LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- மற்றவை

சித்தர்கள்-மச்சமுனி

மச்சமுனி

வரலாறு சுருக்கம்:

     சித்தர்கள் யுகங்கள் பல கடந்து தம்முடைய தேகத்தை கல்பதேகமாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருவார்கள். திரேதாயுகத்தில் அப்படி அபூர்வமாக வாழ்ந்த சித்தர்களில் மச்சரிஷியும் ஒருவர். மச்சமுனி, மச்சேந்திரர், மச்சேந்திரநாதர் என்ற பெயர்களெல்லாம் கொண்ட சித்தர் ஒருவரே. ஓர் இடத்தை விட்டு வேறு ஓர் இடத்துக்குச் செல்லும் போதும் ஒரு காலாட்டத்தைக் கடந்து வாழும் போதும் பெயர்கள் தான் வேறுபடுகின்றன. தலையில் சடைமுடியுடன் உடம்பெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, கையில் ஒரு பிரம்புத்தடியுடன் ஒரு சாமியார் இருந்தால், அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள், அவரை சடைசாமி என்று அழைப்பார்கள். ஒரு சிலர் அவரை விபூதி சாமி என்ற சொல்வார்கள். சிலர், பிரம்ரபு சாமி என்பார்கள். இதேபோல ஊர்ப் பெயரை வைத்து பூண்டிமகான், திருவலச்சித்தர் என்ற பெயர்களும் உண்டு.

மச்சமுனியின் அவதார வரலாறு:

                சித்தர்களுக்கு, ‘உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்’ என்பது கொள்கையாகும். சித்தர்களுடைய பெயர்கள் எல்லாம் அவர்களாக வைத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு எந்தப் பெயரை வைத்தாலும் அதில் அக்கறை காட்டுவதுமில்லை. தூல உடம்புக்கு எந்தப் பெயர் வைத்தால் என்ன என்று இருப்பார்கள். மச்சமுனி, அகத்தியர் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு சமயம், கடற்கரை யோரத்தில், சிவபெருமான், உமையம்மைக்கு தாரக மந்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார். உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அம்மைக்கு உறக்கம் வந்துவிட்டது. அக்கடலில் வசித்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்த கருவானது, இம்மந்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டது. பின் வெளியே வந்த அந்த மீன் வயிற்றுப் பிள்ளைக்கு சிவபெருமான், மச்சர் என்ற பெயரைக் கொடுத்தார். மச்சரின் உருவத்திலிருந்து தலை மனித வடிவமும், உடல் மீனின் வடிவமும் கொண்டது என்ற குறிப்பு, நமக்குக் கிடைக்கிறது. முழவதும் மனித வடிவம் கொண்டதே மச்சரின் உருவம் என்ற கருத்தும் நிலவுகிறது.

     இது மச்சமுனியின் அவதார வரலாறு. பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர் என்பதால் மச்சமுனிக்கு தவயோகம் தானாகவே நேர்ந்தது. அவர் நீண்ட நெடுங்காலம் யோக வழியில் தவம் மேற்கொண்டார். அட்டமா சித்துக்கள் அனைத்தும் கைவரப் பெற்றார்.

புத்திரப்பேறு கொடுத்த மச்சமுனி:

                ஊர் ஊராக சஞ்சாரம் செய்து வரும்போது ஓர் ஊரில், இவர் உணவு வேண்டி ஒரு வீட்டின் முன் நின்றார். இவருக்கு பிச்சையிட்ட அந்த வீட்டுப் பெண் இவரை வலம் வந்து வணங்கினாள்.அந்தப் பெண்னின் முகவாட்டத்தைப் பார்த்த சித்தர், என்ன காரணம் என்று கேட்டார். தனக்கு வெகு காலமாக புத்திரப்பேறு வாய்க்கவில்லை என்று தன் மனக்குறையைக் கூறி, தனக்குப் புத்திரப் பேறு அருளுமாறு அந்தப் பெண் சித்தரை வேண்டினாள். மச்சமுனி, அவளுடைய நிலைக்கு இரக்கங்கொண்டு விபூதி பிரசாதம் கொடுத்து இதனை நீ உட்கொள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இந்தப் பெண் விபூதியைப் பெற்றுக் கொண்டு தனது பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் நடந்தவற்றைக் கூறினாள்.

