|
||||||||
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் ஆற்றிய உரை |
||||||||
![]() அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ம் தேதி, இந்திய நேரப்படி 10.21 மணிக்கு இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த நிலையில், தலைநகர் வாஷிங்டனில் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில், அவர் சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார். அவருடைய உரையின் தொகுப்பு இது.
"அமெரிக்காவின் பொற்காலம் இப்போதிலிருந்து துவங்கிவிட்டது. இந்நாளிலிருந்து நம் நாடு மீண்டும் செழித்து, உலகம் முழுவதும் மதிக்கப்படும். ஒவ்வொரு நாடும் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படும். இனிமேலும், யாரும் நம்நாட்டைச் சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
நமது இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். நீதியின் அளவுகோல் மீண்டும் சமநிலைப்படுத்தப்படும். நமது நீதித்துறை மற்றும் அரசாங்கத்தின் வன்முறை நியாயமற்ற ஆயுத மயமாக்கல் போன்றவை முடிவுக்கு வரும். நம் நாட்டை வளமாக, சுதந்திரமான மற்றும் பெருமைமிக்க ஒரு தேசமாக உருவாக்குவதே எனது லட்சியம்.
அமெரிக்கா முன்பைவிட பெரிதாகவும், வலிமையானதாகவும், விதிவிலக்கானதாகவும் விரைவில் மாறும். தேசத்தின் வெற்றிக்கான ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கத்தில் நாம் உள்ளோம் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதவிக்குத் திரும்புகிறேன்.
முதலில் நாம் எதிர்கொள்ளும் சவால்களில் நேர்மையாக இருக்க வேண்டும். இன்று நமது அரசாங்கம் நம்பிக்கை நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஏனென்றால், பல ஆண்டுகளாகத் தீவிரவாதம் மற்றும் ஊழல் நிறைந்த அரசு ஆட்சியில் இருந்தது. நம் சமூகத்தின் தூண்கள் முற்றிலும் உடைந்து சிதைந்து கிடைக்கும் நிலையில், உள்நாட்டின் ஒரு சிறிய நெருக்கடியைக் கூட சமாளிக்க முடியாத அரசாங்கம் மற்றும் வெளிநாடுகளில் ஏற்பட்ட பேரழிவின் போது தொடர்ச்சியாகத் தடுமாறிய ஓர் அரசாங்கத்தைக் கொண்டிருந்தோம்.
முன்னாள் அரசு சட்டத்தை மதிக்கும் அமெரிக்க மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த ஆபத்தான குற்றவாளிகளுக்கு அடைக்கலம் மற்றும் பாதுகாப்பை அளித்தது. வெளிநாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க வரம்பற்ற நிதியை வழங்கிய அரசால், சொந்த மக்களின் எல்லையைப் பாதுகாக்க மறுத்து விட்டது. அதனால், அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்படுகிறது. அதன் மூலம், ஊடுருவல் தடுக்கப்பட்டு, ஏற்கனவே சட்டவிரோதமாக ஊடுருவிய நபர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
இந்தத் தருணத்திலிருந்து அமெரிக்காவின் வீழ்ச்சி முடிந்து விட்டது. நமது நாட்டின் சுதந்திரங்களும், விதிகளும் இனி மறுக்கப்படாது. மேலும், அமெரிக்க அரசின் நேர்மை, திறமை, விசுவாசம் அனைத்தும் மீட்டெடுக்கப்படும். நமது குடியரசை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்காகப் போராடும் என் உயிரைப் பறிக்க முயன்றனர். அது தான், என்மீதான துப்பாக்கிச் சூடு. அப்போது என் உயிர் ஒரு காரணத்திற்காகக் காப்பாற்றப்பட்டது. அது, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றவே கடவுளால் காப்பாற்றப்பட்டேன்.
அதனால், அமெரிக்க மக்களுக்காக, ஒவ்வொரு நாளும் கண்ணியத்துடனும், வலிமையுடனும், சக்தியுடனும் போராடுவோம். அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வரும் நோக்கத்துடன் முன்னேறிச் செல்லுவோம். அதனால், ஜனவரி 20 அமெரிக்க மக்களின் விடுதலை நாள் (Liberation Day).
