LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- அ.முத்துலிங்கம்

ஆச்சரியம்

நான் சில மாதங்கள் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஒரு பெரிய கம்பனியில் அச்சகம் என்பது சிறிய பிரிவு. அந்தப் பிரிவில் கணக்காளர் பகுதியில் எனக்கொரு சின்ன வேலை. கம்பனியின் முதன்மை இயக்குநர் கொழும்பு மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர். பரம்பரை செல்வந்தராக இருக்கவேண்டும். அவருக்கு இந்த அச்சகம் தேவையில்லாத ஒன்று. அச்சகத்துக்கு பொறுப்பான மேலாளர்  சகலதையும் கவனித்தார். ஆனாலும் முதன்மை இயக்குநர் தினமும் வந்து இரண்டு மணி நேரமாவது அச்சகப் பிரிவில் செலவழிப்பார்.



அவர் வந்து ஆட்சி நடத்தும் அந்த இரண்டு மணிநேரமும் முழு அலுவலகமும் பரபரப்பாகும்.  என் வாழ்க்கையில் நான் அப்படியான காட்சியை கண்டதே கிடையாது. மேலாளரிலிருந்து கடைசி ஊழியர் வரை நடுங்குவார்கள். முதன்மை இயக்குநர் பார்ப்பதற்கும் அப்படித்தான் இருப்பார். நல்ல உயரம், அத்துடன் முன்னுக்கு தள்ளி நிற்கும் வயிறு. எந்தக் கோடை எந்தச் சூரியன் எரித்தாலும் மடிப்புக் கலையாத விலையுயர்ந்த ஆடைக்குமேல் கோட்டு அணிந்துதான் காட்சியளிப்பார். அவரிடம் விதவிதமான தோல் சப்பாத்துக்கள் இருந்தன. நாளாந்தம் பளபளவென்று மினுக்கியெடுத்த கறுப்பு சப்பாத்தில் டக்டக்கென ஒலியெழுப்பி நடந்து வருவார்.

அவர் தூரத்தில்  வருவது தெரிந்ததும் அலுவலக கோப்புகள், பேரேடுகள், நாள் கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றின் பக்கங்களை இடமிருந்து வலமாக திருப்பும் சத்தம் கேட்கும். பின்னர் வலமிருந்து இடமாக திருப்பும் சத்தம் எழும். முழு அலுவலகமும் பதற்ற நிலையை எய்தும். யாரையாவது கூப்பிட்டு ஏதாவது விசாரிப்பார். மற்றவர்கள் காற்றுக்குள் மறைந்துகொள்ள முயற்சி செய்வர். விசாரிக்கப்படுபவருக்கு வாய் குளறும். முதன்மை இயக்குநர் மூன்றாவது கேள்வி கேட்கும்போது முதல் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவார். ‘சரி போ’ என்று சொன்னதும் பாய்ந்துபோய் தன்னுடைய இருக்கைக்குள் புதைந்துகொள்வார்.

அவருடைய அந்தரங்கக் காரியதரிசி ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கக்கூடிய பெண். மணமுடிக்கவில்லை, ஒரு காலத்தில் அவர் அழகான பெண்ணாக இருந்திருக்கலாம். சற்று அதிகமாக பால் கலந்த தேநீர் கலர். நீளமான கண்கள். அவருக்கு ஒரு காதலன் இருந்தார். திருமணத்துக்கு அழைப்பிதழ்கள் அனுப்பிய பின் மணமுடிக்க முடியாது என்று சொல்லி ஓடிவிட்டார். இனிமேல் திருமணமே வேண்டாமென்று அப்போது தீவிரமான முடிவெடுத்தார் என்று அலுவலகத்தில் பேசிக்கொண்டார்கள். கடந்த 25 வருடகாலம் முதன்மை இயக்குநருக்கு விசுவாசமாக  வேலை பார்க்கிறார். இப்பொழுது மெலிந்து வளைந்துபோய் அவருடைய தாடை எலும்புகள் வெளியே தள்ள கேவலமாக தெரிவார். எந்த ஒரு காலத்திலும் ஒப்பனையை காணாத முகம். ஒரு வாரம் முழுக்க இரண்டு பருத்தி சேலைகளை மாறிமாறி கட்டி வருவார். கம்பனிக்கு காலையில் முதலில் வந்து கடைசியில் போவது அவர்தான். அப்படி திறமையுடன் கடுமையாக உழைக்கும் அவருக்கு அந்தக் கம்பனியில் தெரியாத விசயங்களே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு நாளும் முதன்மை இயக்குநர் வந்து போனதும் அழுதுகொண்டிருப்பார். இத்தனை வருடங்களில் இந்தப் பெண் வேறு வேலை தேடிக்கொள்ளாதது இன்னொரு ஆச்சரியம்.