                அவள் இந்த முனிவர் மாய வேஷக்காரன். விபூதி கொடுத்து உன்னை மயக்கி, தன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடுவான் என்று கூறினாள். அந்தப் பெண் விபூதியை அடுப்பிலிருந்த நெருப்பில் போட்டுவிட்டாள். பின்பு அடுப்புச் சாம்பலை அள்ளி வீட்டின் புழக்கடையில் கொட்டிவிட்டு இந்த நிகழ்ச்சியை அறவே மறந்துபோய்விட்டாள். வருடங்கள் சில சென்றன. மச்சமுனி மீண்டும் அவ்வழியே வந்து தான் விபூதி கொடுத்த அந்தப் பெண் வீட்டின் வாசலில் நின்று அவளை அழைத்து உன் பிள்ளையை நான் பார்க்க வேண்டும், அழைத்து வா என்றார். அந்தப் பெண் உண்மையை மறைக்காது நடந்தவற்றை அப்படியேக் கூறினாள். அந்த அடுப்புச் சாம்பல் எங்கே என்று மச்சமுனி வினவ, தன் வீட்டுப் புழக்கடையில் உள்ள குப்பையைக் காட்டினாள். மச்சமுனி அந்த இடத்துக்குச் சென்று கோரக்காவா என்று குரல் கொடுத்தார். அங்கே ஓர் அதிசயம் நடந்தது. சாம்பல் குப்பையிலிருந்து, சித்தர் விபூதி கொடுத்த காலம் முதல், பிள்ளையை அழைத்த காலம் வரை உள்ள ஆண்டுகள் நிரம்பிய வயது கொண்ட சிறுவன் ஒருவன், ஏன்? என்று பதில் குரலுடன் வெளியே வந்தான். அந்தச் சிறுவனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் சித்தர். சிறுவனோ தான் மச்சமுனியையே குருவாகக் கொண்டு அவரைத் தொடர்ந்து வர விரும்புவதாகக் கூறினான். அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் மச்சமுனி. இருவரும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். நீண்ட நெடுங்காலம் பாரதக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருவரும் தவம் செய்தனர்.

கஸ்தமண்டபம்:

     வட இந்தியாவில் வாழ்ந்த நவநாத சித்தர்களில் இவரும் ஒருவராக மச்சேந்திர நாதர் என்ற பெயரில் குறிக்கப்படுகிறார். மச்சமுனி இரசவாத வித்தை, வைத்தியம், வாதநிகண்டுகள் உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார். இவர். மச்சமுனியைக் குருவாகக் கொண்ட கோரக்கரும் சித்திகள் பல அடைந்து சிறப்புப் பெற்றவர். இவரும் வடநாட்டில் கோரக்கநாதர் என்ற பெயருடன் குறிக்கப்படுகிறார். இந்தியாவில் உள்ள கோரக்பூர் என்னும் நகரப் பகுதியில் இவர் வாழ்ந்ததாகவும், இவர் பெயராலேயே அந்த நகரம் குறிக்கப்படுகிறது என்றும் ஒரு செய்தி உண்டு. சீனா, நேபாளம் ஆகிய இடங்களில் கோரக்கர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இலட்சுமி நரசிம்மன் என்னும் பெயர் கொண்ட மன்னன், நேபாளத்தை ஆட்சி செய்தான். மரப்பலகைகளால் கோரக்கநாதருக்கு அவன் ஒரு கோயில் கட்டியதாகவும், அக்கோயிலுக்கு கஸ்தமண்டபம் என்ற பெயர் இருந்ததாகவும், இப்பெயரே நாளடைவில் ‘காட்மண்டு’ என்று மருவியதாகவும் நம்பப்படுகிறது. காட்மண்டுவில், கோரக்கர் தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் ஆலயம் ஒன்று உள்ளது

                தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகே உள்ள திருப்புவனம் என்னும் ஊரிலும் ஆதிகோரக்க சித்தருக்கு ஆலயம் உள்ளது.கோரக்கர், நாகப்பட்டினத்துக்கு அருகே உள்ள திருப்புவனம் என்னும் ஊரிலும் ஆதிகோரக்க சித்தருக்கு ஆலயம் உள்ளது. கோரக்கர், நாகப்பட்டினத்துக்கு அருகே உள்ள பொய்கை நல்லூரில், சமாதி நிலை எய்தினார் என்ற செய்தி பெரும்பான்மையாக உறுதி செய்யப்படுகிறது.