ருப்பு மற்றும் ஹிஸ்பானிக் சமூகத்தினர் உங்கள் வாக்குகள் மூலம் எனக்குக் காட்டிய அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தியதற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரச்சாரத்தில் உங்கள் குரல்களைக் கேட்டிருக்கிறேன். இனிவரும் ஆண்டுகளில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும், மார்ட்டின் லூதர் கிங் நினைவாக, அவரது கனவை நினைவாக்க ஒன்றாகச் சேர்ந்து பாடுபடுவோம்.
அச்சுறுத்தல் மற்றும் படையெடுப்புகளிலிருந்து நமது நாட்டைப் பாதுகாப்பதை விட ஒரு தலைமைத் தளபதியாக, எனக்கு வேறு உயர்ந்த பொறுப்பு எதுவும் இல்லை. எனது அமைச்சரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும்
அவர்களது பொறுப்புகளைப் பயன்படுத்தி, பணவீக்கத்தைத் தோற்கடித்து, செலவு மற்றும் விலைகளையும் விரைவாகக் குறைக்க உத்தரவிடுவேன்.
அமெரிக்கா மீண்டும் ஓர் உற்பத்தி நாடாக மாறும். ஏனென்றால், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளது. அதனை நாம் பயன்படுத்தப் போகின்றோம். விலைகளைக் குறைத்து, நம்முடைய மூலப்பொருட்களை மீண்டும் மேலே கொண்டு வருவோம். மேலும், அதனை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து, அமெரிக்காவை மீண்டும் ஒரு பணக்கார நாடாக மாற்றுவோம். அதை நம் காலடியில் உள்ள திரவத் தங்கம்தான் செய்யப் போகிறது.
அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாக்க நமது வர்த்தக அமைப்பை உடனடியாக மாற்றுவோம். அதாவது, நம் நாட்டை வளப்படுத்த நமது குடிமக்களுக்கு வரி விதிப்பதற்குப் பதிலாக, நமது மக்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிப்போம். இதன் மூலம், வெளிநாடுகளிலிருந்து நமது கருவூலத்தில் பணம் கொட்டும். இதன் மூலம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்கா செழித்து வளரும்.
அமெரிக்காவிற்குப் பேச்சு சுதந்திரம் மீண்டும் கொண்டு வரப்படும். நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டப்படும். எனது தலைமையின் கீழ், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நியாயமான, சமமான மற்றும் பாரபட்சமற்ற நீதியை மீட்டெடுப்போம். அனைத்துப் பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கை மீண்டும் கொண்டு வருவோம்.
இனம் மற்றும் பாலினம் ரீதியாகப் பிரித்தெடுக்கும் அரசாங்கக் கொள்கை முடிவுக்குக் கொண்டுவரப்படும். இனிமேல், ஆண் - பெண் என இரு பாலினங்கள் மட்டுமே என்பது அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வக் கொள்கையாக இருக்கும். நம்முடைய படைகள் அமெரிக்காவின் எதிரிகளைத் தோற்கடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தச் சுதந்திரம் கொடுக்கப்படும். அந்த வகையில், 2017 ஆம் ஆண்டைப் போலவே, உலகம் இதுவரை கண்டிராத வலிமையான ராணுவத்தை மீண்டும் உருவாக்குவோம்.
அமெரிக்கா மதம், நம்பிக்கை, நல்லெண்ணம் போன்றவற்றால் மீண்டும் மதிக்கப்படும். நாம் வளமாக இருப்போம், நாம் பெருமைப்படுவோம், நாம் வலிமையாக இருப்போம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெற்றி பெறுவோம், தோற்றுப் போக மாட்டோம். நாம் உடைக்கப்படவும் மாட்டோம், நாம் தோல்வியடையவும் மாட்டோம். இன்றிலிருந்து அமெரிக்கா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்டு நாடாக இருக்கும். தைரியமாகவும், பெருமையாகவும் வாழ்வோம். நாம் தைரியமாகக் கனவு காண்போம், நம் வழியில் எதுவும் குறுக்கே நிற்காது. ஏனென்றால் நாம் அமெரிக்கர்கள். நமது பொற்காலம் துவங்கிவிட்டது."
|
||||||||
by on 21 Jan 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|