LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இவர்களுக்குப் பின்னால் (Behind These People)

இவர்களுக்குப் பின்னால் (நதேழ்தா கான்ஸ்டாண்டிநொவா குரூப்ஸ்கயா) - பகுதி 7


                                       இவர்களுக்குப் பின்னால் (நதேழ்தா கான்ஸ்டாண்டிநொவா குரூப்ஸ்கயா) - பகுதி 7

                                                                                                                               -சூர்யா சரவணன் 



       நதேழ்தா கான்ஸ்டாண்டிநொவா குரூப்ஸ்கயா





பெண்கள் நாற்றங்காலைப் போன்றவர்கள். பின்னால் விரிவான நிலத்தில் பெரிதாக வளர்ந்து விளைய வேண்டிய பயிர்கள் முதலில் நாற்றாங்காலில் தான் தோன்றுகின்றன.


                    தீபம்& நா.பார்த்தசாரதி.




   மாமேதை லெனினுடன் சேர்ந்து புரட்சிகரப் பணியில் ஈடுபட்டு அவரை மணந்து, ரஷ்யப்புரட்சிக்காக கணவருடன் அல்லும் பகலும் சேர்ந்து அயராது பாடுபட்ட பெண்மனி நதேழ்தா கான்ஸ்டாண்டிநொவா குரூப்ஸ்கயா


  ரஷ்ய சோஷலிச புரட்சியை நடத்தி வரலாற்று கடமையை நிறைவேற்றிய லெனின், 1917ம் ஆண்டு நவம்பர் புரட்சிக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் வாழ்ந்தார். லெனின் அமைச்சரவையில் கல்வித்துறைப் பொறுப்பேற்று, ரஷ்யா முழுவதும் கல்வி இருளை நீக்க அயராது பாடுபட்டு வந்த குரூப்ஸ்கயா. லெனின் மறைந்த பின்னர் 15 ஆண்டுகள் அவரது கல்விப் பணியை தொடர்ந்து கல்வி அமைச்சர் என்ற முறையில் அரும் பணியாற்றியவர் அன்னை குரூப்ஸ்கயா.


  சோவியத் நாடு முழுக்க அவரது பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தவேளை. பிறந்தநாள் விழாவுக்கு நான்கு நாட்கள் இருந்த நேரம். நூல்நிலைய விஞ்ஞான ஆவ்வுக் கழகத்தினர் நடத்திய மாநாடு ஒன்றில் பேசுவதற்காக குரூப்ஸ்கயா அழைக்கப்பட்டார். அடுத்து வரப்போகும் ஐந்தாண்டு திட்டத்தில் பொதுக் கல்வியின் நிலை குறித்து ஆய்வு நடத்த கூட்டப்பட்ட அந்த மாநாட்டில் புதிய திட்டங்களையும் செயல் முறைகளையும் முன்வைத்து உரையாற்றினார் குரூப்ஸ்கயா.


  அன்று பிப்ரவரி 23, 1938 மாநாட்டை முடித்தப்பின் ஓய்வெடுக்க அறைக்குச் சென்றார். மீளமுடியாத ஓய்வெடுத்துக் கொண்டார்.


  குரூப்ஸ்கயாவின் தந்தை ராணுவத்தில் ஓர் அதிகாரியாக இருந்தார். ஆனால் புரட்சிகர உணர்வு அவரிடம் இருந்தது. பின்னர் போலந்து நாட்டினை நிர்வகிக்கும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. போலந்து மக்கள் அவரை நேசித்தனர். ஆனால், ஜார் ஆட்சியின் ஆதரவாளர்களும் முதலாளித்துவ வர்க்கதினரும் அவரை வெறுத்தனர்.


