மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வந்துள்ளது.
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் உள்ள சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணியத் தடை விதிப்பது குறித்துக் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்ததால், இப்போது அந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டத்தை மீறி பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்து சென்றால் அந்நாட்டுப் பணத்தில் 100 பிரன்சிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும். அதேநேரம் இந்த அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்தவில்லையென்றால் 1000 பிரன்சிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 1 லட்ச ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை விமானங்கள், தூதரகங்கள், மதவழிபாட்டுத் தலங்கள், முகத்தை மறைக்காவிட்டால் உடல்நல ரீதியில் பிரச்சினைகள் ஏற்படும் பகுதிகளில் இந்தச் சட்டம் பொருந்தாது என்று சுவிட்சர்லாந்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
|