LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

+2 பெற்றோரே ! ப்ளீஸ்……..பேரா. டாக்டர் அப்பாத்துரை

+2 பெற்றோர்கள் எல்லோரும் நெருப்பில் நிற்கும் நேரமிது. தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. வயதுப் பெண்ணை வைத்திருக்கும் பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்தது அந்தக்காலம். அந்தப் பதட்டத்தை மொத்தக் குத்தகைக்கு எடுத்து +2 பெற்றோர்கள் அவதிப்படுவது இந்தக் காலம். +2 முடிவு வெளிவந்துள்ள நிலையில் இவர்களது பிள்ளைகள் பாடோ இதைவிடப் பெரும்பாடு. பதட்டம்+அச்சம்+குழப்பம்= பரிதாபநிலை.

 

அந்தக் காலத்தில் , தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களும் , தோல்வியுற்றவர்களும் , மற்றவர்களின் கேலி கிண்டல்களுக்கு அஞ்சி, ஓடிவந்து அடைக்கலம் புகுந்தது, அவர்களுடைய பெற்றோரிடம் தான். அவர்களும், ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும் , குழந்தைகளை விட்டுக்கொடுக்காமல் ஆறுதல் சொல்லித் தேற்றுவார்கள். ஆனால் இன்றோ  எதிர்பார்த்ததைவிடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பிள்ளைகளுக்கு , பெற்றோர்களே முதல் எதிரிகளாக மாறி, கத்திக் கதறிக் குழந்தைகள் உள்ளங்களைக் குத்திக் குதறிக் கொண்டிருக்கிறார்கள். வருகிறவர்கள் போகிறவர்களிடம் எல்லாம் பிள்ளைகளைப் பற்றிக் கேவலமாகப் பேசிக் கரித்துக் கொட்டுகிறார்கள். அவர்கள் மனநிலையைப் பற்றிக் கடுகளவுகூடக் கவலைப்படுவதில்லை.

 

+2 பெற்றோர்களே ! ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேர்வுக்குப் பிள்ளைகள் தயாரான காலகட்டங்களில் தான் ‘படி! படி! என்று பாடாய்ப்படுத்திப் பம்பரமாய் ஆக்கிவிட்டீர்கள். ஆர்வக்கோளாறு, அதீத அக்கறை, அவர்களது எதிர்காலம், உங்கள் கௌரவம் என்று எதையெதையோ சொல்லி , அவர்களை ஒரு வழி பண்ணிவிட்டீர்கள்’ இவற்றைக்கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இப்போது பிள்ளைகளைப் பதட்டமில்லாமல் பக்குவமாய் ஆறுதல்படுத்த வேண்டிய நேரம். பெற்றோர்கள் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல்      போய்விட்டதே என்ன செய்வது ? என்று ஏற்கனவே பதட்டத்தோடு பவனி வருகின்ற பிள்ளைகளிடம் ,எங்கள் மானம் போய்விட்டது ! எங்க மூஞ்சியிலேயே முழிக்காதே ! நாங்க செத்துருவோம் ! என்று திட்டிக் கொட்டுவதோடு நில்லாமல் சிலர் ‘செத்துத் தொலை’ என்கிற அளவுக்குப் போய்விட்டீர்கள். இந்த அணுகுமுறைகள், பிள்ளைகளை வேறு விபரீத முடிவுகள் எடுக்கும் அவல நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. தேர்வுமுடிவுக்குப் பின்னரும் , நம்முடைய கர்ணகடூர நிலையைத் தொடர்வது நல்லதல்ல என்பதை +2 பெற்றோர்கள் உணரவேண்டும்.

 

விரக்தியில் பிள்ளைகள் விபரீத முடிவு எடுத்துவிட்ட பிறகு , அழுது புரள்வதில் அர்த்தமுமில்லை-பயனுமில்லை.எனவே இன்றே இப்போதே விழித்துக் கொள்ளவேண்டும். விறுவிறுவென்று செயல்பட வேண்டும். குறிப்பாக நடுத்தரவர்க்கத்துப் பிள்ளைகள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் .பெற்றோர்கள் - பிள்ளைகளிடையே இருக்கவேண்டிய இயல்பான பாச-நேசப் பிணைப்புகள் கூட +2 வால்  சின்னாபின்னமாகிச் சிதல நிலையில் உள்ளன.

 

இந்தச் சிதைவுகளைச் சீர்ப்படுத்தமுடிந்த அருமையான காலகட்டம், தேர்வுமுடிவால் திகைப்பில் இருக்கும் இந்தக் காலகட்டம் தான்.அச்சத்திலும் பதட்டத்திலும் அல்லாடும் பிள்ளைகளுக்கு அன்பாய் -ஆதரவாய்-ஆறுதலாய் இருந்தாகவேண்டிய அவசியமான காலமிது. உன்னால் முடிந்தவரை நன்றாகப்படித்து எழுதி இருந்தாய்.தேர்வுமுடிவு பற்றிக் கவலைப்படாதே!  நாங்கள் இருக்கிறோம்.’ என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளிடம் சொல்ல வேண்டும். அவர்களுடைய நம்பிக்கையை வெல்லவேண்டும். இந்த அணுகுமுறை, தேர்வுக்கு முன்னால் நீங்கள் பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்தியிருந்த வெறுப்புகளைக்கூட மாறச்செய்துவிடும். மனக்காயங்களை ஆறச்செய்துவிடும்.