 பல குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை பொறுப்பில் இருந்து நீக்கினர். ஜார் மன்னரின் பிறந்தநாளை அலுவலகத்தில் கொண்டாடவில்லை. மாதா கோயிலுக்குச் செல்லவில்லை. யூதர்களுக்கு சலுகை அளித்தார். போலந்து நாட்டு ஏழைகளுக்கு உதவி செய்தார் என்பது போன்ற 22 குற்றச்சாட்டுகளை குரூப்ஸ்கயாவின் தந்தை மீது சுமத்தி அவரை பணிநீக்கம் செய்தது ஜார் அரசு. பத்தாண்டு காலம் வழக்கு நடந்தது. அவர் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனினும் அவருக்கு வேலை கொடுக்கப்படவில்லை. குரூப்ஸ்கயாவிற்கு 14 வயது ஆனபோது அவரது தந்தை மரணம் அடைந்தார்.


   குரூப்ஸ்கயாவிற்கு 11 வயது. அப்போது அலெக்சாண்ட்ரா திமொபேய்வ்னா எனும் ஆசிரியை அவரது நட்பிற்குரியவரானார். அந்த ஆசிரிய பெண்மணி ஒரு புரட்சிக்காரர்.


  குரூப்ஸ்கயாவிற்கு ஆசிரியர் தொழிலில் நாட்டம் ஏற்படவும், புரட்சிகர சிந்தனைகள் தோன்றவும் காரணமாக இருந்தார். சிறிது காலத்திலேயே அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை குரூப்ஸ்கயா பார்க்கவே இல்லை.


   முதலில் வீட்டிலேயே படித்தார் குரூப்ஸ்கயா, பின்னர் உயர்நிலைப் பள்ளிக்கூடம் சென்றார். அவரது குடும்பம் ஏழைக் குடும்பமாய் இருந்தது. பள்ளியில் பணக்காரப் பிள்ளைகள் மதிக்கப்பட்டனர். அந்தப் பள்ளிக்கூடமே அவருக்குப் பிடிக்காமல் போனது.


  ஒபலென்ஸ்கயா என்னும் தனியார் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து சிறப்பாகப் படித்தார். படிப்பில் முதலிடம் பிடித்தார். பள்ளி நிர்வாகம் அங்கேயே அவரை ஆசிரியர் பணியில் அமர்த்திக் கொண்டது.


 மாபெரும் எழுத்துலக மேதை, லெனினால் பிற்காலத்தில் ரஷ்ய புரட்சியின் கண்ணாடி என்று வர்ணிக்கப்பட்டவர், மகாத்மா காந்தியின் அன்புக்குரியவர் டால்ஸ்டாய். அவரோடு குரூப்ஸ்கயாவிற்கு அறிமுகமும் நட்பும் ஏற்பட்டது. பேராசிரியர்கள் எழுதிய நூல்களை நகல் எடுத்துத் தந்து வருவாய் ஈட்டலாம் என்று அவர் குரூப்ஸ்கயாவிற்கு ஆலோசனை கூறினார். சிலகாலம் அந்தப் பணியிலும் ஈடுபட்டிருந்தார் குரூப்ஸ்கயா. இதர பல்வேறு சிறு சிறு வேலைகளிலும் ஈடுபட்டார்.


  உயர்கல்வி பெண்களுக்கு கூடாது என்று கல்லூரிகளை மூடிய ஜார் அரசியின் ஆட்சிகாலத்தில் குரூப்ஸ்கயா பல்கலைக்கழகம் செல்ல விரும்பினார். சிறிது காலம் சேர்ந்து படித்தார். ஆனால் பல்கலைக்கழக படிப்பு கால விரயம் என்று பின்னர் முடிவு செய்தார். சமூக அநீதிகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்னும் விருப்பம் அவரது உள்ளத்தில் பெருந்தீயாக வளர்ந்தது.


   பல்கலைக்கழகத்தில் மாணவர் இயக்கம் வலுவாக இருந்தது. அதில் சேர்ந்திருந்தார் குரூப்ஸ்கயா. அதன் பின்னர் கார்ல்மார்க்ஸின் நூல்கள் அவருக்கு அறிமுகம் ஆகின. மாணவர்கள், தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர சிந்தனைகளை தூண்டிவிட்டன.


