LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எஸ். நூல்  வெளியீட்டு விழா

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியிருக்கும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முனைவர் வை. பழனிச்சாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் 'அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எஸ். ஆசிரியர்: ராணிமைந்தன், பதிப்பகம்: வானதி பதிப்பகம் வெளியீட்டு விழா 2022 ஜூலை மாதம் 9ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு, சென்னை, தேனாம்பேட்டை, கஸ்தூரி ரங்கன் சாலை, எண்-74ல் அமைந்திருக்கும் ரஷ்யக் கலாச்சார மையத்தில் (Russian Cultural Centre) நடைபெற்றது. இன்னிசையேந்தல் திருபுவனம் குரு ஆத்மநாதன் குழுவினரின் தமிழ் இசையுடனும்,  தமிழ்த்தாய் வாழ்த்துடனும்  நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

 

முனைவர் வை.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ். அவர்தம் வாழ்க்கை வரலாற்று  நூல்வெளியீட்டு விழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசுகையில்:

  36  ஆண்டுகால அரசுப்பணியில் நான் ஆற்றிய சாதனைகள் அரசியல் பணியில் ஏற்பட்ட அனுபவங்களைத் தொகுத்து நூலாக வெளியிட உந்து சக்தியாகியிருந்து ஊக்குவித்தவர் நண்பர் திரு.நல்லி குப்புசாமி. இந்நூல்   என் சுயசரிதையாக இல்லாமல் பயோகிராஃபியாக எழுதலாம் என ஆலேசனை வழங்கியதோடு எழுத்தாளர் ராணிமைந்தன் அவர்களை அறிமுகம் செய்துவைத்தார்.  

நல்லி அவர்கள் எனக்கு  நல்ல நண்பர். பட்டுத்தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் தொழிலதிபர். கலை இலக்கியத்தில் நாட்டம் கொண்டவர். 100 க்கும் அதிகமான புத்தகங்களை அவரே எழுதியுள்ளார். கோவிட் காலத்திற்கு முன்பெல்லாம் ஏராளமான புத்தக விழாக்களைத் தானே நடத்தியும் கலந்துகொண்டும் ஓயாமல் உழைக்கும் அற்புத மனிதர்.   எங்கள் குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்,பேத்தியின் பிறந்த நாள் விழா என எல்லா குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார். எங்கள் கிராமத்து நூலகத்தின் போட்டி தேர்வுக்கு பயன்படும் நூல்கள் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நூல்களை வழங்கி ஆதரவு அளித்தவர் பத்மஸ்ரீ  நல்லி குப்புசாமி  என்று நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கிய நல்லி குப்புசாமி அவர்களை வரவேற்றார். என் நண்பர் வை.கோ அவர்கள் வருவதாகயிருந்தது உடல் நலம் சரியில்லாததால் நிகழ்வில் கலந்து கொள்ள  இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டார்

என்னுடைய புத்தகத்தை  தொழிலதிபர்.நல்லி குப்புசாமி வெளியிட அச்சுதமிழை உலகமெங்கும் கணினித் தமிழாக உருவாக்கம் செய்யும் சிறந்த  நண்பர் திரு. ச.பார்த்தசாரதி அவர்கள் பெற்றுக்கொள்வார்.

அந்தப் பணியை தலைமையேற்றிருக்கும் நல்லி அவர்கள் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றுவார் நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கவுள்ள ச.பார்த்தசாரதி காகிதத்திலிருந்த தமிழை கணினிக்குள் கொண்டு வந்து கண்காணா தேசமெல்லாம் வாழுகின்ற தமிழர்களை   வலைத்தமிழாலே வலைவீசி ஒன்றிணைத்தவர். வாசிங்டன் பார்த்தசாரதி வாசிங்டன்  தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர், தற்பொழுது வலைத்தமிழ் நிறுவனத்தை நிறுவி  அதன் மூலமாக உலகத்திலுள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியைச் செய்துவருகிறார். தமிழகத்திலுள்ள மிகச்சிறந்த இசைவாணர்களில் ஒருவரான  ஜி ஆத்மநாதன் மூலமாக திரு பார்த்தசாரதிசாரதியின் நட்பு கிடைத்தது என்று வரவேற்றார்.

நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கவுள்ள மறைந்த அறிவியலின் தந்தை  அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்  திரு.பொன்ராஜ் அவர்கள் அறிவியல் அறிஞர், அழகுத் தமிழ் பேச்சாளர் என்று நல்வரவு செய்தார்.

