புகையிலையின் முக்கிய சத்து நிகோடின் தான்.நிகோடின் தான் புகையிலையை நமக்கு பகையிலையாகக் காட்டுகிறது. நிகோடின் நரம்பு மண்டலத்தில் வேலை செய்யும் கடும் விஷம். இரைப்பையிலுள்ள தசை இயக்கத்தை புகையிலை தணித்து விடுகிறது. அதனால் பசி மந்தமாகி அதன் பலனாக உடல் புத்துணர்ச்சி படிப்படியாகக் குறைந்து விடுகிறது. இரைப்பையில் வேக்காளத்தை ஏற்படுத்தி புளிப்பு அதிகமாகச் சேர்ந்து தொண்டை எரிச்சல், மார்பு, வயிறு மற்றும் குடல் எரிச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. நாளடைவில் இந்த எரிச்சல் வாய்ப்புண், இரைப்பை, குடல் புண்களைத் தோற்றுவிக்கின்றன.
புகையிலை போடுவதால் உடல் திடமும், பதட்டமின்மையும், நெஞ்சுரமும், சகிப்புதன்மையும் குறைகின்றன.நிகோடின் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கிறது. மது அவற்றை விரிய வைக்கிறது. ஆகவே மதுவும் புகையிலையும் சேர்ந்தால் உடலுக்கு இரண்டும் கெட்டான் நிலைதான்.புகையிலை பழக்கத்திலிருந்து மீள முடியாமல் அவதியுறுபவர்களுக்கு மாற்று வழியாக வெற்றிலையை குறிப்பிடலாம். பொதுவாகவே உணவுக்குப் பிறகுதான் புகையிலையை வாயில் அடக்கிக் கொள்ளத் தோன்றுகிறது. அதற்குக் காரணம் உணவு சாப்பிட்டதும் வாயின் உமிழ் நீர் கலவையும் இரைப்பையில் முதலில் சுரக்கும் ஜீரணத் திரவக் கலவையும் ஜீரண ஆரம்ப நிலையில் கபத்தை உண்டாக்குகின்றன. வாயில் அதிக நீர் ஊறுவது, குழகுழப்பு, எதுக்களிக்கும் உணர்ச்சி போன்றவை இந்தக் கபத்தால் ஏற்படுகின்றன. இவற்றிற்கு நேர் எதிரிடையான குணங்களைக் கொண்ட புகையிலை மீது அந்தச் சமயத்தில் நாட்டம் ஏற்படுவது இயற்கையே. அது போன்ற நேரத்தில் புகையிலை தவிர்த்து அதற்குப் பதிலாக வால்மிளகு, பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஏலம், ஜாதிக்காய், வாசனைச் சோம்பு கலந்த இரண்டு இளம் தளிர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சுவைப்பது சொர்க்கத்தில் கூட நாம் அனுபவிக்க முடியாத சுகத்தைத் தரும் என்று முனிவர்கள் கூறுகின்றனர். இவை மணமூட்டவும் நாக்கிற்கு விறுவிறுப் பூட்டவும் மொற மொறப்பைத் தரவும் செய்கின்றன.
காலையில் வெற்றிலையை பாக்கைச் சற்று அதிகமாகச் சேர்த்துக் போடுவதால் மலம் சிரமமின்றிப் போகும். பகலில் சுண்ணாம்பைச் சற்று அதிகமாகச் சேர்க்க நல்ல பசி, ஜீரண சக்தி உண்டாகும். இரவில் வெற்றிலையை அதிகமாக்கிக் கொள்ள வாய் மணம் குறையாது. அழுக்கும் அழுகலும் வாயில் தங்காது.நல்ல பசி வேளையில் தாம்பூலம் போடக்கூடாது. பசியைத் தூண்டக்கூடியதாயினும் துவர்ப்பு வறட்சி மிக்கதானதால் ஜீரணத் திரவக் கலவை குறைந்து விடும். ஆகவே, உணவுக்குப் பிறகே தாம்பூலம் போடுவது நல்லது.வெற்றிலையில் சேர்க்கப்படும் சோம்பு வயிற்றுப் புரட்டலைக் குறைக்கும். ஜாதிக்காய், கிராம்பு, ஏலம், பச்சைக் கற்பூரம் முதலியவை மணமூட்டுபவை. ஜீரண சக்தி அளிப்பவை. மனக் களிப்பூட்டுபவை. உண்ட களைப்பு ஏற்படாமல் சுறுசுறுப்புடன் சோர்வில்லாமல் இருக்கச் செய்யும்.
சிலர் விடியற்காலையில் வெற்றிலையை போடுவார்கள். அவர்கள் குளிர்ந்த நீரில் வாயை நன்கு கொப்பளித்த பிறகு வெற்றிலையை போட வேண்டும். அப்போது முதலில் ஏற்படும் உமிழ்நீர்க்கலவையை விழுங்காமல் துப்பி விட வேண்டும். அதன் மூலம் வாயிலுள்ள அழுகல் கிருமி போன்றவை அழிந்து விடும். அதன் பின்னர் வரும் வெற்றிலைச் சாற்றை விழுங்கி சக்கையைத் துப்பிவிட குடல் சுறுசுறுப்படையும். தாம்பூலத்தின் ஆரோக்கியமான குணங்களைப் பெற நீங்கள் ஒரு போதும் அதனுடன் புகையிலை சேர்க்கக் கூடாது.
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |