LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles

எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்

சிவசங்கர் சுப்ரமணியன், நாகசுரக்கலைஞர் , கொம்பு மரபிசை மையம்

வாசிங்டன்  டி.சி.

முன்னுரை:

நெடுங்காலமாகத் தமிழை முத்தமிழ் எனச் சான்றோர் வகைப்படுத்தியுள்ளனர். இடைத்தமிழாக மக்களின் நவரசங்களையும் உணரச்செய்யும் அற்புதக் கலையாக விளங்குவது இசைத்தமிழ். தமிழில் உள்ள முதல் இசை நூலாம் சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழுக்கும் அதனை ஒலிக்கத் தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகள் பற்றிய குறிப்பு மேலோங்கி உள்ளது. சிலப்பதிகாரத்திற்கு மொழியிலக்கணம் தந்து வழிகாட்டிய தொல்காப்பியமோ நால்வகை நிலத்திற்கு உரிய யாழ் வகை(பண்), அதனுடன் இசைக்கக்கூடிய இசைக் கருவி , இசை எழுத்து, தாள நடை, இசை வர்ணங்கள் என இசை குறிப்புகள் அடங்கிய ஒரு கலங்கரை விளக்காய் திகழ்கிறது. 

கல் நாதசுரம்

       நம் முன்னோர்கள் வாய்ப்பாட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை, புதிய இசைக் கருவி கண்டுபிடித்து அவற்றைப் பயன் படுத்துவதில் ஒரு புரட்சியே செய்துள்ளனர். ஒவ்வொரு கருவியையும் ஆராய்ச்சி செய்து, அதனைப் பக்குவப் படுத்தி, மிக உன்னத நிலை அடையச் செய்துள்ளனர்.  தேவைக்கேற்ப புதிய கருவிகள் உருவாயின, நாடெங்கும் சமயம் பரவிய பொழுது திருவிழா மற்றும் சமயச் சடங்குகளில் மற்றும் வாசிக்கக் கூடிய இசைக் கருவிகளை ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளன. யுத்தக் காலங்களில் பயன்படுத்த, நாட்டுப் புறங்களில் மக்களின் கூத்துக்கும் களியாட்டத்திற்கும் இயைந்த பல்வகை கருவிகள் உருவாயின. இன்று வரை எந்த ஒரு மேற்கத்தியக் கருவிகளினாலும் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.  

 

  ஆதி தமிழர்கள் மரத்தினைப் பயன்படுத்துவதில் எவ்வளவு நிபுணத்துவம் கொண்டிருந்தார்கள் என்பதற்குச் சில உதாரணங்களை இங்குக் காணலாம், பாலமரத்தில் பானை வடிவில் குடையும்போது உடையாமல் இருக்கும் மற்றும் நாதத்தைப் பெருக்குவதில் பலாமரம் பெரும் பங்கு வகிக்கிறது. இதனாலேயே வீணை பலா மரத்தில் செய்தனர். புன்னை மரத்தில் குழாய் போல் நீளமாக குடைந்தால் வைரம் போல வெடிக்காமல் இருக்கும் என அறிந்தவர்கள், நாதசுரக் கருவியினை புன்னை மரத்தில் செய்தனர். சுரபுன்னை என்ற பெயரும் பெற்றது. ஆச்சா மரம் கொண்டும் நாதசுரம் செய்யத் தொடங்கினர். இன்றும் நாதசுரம் தான் உலகிலேயே மரத்தினால் செய்து அதிக இசையோசை எழுப்பக் கூடிய ஒரே துளைகருவி.

 

பெருவங்கியம்:

   புறநானூற்றில் பெருவங்கியம் என்றொரு இசைக் கருவி பற்றிய குறிப்பு உள்ளது. வல்வில் ஓரியை பற்றி வன்பரணர் பாடும்போது 

 

                 கண்விடு தூம்பிற் களிற்றுயிர் தொடுமின் (புறநானூறு: 152)

              

                 கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின் ..நெடுவங்கியத்தோடே (அகநானூறு 111:8-9,301:16-17)

 

இதில் களிற்றுயிர் என்பது ஆகுபெயர்; கண்விடு தூம்பாகிய களிற்றினது கை போல் வடிவுடைய பெருவங்கியதை இசைக்கும் பொழுது எனக் கொள்ளவேண்டும். இதில் பெருவங்கியம் அல்லது நெடுவங்கியம் என்பது நாகசுரமாகும்.  

 

வங்கியம் என்பது மூங்கிலுக்கும் இசைக்கின்ற குழலுக்கும் கொடுக்கப்பட்ட பொதுப் பெயர். குழலை விட நீண்டு இருப்பதால் நெடுவங்கியம் எனப் பெயர் கொண்டிருக்கலாம். ஆதிகாலத்தில் இதனை மூங்கிலில்  செய்திருக்கக் கூடும்.  

 

காளமேகப் புலவர் இதற்கு முந்தைய நூற்றாண்டில் பாடிய திருவானைக்கா உலா என்னும் நூலில் "சங்கும், குழலும் தடமுரசும்,வங்கியமும்" என்றொரு அடி வருகிறது. இதில் வங்கியும் என்பது நாகசுரமே.  

 

சேறைக் கவிராசபிள்ளை(1550-1609) தாம் பாடிய வாட்போக்கிநாதர் உலாவில் வாத்தியங்களைக் குறிப்பிடும்போது நாகசுரத்தைக் குறிப்பிடுவது காணத்தக்கது.