அடுத்து எல்லோருக்கும் நல்லவர் எழுத்துலக வேந்தர் கல்லாறும் கற்றிடவே கனியமுது தந்தவர் தமிழ்ச்சொல்லாலே சொக்கவைக்கும் சூட்சமம் அறிந்தவர் வாணியவள் தந்திட்ட வரம்தானோ நம் ராணிமைந்தன் என்று நூல் ஆசியரை வரவேற்றார். பதிப்பாசிரியர் முன்னாள் இன்னாள் ஐஏஎஸ் நண்பர்களை, அவையோரையும் வரவேற்றார்.

 

வலைத்தமிழ் ஆசிரியர் வாசிங்டன் பார்த்தசாரதி பேசுகையில்:

 அகதாபட்டியிலிருந்து ஓர் ஐஏஎஸ் என்னும் முனைவர் பழனிச்சாமி ஐயாவின் வாழ்க்கை அனுபவத்தை,    நீண்ட நெடிய அரசுப்பணியினை தொகுத்து வரலாற்று நூலுக்கும் ஆசிரியருக்கும்   வாழ்த்துகளைத்  தெரிவித்திருந்தார். நான் கலந்து கொள்ளும் இரண்டாவது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்ச்சி.  இந்த நூல்வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி.

அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எஸ் என்னும் முனைவர் பழனிச்சாமி நூலை வாசித்த போது பிரமிப்பானேன், தன் அரசுப்பணி காலத்தில் கிட்டதட்ட   23 பதவிகளை வகித்திருக்கிறார். இது சாதாரணமான அனுபவமில்லை, இவர் வகிக்காத பதவிகளே இல்லை எனலாம். தேர்தல் கமிஷனராகவும் உள்ளார்ந்த நிறைய பொறுப்புகளை எடுத்திருக்கிறார். இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பதவிகள். இவர் பொறுப்புவகித்த  தமிழ் வளர்ச்சித் துறையாகட்டும், அகதிகளின் மறுவாழ்வாகட்டும், விவசாயம் சார்ந்த பதவியாகட்டும் மிகத்திறமையுடன் நேர்மையாக செய்ததால்தான் எந்தவித முரண்பாடும் இல்லாமல் ஓய்வுபெற்று  நம்மிடையே சான்றாக, ஆளுமையாக, நம்பிக்கை நட்சத்திரமாக அமர்ந்திருக்கிறார்.

இன்று நம்பிக்கையாக இங்கே இருக்கிறார் இந்த புத்தகத்தைப் படிக்கும் போது ஆட்சிப்பணிக்கு  படிக்கும் மாணவர்களுக்கு பாடப்பகுதியாக வைக்கின்ற அளவுக்கு இதில் தகவல் உள்ளது. காரணம், ஒவ்வொரு பதவியிலும் அவர் எடுத்த முன்மாதிரியான நடவடிக்கைகளை வளர்ச்சித் திட்டங்களை  நூலின் மூலம் ஆவணப்படுத்தியிருப்பதும் சிறந்த  செயல்பாடு. அது மட்டுமில்லாமல் அரசுப்பணி,அரசியல், ஆன்மீகப்பணி, அறிவுத்திருப்பணி என்று நூலை வகைப்படுத்தியுள்ளார் திரு. ராணிமைந்தன். அரசுப்பணியிலே 36 ஆண்டுகளுக்கு  மேலாகியிருந்தாலும்  ஆட்சிப்பணியிலிருந்தவர்கள்      அரசியல்பணிக்கு     செல்வதென்பது சாதாரண பணியல்ல என்று நூலைப் பெற்றுக்கொண்டு திரு. ச.பார்த்தசாரதி வானுயர வாழ்த்துரை வழங்கினார்.