   ஸ்மலேன்ஸ்கொயே என்ற சிற்றூரில் மாலை நேரப்பள்ளி ஆசிரியர் ஆனார் குரூப்ஸ்கயா. வாரம் இரண்டு நாட்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் தான் செயல்படும். ஆலைத் தொழிலாளர்கள் தான் அங்கே மாணவர்கள். அவரிடம் பயின்ற தொழிலாளர்கள்தான். பிற்காலத்தில் தொழிலாளர் வர்க்கப் புரட்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு, லெனின் கட்சியினர் முன்னனி வீரர்களாய்த் திகழ்ந்தார்கள்.


பாபுஸ்கின், பொரோவ்கான், கிரிபாகின், பூட்ராவ் சகோதரர்கள், ஜூகாவ் போன்ற புரட்சி வீரர்களை உருவாக்கியவர் குரூப்ஸ்கயா! அப்படி 5 ஆண்டு ஆசிரியர் பணியில் புரட்சிக் கனவை வளர்த்தார்.


  பள்ளி பாடத்துக்கு நடுவேதான் புரட்சிப்பாட்டும் நடக்கும். ரஷ்ய அரசின் உளவாளிகள் வகுப்புக்கு வருவார்கள், உளவரிய. முன் கூட்டியே தகவல் வந்துவிடும். எனவே உஷாராகிவிடுவர் ஆசிரியரும் மாணவர்களும்!


   1894 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கிலாஸ்ஸன் என்ற பொறியியல் வல்லுநரின் வீடு. எரிமலைக் குமுறலோடு காத்திருந்த இளைய தலைமுறையினரின் வரிசையிலே குரூப்ஸ்கயாவும் அமர்ந்திருந்தார். அங்கே உரையாற்ற லெனின் வந்து சேர்ந்தார். அந்த சந்திப்பு லெனினுடன் அதுதான் அவருக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு! அவருடன் தோழமை உறவு பூத்தது! அவர்களது உறவை வளர்த்த இடம் நூலகம்தான்!


  புரட்சிகரத் தீ வளர்த்த லெனின் கைது செய்யப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 1897 மே 8ந் தேதி முதல் சைபீரியாவைச் சேர்ந்த சூசன்ஸ்கொயே என்ற கிராமத்தில் போலீஸ் கான்ஸ்டபிலுடன் நாடு கடத்தப்பட்ட வாழ்க்கையைத் தொடங்கினார் லெனின்.


  1898ல் குரூப்ஸ்கயா கைதானார்.


  தன்னை திருமணம் செய்து கொள்ளக் கோரி லெனின் அனுப்பிய கடிதம் கண்டு மகிழ்ந்த குரூப்ஸ்கயா, அதற்கு சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டால்தான் ஒரே இடத்தில் சிறைவாசம் அனுபவிக்க முடியும்.


  திருமணம் செய்துகொள்ள சட்டப்படி விண்ணப்பித்தார். லெனினுக்கு அனுமதி கிடைத்தது. 1898 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி சூசன்ஸ்கொயே கிராமத்தில் லெனின்&குரூப்ஸ்கயா திருமணம் சட்டப்படி நடைபெற்றது. இனி அவர்களது சிறைகாலத்தில் ஒரே இடத்தில் அவர்கள் சேர்ந்து வாழலாம்.


  லெனின், மூன்றாண்டு கால சைபீரிய சிறை வாழ்க்கையின்போது முக்கியமான 30க்கும் மேற்பட்ட நூல்களை, கட்டுரைகளை, சிறு வெளியீடுகளை எழுதி வெளியிட்டார். அவருக்கு உதவியாக பெரும்பங்காற்றினார் குரூப்ஸ்கயா. குறிப்பெடுத்துத் தந்தார். எழுதியதை நகலெடுத்துத் தந்தார். இருவரும் புரட்சிக் கருத்துக்களை விவாதித்துக் கொண்டனர். சிறையில் இருந்தபடியே ரஷ்யா முழுவதும் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பினர்.