உடம்பு வளர உணவு வேண்டுமே..?

     மச்சமுனி ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை வளர்த்தால்தானே உயிரைப் பேண முடியும்? உடம்பு வளர உணவு வேண்டுமே..? பசியும் தாகமும் உடம்போடு ஒட்டிப் பிறந்ததாயிற்றே... அல்ப வித்தைகளால், காற்றை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ முடியும்தான்... மச்சமுனியோ, அதைப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். சிறிது காலம் பிட்சை கொண்டு உடம்பைப் பேணுவோம் என்று முடிவு செய்து விட்டார். இப்படி சித்த புருஷர்கள் மனதில் பிட்சை கேட்கவேண்டும் என்று தோன்றுவதற்குப் பின்னால் ஒரு கணக்கு உள்ளது. அவர்கள் அப்படிப் பிட்சை கேட்டு வரும் போது, பிட்சையிடும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னாலும் ஒரு கணக்கு உள்ளது. நல்ல சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள் குரு தரிசனத்தை இருள் விலகப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே பார்ப்பார்கள்.

     அதேபோல அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பை, கர்மத்துயரத்தை விலக்கக் கிடைத்த ஒரு மறைமுக சந்தர்ப்பமாகவே கருதுவார்கள். ஆனால் சராசரிகளோ, சித்த புருஷர்களை பிச்சைக்காரர்களாகவே பார்ப்பார்கள்.

குருவுக்காக கண்ணையே இழந்த படலம்:

      கோரக்கர், மச்சமுனியின் திருச்சீடராக அவர் செல்லும் இடமெல்லாம் சென்றார். குருசேவையை தன் வாழ்வின் கடப்பாடாய் கொண்டார். இப்படி அவர் சேவை செய்த நாளில் எவ்வளவோ சோதனைகள்.. அவைகளை சாதனைகளாக ஆக்கிக் காட்டினார். அதில் ஒன்று, குருவுக்காக கண்ணையே இழந்த படலம். ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிட்சை கேட்கச் சென்றபோது, ஒரு பார்ப்பனப் பெண் நெய்யில் பொரித்த வடையை பிட்சையாக இட்டனள். வாசம் மணக்கும் அந்த வடை, புலன்களை அடக்கி ஆள வேண்டிய கோரக்கர் நாவில் நீர் ஊறச் செய்தது. இருந்தும் அடக்கிக்கொண்டு, அதை குருபிரசாதமாக்கினார். மச்சமுனியும் அந்த வடையை உண்டு, அதன் ருசியில் மயங்கி விட்டார். வந்தது ஆபத்து.. பண்ட ருசி என்பதும் உலக மாயையில் ஒன்று. ஒரு ருசி ஒருமுறை ஒருவருக்குள் புகுந்தால் பலமுறை அதற்காக ஏங்க வைத்துவிடும். நம்பேச்சை உடல் கேட்டது போக அதன் பேச்சை நாம் கேட்கும் நிலை தோன்றி விடும். மகாஞானியான மச்சமுனிக்கு மீண்டும் வடைதின்னும் ஆசை தோன்றிவிட்டது. சீடன் கோரக்கனிடம் ‘எனக்கு மேலும் வடை தேவை’ என்றார். கோரக்கரும் பார்ப்பனப் பெண்ணிடம் சென்று வடை கேட்டார். அவளோ அனைத்தும் தின்று தீர்ந்தாகிவிட்டது என்றாள். ‘சுட்டுத்தாருங்கள் தாயே’ என்று மன்றாடினார். ‘‘ஏலாதப்பா...! எனக்கு களைப்பாக உள்ளது. உரிய பொருட்களும் இல்லை..’’ என்றாள், அவள். ‘‘இது குருவின் விருப்பம். உயிரைத் தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்’’ என்றார், கோரக்கர். ‘‘உன் குருவுக்கு ஏன் இப்படி ஓர் அற்ப ஆசை. நான் முன்பே வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில்பட்டு கண்போகத் தெரிந்தது. நல்லவேளை தப்பித்தேன். இனியருமுறை வடைபொரிக்கும்போது, எனக்கு கண் போனால், நீ என்ன உன் கண்களை பிடுங்கியா தருவாய்?’’ _ எகத்தாளமாய் கேட்டாள். ‘‘அதற்கென்ன தந்தால் போச்சு..’’ என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்தப் பெண்மணி அரண்டுபோனாள். அடுத்த நொடி, கோரக்கரின் குருபக்திக்காகவே சுடச்சுட நெய்வடை பொரித்துத் தந்தாள்.

