LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

புதிய பார்வையில் திருக்குறள் - The Ageless Wisdom

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்ட ஒப்புயர்வற்ற நூல். முதன் முதலாக, 1812 -ஆம் ஆண்டு ஃபிரன்சிஸ் வொயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) அவர்களின் முயற்சியால் திருக்குறள் அச்சிடப்பட்டது. கடந்த 200 ஆண்டுகளில் திருக்குறளுக்குத் தமிழில் பல உரைகள் பலரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை 37 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் திருக்குறளுக்கு 55 க்கும் மேலான மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. உரைகளும் மொழிபெயர்ப்புகளும் இருந்தாலும், தமிழகத்துக்கு அப்பால் திருக்குறளைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் வெகு சிலரே. பள்ளி நாட்களில் திருக்குறளைப் படித்திருந்தாலும், எல்லாக் குறளையும் நாம் படித்திருப்போமா எனக் கேட்கின் ‘இல்லையே’ என்று தான் பதில் அளிக்க இயலும்.  படித்த குறட்பாக்களுக்கு,வள்ளுவர் சொல்ல வந்த கருத்தை முழுமையாக அறிந்தோமா என்றால் அதுவும் இல்லை. இவையிரண்டும் இல்லாதது போது, அக் கருத்துக்களை நாம் வாழ்க்கையில் பின்பற்றுவதும் இயலாத செயலாத ஒன்று தானே!

  ஆனால், அறம், அரசியல், பொருளாதாரம், காதல், இல்லற வாழ்க்கை, உளவியல், மேலாண்மை, கல்வி, கேள்வி, தலைமைப் பண்பு, ஈகை, கொடை, ஒப்புரவு, கருணை, உண்மை, புகழ், சினம் தவிர்த்தல், புலால் மறுத்தல், அன்பு, நட்பு, நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பண்புடைமை மற்றும் மனித வாழ்க்கைக்கு இன்றையமையாத பல கருத்துக்களைத் திருக்குறளில் தெளிவாகவும் விளக்கமாகவும் திருவள்ளுவர் எடுத்துக் கூறியிருந்தாலும், தமிழர்கள் திருக்குறளை ஒரு தமிழ் இலக்கியமாக மட்டுமே கருதினார்களே ஒழிய, அதனுடைய பல பரிமாணங்களை அவர்கள் காணத் தவறிவிட்டார்கள். மற்றும், தமிழர்கள் திருக்குறளை பெரிய அளவில் பரப்புதலைச் செய்ய தவறிவிட்டார்கள் என்ற உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒருபொருள் எவ்வளவு சிறந்ததாகவும் உயர்ந்ததாகவும் இருந்தாலும் அதை விளம்பரப்படுத்தாவிட்டால், அது பரவலாக மக்களிடையே சென்றடைய வாய்ப்பில்லை.  திருக்குறளுக்கு உரைகளும் மொழிபெயர்ப்புகளும் தேவைதான்; ஆனால் அவை விளம்பரங்கள் அல்ல. திருக்குறள் உலகளவில் பலராலும் அறியப்பட வேண்டுமானால், திருக்குறளைப் பற்றிய நூல்களைப் பலமொழிகளில் வெளியிட வேண்டும். திருவள்ளுவரின் கருத்துக்களை மற்ற அறிஞர் பெருமக்களின் கருத்துக்களோடு ஒப்பிட்டுக் கட்டுரைகளும் நூல்களும் பல மொழிகளில் வெளியிடப்பட வேண்டும். உலகின் பல நாடுகளில் உள்ள தமிழர்கள் திருக்குறள் மாநாடுகள் நடத்த வேண்டும். தமிழர் அல்லாதவர்களுக்குத் திருக்குறளின் பெருமையை பலவிதமாக விளம்பரப்படுத்த வேண்டும். 

திருக்குறளை அமெரிக்காவில் விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுபவர்களில் முதன்மையானவர் முனைவர் இர. பிரபாகரன் என்றால் அது மிகையாகாது. அவர் 2003 – ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம் என்ற ஒரு அமைப்பை வாசிங்டன் வட்டாரத்தில் உருவாக்கி, அதன் அடிப்படையில் திருக்குறளைப் பல உரைகளுடன் ஒப்பிட்டு, முறையாகப் பலரும் கூடிப் படிப்பதற்கு வழி வகுத்தார். 2005 – ஆம் ஆண்டு முனைவர் பிரபாகரனின் தலைமையில் வாசிங்டனில், பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. வாசிங்டன் வட்டாரத்  தமிழ் இலக்கியக் கூட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, அமெரிக்காவில் பல ஊர்களில் தமிழர்கள் திருக்குறள் படித்துவருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் பாடப் புத்தகங்களில் பல குறட்பாக்கள் உள்ளன. 

