியான சிறு சிறு பிரசுரங்களை வாங்கிப் படிப்பது வழக்கம். தாம்பத்யம், சிக்கனம், குழந்தை மணம் ஆகியவை குறித்தெல்லாம் அந்நாட்களில் நான் கவலைப்படவில்லை. வாழ்நாள் முழுவதும் விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்பது கணவனின் கடமையாக கூறப்பட்டிருந்தது. அது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. சத்திய வேட்கையும் என்னுள் இருந்ததால் மனைவியுடன் மாறாக நடந்து கொள்வதற்கான வாய்ப்பே எனக்கு ஏற்படவில்லை. மேலும் சிறுவயதில் மனைவிக்கு துரோகம் செய்ய எந்த வாய்ப்பும் ஏற்படாது அல்லவே!  நான் மனைவியிடம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றால் அவளும் என்னிடம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.

 

   இந்த எண்ணம் என்னைச் சந்தேகம் கொண்ட கணவனாக ஆக்கிவிட்டது. அவள் உண்மையோடு நடப்பவளாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவளுடைய பக்தி விஷயத்தில் நான் சந்தேகம் கொள்ளக் காரணமே இல்லை. ஆனால் காரணங்களுக்காக சந்தேகம் காத்துக் கொண்டிருப்பதில்லை. ஆகவே அவள் செய்வதையெல்லாம் எப்பொழுதும் கவனித்து வரவேண்டியது அவசியம் அல்லவா? என் அனுமதி இல்லாமல் அவள் எங்கும் போகக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தேன். இது எங்களுக்குள் கடுமையான சச்சரவு ஏற்பட விதை ஊன்றியது.

 

  நான் விதித்து வந்த கட்டுப்பாடு உண்மையில் அவளுக்கு ஒரு வகையான சிறை தண்டனையே. இத்தகைய காரியத்துக்கு உடன் படக்கூடிய பெண்ணல்ல கஸ்தூரிபாய். தான் விரும்பிய இடங்களுக்கு விரும்பியபோதெல்லாம் செல்ல வேண்டும் என்று விரும்பினாள். அதன்படியே அவள் சென்றுவருவதில் பிடிவாதமாக இருந்தாள். நான் கட்டுப்பாடுகளை அதிகம் விதிக்க விதிக்க அவள் தன் இஷ்டம்போல் நடப்பது அதிகமாகிவிட்டது. அதனால் எனக்கு ஆத்திரமும் அதிகமாகிக் கொண்டே வந்தது. குழந்தைத் தம்பதிகளான எங்களுக்குள் ஒருவருடன் ஒருவர் பேசாமல் இருப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. என்னுடைய கட்டுத்திட்டங்களை கஸ்தூரிபாய் மீறியதில் யாதொரு தவறும் இல்லை என்று நான் இன்று எண்ணுகிறேன். கோயிலுக்குப் போகக்கூடாது என்றும் தோழிகளை பார்க்கக்கூடாது என்றும் தடை விதித்ததால் கள்ளம் கபடமற்ற பெண் அதை எப்படி சகித்துக் கொள்வாள்? அவளுக்கு கட்டுத்திட்டங்களை விதிக்க எனக்கு உரிமை உண்டு என்றால் அதே போன்ற உரிமை அவளுக்கும் உண்டு அல்லவா? அவை எல்லாம் எனக்கு தெளிவாக புரிகின்றன. ஆனால் அந்த வயதில் கணவனுக்கு உரிய அதிகாரங்களை செலுத்தியாக வேண்டும் என்றே நினைத்திருந்தேன். என்றாலும் எங்களது வாழ்க்கை மாறாத கசப்பு நிறைந்த வாழ்க்கையாகவே இருந்து வந்தது என்று வாசகர்கள் நினைக்க வேண்டாம். நான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கெல்லாம் என்னுடைய அன்பே காரணம். மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவள் உதாரணமாக விளங்கும்படி செய்யவே நான் விரும்பினேன். அவள் தூய வாழ்க்கை நடத்தி நான் கற்றவற்றை அவளும் கற்பதன் மூலம் இருவரது வாழ்க்கையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் அபிலாஷை.

