|
|||||
பாம்பன் பழைய ரயில் பாலத்துக்கு 111 வயது |
|||||
பாம்பன் ரயில் பாலத்தில் முதல் ரயில் இயக்கப்பட்டு இன்றுடன் 111 ஆண்டுகளாகின்றன. பாம்பன் ரயில் பாலப் பணிகள் 1911 ஜூனில் தொடங்கப்பட்டன. இரண்டே ஆண்டுகளில் அதாவது 1913 ஜூலையில் பணிகள் நிறைவடைந்தன. 146 தூண்களைக் கொண்ட ரயில் பாலத்தின் மொத்த நீளம் 2.1 கி.மீ. தூரம் ஆகும். இதில் கப்பல்கள் செல்ல வழி விடும் தூக்குப் பாலம் 214 அடி நீளமுள்ளது. இப்பாலம் கட்ட 4,000 டன் சிமென்ட் 1,36,000 கனச் சதுரடி களிமண் 1,800 கன சதுரடி மணல், 80,000 கனச் சதுரடி அளவுள்ள பெரும்பாறைகள், 2,600 டன் இரும்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
இது இந்தியாவின் முதல் கடல் பாலம். இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
கடந்த 1876ல் ஆங்கிலேயர்கள் இந்தியா இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். பாம்பன் கடல், தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் பாலம் அமைத்து ரயில் போக்குவரத்து ஏற்படுத்தத் திட்டமிட்டனர்.
இதற்காக ஜெனரல் மன்றோ என்பவரால் ஆய்வு நடத்தப்பட்டது. இத்திட்டம் ஆய்வு நிலையில் கைவிடப்பட்டது. சென்னை டெபுடி ஜெனரல் ரைட்சன் என்பவரால் 'டுவின்ஸ் ரயில் பெர்க்கி சர்வீஸ்' என்ற திட்டம் தயாரிக்கப்பட்டது.
அப்போது 229 லட்சம் செலவில் திட்டத்தைச் செயல்படுத்தப் பிரிட்டிஷ் அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது அதிகத் தொகை என்பதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
இறுதியாகக் கீழே கப்பல், மேலே ரயில் செல்லும் வகையில் 1899 ல் 'டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ்' பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ல் ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வர்த்தகப் போக்குவரத்திற்காக பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. இத்திட்டப்படி பாம்பன் கடலில் தூக்கு பாலம் மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க வேண்டும். அங்கிருந்து கப்பலில் செல்வதற்கு தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாரில் துறைமுகம் அமைக்க வேண்டும். இதற்காக 70 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகளைத் துவங்கியது.
கடந்த 1902 முதல் பாலம் கட்டுவதற்கு அனைத்துப் பொருட்களும் இங்கிலாந்திலிருந்து கப்பல்கள் மூலம் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டன. குஜராத்தைச் சேர்ந்த கட்ஜ்கரோலி குடும்பத்தார் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பாம்பன் ரயில் பாலத்தில் முதல் ரயில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம்தேதி இயக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்குத் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக ஆரம்பக் காலக்கட்டங்களில் இந்தப் பாலம் பயன்படுத்தப்பட்டது.
இலங்கைக்குச் செல்லும் தொழிலாளர்கள் சென்னையிலிருந்து ராமேசுவரம் வரை ரயிலில் பயணம் செய்து, பின்பு தனுஷ்கோடி முதல் தலைமன்னாருக்குச் சிறு கப்பல் மூலம் பயணம் செய்வர். பின்னர் அங்கிருந்து மீண்டும் கொழும்புக்கு ரயிலில் செல்வர். இதை போட் மெயில் சேவை என ஆங்கிலேயர் அழைத்தனர்.
பாம்பன் ரயில் பாலம் கட்டடப்பட்டு நூற்றாண்டைக் கடந்து விட்ட நிலையில் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான முடிவை மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் அறிவித்தது. கன்னியாகுமரியில் 1.3.2019-ல் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, காணொளி மூலம் புதிய பாம்பன் ரயில் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
11.8.2019-ல் பூமி பூஜையுடன் கட்டுமானப் பணி தொடங்கியது. புதிய பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடி. பாலத்தின் நீளம் 2,078 மீட்டர். 101 தூண்களைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது. தூண்களிடையே 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன,
பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் தூக்குப்பாலம் ஆகும்.
மார்ச் மாதம் இந்த புதிய பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.
|
|||||
by on 01 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|