 

பத்மஸ்ரீ திரு.நல்லி குப்புசாமி அகதாபட்டியிலிருந்து ஓர் ஐஏஎஸ் என்னும் நூலை வெளியிட்டுப் பேசுகையில் :

பொதுவாகவே ஆங்கிலேயரைப் போன்று  தமிழில் வரலாற்றுப்பதிவுகளில் கவனம் செலுத்துவதில்லை என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதும் உண்டு. தேசத்தின் வரலாறோ, தனிநபர் வரலாறோ,  சமூக வரலாறோ நம் இலக்கியத்தில் முக்கியத்துவம் பெறுவதில்லை. இந்த நிலை சென்ற நூற்றாண்டிலேயே தனிநபர் வரலாறுகளைச் சரளமாக எழுதிவரும் ராணிமைந்தன் நமக்கு ஓரளவு தெரிந்தவர்களை நன்றாகத் தெரியும் அளவுக்கு வாழ்க்கை வரலாறு புத்தகங்களை எழுதிவருகிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உயர்திரு. அணந்த கிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு இவரின் முதல் புத்தகம். பின்னர், பல துறைகளில் புகழ்பெற்றவர்களைப் பற்றிய, புத்தகம் எழுதினார் .குறிப்பாக எம். எஸ். விஸ்வநாதன், ஆர்.எம். வீரப்பன், ராமசுப்பிரமணிய ராஜா போன்றோர்கள்.  ராமசுப்பிரமணிய ராஜா புத்தகத்திற்காக இலக்கிய சிந்தனை பரிசைப்    பெற்றார். ராணிமைந்தன் அவர்கள் ரிசர்வு வங்கியில் பணியாற்றிக் கொண்டே  எழுத்துப் பணியும் தொடர்ந்தார்.

ஓய்விற்குப்  பிறகு  சிலகாலம் பிபிசி.  அலுவலகத்தில் வாசகர் தொடர்பாளராக பணியாற்றினார். பல பத்திரிகையில் பணியாற்றியதாலும் பிரபல பத்திரிகையாளர் சாவியின் வார்ப்பு என்பதாலும் எதையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதுகின்றார். அந்த வகையில் வெளிவந்திருப்பதே இன்றைய விழாவின் நாயகன் பழனிச்சாமி அவர்களின் அகதாபட்டியிலிருந்து ஒரு ஐஏஎஸ் என்ற புத்தகம். ராணிமைந்தன் முன்னுரையில் கூறியிருப்பதைப் போன்று நான் தான் அவரிடம் டாக்டர் பழனிச்சாமி பற்றி புத்தகம் எழுதும்படி கேட்டுக்கொண்டேன். அவரும், அதற்கு இசைந்தார். ஒருவரைப் பற்றிப் புத்தகம் எழுதும் போது சம்மந்தப்பட்டவரிடம் இருந்து அதிக தகவலைத் திரட்டுவது என்பது கடினம். ஒன்று குறைவாகயிருக்கும் அல்லது மிகையாகயிருக்கும். அப்படியில்லாமல் இந்த புத்தகம் உள்ளபடி தகவல்களைத்  தருகிறது. ராணிமைந்தன் எழுதியுள்ள வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்த்தால் எத்தனை துறைகளில் திரு பழனிச்சாமி அவர்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் என்பது தெரியவரும்.

எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதத் துறைகள். எல்லாவற்றிலும் இவர் வெற்றிபெற்றதன் காரணம் இவரது நிர்வாகத் திறமை அதன் அடித்தளம் நிதானமான மனப்பாங்கு, நிதானமான பேச்சு, நிதானமான செயல்பாடு இதையெல்லாம் நூல் ஆசிரியர் ராணிமைந்தன் சிறப்பாக அழகாகப் பதிவு செய்துள்ளார்,. நண்பர் பழனிச்சாமி  அவர்கள் இந்திய இந்திய ஆட்சிப்பணி அதிகாரத்தில் பல துறை அனுபவம் பெற்ற திறமைசாலி, பொறுமைசாலி வெவ்வேறு துறைகளை  நிர்வகித்து வந்த போது   அவரை நாங்கள் சந்தித்திருக்கிறோம். பிறந்த மண்ணிலும் பெருமை. புகுந்த அரசுதுறையிலும் எல்லாம் புகழும்.  நண்பர் பழனிச்சாமி 1970 முதல் 2006  வரை 36 வருடங்கள் ஆட்சிப் பணியிலிருந்திருக்கிறார்.