 

   கஸ்தூரிபாய்க்கு அப்படிப்பட்ட அபிலாஷை ஏதாவது இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. அவள் எழுத படிக்க தெரியாதவள். கபடமற்ற தன்மையும் சுயேட்சை நோக்கும் விடா முயற்சியும் உடையவள். குறைந்தபட்சம் என் விஷயத்தில் மாத்திரம் பேச வெட்கப்படுவாள். தனது அறியாமை குறித்து அவளுக்கு கவலையே இல்லை. நான் படித்து வந்ததை அவளும் படிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் உற்சாகத்தை நான் அளித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆகையால் நான் கொண்டிருந்த அபிலாஷைகள் எல்லாம் என்னோடுதான் நின்றது என்றே எண்ணுகிறேன். அவள் ஒருத்தி மீது நான் என் முழு ஆசையும் வைத்திருந்ததைப்போல அவளும் என் மீது ஆசை வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படி அவள் ஆசை வைக்காமல் போனாலும் வாழ்க்கை மீளாத் துன்பமாக இருக்க முடியாது. ஏனெனில் ஒரு பக்கத்திலாவது தீவிரமாக அன்பு இருந்தது.

 

  அவளிடம் எனக்கு அடங்காப் பிரேமை என்பதை நான் சொல்ல வேண்டும். பள்ளிக்கூடத்தில் கூட எனக்கு அவள் நினைப்புதான். இரவானதும் அவளை சந்திக்கலாம் என்னும் நினைப்பு எப்போதும் மனதில் தோன்றிக் கொண்டே இருப்பேன். பிரிவு, சகிக்க முடியாததாகும். இரவு முழுவதும் அவளிடம் ஏதேதோ பேசி அவளைத் தூங்கவிடமாட்டேன். இத்தகைய அடங்காத காமவெறிக்கு மாறாக கடமையில் தீவிரப் பற்று மட்டும் எனக்கு இல்லாதிருந்தால் நான் நோய் வாய்ப்பட்டு அகால மரணம் அடைந்திருப்பேன். இல்லையெனில் பிறருக்கு பாரமாக இருந்து வாழ வேண்டியவனாகியிருப்பேன். ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கென்று இருந்த வேலைகளை நான் செய்து தீர வேண்டியிருந்தது. யாரிடமும் பொய் சொல்வது என்பது என்னால் ஆகவே ஆகாது. இந்த குணமே படுகுழியில் விழாமல் பலமுறை என்னை காத்தது.

 

    கஸ்தூரிபாய் எழுத்து வாசனை இல்லாதவள் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். அவளுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்பதில் மிகவும் ஆவலுடன் இருந்தேன். ஆனால் காமமே மேலோங்கி நின்றதால் கஸ்தூரிக்கு கல்வி போதிக்க எனக்கு நேரம் இல்லாமல் போனது. அவளுக்குப் படிப்பு சொல்லிக்கொடுப்பதாக இருந்தால் அவளது இஷ்டத்துக்கு மாறாக அதுவும் இரவில் தான் சொல்லித்தரமுடியும். பெரியவர்கள் இருக்கும்போது அவளைப் பகலில் சந்திக்கவே எனக்கு துணிவு இல்லை என்றால் அவளுடன் பேசுவது எப்படி? கத்தியவாரில் அப்போது ஒரு விசித்திரமான உபயோகமற்ற காட்டுமிராண்டித்தனமான பர்தா முறை (கோஷா முறை) இருந்தது. இப்பொழுதும் கூட அது ஓரளவுக்கு இருந்து வருகிறது. இவ்விதமான சந்தர்ப்பங்கள் சாதகமானவையாக இல்லை. ஆகையால் வாலிப பருவத்தில் கஸ்தூரிபாய்க்கு கல்வி கற்பிக்க நான் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பதை நான் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். காம தூக்கத்திலிருந்து நான் விழித்தெழுவதற்கு முன்பே பொதுவாழ்க்கையில் இறங்கிவிட்டேன். எனவே, எனக்குப்போதிய ஓய்வு நேரம் இல்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட உபாத்தியார்களைக் கொண்டு கஸ்தூரிக்கு போதிக்கவும் தயங்கிவிட்டேன். இதன் பயனாக இன்று கஸ்தூரிபாய் சிரமத்தின்பேரில் சாதாரண கடிதங்களை எழுதிக் கொள்ளவும் எளிய குஜராத்தியை மட்டுமே புரிந்து கொள்ளவும் முடியும். நான் அவளிடம் கொண்டிருந்த அன்பு மற்றும் காமக் கலப்பே இல்லாமல் இருந்திருந்தால் அவள் சிறந்த படிப்பாளியாக இருந்திருப்பாள். ஏனெனில் படிப்பதில் அவளுக்கு இருந்த வெறுப்பையும் அப்போது நான் போக்கியிருக்க முடியும். பரிசுத்தமான அன்பால் ஆகாதது எதுவும் இல்லை என்பதை நான் அறிவேன்.