அமெரிக்காவிலும் தமிழகத்திலும் பல ஆண்டுகளாகப் பல ஊர்களுக்குச் சென்று முனைவர் பிரபாகரன் திருக்குறளைப் பற்றி சொற்பொழியாற்றி வருகிறார். இப்பொழுது, திருக்குறளில் உள்ள கருத்துக்களைத் தொகுத்து, பலகட்டுரைகளாக முனைவர் பிரபாகரன் ஆங்கிலத்தில் “The Ageless Wisdom” என்று ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். இந்த நூலில், திருவள்ளுவரின் கருத்துக்களை அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பீட்டர் டிரக்கர், ஸ்டீவன் கவ்வி, போன்ற பல மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களோடு ஒப்பிட்டு, 22 கட்டுரைகள்  உள்ளன. 

இந்த நூல் தமிழரல்லாதவர்களுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ள முறையில் அமைந்துள்ளது. குறிப்பாக, கட்டுரைகள், அறிவு, சுய கட்டுப்பாடு, நேர்மை, தனி மனித வெற்றிகள், மனித நேயத்தின் அடிப்படைக் கூறுகள், காதல் சார்ந்த வாழ்க்கை போன்றவற்றை ஆழமாகத் தொடுகின்றது.   ஆங்காங்கே, புலம் பெயர்ந்த, தமிழ் இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் காதல், இல்லற வாழ்வியல், அறம் சார்ந்த வாழ்க்கை போன்ற கருத்துக்களை வள்ளுவமும் மற்ற நூல்களும் எங்ஙனம் சொல்லிச் செல்கின்றன என்பதை நூலாசிரியர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும், வள்ளுவத்தில் கூறப்படும் தலைமைப் பண்புகள், ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்படும் மேலாண்மை இதழில் கூறப்படும் தலைமைப் பண்புகளோடு எங்ஙனம்  ஒத்துப் போகின்றன என இப் புத்தகத்தில் தெளிவாகக் கூறப்படுகிறது.  

இந்த நூலுக்கு பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (Prof. George Hart) மற்றும் முனைவர் இறையன்பு, இ.ஆ.ப. (Dr. Iraiyanbu, I.A.S) ஆகியோர் அணிந்துரை  வழங்கி உள்ளனர். அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரையில், இந்த நூலின் சிறப்புக்களை மிகவும் பாராட்டி உள்ளனர். இந்த நூல் தமிழரல்லாதவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் தெரியாத இளைய தலைமுறை தமிழர்களும் திருக்குறளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது. 

ஆய்வுக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்நூல், கடந்த சூலை மாதம் 14-ஆம் திகதியன்று  ( 07/14/2019) பெருமை மிகு வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தில் கொண்டாடப்பட்ட முத்தமிழ் விழாவில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், தமிழக அரசின் திருவள்ளுவர் விருது  பெற்றவருமான முனைவர். இ. சுந்தரமூர்த்தி அவர்களால் வெளியிடப்பட்டது. திருக்குறள் ஆய்ந்தறிந்த அறிஞரால் இந் நூல் வெளியிடப்பட்டது சாலப் பொருத்தமன்றோ!

இது, தமிழர்கள் ஒவ்வொருவருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் மட்டுமல்ல, தமிழரல்லாதோருக்கும் இதைச் சென்றடையும்  வகையில், விழாக் கொண்டாட்டங்களிலும், விருந்தினர்களுக்கும் பரிசளிக்கத் தக்க நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த நூலுக்குத் தமிழகத்திலும், அமெரிக்காவிலும், மற்ற நாடுகளிலும் பெரும் வற்வேற்பு இருக்கும் என்பதிலும் ஐயமில்லை.இந்த நூல் கிடைக்குமிடங்கள்:

  • இணையம் வாயிலாக (amaon ):

https://www.amazon.com/s?k=dr.prabhakaran&ref=nb_sb_noss

 

இந்தியாவில்:

Emerald Publishers

15A, First Floor, Casa Major Road

Egnore, Chennai – 600 008

Phones: +91 44 2819 3206; 42146994

 

அமெரிக்காவில் 

(இந்த நூலை வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள முகவரிக்கு $20.00 க்குக் காசோலையும் தங்கள் முகவரியையும் அனுப்பவும்):

Dr. R. Prabhakaran

1103 Bluebird Court East

Bel Air, MD 21015

Email: prabu0111@gmail.comby Swathi   on 21 Jul 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வலைத்தமிழ் கல்விக்கழகம் வலைத்தமிழ் கல்விக்கழகம்
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா    -   (பிரசாத் பாண்டியன்) புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா - (பிரசாத் பாண்டியன்)
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா
58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா? 58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா?
மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த  பொங்கல் விழா   கொண்டாட்டம் மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த பொங்கல் விழா கொண்டாட்டம்
மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !! மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !!
பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம் பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம்
நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day) நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.