|
|||||
500 அரசுப்பள்ளிகளைத் தனியார்ப் பள்ளிகள் தத்தெடுக்கின்றனவா? - நடந்தது என்ன? |
|||||
தமிழ்நாட்டில் உள்ள தனியார்ப் பள்ளிகள் அருகில் உள்ள 500 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து அவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு உதவிகளைச் செய்வதாகத் தனியார்ப் பள்ளிகள் சங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "இது அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் செயல்" என அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன, தமிழ்நாட்டில் தனியார்ப் பள்ளிகளுக்கு எனப் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தச் சங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு தனியார்ப் பள்ளிகள் சங்கம் என்ற புதிய சங்கம் ஒன்றை உருவாக்கின. இந்தச் சங்கத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் கலந்துகொண்டார். இந்த விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானத்தில் "வரும் கல்வியாண்டில் 500 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து அவற்றுக்கு அருகிலுள்ள தனியார்ப் பள்ளிகள், அந்த அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரும்" எனக் கூறப்பட்டிருந்தது. சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் இதைச் செய்து தர முயல்வதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்தச் செய்தி வெளியானதும் சில அரசியல் கட்சிகள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். "அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் என்ன நடந்தது என்பது குறித்து செய்தி வந்தால், அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். தாரைவார்க்கிறார்கள், தத்தெடுக்கிறார்கள் என்று நிகழ்ச்சியில் பேசப்பட்டதா என்பதைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். எடுத்த உடனே வன்மையாகக் கண்டிக்கிறோம் என்கிறார்கள். இப்படி உண்மையை அறியாமல், பேசுவதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்," என்றார். அதோடு, "சிஎஸ்ஆர் நிதி மூலம் உதவி செய்கிறோம் என்பதற்கு நன்றி என்பதோடு அந்த விவகாரம் முடிந்தது. இதற்குப் பிறகு, தனியார்ப் பள்ளிகள் சங்கமே இது தொடர்பாக விளக்கம் அளித்தார்கள். இவ்வளவுக்குப் பிறகும், தாரை வார்ப்பதாகச் செய்தி வருகிறது. அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள். அவற்றைத் தத்துக் கொடுக்கவில்லை. கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார். |
|||||
by hemavathi on 02 Jan 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|