 

    காமம் மிகுந்த அன்பால் ஏற்படும் நாசங்களில் இருந்து என்னை அநேகமாக காப்பாற்றிய சந்தர்ப்பத்தை மட்டுமே இங்கே சொன்னேன். குறிப்பிடத்தக்க மற்றொன்றும் உண்டு. நோக்கம் மாத்திரம் தூயதாக இருக்குமாயின் ஒருவனை இறுதியில் எப்படியும் கடவுள் காத்தருள்வார் என்பதை எத்தனையோ உதாரணங்கள் எனக்கு எடுத்துக்காட்டி இருக்கின்றன. இந்து சமூகத்தில் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கும் கொடிய வழக்கம் இருந்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளை ஓரளவுக்கு குறைக்கக்கூடிய மற்றொரு வழக்கமும் இருந்தது. இளம் தம்பதியர் நீண்டகாலம் சேர்ந்திருக்க பெற்றோர்கள் விடுவதில்லை. குழந்தை பருவ மனைவி வாழ்நாளின் பாதி காலத்தைப் பெற்றோர்கள் வீட்டிலேயே கழித்துவிடுகின்றனர். எங்கள் விஷயத்திலும் அப்படியே நடந்தது. அதாவது எங்கள் மண வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகளில் (13 முதல் 18 வயதுவரை) மொத்தம் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நாங்கள் சேர்ந்து இருந்ததில்லை. ஆறு மாத காலத்தை ஒன்றாக இருந்து கழித்திருப்போம். அதற்குள் என் மனைவியை அவளது பெற்றோர்கள் அழைத்துப்போய்விட்டார்கள். அப்படி அழைத்துப் போவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காமல்தான் இருந்தது. ஆனாலும் அப்படி அழைத்துச் சென்றதே எங்கள் இருவரையும் காப்பாற்றியது. 18வது வயதில் நான் இங்கிலாந்துக்கு போனேன். அதனால் எங்களுக்குள் ஏற்பட்ட நீண்ட பிரிவு  நன்மையே அளித்தது. இங்கிலாந்தில் இருந்து நான் திரும்பி வந்தபிறகும் கூட ஆறு மாதங்களுக்கு மேல் நாங்கள் சேர்ந்து வாழ்ந்ததில்லை. ஏனெனில் நான் ராஜ்கோட்டிற்கும் பம்பாய்க்கும் போய் வந்து கொண்டிருக்க வேண்டியிருந்தது. பிறகு நான் சிற்றின்ப இச்சையில் இருந்து பெரிதும் விடுபட்ட நிலையில் இருந்தேன்’’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

 

   பள்ளிக்கூடம் செல்லாத கஸ்தூரிபாய்க்கு குஜராத்தி எழுத படிக்க கற்றுக் கொடுத்தார் காந்தி. கொஞ்சம் கொஞ்சமாக தனது மனைவியை தனக்கு ஏற்றபடி தயார் செய்தார்.

 

   ராஜ்கோட்டிலும் பம்பாயிலும் வழக்கறிஞராக பணியாற்றி வந்த காந்தி, தனது மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தென்னாப்பிரிக்கா பயணம் ஆனார். அந்த நாட்களில்தான் காந்தியின் சமுதாயப்பணி தொடங்கியது. அத்துடன் ஒரு சைவ விடுதியையும் நடத்தி வந்தார். காந்திக்கு முன்கோபம் இருந்தது. அதையும் தாங்கியபடி கஸ்தூரி வாழ்ந்து வந்தார். பின்னாளில் காந்தி தனது முன் கோபத்தை குறைத்துக் கொண்டார். முழுமையான இல்லத்தரசியாக கஸ்தூரி திகழ்ந்தார். காந்தி, இந்தியர்களுக்காக பல வழக்குகளில் ஆஜரானார். அதன் மூலம் காந்திக்கு ஒரு தங்கச் சங்கிலி பரிசாகக் கிடைத்தது. ஆனால் காந்தி அதை வாங்க மறுத்தார். பொன், பொருளில் கஸ்தூரிக்கு முதலில் ஆசை இருந்தது. அவளும் பெண் தானே.

