|
|||||
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரானார் ஓய்வுபெற்ற ஆட்சிப்பணி அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் |
|||||
தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் போன்ற பணிகளுக்காக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இது 1968-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் தமிழைக் கற்பிக்கும் பணியையும் இந்த நிறுவனம் செய்து வருகிறது. சென்னை தரமணியில் இந்நிறுவனம் செயல்படுகிறது. தற்போது இந்நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஆட்சிப்பணி அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "இந்த நியமனம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்குப் புதிய உந்துதலை அளிக்கும். பாலகிருஷ்ணன் ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல்லுநரும் ஆவார்.
தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர். ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர். சிந்துவெளிப் பண்பாட்டுத் தொல்லியல் தரவுகளைச் சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளுடன் ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்திய ஆட்சிப் பணியில் 1984-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசா அரசிலும், தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர்.
திராவிட மொழிக்குடும்பத்தின் பரவல், சிந்து சமவெளிப் பண்பாடு, தொல்தமிழ்த் தொன்மங்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது..." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|||||
by on 27 Feb 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|