முதன்மை இயக்குநர் வந்ததும் அவருடைய அறையை நோக்கி பிரதானமான முடிவுகள் எடுக்கவேண்டிய கோப்புகளை தூக்கிக்கொண்டு அந்தரங்க காரியதரிசி ஒட்டமும் நடையுமாக செல்வார். பத்தடி தூரம்தான் என்றாலும் அவர் ஓடித்தான் கடப்பார். அவர் கழுத்திலே இருந்து வழியும் வியர்வையை சேலை தலைப்பினால் ஒற்றியபடியே அவருக்கு பக்கத்தில் நிற்பார். புதிதாகப் பிறந்த குழந்தையை அவர் கையிலே கொடுத்துவிட்டு நிற்பதுபோல கொஞ்சம் பெருமையும் இருக்கும். அவர் செய்த வேலையையும், குறிப்புகளையும் முதன்மை இயக்குநர் படித்து தன் முடிவுகளை எழுதுவார். கோப்புகளின் மேல் மட்டையில் ‘அவசரம்’ ‘மிக அவசரம்’ ‘உடனே’ போன்ற ஒட்டுப்பேப்பர் குறிப்புகளை அவரே ஒட்டி அனுப்புவார். அவருடைய கட்டளைகளை ஊழியர்கள் அவர் விதித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டுமானால் அவர்கள் அன்று வீட்டுக்கு போக முடியாது. அடுத்தநாளும் முடியாது. அவர்கள்  கோப்புகள் கைகளில் கிடைத்ததுமே ஒட்டுப்பேப்பரை அகற்றிவிடுவார்கள். உடனே அவை சாதாரண கோப்புகளாக மாறிவிடும்.

எவ்வளவுதான் கவனமாக காரியதரிசி  தன் வேலையைச் செய்தாலும் முதன்மை இயக்குநர் ஏதாவது ஒரு பிழையை கண்டுபிடித்துவிடுவார். பேச்சு வரப்போகிறது என்பது அவளுக்கு ஒரு நிமிடம் முன்பாகவே தெரிந்துபோகும். சண்டை மாடு மூச்சு விடுவதுபோல வேகமாக மூச்சு விடுவார். பின்னர் வாய் திறந்ததும் அதே வேகத்தில் வசவுகள் வெளிப்படும். அந்தரங்க காரியதரிசியை தினமும் வையாமல் அவரால் வீட்டுக்கு திரும்ப முடியாது. ‘உன்னுடைய மூளை முழுமையடையாத மூளை’ என்பதுதான் அவர் திரும்ப திரும்ப சொல்லும் வசை. எப்போவாவது அளவற்ற கருணை சுரந்தால் மட்டும் அன்றைக்கு அந்தப் பெண்ணை அப்படி திட்டாமல் விடுவார்.

அச்சுக்கூடத்தில் ஒரு புதுப் பையன் சேர்ந்திருந்தான். பெயர் சண்முகவடிவேல். அவனுடைய மாமா கொடுத்த கடிதத்தை தூக்கிக்கொண்டு கிராமத்திலிருந்து நேராக மேலாளரைப் பார்க்க வந்திறங்கிய பையன். ‘அப்பா எங்கே?’ என்று மேலாளர் கேட்டார். ‘அவரை முதலை சாப்பிட்டிட்டுது, சேர்’ என்றான். ‘சரி, அம்மா எங்கே?’ என்றார் மேலாளர். ‘அவ மறியல் வீட்டிலே சேர்.’ வேறு ஒரு கேள்வியும் அவர் கேட்கவில்லை. அப்பாவித்தனமாக இருக்கிறான், நல்லாய் வேலை செய்வான் என்று நினைத்துத்தான் அவனை வேலையில் சேர்த்தார்.  அவனோ ஏமாளி, மற்றவர்களின் சந்தோசத்துக்காக கடவுளால் படைக்கப்பட்ட சீவன். பொழுதுபோகவில்லை என்றால் அவனை பந்துபோல உருட்டுவதுதான் அடுத்தவர்களுக்கு வேலை. அவனுக்கு கவலை என்பது இல்லை. எந்த நேரமும் அவனைச் சுற்றியுள்ளவர்களுக்கு அவனிலிருந்து மகிழ்ச்சி வீசிக்கொண்டிருக்கும்.