 

கணவர் தங்கச் சங்கிலியை வாங்காமல் மறுத்ததற்கு ஏதேனும் காரணம் இருக்கும் என்று கஸ்தூரி அமைதியாக ஏற்றுக்கொண்டார்.

 

          கஸ்தூரிபாயின் முதல் போராட்டம்:

 

     கிறிஸ்தவ மத சடங்குகளின் அடிப்படையில் நடைபெறும் திருமணங்கள் மட்டுமே பதிவு அலுவலகங்களில் பதிவு செய்ய முடியும். பிற மத திருமணங்கள் பதிவு செய்ய முடியாது என்று கேப்டவுனில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதை எதிர்த்து மக்கள் கொந்தளித்தனர். அந்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்று அரசாங்கத்துக்கு காந்தி கடிதம் எழுதினார். ஆனால் காந்தியின் கடிதத்தை தென்னாப்பிரிக்க அரசு ஏற்கவில்லை. எனவே பீனிக்ஸ் ஆசிரமத்தில் அனைவரும் ஒன்று கூடிப்போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அறப்போராட்டம் மூலமாக அரசை பணியவைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த போராட்டத்துக்கு காந்தி, கஸ்தூரிபாயை அழைக்கவில்லை.

அப்போது அவர்,  ‘‘என்னை அறப்போராட்டத்துக்கு அழைக்கக் கூடாதா? என்னால் அறவழியில் போராட முடியாது என்று கருதிவிட்டீர்களா? மற்றவர்களிடம் இது பற்றி பேசி முடிவு செய்யும்போது என்னிடம் ஏன் நீங்கள் கேட்கவில்லை. என்னை ஏன் போராட்டத்திலிருந்து விளக்கி விட்டீர்கள்?’’ என்று கேட்டார்.

 

 அதற்கு காந்தி, ‘‘உன்னை அழைக்கக் கூடாதென்றோ உன்னையும் போராட்டத்தில் ஈடுபடுத்த கூடாதென்றோ எனக்கு எந்த எண்ணமும் இல்லை. இந்த போராட்டத்தில் சிறைவாசம் உண்டு. சிறை வாசம் உனக்கு வேண்டாம் என்று நினைத்தேன்’’ என்றார்.

 

   ‘‘நீங்களும் மற்ற பெண்களும், ஏன் நமது குழந்தைகளும் கூட போராட்டத்தில் ஈடுபடும்போது நான் மட்டும் வீட்டில் சும்மா இருப்பது நியாயமா? நானும் போராட்டத்தில் ஈடுபட விரும்புகிறேன்’’ என்றார். அதற்கு காந்தி, ‘‘மீண்டும் நன்றாக யோசனை செய்து கொள். போராட்டத்தில் இறங்கிவிட்டு பின்பு வருத்தப்படாதே!’’ என்று காந்தி, மனைவியை எச்சரித்தார். ஆனால் கஸ்தூரிபாய் போராட்டத்தில் கலந்து கொள்வதில் மிகவும் உறுதியாக இருந்தார். அந்தப் போராட்டத்தில் கஸ்தூரிபாய்க்கு 3 மாதம் சிறை தண்டனை கிடைத்தது. இதுதான் கஸ்தூரிபாயின் முதல் போராட்டம் ஆகும்.

 

    1915ம் ஆண்டு இந்தியா வந்த காந்தி, அகமதாபாத்தில் குடும்பத்துடன் குடியேறினார். ‘‘சபர்மதி’’ என்னும் இடத்தில் சத்யாகிரக ஆசிரமத்தை நிறுவினார். வசதியாக வாழ்ந்த கஸ்தூரிபாய் மெல்ல மெல்ல ஆசிரம வாழ்க்கைக்கு திரும்பினார்.

 

   ஒருமுறை சம்பரான் மாவட்டத்தில் காந்தியுடன் கஸ்தூரிபாய் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அங்குள்ள குடிசையில் வசிப்பவர்களை நேரடியாக சந்தித்தார். குடிசைகளை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்வது என்று ஆலோசனை வழங்கினார். அந்தப் பெண்கள் மாற்றுப் புடவைகூட இல்லாமல் வாழ்ந்ததைக் கண்டு மனம் வருந்தினார்.