இவர் பிறந்தது சிறுகிராமம்.  அங்கே இவருக்கு வழிகாட்டுபவர்கள் யாருமில்லை. இன்று போல், தகவல் தொடர்பு வசதியுமில்லை, பெரிய நூலகமும் இல்லை,  பெரிய பயிற்சி மையங்களும் கிடையாது. தன் முயற்சியினால்தான் முன்னேறி வரவேண்டும் என்ற நிலையிருந்தது. அப்படி விடாமுயற்சியில் வெற்றி பெற்றவர் அகதாபட்டி  ஊர் இளைஞர்களுக்கே முன் உதாரணமானவர் என்றே சொல்லலாம். பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்ற பழனிச்சாமி  ஐ.ஏ.எஸ்-க்கு சொர்க்கத்தில் ஒரு கொடுப்பனை என்றே சொல்லலாம்.

அப்துல்கலாம் மனதைக் கவர்ந்தவர் திரு. பொன்ராஜ். அவர்களின் வருகை இவ்விழாவிற்குப் பெருமை சேர்க்கிறது. தமிழர்கள் கம்ப்யூட்டர் தொடர்பான துறைகளில் முன்னணியில் இருக்கிறார்கள் என்ற பெருமையை பெற்று தந்தவர்கள் பலர் அவர்களில் ஒருவர் உயர்திரு ச.பார்த்தசாரதி அவர்கள்.

ஒருமுறை ஒரு அமெரிக்கரிடம் என் நண்பர்  சொன்னார் கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர் நீங்கள் அதை நன்றாக இயக்குவது நாங்கள் என்றார். அந்த பெருமைக்குக் காரணமானவர்களில் ஒருவர் ச.பார்த்தசாரதி அவர்கள். விழா நாயகன் திரு பழனிச்சாமி அவர்கள் மேலும் பல சாதனைகள் புரிந்து இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளிவரக் காரணமாக வேண்டும் அதையும் திரு ராணிமைந்தன் எழுதவேண்டும் அதற்கு கடவுள் கிருபைக்கிட்ட வேண்டும். அரங்கில்  நிறைய நண்பர்களைப் பார்க்கிறேன் உயர்திரு செல்வராஜ் ஐ.ஏ.எஸ், அவர்கள் சுவாமிநாதன் ஐ.ஏ.எஸ் அவர்கள் என, பலரும் வந்திருக்கிறார்கள். அரங்கில் அனைவரையும் ஒன்றாகப் பார்த்ததில் மகிழ்ச்சி. புத்தகத்தை படியுங்கள் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மக்களுக்கு எவ்வளவு செய்யலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

ஐ.ஏ.எஸ் பதவி என்பது சொகுசான பதவியல்ல. நண்பர் பழனிச்சாமி தாம் பொறுப்பேற்ற அத்தனை பதவியிலும் நல்ல பெயர் பெற்றவர் என்று நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார் பத்மஸ்ரீ  நல்லி குப்புசாமி.

 

திரு. பொன்னுராஜ் அவர்தம் தம் வாழ்த்துரையில்

அகதாபட்டியிலருந்து ஒரு ஐ.ஏ.எஸ்  ஆட்சிப்பணி, அரசியல் பணி என இயங்கி தற்போது ஆன்மீகப்  பணி அறிவுத்திருக்கோயில் பணி  என இயங்கிக்கொண்டிருக்கும் வை. பழனிச்சாமி அவர்களின் வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்தவர்,  60 க்கும்மேற்பட்ட  வரலாற்றுக் குறிப்புகளை வரலாற்றுப்   புத்தகங்களை வெளியிட்டவர் திரு. ராணிமைந்தன்.  அகதாப்பட்டியிலருந்து ஒரு ஐ.ஏ.எஸ்  புத்ததக வெளியீட்டு விழாவில் தலைமைதாங்கி புத்தகத்தை வெளியிட்ட பத்மஸ்ரீ  நல்லி குப்புசாமி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். எழுத்தாளர் ராணிமைந்தன் அருமையாக எழுதியிருக்கிறார். அழகான கருத்துக்களைப்  பதிவு செய்திருக்கிறார். எளிமையான நடை அற்புதமான தமிழ் ஆழமான கருத்துக்களைப் புத்தகத்தில் எழுதியுள்ளார். பழனிச்சாமி அவர்கள் கொடுத்த குறிப்புகளை உள்வாங்கி எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார். 60 புத்தக அனுபவம் இந்த ஒரு புத்தகத்தில் தெரிகிறது என்றார் பொன்ராஜ் .    பெரிய சிறப்பு என்னவென்றால் அகதாபட்டிலிருந்து ஒரு ஐ.ஏ.எஸ் ஆகி தேர்தல் ஆணையர் வரை அவர் பதவி பெற்று இந்த நிலையில் இருக்கும்பொழுதும்  அவருக்கு வழிகாட்டி பி.எம் பெல்லியப்பா ஐ.ஏ.எஸ் அவர்களே வந்து வாழ்த்தியது இறைவன் கொடுத்த வரம்.

