|
||||||||
அதிபராகப் பதவியேற்றதும் தடாலடி உத்தரவுகளில் கையெழுத்திட்டு உலகை அதிர வைத்த டிரம்ப் |
||||||||
![]()
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பின்னர் வெள்ளை மாளிகையில் உள்ள தமது அலுவலகத்தில் பருவநிலை மாற்றம் முதல் குடியேற்றம் வரை பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்காவின் கேப்பிட்டல் ஹில்லில் வன்முறையில் ஈடுபட்டு கைதான தமது ஆதரவாளர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு அதிபர் வேட்பாளராகப் பரப்புரையின் போது அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையிலும் முதல் நாளில் சில உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். எனினும் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது என்ற உத்தரவில் அவர் கையெழுத்திட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
அமெரிக்காவில் குடியேற்றம், குடியுரிமை பெறுவதை நிர்வகிக்கும் முறைகளை மறு வடிவமைக்கும் உத்தரவுகளில் முதல் நாளில் டிரம்ப் கையெழுத்திட்டார். நாட்டின் தெற்கு எல்லையில் தேசிய அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். அமெரிக்கக் குடியுரிமை இல்லாமல் தீவிரமான குற்றத்தில் ஈடுபட்ட ராணுவம் தொடர்புடையவர்கள் பெரும் அளவில் நீக்கப்படுவர் என்று டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
அமெரிக்காவில் பிறந்தால் குடியுரிமை என்ற உத்தரவை ரத்து செய்யும் உத்தரவிலும் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமெரிக்காவில் பிறப்பவர்கள் அமெரிக்கக் குடியுரிமை படைத்தவர்கள் ஆவர். ஆனால், அதனை இப்போது டிரம்ப் ரத்து செய்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தும். சட்டரீதியாக இதனை எதிர்த்து வழக்குத் தொடரப்படலாம் என்று தெரிகிறது.
2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றதாக அறிவிக்கப்பட்டதால் 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அவருடைய ஆதரவாளர்கள் கேப்பிட்டல் ஹில் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர். அதில் தொடர்புடைய டிரம்ப் ஆதரவாளர்கள் 1500 பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1500 பேருக்கும் டிரம்ப் மன்னிப்பு வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
பன்முகத் தன்மையை எதிரொலிக்கும் திட்டங்கள், தன்பாலினத்தவர் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சம உரிமை ஆகியவற்றை ரத்து செய்யும் உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அரசு, வணிகம், சுகாதாரம் ஆகியவற்றில் பன்முகத்தன்மை, சம உரிமை ஆகியவற்றையும் ரத்து செய்தார். அமெரிக்க அரசானது இரண்டு பாலினத்தவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கும் என்றும் அது ஆண், பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டுமே என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
டொனால்டு டிரம்ப் தமது முதலாவது ஆட்சிக் காலத்தின் போது எடுத்த நடவடிக்கைகளைப் போல இப்போதும் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவிலும் கையெழுத்திட்டார். உலக அளவில் தொடர்ச்சியாகப் பேரழிவை ஏற்படுத்தும் காலநிலை நிகழ்வுகளின் காரணமாகப் புவி வெப்பமயமாதலை எதிர்த்துப் போராடும் உலக நாடுகளின் முயற்சியைப் புறக்கணிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அமெரிக்காவின் முடிவு ஐ.நாவில் முறையாக சமர்ப்பிக்கப்பட்டப் பின்னர் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற ஓர் ஆண்டு ஆகும்.
தேசிய எரிசக்தி அவசர நிலை என்ற உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். உலகின் முன்னணி மற்றும் எரிவாயு உற்பத்தியாளர் என்ற விரிவாக்கத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இதில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து அவர் தமது அதிபர் பதவி ஏற்பு விழா உரையிலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மத்திய அரசின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. இனி மத்திய அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றின்போது அமெரிக்க அரசு அதிகாரிகள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தால் சீனாவை விடவும் அமெரிக்கா நேர்மையாக நடத்தப்படவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்துவதற்காக முதல் கட்டமாக 75 நாட்களுக்கு இந்தச் செயலியை நிறுத்தி வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் டிக் டாக் செயலியை விநியோகித்தல், அப்டேட் செய்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிப்பதற்கான சட்டம் அமலுக்கு வருவதற்குத் தாமதம் ஆகும். டிக் டாக் செயலியை நடத்தும் சீன நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துக்கு 50 சதவிகித பங்குகளைத் தர வேண்டும் என்று டிரம்ப் நிர்ப்பந்தித்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கருப்பு பட்டியலிலிருந்து கியூபாவை நீக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கியூபாவில் உள்ள சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்
அடிப்படையில் இந்தப் பட்டியலிலிருந்து கியூபாவை டிரம்ப் நீக்கி உள்ளார்.
|
||||||||
by on 21 Jan 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|