 

தடாரி துடி திமிலை தண்ணுமை கைத்தாளம் 

விடாத முரசு மணி மேளம்-குடமுழா 

சங்கு திமிரி தவில்பட-நாகசுர 

மங்கல கீதமுதல் வாத்தியமும்-பொங்கி எழ 

இங்கு இவ்வாசிரியர் பல வாத்தியங்களைக் கூறி இறுதியில் நாகசுரம் மங்கல வாத்தியம் அனைத்திற்கும் முதன்மையானது என்றே கூறி முடிக்கிறார்.

இராசராச மன்னன் தஞ்சை பெரிய கோவில் கட்டும் பொழுது ஆடல் மகளிர் மற்றும் இசை வாணர்களுக்கு 400 வீடு கட்டிக் கொடுத்தார், அவர்களில் உடுக்கை,வங்கியும்,குழல்,நட்டுவம், கெட்டி மத்தளம் வசிப்போருக்குப் பங்கு பிரிக்கும் போது வாத்திய மராயனுக்கு முதலில் கொடுக்கிறார். இவ்வாத்திய மராயன் என்பவர் நாகசுரம் வாசிப்பவர்களின் தலைவன் என்பது கல்வெட்டுகளில் கிடைக்கப்படும் செய்தி. 

 

நாகசுர வகைகள் : 

நாகசுரங்கள் பாரி,திமிரி என்று இரண்டு வகைப் படும். பாரி என்றால் பெரியது என்று பொருள்.இதில் மூன்றுக்கடை சுருதி முதல் ஐந்துகட்டை சுருதி வரை வாசிக்க முடியும். இதன் நாதம் கேட்பதற்குக் கம்பிரமாகவும், இனிமைகவும் இருக்கும். விரலின் அசைவினாலும்,ஊதும்போது காற்றை மென்மையாகவும்,அழுத்தமாகவும் செலுத்துவானாலும் ஏழு துளைகளில் இருந்து ஏழு ஸ்வரங்களும் இரண்டரை கட்டை ஸ்தாயி வரையில் வாசிக்கமுடியும். 

இரட்டை நாகசுரம்: 

இருவர் சேர்த்து வசிப்பதே இரட்டை நாகசுரமாகும். திரும்பபுரத்துச் சகோதரர்கள் தான் முதலில் இதை ஆரம்பித்தது. நாகசுரம் குருகுலமாகக் கற்கப்பட்ட வித்தை. பிரசித்தி பெற்ற இசைவாணர் அனைவரும் அப்படித்தான் கற்றனர். இதற்கான பாடத் திட்டம் ஒன்றும் அப்போது இல்லை. முதன் முதலில் பழனியில், பழனி தேவஸ்தானத்தின் ஆதரவில் ஒரு பள்ளி அமைத்து செம்மையான பாடத்திட்டங்கள் வகுத்து இந்த வித்தையை பண்டைய குருகுல முறையும், புதிய பாடசாலைமுறையும் கலந்து  பல ஆண்டுகள் நடத்தி வந்தார்கள்.

நாகசுர அமைப்பு: 

நாகசுரத்தின் அடிப்பாகத்தில் இசைக்குரிய ஏழு துளைகளும்,ப்ரஹ்மசுரம் என்னும் ஐந்து வேற்றுத்துளைகளும் உண்டு. இதை வாயில் வைத்து வாசிப்பதற்கு சீவாளி என்னும் கருவி தேவைப்படுகிறது. நாகசுரம் ஆச்சா மரம் (Hardwickia binata) மற்றும் புன்னை (Calophyllum inophyllum) மரத்தில் தயார் செய்வார்கள் என முன்னமே பார்த்தோம். மாக்கல்லினால் செய்த நாகசுரம் இருக்கிறதென்று அறிய மிக்க வியப்பாக இருக்கும் .மாக்கல் என்பது மிகவும் மிருதுவான ஒரு கல். இக்கல்லினால் செய்த நாகசுரம் தஞ்சை மன்னராக இருந்த சரபோஜி காலத்தில் ஒரு வித்துவானிடம் இருந்தது. இக்கருவி இப்போது டெல்லியில் இருப்பதாகச் சொல்வர்.

முடிவுரை:

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு  வாழ்வியல் கோட்பாடுகளைக் கடத்த இசைக் கருவிகளும் அதனைச் சார்ந்த இசையும் பயன்பட்டது. உலகிலேயே இசைக்கு இலக்கணம் தந்த முதல் மொழி தமிழ் என்பதை நாம் உணரவேண்டும்.  இசை இலக்கணத்தைத் தமிழிலிருந்து தெலுங்கு போன்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் போது இசை அறிஞர்கள் வாத்தியக்காரர்களையே நம்பி இருந்தனர். தமிழிசையில் இருந்த சீர், இசை அளவு, அடி, பெரும்பண் என  அனைத்து இசை நுணுக்கங்களை நாயனக்காரர்கள் அறிந்திருந்தனர். சமணர்கள் , வடமாநிலத்தவர், முகமதியர், ஆங்கிலேயர், ஐரோப்பியர் எனத் தமிழர் கண்ட அந்நியப் படையெடுப்பில் புதிய இசைக்கருவிகளை புகுத்தி செவ்வியினை பலமிழக்கச் செய்தபோதும் இன்றுவரை தமிழ் இசையினைப் புகழ் குன்றாமல் மக்கள் ரசிக்கும்படி காத்துக்கொண்டிருப்பவர்கள் வாத்தியக்காரர்கள் ஆவார்கள்.

 

by Swathi   on 08 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது. முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.
புதிய வரலாறு படைத்த     முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019 புதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019
புதிய வரலாறு படைத்த     முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019 புதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.