உங்களது முன்னோர்கள், உங்களது வழிகாட்டிகள், உங்களது குரு நண்பர்கள், ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், மாண்புமிகு நீதிபதிகள், நண்பர்கள், சுற்றத்தார்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த பழனிச்சாமி ஐயாவிற்கு நன்றி..புத்தகத்தைப் படித்த பிறகு தான் தெரியும் எனக்கும் அவருக்கும் ஒற்றுமையுண்டு ஒரே மாவட்டம்  ஒரே  கல்லூரியில் பயின்றவர்கள் அவர் பொருளாதாரம் நான் கணிதம் பயின்றேன் அவர் என்னுடைய சீனியர். அகதாபட்டி என்ற கிராமத்திலிருந்து தன் ஊருக்கு வந்த கந்தசாமி டிஎஸ்பி அவரது கம்பீரமான நடையை  பார்த்து அவருக்கு ஆசைவந்திருக்கிறது. குரூப் 4 எழுதி சாதாரண எழுத்தராகத் தேர்வு செய்யப்பட்டு Loss of Pay போட்டு  எம்.ஏ படித்திருக்கிறார் Loss of Pay போட்டு சட்டம் படித்திருக்கிறார். ஆனால், Loss of Pay போட்டு குரூப் 1 பரிச்சை எழுதி டெபுடி கலக்டாராகியிருக்கிறார்.

Loss of Pay- ல் அனைத்தும் Gain of Service பெற்றவர் பழனிச்சாமி அவர்கள். இவர்  நமக்கெல்லாம் ஒரு முன் உதாரணம், முன்மாதிரி என்றே சொல்லலாம். இதற்கு காரணம் நம்ம ஊர்மக்கள் நம் வெற்றியைக் கொண்டாடவேண்டும் அந்த வெற்றியின் மூலமாக அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். என்ற,  நல்ல எண்ணம் சமுதாய எண்ணம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் உறங்குவதற்கு இடமில்லாமல் பள்ளிக்கூடத்தில் படுத்துறங்கி அந்த பள்ளிக்கூட சுவரும் இடிந்துவிழுந்து அதிலிருந்து தப்பித்து இவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்தவர் திரு. பழனிச்சாமி அவர்கள். தான் முன்னேர வேண்டும் என்பது ஒரு லட்சியம் அந்த லட்சிய விதையை யார் ஒருவர் விதைக்கிறாரோ அவர்கள் கண்டிப்பாகச் சாதனை சிகரத்தை எட்டுவார்கள். நமது வெற்றி நமது லட்சியத்திலிருக்கிறது. தோல்வி அல்ல என்று அப்துல்கலாம் சொல்லுவார், அந்த லட்சியப்பயணத்தில் வெற்றிபெற்றார். எங்களின் நட்பு போயஸ்கார்டனில் தமிழ்நாடு மிஷன் என்கிற தொலைநோக்கு பார்வையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனக்கும் அவருக்குமான அறிமுகம் நட்பாக மலர்ந்தது. நட்பு தொடர்ந்தது பல்வேறு கருத்துகள் நிலைகள் இவற்றை தொலைப்பேசி மற்றும் நேரடியாக பேசியுள்ளோம்.

