|
||||||||
அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்த கொரியத் தமிழ்ச் சங்கம் |
||||||||
2025 ஆம் ஆண்டிற்கான அயலகத் தமிழர் மாநாடு ஜனவரி 11 மற்றும் 12-ஆகிய நாள்களில் சென்னை வர்த்தக மையத்தில், தமிழக அரசின் முன்னெடுப்பில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், தமிழார்வலர்கள், படைப்பாளிகள், தமிழ் ஆளுமைகள், மாணவர்கள் எனப் பல்வேறு நாட்டிலிருந்து பங்குபெற்ற இந்நிகழ்ச்சியில், கொரியத் தமிழ்ச் சங்கமும் அழைப்பின் பேரில் கலந்துகொண்டது. உலகெங்குமுள்ள தமிழமைப்புகள் தங்களது செயற்பாடுகளை விளக்குவதற்கு வாய்ப்பாக, மாநாட்டின் ஒரு பகுதியில் காட்சியரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. கொரியத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் கொரிய-தமிழ் ஆராய்ச்சி, மொழி மற்றும் கலாச்சார ஒற்றுமை, தமிழ்க் கலைகள் மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் விழாக்களைக் கொண்டாடுதல், கொரியாவாழ் தமிழ் மக்களின் பாதுகாப்பு, கொரிய அரசுடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட சங்கத்தின் பல்வேறு பணிகளை எடுத்தியம்பும்விதமாக, தொடர்புடைய பொருள்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தினார்கள்.
மேலும், சங்கத்தின் நீண்டநாள் கோரிக்கைகள் அடங்கிய புத்தகக்குறிப்பை அமைச்சர்களுக்கு வழங்கி அதன் தேவையை விளக்கினார்கள். கொரியாவில் தமிழிருக்கை, திருவள்ளுவர் சிலை நிறுவுதல், கொரியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு நேரடி விமானப் போக்குவரத்து ஆகியவை கோரிக்கைகளில் மிக முக்கியமான அம்சங்களாகும்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடமும் மற்றும் துணை முதல்வர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் சங்கத்தின் நாட்காட்டியையும் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளைச் சங்க நிர்வாகிகள் வழங்கினர். சங்கத்தின் அரங்கைப் பார்வையிட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சங்கத்தையும் அதன் பணிகளையும் பாராட்டினர்.
உலக சங்கங்களில் சங்கமம் என்ற அமர்வில் கொரியத் தமிழ்ச் சங்கத்தின் தோற்றம், செயல்பாடுகள் மற்றும் கொரியத் தமிழ்ச் சங்கம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஆற்றிவரும் அரும்பணிகள் குறித்து முனைவர் தெ. சு பிரபாகரன் உரையாற்றினார். சங்கத்தின் உறுப்பினர் முனைவர் இரா. ராஜ்மோகன் அவர்களின் கவிதைத் தொகுப்புகள் அடங்கிய புத்தகம் (மஞ்சரி) ஒன்று மாநாட்டில் வெளியிடப்பட்டது.
கொரியத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் செ .அரவிந்த ராஜா, அயலகத் தமிழர் தொடர்பாளர் திரு பாரதி ஒருங்கிணைத்தனர். தமிழ்ச் சங்கத்தின் சார்பாக இந்தியத் தொடர்பாளர் திருமிகு சரண்யா பாரதிராஜா, பன்னாட்டுத் தொடர்பாளர் திரு தாமோதரன், முனைவர் பிரபாகரன் ,செல்வி பத்மப் பிரியா, திரு இமானுவேல் சதீஷ் மற்றும் முனைவர் சக்திவேல் ராமலிங்கம் ஆகியோர் அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
|
||||||||
by hemavathi on 24 Jan 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|