அந்த அச்சுக்கூடத்தில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இடதுசாரிக்கட்சியை சேர்ந்த ஒரு சங்கம் இதழ் ஒன்று தயாரிக்கும். அதில் நிறையக் கட்டுரைகள் இருக்கும். அவை எல்லாவற்றையும் அவன் வாசிப்பான். பெரிய பெரிய வார்த்தைகள் வரும்போது வாயில் ஒருமுறை உச்சரித்து பார்ப்பான். அவனுக்கு பிடித்த திறமான வார்த்தை பூர்சுவா. அதற்கு அடுத்த வார்த்தை நிலப்பிரபுத்துவம். சொல்ல நல்லாயிருக்கும். ஒருநாள் அந்த வார்த்தைகளின் பொருளை கண்டுபிடிக்கவேண்டும் என நினைத்துக்கொள்வான். எல்லா கட்டுரைகளிலும் ‘என்னே கொடுமை! என்னே துன்பம்! பாட்டாளி மக்களே! விழித்தெழுங்கள்!’ போன்ற வாசகங்கள் நிறைந்திருக்கும். இந்த ஆச்சரியக் குறிகளை அகற்றிவிட்டால் கட்டுரை அரை சைசுக்கு வந்துவிடும்.

அப்பொழுதெல்லாம் கம்புயூட்டர் வசதிகள் கிடையாது. ஒவ்வொரு எழுத்தாக அச்சுக்கோர்த்துதான் அச்சடிக்கவேண்டும். அவையோ தலைகீழாக இருக்கும், அச்சடித்ததும் சரியான எழுத்தாக மாறிவிடும். சண்முகவடிவேலுவுக்கு அங்கு நடப்பவை எல்லாமே புதினம்தான். அங்கே வேலை செய்தவர்களில் தொழில் பக்தி கொண்டவன் என்றால் அது அவன்தான். சிலவேளை அச்சுக்கோர்க்கும்போதே படித்ததை நினைத்து சிரிப்பான். பக்கத்தில் வேலை செய்யும் பையனிடம் ‘ஆகிருதி’ என்ற ஆங்கில வார்த்தைக்கு என்ன தமிழ் என்று கேட்பான். அவன் பதில் சொல்லுவான் ஆனால் அச்சு யந்திரத்தின் பெரிய ஓசையில் அது அவனுக்கு கேட்காமல் போகும்.

வெளியே என்ன வெப்பம் வீசுமோ அதுவே அச்சுக்கூடத்துக்குள்ளும் வீசும். எல்லோரும் சேர்ட்டைக் கழற்றி சுருட்டி இடுப்பிலே கட்டிக்கொண்டுதான் வேலை செய்வார்கள். இவனும் அப்படித்தான் வேலை செய்தான். ஒரு முறை இதழுக்கு அச்சுக்கோர்க்கும்போது ஆச்சரியக் குறிகள் முடிந்துவிட்டன. தன்னுடைய சுப்பர்வைசரிடம் அவன் போகமுன்னர் மற்ற அச்சுக் கோப்பவர்கள் எல்லாம் ஒன்று திரண்டுவிட்டார்கள்.  முதலாளியிடம் போய் ஆச்சரியக்குறிகள் முடிந்துபோனதை சொல்லச்சொல்லி ஏவிவிட்டார்கள். இந்த பெரிய கம்பனியில் ஆச்சரியக் குறிகள் இவ்வளவு விரைவில் தீர்ந்துபோனது அவனுக்கும் ஆச்சரியம்தான். இடுப்பிலே சுருட்டிக் கட்டிய சேர்ட்டை அவிழ்த்து உதறி, நேராக்கி அணிந்தான். பொத்தான்களை ஒவ்வொன்றாக மேலிருந்து கீழாக போட்டுக்கொண்டு தயாரானான். மற்றப் பெடியன்கள் ‘போ, போ’ என்று துரத்தினார்கள். இந்தப் பேய்ப்பெடியனும் விசயம் விளங்காமல் முதலாளியின் அறையை நோக்கி புறப்பட்டான்.