  குரூப்ஸ்கயாவும் அப்போது எழுதிய நூலின் பெயர், ‘உழைக்கும் பெண்’ என்பதாகும்!


 1901 ஆம் ஆண்டு குரூப்ஸ்கயா விடுதலையானார். ஆனால் முன்னதாக 1900 ஜனவரி 29ல் லெனின் விடுதலையானப்பின், குரூப்ஸ்கயா, உஃபா என்ற இடத்திற்கு நாடு கடத்தப்பட்டார். 


  1900 ஆம் ஆண்டு கோடையில் ரஷ்ய அரசு, லெனினை கட்டாயமாக ரஷ்யாவை விட்டு வெளியேற்றியது.


  லெனினும் குரூப்ஸ்கயாவும் சுவிட்சர்லாந்து சென்று தலைமறைவாக வாழ்ந்தனர். அங்கிருந்து ‘தீப்பொறி’ எனும் புரட்சிப் பத்திரிகையை கொண்டு வந்தார் லெனின். போலீஸ் தொல்லை வந்தது. எனவே லெனின் தம்பதியினர் லண்டன் சென்றனர். லண்டனில் இருவரும் ஆங்கில மொழியில் தேர்த்திபெற ஆங்கில  ஆசிரியர்களை அமர்த்திக் கொண்டனர். லண்டனிலும் அவர்களால் நீடித்து இருக்க முடியவில்லை. தொழிலாளர்கள் விடுதலை குழுவின் அழைப்பை ஏற்று ஜெனிவாவுக்கு (சுவிட்சர்லாந்து) இருவரும் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து  ‘தீப்பொறி’ வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. 1903ல் லெனின் ரஷ்ய போஸ்ஷ்வாக் கட்சியை உருவாக்கினார். ஏழையானாலும் செல்வரானாலும் எவரும் இல்லாத சமுதாயம் அமைக்க பாடுபடும் போராட்டத்தினரின் முன்னணிப் படையாக கட்சி இருந்தது.


   தலைமறைவாக தங்கி இருந்த எல்லா இடங்களிலும் புரட்சிகர கட்சிப் பணியை தொடர்ந்து மேற்கொண்டனர் லெனின் தம்பதியினர்.


  1905ல் ஜார் மன்னரைத் எதிர்த்து மக்கள் திரண்டனர். ஜனவரி 9ம் தேதி குளிர்கால அரண்மனை நோக்கி வந்த லட்சக்கணக்கான மக்களை ஜார் அரசு  சுட்டுக்கொன்று ரத்த ஆறு ஓடச் செய்தது. அந்த தினம் கறுப்பு ஞாயிறு என வரலாற்றில் பதிவானது. இந்த புரட்சிக்குப்பின் ரஷ்யாவுக்கு வந்தனர் லெனின் தம்பதிகள். புரட்சிகர போராட்டத்துக்கு வழி காட்டினர். 1907 டிசம்பரில் போலீஸ் உளவாளியிடமிருந்து லெனின் தப்பித்தார். பின்னர் ஓராண்டுகாலம் சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்தனர். 1908ல் பாரீஸ் சென்றனர். அடுத்த பத்தாண்டுகள் இருவரும் கெடுபிடிக்கு அஞ்சாமலும் போலீஸ் கண்ணில் சிக்காமல் வாழவேண்டிய நிலைமை இருந்தது.


  1908ல் பாரீஸ் வந்ததும் ஒருவருடம் தங்க வீடு தரவில்லை. பின்னர் ரஷ்யாவில் தங்கியிருந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினர். குரூப்ஸ்கயா சிக்கனமாக குடும்பம் நடத்தினார். கட்டுரைகள், நூல்கள் எழுதி கிடைத்த வருவாயில் அவர்கள் வாழ்க்கை நடத்தினர்.