 

  1919ம் ஆண்டு ஆங்கிலேய சாம்ராஜ்யத்திற்கு இந்திய ஒத்துழைப்பு தேவை என்றும் போர்ப்படைக்கு ஆட்கள் வேண்டும் என்றும் ஆங்கிலேய அதிகாரிகள் காந்தியை கேட்டுக் கொண்டனர். காந்தி, போர்ப்படைக்கு ஆட்கள் சேர்க்க கொய்ரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். கடுமையான பணியின் காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டார். ஆசிரமத்துக்கு அழைத்து வந்து அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் காந்தி பால் அருந்தவேண்டும் என்று கூறினர். ஆனால் அதற்கு அவர் மறுத்தார். பின் கஸ்தூரிபாயின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து ஆட்டுப்பால் அருந்த சம்மதித்தார்.

 

       கஸ்தூரிபாயின் தீரம்

 

      காந்தி கூறுகையில், ‘‘என்னுடைய மனைவி தனது வாழ்க்கையில் மூன்று முறை கடுமையான நோய்வாய்ப்பட்டு மரணத்தின் வாயிலுக்கு சென்று திரும்பினாள். குடும்ப வைதீக முறையினாலேயே அவள் குணமடைந்தாள். சத்யாகிரகம் நடந்து கொண்டிருந்தபோதோ ஆரம்பம் ஆகும் சமயத்திலோ அவள் முதல் முறையாக கடுமையான நோய்க்கு ஆளானாள். அவளுக்கு அடிக்கடி ரத்த நஷ்டம் ஏற்பட்டது. ரண சிகிச்சை செய்வது அவசியம் என்று ஒரு வைத்திய நண்பர் கூறினார். முதலில் கொஞ்சம் தயங்கினாள். எனினும் பிறகு சம்மதித்தாள். அதிகப் பலவீனமாக இருந்ததால் மயக்க மருந்து கொடுக்காமல் டாக்டர் ரண சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது. ஆனால் அவள் அதிக நோவை அனுபவிக்க வேண்டி இருந்தது. நானே அதிசயத்தக்க தீரத்துடன் அதை அவள் சகித்துக் கொண்டாள். டாக்டரும் அவருக்கு தாதியாக இருந்து பணிவிடை செய்தார். அவரது மனைவியும் கஸ்தூரிபாயை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டனர். இது டர்பனில் நடந்தது.

   பிறகு நான் ஜோகன்ஸ் பர்க் போக டாக்டர் அனுமதித்தார், அவள் குறித்து மிகவும் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் அவளுடைய உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது என்று சில தினங்களுக்கெல்லாம் எனக்கு ஒரு கடிதம் வந்தது. படுக்கையில் உட்காரக் கூட கஸ்தூரியின் உடலில் பலம் இல்லை என்று அறிந்தேன். என்னுடைய சம்மதமில்லாமல் அவளுக்கு மாமிசம் கொடுக்கக்கூடாது என்பது டாக்டருக்குத் தெரியும். ஜோகன்ஸ்பாக்கில் என்னுடன் டெலிபோனில் பேசிய டாக்டர், கஸ்தூரிக்கு மாட்டு மாமிச சூப் தரவேண்டும் என்றும் அதற்கு என் அனுமதி வேண்டும் என்றும் கேட்டார். அதற்கு நான் அனுமதிக்க முடியாது என்று கூறினேன்.

  இந்த விஷயத்தில் நோயாளியின் விருப்பத்தை கேட்க நான் மறுக்கிறேன். நீங்கள்தான் இதில் அபிப்பிராயம் கூறவேண்டும். நான் கொடுக்க விரும்பும் ஆகாரத்தை கொடுக்கும் சுதந்திரத்தை எனக்கு அளிக்க நீங்கள் தர மறுப்பதால் உங்கள் மனைவியின் உயிருக்கு நான் பொறுப்பாளியாகமாட்டேன்’’ என்று கடுமையாக எச்சரித்தார். 

 

   அன்றே, ரயில் மூலம் டர்பனுக்குப் புறப்பட்டுச் சென்றேன். டாக்டரைச் சந்தித்தேன். அவர் நிதானத்துடன் விஷயத்தைக் கூறினார்.