     கோரக்கரும் முகத்தை மூடியபடி வந்து வடையைத்தர மச்சமுனியும் உண்டுவிட்டு, கோரக்கர் முகத்தை மறைத்திருப்பதன் காரணம் அறியமுயல பகீரென்றது. ‘‘கோரக்கா.. எனக்காக.. அற்பவடைக்காக உன் கண்களையா தந்தாய்?’’ ‘‘ஆம் ஸ்வாமி. வேறுவழி அப்போது தெரியவில்லை.’’ ‘‘அடப்பாவி.. இப்படி ஒரு குருபக்தியா?’’_என்று கேட்டு, கோரக்கனை ஆரத்தழுவி ஆலிங்கனம் புரிந்த மச்சமுனி தன் தவ ஆற்றலால் மீண்டும் கண்களை தருவித்தார். கோரக்கரும் பார்வை பெற்றார்.

ஒட்டியே இருக்கும் இரட்டைச் சித்தர்கள்:

                அதன் பின்னும் குருசேவை கோரக்கர் வரை தொடர்ந்தபடிதான் இருந்தது. மெல்ல மெல்ல மச்சமுனி மூலமாகவே சிவஞானபோதம் அறிந்தார். காயகற்ப முறைகளை கற்றார். தன் உடம்பை உருக்கு போல ஆக்கிக் கொண்டார். இவரை ஒரு வாள் கொண்டு வெட்ட முனைந்தால் வாளே முனை மழுங்கும். இதனை உணர்த்தும் ஒரு சம்பவம் இவருக்கும் அல்லமத்தேவர் என்னும் சிவஞானிக்கும் இடையே நிகழ்ந்தது. அல்லமத்தேவர் ஓர் அபூர்வ ஞானி. மரங்கள் இவரைக் கண்டால் அசைந்து கொடுத்து மகிழ்ச்சி தெரிவிக்கும். பட்சிகள் இவரோடு பேசும். மொத்தத்தில் இயற்கையின் பல பரிமாணங்களில் அல்லமத்தேவர் அரசனாக விளங்கியவர். அல்லமத் தேவர் உடலோ வாளால் வெட்டுப்பட்டாலும் திரும்பவும் உடனே சீரானது. கோரக்கரே இவரை வெட்டியவர். தன்னிலும் விஞ்சிய ஞானி அல்லமர் என்று அறிந்து அவரைப் பணிந்து, அல்லமரின் வழிகாட்டுதலையும் பின் பெற்றார். இதை பிரபுலிங்கலீலை எனும் வரலாற்றில் விரிவாகவே அறியலாம். இப்படி சாம்பலில் தோன்றியவர் ஓங்கி வளர்ந்தார். பின்னாளில் பிரம்ம முனியின் நட்பு கிட்டியது. இருவரும் ஒன்றாகவே எங்கும் சென்றனர்... ஒட்டியே இருக்கும் இரட்டைச் சித்தர்கள் என்கிற பெயர் இதனால் ஏற்பட்டது.