  ரஷ்யாவுக்கு அருகில் இருந்தபடி, கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்த 1912 ஜூன் மாதம் லெனினும் குரூப்ஸ்கயாவும் பாரீசிலிருந்து கிளம்பி ஆஸ்திரியா&ஹங்கேரி நாட்டைச்சேர்ந்த கிராக்கவ் நகர் வந்தனர். சமூக ஜனநாயக பத்திரிகையின் நிருபர்கள் என்ற போர்வையில் அவர்கள் குடியேறுவதற்கு அந்நகரில் அமைதி கிடைத்தது. அங்கிருந்த ஏழைகள் மத்தியில் அவர்கள் பாடுபட்டனர். குரூப்ஸ்கயாவின் உடல் நலம் குன்றியது.


  1913 மே மாதம் 5 ஆம் நாள் போரோனின் மலைப் பகுதியில் ஒரு சிற்றூரில் இருவரும் குடியேறினர். குரூப்ஸ்கயா உடல் நலம் தேறவில்லை. சுவிட்சர்லாந்து கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் ஆலோசனை கூறினர்.


  1913 ஜூன் மாதம் பெர்ன் நகர மருத்துவ விடுதியில் சேர்ந்து மூன்றுவார சிகிச்சைப் பெற்றார். பின்னர் போரோனின் மலை கிராமத்துக்குப் பயணம் ஆயினர். அங்கே சென்றதும் ஆஸ்திரிய அரசாங்கம் லெனினை கைது செய்தது!


 மார்க்ஸ் எங்கல்ஸின் கம்யூனிச லட்சியக் கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வந்த லெனின் தம்பதியினர் வறுமையற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபட்டனர். இதன் காரணமாக எந்த ஒரு நாடும் அவர்களை நிம்மதியாக வாழவிடவில்லை.


  லெனின் மீது ஆஸ்திரிய அரசு சுமத்திய பொய் வழக்கிலிருந்து லெனினை விடுவிக்க குரூப்ஸ்கயா தீவிர முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றார். ஆஸ்திரிய அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார், உளவு பார்த்தார் என்ற பொய்க் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க குரூப்ஸ்கயாவுக்கு ஆஸ்திரியாவிலேயே தோழர்கள் உதவி செய்தனர். உடனடியாக அந்த ஊரைவிட்டுக் கிளம்ப வேண்டும் என்று கூறிவிட்டார் குரூப்ஸ்கயா. இருவரும் பழையபடி சுவிட்சர்லாந்து வந்து சேர்ந்தனர்.


  லெனினும்& குரூப்ஸ்கயாவும் சென்ற இடமெல்லாம் தொழிலாளர் இயக்கங்கள் உருவானது.


  1914 ஆகஸ்டில் முதல் உலகப் போர் மூண்டது. குரூப்ஸ்கயா சிக்கனமாக செலவு செய்து எளிமையான குடும்ப வாழ்க்கை மேற்கொண்டார். போர் நடைபெற்றபோது செலவுக்குக்கூட ‘பைசா’ இல்லாமல் வறுமையில் வாடினர். அப்போது லெனின் எழுதிய கடிதம் 

ஒன்றில், ‘என்னைப் பொறுத்தவரை ஏதாவது கொஞ்சம் சம்பாதிக்க வேண்டும் இல்லாவிட்டால் பட்டினியால் சாகநேரிடும். கடும் விலை வாசி நிலவுகிறது. நாங்கள் வாழ்க்கை நடத்த கையில் எதுவும் இல்லை!’ என்று குறிப்பிட்டிருந்தார். 1914 பிப்ரவரியில் ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. இனியும் இங்கே இருக்க முடியாது. ரஷ்யா செல்லலாம் என்றார் லெனின். எப்படிச்செல்வது?  சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் போலவோ, ஊமையைப் போலவோ நடித்து ரஷ்யாவுக்குள் நுழைந்துவிடலாம் என்று தன் துணி வியாபாரியிடம் கேட்டார் லெனின். அதைக்கேட்ட குரூப்ஸ்கயா சிரித்தார். உங்களால் பேசாமல் இருக்க முடியமா? என்றார்.