ஒவ்வொரு  நிலையிலும் அவரிடம் தெளிவான பார்வையிருந்தது. தெளிவான பார்வைக்குக் காரணம் அவர் கற்றுக்கொண்ட நற்பண்புகளும், நல் ஒழுக்கங்களும், நேர்மையும், எந்த ஒரு திட்டத்தையும் வித்தியாசமாக சிந்தித்தித்து சட்டப்படி செயலாக்குவதில் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அவரின் வெற்றிக்கு வழிவகை செய்தது. எடுத்துக்காட்டாக ஒரு முதியவர் வந்திருக்கிறார் இவர் சேலம் மாவட்ட கலெக்டராயிருந்தபோது, ஆட்சியரைப் பார்க்கவந்த ஒருவர் பத்து வெள்ளை தாள் வைத்திருந்தார், என்னய்யா இது பத்து வெள்ளை ஸ்லிப்?  அதற்கு முதியவர் பத்துமுறை வந்திருக்கிறேன் ஒன்றுமே நடக்கவில்லை என்றாராம். உடனே, Pink Slip அப்படின்னு ஒன்றை அறிமுகம் செய்து  இப்படிப்பட்ட  பிரச்சனைகளையெல்லாம் சுலபமாக தீர்வுகண்டிருக்கிறார்.  அதுதான் இன்னோவேஷன். மக்களின் நாடித்துடிப்பை யார் உணருகிறார்களோ அவர்கள் சிறந்த ஆட்சியாளர்கள். சிறந்த தலைவர்களாக வரமுடியும் அப்படிப்பட்ட எண்ணங்களைச்   செயல்முறையில் புத்தகமாக அழகாகக் கொண்டுவந்திருக்கிறார். இன்று சேலம் ஏற்போர்ட்டிருக்குகிறது என்றால் அதற்குக் காரணம் இவர்தான்.

சாத்தியமில்லாததை சாத்தியப்படுத்தும் திறமையினால் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். மேட்டூர் படுகையில காவிரி ஆற்றில்  சுரங்கம் வெட்டி அதில் பைப்பை சொருகி அதை கிணற்றில் ஊற்றி 40 பம்புசெட்டுகளை வைத்து ஏற்றி 1000 ஏக்கர் நிலத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்வார்கள் திருச்செங்கோட்டுப் பகுதியில்.  இது சட்டப்படி குற்றம் அதை சட்டப்படி மாற்றி மக்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றிய  பெருமை இவரை சாரும். மக்களுக்காகப்  பாடுபடும் மகத்தான மாமனிதரை இப்புத்தகம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. இந்த புத்தகம் உங்களின் சாதனைகளையும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு  உறுதுணையாகவிருந்தீர்கள் என்பதை விளக்கும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 69 பப்ளிக் செக்டார் எல்லாமே சிக் இதில் ஒரு யூனிட் டைட்டான் டானிஸ். ஒரு யூனிட் மார்க்கெட் கேப்பிட்டல் 2 இலட்சம் கோடி அதில்  25 சதவீதம். இதை உருவாக்குவதற்கு அடித்தளம் போட்டவர் செல்வராஜ் ஐ.ஏ.எஸ் மற்றும்  பழனிச்சாமி ஐ.ஏ.எஸ். ஜெம் நகைக்கடையை இங்கு கொண்டுவரவேண்டும் என்று முயற்சி எடுத்து அதற்கான நிறுவனத்தைக்  கொண்டு வந்து அதில் தமிழ்நாடு அரசாங்கம் 25 சதவீதம் முதலீடு கொண்டுவந்தது இது சாத்தியமானது உங்களைப் போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால்தான். ஆக்கப்பூர்வமாக, நாட்டை வளப்படுத்தக்கூடிய, நாட்டை நேசிக்கக் கூடிய எண்ணத்தால் தான் இவை செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. அதற்கும், அச்செயலில் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் அவர்களும் இருந்து செயலாற்றியிருக்கிறார் என்பது பெரும் வரலாற்றுச் சாதனை. பப்ளிக் அக்கவுண்ட்டில் 15000 கோடிதான் வருகிறது. கன்சாலிடேட் நிதியில் வரக்கூடிய நிதி பாதி நிதி நமக்கு சம்பளத்துக்கும் ஓய்வூதியத்துக்கும் போய்விடுகிறது மீதி நிதி டெவலப்மென்ட் எக்ஸ்பென்டிச்சருக்கு போய்விடுகிறது. எமர்சென்ஸி நிதி அதற்கு மட்டுமே பயன்படும். ஒரு நாட்டில் பப்ளிக் அக்கவுண்ட் என்று அதிகமான வருமானத்தை உருவாக்குகிறதோ அன்று தான் மத்திய அரசை சாராத மாநில அரசாக  உருவாக முடியும். அதற்கு விதை விதைத்தவர்கள் இங்கு இருக்கிறார்கள் கண்டிப்பாக அப்படிப்பட்ட சூழலை தமிழக அரசு எடுத்தால்  6 லட்சம் கடனை  அடைக்க முடியும் அதற்கான வழிநுட்பம் தொழில் நுட்பம் இவர்களது மூளையிலிருக்கிறது. ஆட்சியிலிருப்பவர்கள் அதை பயன்படுத்தினால் நல்லது நடக்கும் என்று வாழ்த்துரை வழங்கினார் திரு. பொன்ராஜ்.