மச்சமுனி திருமந்திரம்:

     மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம்800” நூலில் குறிப்பிட்டுள்ள மற்றொரு தீட்சை முறையினை இன்று பார்ப்போம். இந்த தீட்சை முறைக்கு “கபால தீட்சை” என்று பெயர். இதனை தன் நூலில் பின்வருமாறு மச்சமுனி குறிப்பிடுகிறார்.சென்றிடுங் கபால தீட்சையைக் கேட்டிடு

நின்ரிடு மூச்சியில் நினைவாய் றீம்என்றும்

சென்றிடு நெற்றியில் சுருள ஓம்என்றிடு

கன்றிடு கண்டத்தில் கலந்த அங்கென்றிடே"

- மச்சமுனி -

மங்கென்று மார்பி லமர்ந்திடு சிங்கென்று

வங்கென்று உந்தியில் வணங்கி யிருந்திடு

சிங்கென்று மூலந் திறந்து வலுத்திடும்

பொங்கும் கபாலம் பொருந்திய தீட்சையே"

- மச்சமுனி -

     சாதகரின் உச்சியில் "றீம்" என்ற மந்திரத்தினையும்,புருவ மத்தியில் "ஓம்" என்ற மந்திரத்தினையும்,கண்டத்தில் அதாவது தொண்டையில் "அங்" என்ற மந்திரத்தினையும், மார்பில் "மங்" என்ற மந்திரத்தையும்,நாபியில் "சிங் வங்" என்ற மந்திரத்தையும் உணர்ந்து தியானிக்க மூலம் திறக்கும் என்கிறர். இதுவே கபால தீட்சை ஆகும். இந்த கபாலதீட்சையினால் விளைவது என்ன?, அதனை பின்வருமாறு விளக்குகிறார்.

பொருந்திய தீட்சையைப் புனிதம தாக

வருந்து யெந்நாளும் வணங்கி யிருந்திடு

திருந்திய தேகஞ் சிவகயி லாசமாம்

இருந்திடு மந்த ஏகாந்த மாகவே"

- மச்சமுனி -

ஆகமா யந்த அருள்சிவ சக்தியை

பாகமாய் நீயும் பணிந்து வணங்கியே

ஏகமாய் நின்று இணங்கிய தீட்சையை

தாகமாய்ச் சொல்லி சாத்து வீபூதியே"

- மச்சமுனி -

     மேலே சொன்ன கபாலதீட்சையை மனதால் உணர்ந்து தினமும் தியானித்து வந்தால் தியானிப்பவர் உடலானது கைலாசம் போல் ஏகாந்தமாய் நிற்குமாம். இவ்வாறு எகாந்தமாய் இருக்கும் உடலுடன் சிவ சக்தியை பணிந்து வணங்க வேண்டுமாம். மேலும் தினமும் இந்த கபால தீட்சையை மனதால் உணர்ந்து தியானித்து வரும் வேளையில், தியானம் முடிவடைந்ததும் தீட்சையின் பலன் உடலில் தங்க வேண்டும் என்று ஒருமனதாய் வேண்டி வீபூதியை சாத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.

மச்சமுனி பற்றி அகத்தியர்:

 “மச்சமுனி...

சித்தான சித்து முனி மச்சனப்பா

சீருலகில் நெடுங்காலம் மிகுந்த சித்து

சத்தான திரேகமதை நம்பாமல் தான்

தாரனியிலிருந்த தொரு தனத்தை எல்லாம்

நித்தியமும் அகதிகட்கு அன்னந் தந்துநிட்களங்க நிடேத வழி தெரிந்துமே தான்

பக்தியுடன் னம்பாளின் தரிசனாத்தால்

பாருலகை மறந்ததொரு சித்தனாமே”

- அகத்தியர் 12000 -

     என்று மச்சமுனி பற்றி அகத்தியர் கூறுகிறார்.

by Lakshmi G   on 11 Nov 2020  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள் பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்
மனித உடல் என்கிற அதிசயம்... மனித உடல் என்கிற அதிசயம்...
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்... சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...
வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும். வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.
சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி
ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள் ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள்
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4 சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.