  வேறு வழிதான் என்ன? ஜெர்மன் வழியாக ரஷ்யாவிற்குள் நுழையத் திட்டமிட்டனர். நாடுவிட்டு நாடு செல்ல அனுமதி கேட்டனர். கிடைத்தது. அன்றைய தினமே வெளியேற அரசு உத்தரவு வந்தது. வீட்டில் உள்ள பொருட்களை மூட்டைக் கட்டி எடுத்துக் கொண்டு எழுதிய நூல்களை நூல் நிலையத்தில் சேர்த்துவிட்டு நாளை வருகிறேன். நீங்கள் புறப்படுங்கள் என்றார் குரூப்ஸ்கயா. இல்லை இன்று இரவே நாம் செல்ல வேண்டும் என்றார் லெனின். முப்பது தோழர்களுடன் ஜெர்மனி வழியாக அவர்கள் ரஷ்யா சென்றனர்.


  1917 ஏப்ரல் 16 அன்று பத்தாண்டுகளுக்குப்பிறகு பெத்ரோகிராட் ரயில் நிலையம் வந்திறங்கினர். அங்கு லெனின் சிற்றுரை நிகழ்த்தினார். சோஷலிசப் புரட்சி நீடுழி வாழ்க என்று கூறி உரையை முடித்தார்.


  1917 நவம்பர் 6ம் தேதி (பழைய காலண்டர் அக்டோபர் 24) அன்று இரவே அரசாங்கத்தை வீழ்த்தியாக வேண்டும். தாமதம் தற்கொலைக்கு ஒப்பாகும். ராணுவப் பயிற்சி அதிகாரிகளிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும். எதிர்த்தால் முறியடிக்க வேண்டும் என்று கட்சியின் மத்திய மன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினார் லெனின். அவர் தலைமறைவாகவே செயல்பட வேண்டி இருந்தது.


  நவம்பர் 7 காலை பத்துமணிக்கு லெனின் மக்களுக்கு விடுத்த அறிக்கையில் ரஷ்ய இடைக்கால அரசு வீழ்த்தப்பட்டுவிட்டது என்று அறிவித்தார். லெனின் தலைமையில் புதிய அரசு அமைந்தது. கல்வி, இலாகாவில் குரூப்ஸ்கயா இருந்தார்.


  1918ல் பிரம்மாண்டமான தொழிலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றி முடித்து காரில் ஏறும் சமயத்தில் ஒரு கழிசடை பிறவியான ஃபன்னி கப்ளான் என்ற பெண் லெனினை துப்பாக்கியால் சுட்டுவிட்டாள். இடது தோளில் ஒரு தோட்டாவும் இடது நுரையீரலின் உச்சியில் ஒரு தோட்டாவும் பாய்ந்தன. தீவிர சிகிச்சையில் 15 நாட்களில் லெனின் உடல் நலம் தேறினார்.


 லெனின் அரசில் கல்வி அமைச்சராக இருந்தார் குரூப்ஸ்கயா ‘லெனினைப் பற்றி’, ‘காம்கோமால்’, (இளைஞர் கழகம்), ‘புரட்சி இயக்க வரலாறு’, ‘மாதர்கள் மத்தியில் செயல்பாடு,’ ‘உழைப்பு’ ‘அறிவியல்’

‘பொதுக்கல்வி’ ‘பொது உடமைக் கல்வி’ ‘ஆஸ்திரிய நாட்டு தொழிற் சங்க கொள்கையும் இயக்கமும்’ போன்ற நூல்களை குரூப்ஸ்கயா எழுதினார். நாடு முழுக்க நிறைய நூல் நிலையங்களை, கலை மன்றங்களை ஏற்படுத்தினார். ‘‘அறியாமை ஒழிய, அறிவியல் வளர்க’’ என்று பட்டித் தொட்டி எல்லாம் பாடுபட்டார் குரூப்ஸ்கயா.


  1918 ஆம் ஆண்டு வோல்கா முதல் காமா நதிவரை சுற்றுப்பயணத்திட்டம் தீட்டினார். உடல்நலம் சரியில்லாத நிலையில் சுற்றுப்பயணம் வேண்டாம் என்ற லெனின் பின்னர் தன் மனைவியின்

நாடு தழுவிய சுற்றுப்பயணத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்.