 

     ‘‘தங்களுடன் டெலிபோனில் பேசுவதற்கு முன்னாலேயே ஸ்ரீமதி காந்திக்கு மாட்டு மாமிச சூப் கொடுத்துவிட்டேன்’’ என்றார்.

   

    ‘‘ டாக்டர் நீங்கள் செய்தது பெரும் மோசம்’’ என்றேன்.

     

    ‘‘ஒரு நோயாளிக்கு மருந்தோ, ஆகாரமோ இன்னது கொடுப்பதென முடிவு செய்வதில் மோசம் என்பதற்கே இடம் இல்லை. நோயுற்றிருப்போரையோ, அவர்கள் உறவினரையோ இவ்விதம் ஏமாற்றிவிடுவதன் மூலம் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடிவதாயின் டாக்டர்களாகிய நாங்கள் ஏமாற்றுவதையே புண்ணிய காரியமாக கருதுகிறோம்’’ என்றார் டாக்டர்.

 

    இதைக் கேட்டதும் நான் பெரிதும் வேதனை அடைந்தேன். என்றாலும், அமைதியுடன் இருந்தேன். டாக்டர் நல்லவர், என் நண்பர். அவருக்கும் அவருடைய மனைவிக்கும் நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். என்றாலும் அவருடைய வைத்திய தருமத்தை சகித்துக்கொள்ள நான் தயாராக இல்லை.

 

    ‘‘டாக்டர், இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம் என்பதை சொல்லுங்கள் என் மனைவி சாப்பிட விரும்பினாலன்றி அவருக்கு ஆட்டிறைச்சி அல்லது மாட்டிறைச்சி கொடுப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். இதனால் அவள் இறந்துவிட நேர்ந்தாலும் சரிதான்’’ என்றேன்.

   

     ‘‘உங்களுடைய தத்துவத்தை நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மனைவி என்னிடம் சிகிச்சையில் இருக்கும் வரையில் நான் விரும்பும் எதையும் அவருக்கு கொடுக்கும் உரிமை எனக்கு இருக்க வேண்டும். இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை அழைத்துச் சென்றுவிடும்படி வருத்தத்துடன் நான் கூறவேண்டியது இருக்கும். என் வீட்டில் அவர் சாக நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது’’ என்றார் டாக்டர்.

 

   ‘‘ அப்படியானால், அவளை உடனே அழைத்துக் கொண்டுபோய் விடவேண்டும் என்கிறீர்களா?’’

  

     ‘‘அழைத்துக்கொண்டு போய்விட வேண்டும் என்று நான் எப்பொழுது சொன்னேன்? நோய் குணமாகக்கூடிய சிகிச்சை அனைத்தையும் அளிக்கும் பூரண உரிமையை நீங்கள் எனக்குத் தர வேண்டும் என்றுதான் நான் கூறுகிறேன். அப்படிக் கொடுத்தால் நானும் என் மனைவியும் அவருக்காக எங்களாலானதை எல்லாம் செய்யத் தயாராக இருக்கிறோம். அவரைப்பற்றி நீங்களும் கொஞ்சம்கூட கவலைப்படாமல் திரும்பிப் போகலாம். இந்த சிறு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், என் இல்லத்திலிருந்து அவரை அழைத்துக்கொண்டு போய்விடுங்கள் என்று சொல்ல என்னை கட்டாயப்படுத்தியவர்களாவீர்கள்.’’

 

     என் புதல்வர்களில் ஒருவனும் என்னுடன் இருந்தான். என் கருத்தை அவனும் முற்றும் ஆதரித்தான். தன் தாயாருக்கு மாட்டு மாமிச சூப் கொடுக்கக்கூடாது என்றான். பிறகு நான் கஸ்தூரிபாயிடமே இதுகுறித்து பேசினேன். உண்மையில் அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள். இதுபற்றிக் கலந்து ஆலோசிக்கும் நிலையில் கூட அவள் இல்லை. என்றாலும் அவளுடன் ஆலோசிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று எண்ணினேன். டாக்டருடன் பேசிக்கொண்டிருந்த விவரத்தை அவளிடம் கூறினேன். அவள் தீர்மானமாகப் பதில் கூறினாள்.

