திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த தமிழ் ஓவியா தன் அயராத உழைப்பால் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சிப்பணி அதிகாரியாகப் பொறுப்பேற்றுச் சாதித்திருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன். இவரது மகள் தமிழ் ஓவியா தோட்டக்கலைத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை கல்லூரியில் படிப்பை முடித்த தமிழ் ஓவியா, பழனியில் உள்ள கனரா வங்கியில் உதவி வேளாண்மை கள அலுவலராகப் பணியில் சேர்ந்து ஓராண்டு பணியாற்றினார்.
இந்நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த தமிழ் ஓவியா, கனரா வங்கியில் பணியாற்றிக்கொண்டே முதன்மைத் தேர்வுக்குத் தயாராகி உள்ளார். அதில் தேர்ச்சி பெற்றதை அடுத்து, பிரதானத் தேர்வுக்கான பயிற்சியை சென்னையில் பெற வேண்டி இருந்ததால் தனது வங்கிப் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் ஐ.ஏ.எஸ். பிரதான தேர்வுக்குத் தன்னை தயார் படுத்தி வந்தார்.
தமிழ் ஓவியாவின் தொடர் முயற்சி அவரை ஐ.ஏஸ்.எஸ். தேர்வில் மேற்குவங்க கேடரில் தேர்ச்சி பெற வைத்தது. இதையடுத்து முசோரியில் . பயிற்சியை முடித்த அவர், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சவுத் 22 பர்கானா என்ற மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தற்போது ஹூக்ளி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி தகுதியிலான மாவட்ட நில சீர்திருத்த அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
திண்டுக்கல்லில் பிறந்து தன் விடா முயற்சியால் ஆட்சிப்பணி அதிகாரியாகிச் சாதித்திருக்கும் தமிழ் ஓவியாவுக்கு வலைத்தமிழின் மனமார்ந்த வாழ்த்துகள்!
|