 

+2வில் மதிப்பெண் குறைந்துவிட்டதாலேயே, வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டோமென்று நீங்களும் நம்பி, பிள்ளைகளையும் நம்ப வைத்திருக்கிறீர்கள். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை வெம்பவைக்கும், இந்த விபரீத விளையாட்டுகளுக்கு இப்போதாவது முற்றுப்புள்ளி வையுங்கள். டாக்டரும், எஞ்ஜினியரும் மட்டுமே வாழ்க்கை இல்லை. எத்தனையோ உயர்படிப்பு வாய்ப்பு-வசதிகள் உள்ளன. மனப்பாடமுறை உயர்கல்வியில் இடம்பெற உதவினாலும், அவற்றை வெற்றிகரமாக முடித்து சாதிக்க உதவுவதில்லை. புரிந்து படித்த சராசரி மாணவர்கள் தான் உயர்கல்வியில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ்; ஐ.ப்பி.எஸ். போன்ற உயர்மிகுபதவித்தேர்வு, சாதனையாளர்களில் 99% +2 வில் சராசரி மாணவர்களாக இருந்து , வந்தவர்கள் தான்.  எந்த மதிப்பெண்  வந்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு +2 பெற்றோர்கள் மாறியாகவேண்டும். இந்த மாற்றமே உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்றத்தையும், மனந்தளராது போராடுகின்ற ஊக்கத்தையும் கொடுக்கும்.    எந்தப் படிப்பை உயர்கல்வியில் படித்திருந்தாலும் போட்டித் தேர்வுகள் மூலம் அரசு , தனியார் நிறுவனங்களில் பெரிய பெரிய பதவிகளுக்குச் செல்லமுடியும் . அப்படிச் செல்லுவதற்கு – போட்டித் தேர்வுகளில் வெல்லுவதற்கு- +2 மதிப்பெண்கள் குறைந்துபோனது ஒரு தடையில்லை என்ற  நம்பிக்கையைப் பிள்ளைகள் மனதில் விதையுங்கள்.

 

+2 முடிவுக்குப் பின் குடும்ப குதூகலத்தை மொத்தமாகத் தொலைத்துவிட்டுத் தவிக்கின்ற குடும்பங்கள் ஏராளம்.அந்தக் கூட்டத்தில் நீங்களும் ஒருவராகிவிடக்கூடாது. இதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு பெற்றிடுங்கள். ‘ உச்சமதிப்பெண்கள் வாங்கினால்தான் ஆச்சு ஒன்று  குறைந்தாலும்  எல்லாமே  போச்சு ‘ என்னும் மாயையை இன்றே, இப்போதே விட்டொழியுங்கள்.      புலம்பித் தவிப்பதைப் பெற்றோர்கள் புறந்தள்ளிவிட்டு, பெற்றோராய்-இலட்சணமாய்          ‘ மதிப்பெண்கள் குறைந்துவிட்டதையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் உயர்ந்து காட்டவேண்டும் ‘ என்று பிள்ளைகள் உறுதியெடுக்கின்ற மனநிலையை – உற்சாகத்தை ஏற்படுத்துங்கள்.      இந்த நேர்மறையான சிந்தனைகளை இன்றே செயல்படுத்துங்கள். தேர்வுமுடிவை மகிழ்ச்சியோடு – மனோரம்மியமாக ஏற்றுக் கொள்ளுகின்ற சூழ்நிலை உங்கள் இல்லத்திலும், பிள்ளைகள் உள்ளத்திலும் உருவாகும் .   ‘ உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கலந்த          வண்ணக்கொடி பட்டொளி வீசிப் பறக்கும். பிள்ளைகள் உள்ளங்களிலும்       நம்மாலும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்

 

 

பேரா. டாக்டர் அப்பாத்துரை

ஓய்வு பெற்ற அரசுக்கல்லூரிப் பேராசிரியர் ,

கல்வியாளர் – சமூக ஆர்வலர் ; 

இப்போது மதுரை காமராசர் – மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்களில்

ஐ.ஏ.எஸ். பயிற்சி வல்லுநர் ; ஆர்வம் உள்ள ஏழை எளியவர்களுக்கு மேற்படிப்பு – போட்டித்தேர்வுகள் - இலவச வழிகாட்டி.

நாகசிந்து நிவாஸ் , 278/1 பெரியசாமி நகர் , ஃபேர்லேண்ட்ஸ் அஞ்சல் ,

சேலம் -636 016 . அலை பேசி : 9345654044 மின்னஞ்சல் : iasguruad50@gmail.com

 

 

by Swathi   on 26 May 2014  1 Comments
Tags: +2 பெற்றோர்கள்   Advice to +2 Parents                 
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
01-Jul-2017 02:32:00 Jabar sathik said : Report Abuse
Your openion is very useful to me and how quickly learned Enlish, I was taking b. Com group .what are the job opportunities in the b. Com
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.