 

நூலாசிரியர்  திரு. ராணிமைந்தன் பேசுகையில்:  

நல்ல வாழ்க்கையை, வெற்றிகரமான வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்து  நூலாக்கி தரும்போது ஏற்படும் மகிழ்ச்சி ஒரு அலாதியான மகிழ்ச்சி. அது எனக்கு அடிக்கடி கிடைத்துக் கொண்டிருக்கிறது. திரு.பழனிச்சாமி ஐயாவின் நூல் வாசிக்கும் போது அவர் வாழ்க்கையின் நீள அகலங்களை புரிந்து கொள்ள முடியும்.நண்பர் பத்மஸ்ரீ நல்லி  குப்புசாமி  நல்ல புத்தக வாசிப்பாளர்,  ஒரு நல்ல எழுத்தாளர். தன் வீட்டில் மிகப்பெரிய நூலகத்தை வைத்திருக்கும் செல்வந்தர்(நூலகச்   செல்வம்). இதுவே அவரின் மேல் எனக்கு மதிப்பு ஏற்படக் காரணம். ராணிமைந்தன் எழுதும் நூல்களை திரு நல்லி குப்புசாமி அவர்கள் வாசித்து அலைபேசியிலோ அல்லது தபால் மூலமோ  மதிப்புரையும் பரிந்துரைகளையும் கொடுப்பார். ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து தன் நண்பரின்   வாழ்க்கை வரலாற்றைப்  புத்தகமாக எழுதவேண்டும் என்றார் அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டேன் என்றார்.

அவ்வாறே திரு. பழனிச்சாமி அவர்களின்  வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்து வியந்து அவரின் வாழ்க்கையை வரலாறாகப் பதிவு செய்ய விருப்பம் கொண்டதாகவும் உரைத்தார். அவர்தம் உரையில்,  அவரிடம் நான் கற்றது இரண்டு ஒன்று நேர்த்தியான முழுமை மற்றொன்று அவர்களின் குடுப்பத்திலுள்ள ஒற்றுமைப் பண்பு என்றார். கடைசியாக இந்நூல் வெளிவரத் துணைபுரிந்த பதிப்பாசிரியர்  திரு வானதி ராமநாதன், நூலுக்கு எழுத்துருவாக்கிய  தட்டச்சர் செல்வின் மற்றும் நூல் அட்டைப்படம் வடிவமைத்த மதிராஜ் அவர்களுக்கும்  நன்றியைத்  தெரிவித்துக்கொண்டார்.

 

நிகழ்ச்சியின் நிறைவாக விழாநாயகன் திரு.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்  அவரது மகன் டாக்டர் ப. ராஜ்குமார் நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.

ஆக்கம்: முனைவர் பாக்கியலட்சுமி வேணு

by Swathi   on 24 Jul 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்மஸ்ரீ  முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு புகழஞ்சலி பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு புகழஞ்சலி
வலைத்தமிழ் அமைப்புகளும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான  பல்வேறு முன்னெடுப்புகளும் வலைத்தமிழ் அமைப்புகளும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகளும்
தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு  கோவையில் நடைபெற்றது. அதில் முக்கிய 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு கோவையில் நடைபெற்றது. அதில் முக்கிய 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
"தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு" தேசியக் கருத்தரங்கம் 2022 என்னும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்க நிகழ்வில் 20 ஆதீனங்களும் ஒரே மேடையில்
தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கிவைத்து 24 மொழிகளில் தமிழ் பாடநூல்களை தமிழ்நாடு முதல்வர் திரு.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கிவைத்து 24 மொழிகளில் தமிழ் பாடநூல்களை தமிழ்நாடு முதல்வர் திரு.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை முன்னெடுத்துள்ள தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை முன்னெடுத்துள்ள மக்கள் கலைவிழா தொடங்கியது தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை முன்னெடுத்துள்ள தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை முன்னெடுத்துள்ள மக்கள் கலைவிழா தொடங்கியது
இலக்கியப் பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்! இலக்கியப் பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்!
கோவையில் அமைக்கப்பட்டுள்ள  அருகலை (Wi-Fi )மரம் கோவையில் அமைக்கப்பட்டுள்ள அருகலை (Wi-Fi )மரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.