எப்பொழுதும் அவனுக்கு சந்தோசம்தான். முதன்மை இயக்குநர் அறையிலிருந்து கிட்டத்தட்ட 200 அடி தூரத்தில் அச்சுக்கூடம் இருந்தது. அவன் முதன்மை இயக்குநரைப் பார்த்தது கிடையாது. அவருடைய அறை எந்தப் பக்கம் இருக்கிறது என்பதும் தெரியாது. அவனுடன் வேலை செய்தவர்கள் காட்டிய திசையில் ஒருவித பயமோ, தயக்கமோ இல்லாமல் நடந்தான். மகிழ்ச்சி அவனிலிருந்து வீசியது. எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் படத்துக்கு இலவச டிக்கட் கிடைத்ததுபோல கைகளை வீசி நடந்தான். அந்தப் பெண்ணுடைய முகம் தெரிய முன்னர் பற்கள்தான் தெரிந்தன. தாடை எலும்புகள்மீது கண்ணீர் வழிந்தது. ஒரு பறவை எழுப்புவதுபோல மெல்லிய ஒலி அவரிடமிருந்து எழுந்தது. அதுதான் காரியதரிசிப் பெண் என்று ஊகித்தான். அவரையும் இப்பொழுதுதான் முதன்முறையாக பார்க்கிறான். லேஞ்சியால் அவர் கண்களை துடைக்க துடைக்க நீர் பெருகிக்கொண்டே வந்தது.  இவன் திடுக்கிட்டுப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான். வழக்கமாக முதன்மை இயக்குநரைப் பார்க்க யாரும் சடுதியில் போகமுடியாது. காரியதரிசிப்பெண் யார், என்ன வேண்டும், உங்களுக்கு முன்அனுமதி உண்டா போன்ற விவரங்களை அறிந்த பின்னர்தான் எவரையும் உள்ளே அனுமதிப்பார். அன்று பாதி அழுகையில் இருந்தார். அதை முடிவுக்கு கொண்டுவர சில நிமிடங்கள் பிடிக்கும். எனவே கதவை சுட்டிக் காட்டிவிட்டு தன் அழுகையை தொடர்ந்தார்.

முதன்மை இயக்குநருக்கு கீல்வாதம் (gout) என்றொரு வியாதி. பெருவிரல்கள் வீங்கி வேதனையில் உழல்வார். இது அடிக்கடி வரும். அதுவரும் நாட்களில் எவரும் கிட்ட அணுகமுடியாது. அன்றைக்கு அவருக்கு வேதனை உச்சத்தில் நின்றது. அவர் பளபளக்கும் இரண்டு தோல் சப்பாத்துகளையும் கழற்றிவிட்டு தன் கால்களை மேசையில் வைத்து ஆராய்ந்துகொண்டிருந்தார். சுவாசத்தை நிறுத்திவிட்டு எல்லாக் கண்களும் பார்க்க, கதவை தட்டாமல் திறந்து சண்முகவடிவேல் உள்ளே நுழைந்தான். ஒரு கணம் இரண்டு தொக்கையான கால்பெருவிரல்களை பார்த்து பின்வாங்கினான். உடனேயே கிராமத்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ‘ ஐயா, ஆச்சரியக் குறி எல்லாம் முடிஞ்சு போச்சுது. உங்களிட்டை வேற குறி இருக்கோ என்று கேட்டு வரச் சொன்னார்கள்’ என்றான்.

நான் வேலை செய்த அந்த மூன்று மாதங்களில், வார விடுமுறை, போயா விடுமுறை, பொங்கல் விடுமுறை, கிறிஸ்மஸ் விடுமுறை, நோய் விடுப்பு எல்லாவற்றையும் கழித்து மீதியான அத்தனை பணி நாட்களிலும் காணாத ஒரு காட்சி அது. முதன்மை இயக்குநரின் கதவு பட்டென்று பெரும் சத்தத்துடன் திறந்தது. வெறி நாய் துரத்தியது போல அவன் அலறிக்கொண்டு வெளியே வந்தான். முதன்மை இயக்குநர் அன்று என்ன சொன்னார் என்பதோ, என்ன செய்தார் என்பதோ என்னால் இங்கே எழுத்திலே பதியக்கூடியது அல்ல. சண்முகவடிவேல் அடுத்தநாள் வேலைக்கு வரவில்லை. கிராமத்துக்கு ஓடிவிட்டான். அலுவலகத்தில் ஒரு முட்டாள் குறைந்துவிட்டான் என்று பேசிக்கொண்டார்கள்.

by Swathi   on 29 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.