LOGO
  முதல் பக்கம்        மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்காடு இளங்கோ அறிவியல் எழுத்தாளர்,

 

நாம் இதற்கு முன்பு கேள்விப்படாத காய்ச்சல் ஒன்று இந்தியாவில் நுழைந்து நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. கேரளா மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். அவனுக்குக் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்து போனான். அவனுக்கு ஏற்பட்டது வெஸ்ட் நைல் காய்ச்சல் (West Nile Fever) எனக் கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலாக வெஸ்ட் நைல் காய்ச்சலால் ஓர் உயிரிழப்பு ஏற்பட்டதன் மூலம் இக்காய்ச்சல் இந்தியாவிலும் பரவிவிட்டது. இது மிகுந்த அச்சத்தை நம்மிடம் ஏற்படுத்தி வருகிறது.

கண்டுபிடிப்பு:

இக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு வைரஸ் ஆகும். முதன் முதலாக இந்த வைரஸ் 1937 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. உகாண்டா நாட்டின் வெஸ்ட் நைல் என்னும் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile Virus) எனப் பெயரிடப்பட்டது. இந்த வைரஸால் ஏற்படக்கூடிய காய்ச்சலை வெஸ்ட் நைல் காய்ச்சல் என அழைத்தனர். 1955 ஆம் ஆண்டில்தான் இக்காய்ச்சல் கொசுவின் மூலமே பரவுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தனர்.

இந்த வைரஸானது பிளேவிவைரடே (Flaviviridae) என்னும் குடும்பத்தில் பிளேவி வைரஸ் (Flavivirus) என்னும் பேரினத்தில் உள்ள ஒரு இனமாகும். ஜப்பானீஸ் என்செபாலிடிஸ், மஞ்சள் காய்ச்சல் மற்றும் செயின் லூயிஸ் என்செபாலிடிஸ் போன்ற வைரஸ்களுடன் நெருங்கிய தொடர் உடையதுதான் இந்த வெஸ்ட் நைல் வைரஸ் ஆகும். மற்ற பிளேவிவைரஸ்களின் மூலமே டெங்கு, ஜிகா, குரங்குக் காய்ச்சல் போன்ற நோய்கள் மனிதர்களிடம் பரவுகிறது.

ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1950 இல் இஸ்ரேல், 1962 இல் ஐரோப்பா என இக்காய்ச்சல் பரவியது. 1999 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இக்காய்ச்சல் பரவியது. பின்னர் அமெரிக்கா நாட்டில் அலாஸ்கா தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இக்காய்ச்சல் பரவிவிட்டது. குறிப்பாக வட அமெரிக்கா நாடுகளில்தான் வெஸ்ட் நைல் காய்ச்சல் அதிகளவில் காணப்படுகிறது. இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில்தான் இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


நோய் பரவுதல்:

கியூலெக்ஸ் (Culex Pipieus) என்னும் கொசுவின் மூலமாகவே இந்த வைரஸ் மனிதர்களைச் சென்றடைகிறது. இந்தக் கொசுக்களை வீட்டு கொசுக்கள் அல்லது வெஸ்ட் நைல் வைரஸ் கொசுக்கள் என்று அழைக்கின்றனர். இக்கொசுக்கள் வீட்டைச் சுற்றி தேங்கிக் கிடக்கும் நீரில் முட்டை இடுகின்றன. வீட்டைச் சுற்றி தேங்கிய நீர் காணப்படுவது சாதாரணம். ஆகவே இங்கு இக்கொசுக்கள் இனப் பெருக்கம் செய்கின்றன. ஆகவேதான் இதை வீட்டுக் கொசுக்கள் என்கின்றனர்.

காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ், பறவைகளில் இருந்து கொசுவிற்கும், பிறகு கொசுவிலிருந்து மனிதனுக்கும் பரவுகிறது. வைரஸ் பெருகும் இடமாக, விருந்தோம்பியாக பறவையின் உடல் இருக்கிறது. அந்தப் பறவையை கியூலெக்ஸ் கொசு கடித்துவிட்டு, பின்னர் மனிதனைக் கடித்து இரத்தத்தைக் குடிக்கும் போது இந்த வைரஸ் மனிதன் உடலுக்குள் சென்று விடுகிறது. இதன் விளைவாக வெஸ்ட் நைல் காய்ச்சல் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

பறவைகள் மற்றும் பசுக்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இதன் காரணமாகப் பறவைகள் இறக்கவும் நேர்கிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட பறவை இனங்களில் இந்த வைரஸ் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். நியூயார்க் நகரில் வாழும் சிட்டு குருவிகளின் உடலிலும் இந்த வைரஸ் கிருமிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கிருமி தொற்று ஏற்பட்ட பறவைக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டோ அல்லது ஏற்படாமல் கூட இருக்கலாம். ஆனால் அதன் உடலில் வைரஸ் கிருமிகள் அதிகளவில் பெருகும். அப்போது பறவை இறந்துவிடும். பறவைகளின் உடலினுள் சென்ற வைரஸ் கிருமிகள் 5 நாட்களில் அதன் உடலில் பெருகிவிடும். வைரஸ் தொற்று ஏற்பட்டு 5 நாட்கள் கழித்தபிறகு அந்தப் பறவையைக் கொசு கடித்தால், கொசுவின் உடலினுள் வைரஸ் கிருமி சென்று விடுகிறது. அக்கொசு தனக்கு அருகில் உள்ள மனிதர்களைக் கடிக்கும்போது அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுகிறது.

ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உண்ணிகளிடம் (Ticks) இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் நைல் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவாது. நோய்வாய்ப்பட்டவர் தொடுவதாலோ, முத்தமிடுவதாலோ இது ஒருபோதும் பரவாது. ஆனால் ரத்தமாற்று, உறுப்பு தானம் மூலம் பரவலாம். நோய்த்தொற்று ஏற்பட்ட பறவையைத் தொடுவது அல்லது இறந்த பறவையை அப்புறப்படுத்துவதன் மூலம் இந்த வைரஸ் தொற்று மனிதனுக்கு ஏற்படாது. ஆனால் இறந்த பறவையின் தோல் மனித தோலில் படக்கூடாது என அறிவுரை வழங்கப்படுகிறது. ஆகவே கையுறை அல்லது இரட்டை பிளாஸ்டிக் பை உதவியுடன் அப்புறப்படுத்த வேண்டும்.

அறிகுறிகள்:

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட மனிதர்களில் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் தென்படுவதில்லை. 20 சதவீதம் பேருக்கு மட்டுமே நோயின் அறிகுறிகள் தெரியும். இவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, வாந்தி, தொண்டை வலி, தசைப்பிடிப்பு, உடல் வலி, மூட்டு வலி, சொறி போன்ற அறிகுறிகள் இருக்கும். இவை நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். நோய் தீவிரம் அடையும்போது அது மூளையைப் பாதிக்கும். மூளை அழற்சிக் காய்ச்சல் மற்றும் மூளை உறை அழற்சிக் காய்ச்சல் ஆகியவற்றால் பாதிப்புகள் உண்டாகும். சுமார் 1 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த நிலை ஏற்படுகிறது.

இந்த வைரஸ் தொற்றுள்ள கொசுவானது 150 பேரைக் கடித்தால் அதில் ஒருவர் மட்டுமே இறக்க நேரிடுகிறது. மனித உடலில் நுழைந்த வைரஸ் 5 முதல் 15 நாட்கள் வரை இருந்து நோயை ஏற்படுத்தும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, புற்று நோய், சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக கோளாறு உடையவர்களுக்கு இந்த வைரஸ் கிருமி அதிக பாதிப்பைக் கொடுக்கிறது. நோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஞாபக மறதி, குழப்பம், மன உளைச்சல் போன்றவை ஏற்படும். இவர்களைக் காப்பாற்றினாலும் சிலருக்குக் காது கேளாண்மை, உடலில் ஊனம் ஆகியவை ஏற்பட்டு விடுகிறது.

சிகிச்சை:

வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு எனப் பிரத்யேக மருந்துகள் எதுவும் இல்லை. தடுப்பூசியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சலுக்குக் கொடுக்கும் மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவையே வழங்கப்படுகின்றன. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. குதிரைகளுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது. செளதி அரேபியாவில் குதிரைக்கு நோய் தடுப்பூசி போடப்படுகிறது. அதையே மனிதர்களுக்கும் அங்கு பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஒரு வாரம் முதல் ஒரு மாதத்தில் முழுவதும் குணமடைந்து விடலாம்.

தடுப்பூசி நடவடிக்கை:

இக்காய்ச்சல்  வருடம் முழுவதும் பரவக்கூடியது. இருப்பினும் மழைக் காலங்களிலேயே அதிகப் பாதிப்புகளை உண்டாக்குகிறது. கொசுக்களின் மூலமே பரவுவதால் கொசுக்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இக்கொசுக்கள் இரவு நேரத்திலேயே கடிக்கின்றன. ஆகவே கொசு வலையைப் பயன்படுத்துவது, கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலமாக கொசுக் கடியில் இருந்து தப்பிக்கலாம். வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல், சுகாதாரத்தைப் பராமரித்திட வேண்டும். இதன் மூலமாகக் கொசுவின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

காய்ச்சல் ஏற்பட்டால் அது எந்த வகையான காய்ச்சல் என்பதைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம், ஆழபுலா, போபால், மனிபால் போன்ற இடங்களில் வெஸ்ட் நைல் வைரஸ்களைக் கண்டுபிடிக்கும் வசதி உள்ளது. சுகாதாரத் துறை தொடர்ந்து  கண்காணித்து வருகிறது. இருப்பினும் நாம் விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்த வழியாகும்.

by Swathi   on 14 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.