 

    ‘‘நான் மாட்டு மாமிச சூப் சாப்பிட மாட்டேன். இவ்வுலகில் மானிடராய் பிறப்பதே அரிது. அப்படியிருக்க இத்தகைய பாதகங்களில் இவ்வுடலை அசுத்தப்படுத்திக் கொள்வதைவிட உங்கள் மடியிலேயே இறந்து போகத் தயார்’’ என்றாள்.

 

      அவளுக்கு நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். என்னைப் பின்பற்றி நடக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்றேன். மாமிசத்தை மருந்தாக சாப்பிடுவதில் தவறு எதுவும் இருப்பதாக நினைக்காமல் இந்து நண்பர்கள் சிலர் இவ்வாறு சாப்பிட்டிருக்கிறார்கள் என்று அவளுக்கு உதாரணம் கூறினேன். ஆனால் அவள் பிடிவாதமாகவே இருந்தாள்.

 

     ‘‘தயவு செய்து என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்’’ என்று கூறிவிட்டாள்.

 

    நான் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன். எனக்கு கொஞ்சம் மனக்கலக்கம் ஏற்பட்டது. என்றாலும் அவளை அழைத்துக்கொண்டு போய்விடவே தீர்மானித்தேன். நான் செய்த இந்த முடிவை டாக்டரிடம் கூறினேன். அவருக்கு கோபமே வந்துவிட்டது.

 

   ‘‘எவ்வளவு ஈவு இரக்கமில்லாத மனிதர் நீங்கள்! இப்பொழுது அவருக்கு இருக்கும் தேக நிலையில் இந்த விஷயத்தை அவரிடம் எடுத்துச் சொல்லவே நீங்கள் வெட்கப்பட்டிருக்க வேண்டும். இங்கிருந்து அழைத்துப்போகக்கூடிய நிலையில் உங்கள் மனைவி இல்லை. என்பதை உங்களுக்கு தெரிவிக்கவே விரும்புகிறேன். கொஞ்சம் உடம்பு அசங்கினாலும் தாங்காது. வழியிலேயே அவர் இறந்துவிட நேர்ந்தாலும் கூட நான் ஆச்சர்யப்படமாட்டேன். அப்படி இருந்தும் நீங்கள் பிடிவாதமாக இருப்பதால், உங்கள் இஷ்டம் போல் செய்யுங்கள். அவருக்கு மாட்டு மாமிசம் கொடுக்கக் கூடாது என்றால் அவரை ஒரு நிமிடம் கூட என் இடத்தில் வைத்துக்கொண்டு வரப்போகும் ஆபத்துக்கு உடன்பட நான் தயாராக இல்லை’’ என்றார்.

 

  அங்கிருந்து புறப்பட்டோம். மழை தூறிக்கொண்டிருந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கு கொஞ்ச தூரம் போகவேண்டும். டர்பனிலிருந்து போனிக்ஸுக்கு ரயிலில் போகவேண்டும். நான் பெரும் அபாயகரமான காரியத்தை மேற்கொண்டேன் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் கடவுளிடம் நம்பிக்கை வைத்து இந்த வேலையில் இறங்கினேன். முன் கூட்டிப் போனிக்ஸுக்கு ஓர் ஆள் அனுப்பினேன். ஓர் ஏணை, ஒரு புட்டி, சூடான பால், ஒரு சுடுநீர் புட்டி ஆகியவற்றுடன் ஸ்டேசனுக்கு வந்து எங்களை சந்திக்கும்படி சொல்லி அனுப்பியிருந்தேன். ஏணையில் வைத்து கஸ்தூரிபாயை தூக்கிச் செல்ல ஆறு ஆட்கள் வேண்டும் என்றேன். அடுத்த ரயிலில் கஸ்தூரிபாயை அழைத்துச் செல்ல ரயில்வே ஸ்டேஷன் போக ஒரு ரிக்ஷாவை பிடித்தேன். அபாய நிலையில் இருந்த அவளை அதில் வைத்துக்கொண்டு புறப்பட்டேன்.

     

   கஸ்தூரிபாயை உற்சாகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக அவள் எனக்கு ஆறுதல் கூறினாள்.

 

 ‘‘ எனக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது நீங்கள் கவலைப்படாதீர்கள்’’ என்று கூறினாள்.

