LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மிகச் சிறந்த கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

ஐராவதம் மகாதேவன் (1930 - 2018)


1930ல் திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்த ஐராவதம் மகாதேவன் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954 முதல் 1981 வரை 27 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணிக் காலத்தில் நேர்மைக்காகவும் கடின உழைப்புக்காகவும் திறமைக்காகவும் அவர் அறியப்பட்டிருந்தார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதன் மகாதேவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது

1987 முதல் 1991 வரை நான்கு வருடங்கள் தினமணி ஆசிரியராக பணியாற்றி பத்திரிகையுலக நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், இலக்கிய, அறிவியல் உலகத்துக்கு அரிய கருத்துகளையும் விதைத்தவர்.

 

இவரது வயது 88. இவரது இழப்பு தமிழுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.  அன்னாரது ஆன்மா இறையருளில் கலக்க வலைத்தமிழ் குழு பிரார்த்திக்கிறது. 

 

திரு.தெய்வ சுந்தரம் நயினார் முகநூளில் எழுதியுள்ள அஞ்சலி குறிப்பு: 

இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகள் வெறும் ஓவியமா அல்லது ஒரு இயற்கைமொழியின் எழுத்துகளா என்ற ஒரு வினாவிற்கு. இயற்கைமொழியின் எழுத்துகளே என்று நிறுவியுள்ளனர் அறிவியல் துறைகளைச் சேர்ந்தவர்கள். உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்விதழில் அது வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் உருவாக்கத்தில் பங்குபெற்ற அயல்நாட்டு அறிஞர்களுடன் இணைந்த ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ஐராவதம் அவர்கள். இன்று வளர்ந்தோங்கி நிற்கும் கணினிமொழியியல் (Computational Linguistics) அடிப்படையில் இக்கருத்தை அவர்கள் நிறுவியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொழியியல், புள்ளியியல் , கணினிமொழியியல் ஆகியவற்றின் துணைகொண்டு மொழி ஆராய்ச்சியில் இந்த ஆய்வாளர்கள் இக்கருத்தை முன்வைத்துள்ளனர். (

திரு.மணி மணிவண்ணன்  தனது குறிப்பில் 
பல்லவர் காலத்துக்கு முற்பட்ட வரலாறு குறித்து வரலாற்றாசிரியர்களால் உறுதிபட எதையும் கூற முடியாத நிலை. அத்தகைய சூழலில், கல்வெட்டுத் துறையில் பெரும் புரட்சியை உருவாக்கியவர் கே.வி.சுப்ரமணிய அய்யர். 1924-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் வாசித்தளித்த கட்டுரையில்தான் முதன்முதலாகத் தமிழ்நாட்டின் இயற்கையான குகைகளில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழில்தான் எழுதப்பட்டிருக்கின்றன என்றார்.

அதுவரை அந்தக் கல்வெட்டுகள் வட இந்தியா விலிருந்து வந்த பௌத்த துறவிகளால் பிராமியிலும், பிராகிருத மொழியிலும் எழுதப்பட்டவை, அவற்றுக்கும் தமிழக வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றுதான் வரலாற்றாசிரியர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். அதை மறுத்து, குகைக் கல்வெட்டுகளில் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துகளான ழ, ள, ற, ன போன்ற எழுத்துகள் இருப்பதையும், தமிழ்ச் சொற்கள் இருப்பதையும், தமிழ் இலக்கணம் இருப்பதையும் சுட்டிக்காட்டி முதன்முதலாக நிரூபித்தார். அவரது கருத்து அறிஞர்களிடையே உடனடித் தாக்கம் எதையும் நிகழ்த்தவில்லை.

அடுத்து தி.நா.சுப்பிரமணியம் 1938-ல் வெளியிட்ட ‘பண்டைத் தமிழ்க் கல்வெட்டுகள்’ என்ற நூலில் ஆந்திர மாநிலம், பட்டிப்புரோலுவில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகளோடு ஒப்பிட்டுத் தமிழ்க் கல்வெட்டுகளைப் படிக்க ஒரு புதிய முறையைச் சுட்டிக்காட்டினார்.

இந்த இரு ஆளுமைகளின் பங்களிப்புகளுக்குப் பின்னரும்கூட கல்வெட்டியல் தொய்வடைந்துதான் கிடந்தது. அதைப் போக்கும் நோக்கில்தான் ஐராவதம் மகாதேவனை கே.வி.சுப்ரமணிய அய்யர், தமிழ் பிராமி ஆராய்ச்சியை நோக்கித் திசை திருப்பிவிட்டார் போலும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மொழி உணர்வில் தமிழகம் தகித்துக்கொண்டிருந்தபோதுதான் சங்க காலத்தைச் சேர்ந்த புகளூர் கல்வெட்டுகளைக் கண்டறிந்து ஐராவதம் மகாதேவன் வெளிப்படுத்தினார். அதுவரை சங்க காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

திரு.ரவிக்குமார் தனது அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிடும்போது:
ஐராவதம் மகாதேவன்: காலம் அரிக்காத கல்வெட்டு
சிந்துவெளிக் குறியீடுகளின் அடிப்படையில் அகத்தியர் குறித்த தொன்மத்தை அவர் மறுவிளக்கம் செய்திருக்கிறார். சிந்துவெளி நாகரிகத்தை தென்னாட்டு திராவிடத்தோடு இணைப்பதற்கு அகத்தியர் தொன்மம் ஒரு முக்கியமான ஆதாரம் என்பது அவரது கருத்து. மு.இராகவையங்கார் தனது வேளிர் வரலாறு என்னும் நூலில் வேளிருக்கும் யாதவருக்கும் பொதுவான முன்னோர்கள் அகத்தியரின் தலைமையில் குஜராத்தின் துவாரகையிலிருந்து தென் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்ததை விவரித்திருக்கிறார். தொல்காப்பியத்துக்கு உரை எழுதும்போது நச்சினார்க்கினியரும் இரண்டு இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார் . வேளிர் குலத்தைச் சேர்ந்த 18 வேந்தர்களையும் 18 குடும்பங்களையும் அகத்தியர் அழைத்துவந்து தென் பகுதியில் குடியமர்த்தியதாகவும் , அவர் தென் கோடியில் இருக்கும் பொதிகை மலைக்குச் சென்று தங்கியதாகவும் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார் என எடுத்துக் காட்டும் ஐராவதம் மகாதேவன் , சிந்துவெளி குறியீடுகளில் அடிக்கடி காணப்படும் கமண்டலம் போன்ற குறியீட்டை கமண்டலத்திலிருந்து பிறந்ததாகச் சொல்லப்படும் முனிவர்களின் தொன்மங்களோடு பொருத்திப் பார்த்து , வசிஷ்டரும் அகத்தியரும் கமண்டலத்திலிருந்து பிறந்தவர்கள் என ரிக் வேதத்தில் கூறப்பட்டிருப்பதையும் , அகத்தியர் ' கும்ப சாம்பவர்' என அழைக்கப்படுவதையும் இணைத்து அகத்தியரின் தொன்மத்துக்கு சிந்துவெளிக் குறியீடுகளின் அடிப்படையில் புது விளக்கம் தந்திருக்கிறார். காவடி சுமந்து செல்வது போன்று பொறிக்கப்பட்டுள்ள உருவங்களை பொறை, இரும்பொறை; ஆதன் பொறையன்; எவ்வி எனப் படித்திருப்பது அவருக்கிருக்கும் ஆழ்ந்த மொழி அறிவை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.”

 

by Swathi   on 30 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.