   உடல்  நலக்குறைவு காரணமாக பாதியிலேயே சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார் குரூப்ஸ்கயா. நாட்டு நிலைமைகள் எப்படி இருக்கின்றன என லெனினிடம் எடுத்துக் கூறினார். எனவே புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன. லெனின் சுடப்பட்ட பின்னர் ஓய்வுக்காக கிராமத்துக்கு அனுப்பப்பட்டார். மாஸ்கோவுக்கு சென்று அமைக்கப்பட்ட பணிகளை முடித்துவிட்டு கிராமத்துக்கு செல்வார் குரூப்ஸ்கயா. ஞாயிறன்று மட்டும் லெனினோடு பொழுதைக்கழிக்க முடிந்தது. 


 லெனினுக்கு நாளடைவில் பக்கவாதம் வந்தது. 1924 ஜனவரி 21 அன்று மாலை 6.50 மணிக்கு சிந்தனையை நிறுத்திக் கொண்டார்.

இருவரும் சேர்ந்து 1894 முதல் நடத்திய புரட்சிப் பணிகள் 1924ல் முடிந்துவிட்டன. இனி புதிய சோஷலிச சமுதாயப் பணியை தன்னந்தனியே செய்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்தார் குரூப்ஸ்கயா. லெனின் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செய்ததன் மூலம் ஆறுதல் அடைந்தார்.


  1924க்குப்பிறகு அடுத்த சில ஆண்டுகள் தீவிரமாக சோவியத் மக்களுக்காக பாடுபட்டார் 23.2.1930 அன்று ஒரு மாநாட்டில் பேசிமுடித்து திரும்பிய குரூப்ஸ்கயா பிற்பகலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது தனது எழுபதாவது வயதில் மரணம் அடைந்தார்.


குரூப்ஸ்கயாவின் மனத்தெளிவு, நுணுக்கமான அறிவாற்றல், அன்பு, அடக்கம், புரட்சிகர செயல்பாடு ஆகியவையாவும் மேதை லெனின் நடந்த பாதையில் அவரோட இணையாக நடைபோட வைத்தது. தன் கணவருடன் சேர்ந்து புரட்சி நடத்திய குரூப்ஸ்கயா. மறைவுக்குப்பினால் அடுத்த 15 ஆண்டுகால புதிய சோவியத் யூனியனை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டார். வாழ்நாலேல்லாம் புரட்சித் தலைவியாக வாழ்ந்தார் தோழர் குரூப்ஸ்கயா.


*********************************************************************

               உதவிய நூல்கள்


ஸ்ரீசாரதாதேவி வாழ்க்கையும் உபதேசங்களும் & ஸ்ரீராமக்கிருஷ்ணமடம்

அன்னை ஸ்ரீசாரதாதேவியின் அன்பு மொழிகள்.

சத்திய சோதனை & மகாத்மாகாந்தி.

கார்ல் மார்க்ஸ் & வெ.சாமிநாத சர்மா.

தமிழர் தலைவர் & சாமி.சிதம்பரனார்.

பெண் ஏன் அடிமை ஆனாள்& தந்தை பெரியார். விடுதலை. 

அன்னை நாகம்மையாரும் தோழ்ர் கண்ணம்மாளும்& மு.வளர்மதி &கருப்புப் பிரதிகள். சுயமரியாதை இயக்கப் பொன்விழா மலர்.

தந்தைபெரியார் வாழ்க்கை வரலாறு & தமிழ்க்குடி அரசு பதிப்பக்கம்.

தீபம் நா.பா.வின் மணி மொழிகள் & கமலம் சங்கர்.

காலம் வென்ற தமிழக மகளிர் & முனைவர் சரளா இராசகோபாலன் 





-முற்றும் 

by Swathi   on 30 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிலேடை-பகடி சிலேடை-பகடி
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.