      பல நாட்களாக ஆகாரமே இல்லாததால் அவள் எலும்பும் தோலுமாக இருந்தாள். ஸ்டேஷன் பிளாட்பாரம் மிகவும் பெரியது. ரிக்ஷாவை பிளாட்பாரத்திற்குள் கொண்டுபோக முடியாதாகையால், கொஞ்சதூரம் நடந்துதான் ரயில் இருக்கும் இடத்துக்கு செல்லவேண்டும். ஆகையால் அவளை என் கைகளிலேயே தூக்கிக்கொண்டுபோய் ரயில் வண்டியில் ஏற்றினேன். போனிக்ஸ் ஸ்டேஷனில் இருந்து ஏணையில் வைத்துக் கொண்டு போனோம். அங்கே நீர்ச் சிகிச்சை செய்ததில் கொஞ்சம் கொஞ்சமாக பலம் பெற்று வந்தாள்.

 

     நான் போனிக்ஸ் போய்ச் சேர்ந்த இரண்டு மூன்று நாட்களுக்கெல்லாம் ஒரு சாமியார் அங்கே வந்து சேர்ந்தார். டாக்டர் கூறிய யோசனைகளை நாம் எவ்விதம் பிடிவாதமாக மறுத்துவிட்டோம் என்று கூறினார். கஸ்தூரிபாயின் நிலைக்கு அனுதாபப்பட்டு எங்களுடன் வாதாடி எங்களை திருப்பிவிடுவதற்காகவே அவர் வந்தார். சாமியார் வந்தபோது என் இரண்டாவது மகன் மணிலாலும் மூன்றாவது மகன் ராமதாஸும் அங்கு இருந்தார்கள். மாமிசம் சாப்பிடுவது என்பது மத விரோதமாகாது என்று அவர் வாதித்தார். அதற்கு மனு தர்மத்தில் இருந்து ஆதாரங்களை எடுத்துக் கூறினார்.

ஆனால் கஸ்தூரிபாய், ‘‘சுவாமிஜி, நீங்கள் என்ன சொன்னாலும் சரி, மாட்டு மாமிச சூப் சாப்பிட்டு குணமடைய நான் விரும்பவில்லை. தயவு செய்து என்னை மேற்கொண்டு எதுவும் தொந்தரவு செய்யாதீர்கள். நீங்கள் விரும்பினால் என் கணவனுடன் குழந்தைகளோடும் விவாதித்து கொள்ளுங்கள். ஆனால் நான் மாமிச சூப் சாப்பிடுவதற்கில்லை என்ற தீர்மானம் செய்து கொண்டுவிட்டேன்’’ என்று உறுதியாக கூறினார்.

 

          கஸ்தூரிபாயின் இறுதிநாட்கள்

 

   1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் கஸ்தூரிபாய்க்கு இதயக்கோளாறு ஏற்பட்டது. நாளுக்கு நாள் அவர் உடல் நலிந்தது. அவரை விடுதலை செய்யும்படி லண்டனில் உள்ள பிரபுக்கள் சபையில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை இந்திய விவகார மந்திரி அமெரி மறுத்துவிட்டார். மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு விடுதலை தரும்படி கூறப்பட்டது. ஆனால் அதற்கு பிரிட்டிஷார் மறுத்துவிட்டனர்.

 

  ‘‘கஸ்தூரிபாய் தற்போது இருக்கும் சிறையே அவருக்கு பாதுகாப்பானதுதான்’’ என்று விளக்கம் அளித்தனர். 1944ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி இரவு 7.35 மணிக்கு காந்தியின் மடியில் தலை வைத்தபடி படுத்திருந்த கஸ்தூரிபாய் காலமானார். அப்போது அவருக்கு 75 வயது ஆகியிருந்தது. பிரிட்டிஷாரை எதிர்த்து அறப்போர் நடத்திக் கொண்டிருந்த காந்தி மனம் உடைந்து கண்ணீர் வடித்தார். மனைவியின் பிரிவு அவரை நிலைகுலைய வைத்தது. கஸ்தூரிபாயின் கடைசி ஆசை. தன்னை தகனம் செய்யும்போது கணவனால் நெய்யப்பட்ட சேலையை உடுத்த வேண்டும் என்பதுதான். காந்தி அதை நிறைவேற்றினார். 

 

தொடரும்...

 

by Swathi   on 30 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.