LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விடைபெற்றார் மு.ஆனந்தகிருஷ்ணன்

*விடைபெற்றார் மு.ஆனந்தகிருஷ்ணன்*


இந்தியாவின் மிகச்சிறந்த கல்வியாளரும்  இணையத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பெரும்பங்கு  அளித்தவருமான ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் இவ்வுலகை விட்டு விடைபெற்றுள்ளார்.அவரது மறைவு தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஜூலை 12 ,1928 அன்று வாணியம்பாடியில் விவசாயப் பணி செய்யும் குடும்பத்தில், முனிரத்தினம் ரங்கநாயகி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் ஆனந்தகிருஷ்ணன்.வாணியம்பாடி பெரியபேட்டை நகராட்சி ஆரம்பப்பள்ளி, இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளி படிப்பை முடித்துள்ளார்.கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டடப் பொறியியல் பட்டம் பெற்று ,1952 ஆம் ஆண்டு திருச்செந்தூர் நெடுஞ்சாலை துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றியுள்ளார்.1956 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று திரும்பியுள்ளார்.


மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் புதுடெல்லியில் அமைந்துள்ள மத்திய சாலை ஆராய்ச்சிக்கழகத்தில் முதுநிலை அறிவியல் அலுவலராக இருந்துள்ளார். கான்பூர் ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றிய ஆனந்தகிருஷ்ணன்புரட்சிகரமான முறையில் பாடத்திட்டங்கள் மற்றும் சிறந்த திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தியுள்ளார். கான்பூர் ஐஐடியின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.அமெரிக்க இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகராக இருந்தவர் ஆனந்தகிருஷ்ணன். 1978ஆம் ஆண்டு புதிய தொழில்நுட்ப பிரிவின் தலைவர் பதவி ஐக்கிய நாடுகள் சபையினால் இவருக்கு வழங்கப்பட்டது. உலக நாடுகளில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா.அவையில் பணியாற்றிய இவர் பிரேசில் அரசின் தேசிய விருதைப் பெற்றுள்ளார்.


1990 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார் ஆனந்தகிருஷ்ணன். உலகத்தரத்துக்கு இணையாக பாடத்திட்டங்களை மாற்றியமைத்ததுடன் தேர்வு முறைகளிலும் சிறந்த மாற்றங்களை செய்துள்ளார். அனைவராலும் வரவேற்கப்பட்ட ஒற்றைச் சாளர முறையை கொண்டு வந்த பெருமைக்குரிய சாதனையாளர். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் பயன்பாடு இணையம் மற்றும் கணினி வழியில் பெருகவும் பரவவும் காரணமாய் இருந்தவர். தமிழ் இணையம் (சிங்கப்பூர்)மாநாட்டின் உத்தமம் அமைப்புக்கு தலைவராக செயல்பட்டு சிறந்த பங்களிப்பினை வழங்கியுள்ளார்.


ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நலத்தில் முன்னேற்றம் இன்றி இவ்வுலகைப் பிரிந்துள்ளார்.


*பல்வேறு முக்கிய நபர்களின் இரங்கல் குறிப்புகள்...*
 *முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள்*


அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ மு.ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் திடீர் மறைவு செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆனந்தகிருஷ்ணன் கொடுத்த அறிக்கைதான் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கண்களைத் திறந்தது என்பதை இன்று பொறியாளர்களாக இருக்கும், மருத்துவர்களாக இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற நடுத்தர ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் நன்கு உணர்வர். அதுமட்டுமின்றி அவர் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி நடைபெறுவதற்கான முதலமைச்சரின் ஆலோசகராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றியவர்.


பொறியியல் கல்வி சேர்க்கையில் ஒற்றைச் சாளர முறையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் தனது ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கும் தமிழ் இணைய மாநாடு நடத்தி இணையத்தில் தமிழின் பயன்பாட்டை எளிமைப்படுத்த வதற்கான ஒருங்கிணைந்த தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்.


*திரு. தங்கம் தென்னரசு, அமைச்சர்*


சிறந்த கல்வி ஆளுமையும், அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும்,நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக மாணவர்களின் தொழிற்கல்வி கனவுகளை காப்பதற்கு தலைவர் கலைஞர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த வரும் தனிப்பட்ட வகையில் என் மீது அன்பு கொண்டிருந்தவருமான பேராசிரியர் முனைவர். மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களது மறைவு பெரும் அதிர்ச்சியும் ஆற்றொனாத் துயரும் அளிக்கின்றது. புகழஞ்சலி.


*கல்யாணசுந்தரம், சுவிட்சர்லாந்து*
அவருடைய ஒவ்வொரு சந்திப்பும் அன்பானவருடனான உபசரிப்பு மற்றும் அவருடைய ஞானவார்த்தைகள் தனித்துவமானவை. திட்டமிடல் நாட்களிலிருந்து 1998-1999 இல் திட்டமிடல் நாட்களில் இருந்தே INFITT -இன் வலுவான ஆதரவாளர் இவர். தமிழ் கம்யூட்டங் வளர்ச்சி பெரிய உறுதியான ஆதரவாளரை இழந்தது. 2019-ல் கோவையில் அவரது 90வது பிறந்தநாளைக் கொண்டாடியதில் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தோம். பேராசிரியரே நாங்கள் அனைவரும் உங்களை மிகவும் மிஸ் செய்வோம்.


*திரு.ராமசாமி துரைப்பாண்டி*
93 வயதாகிறது .அவர் இறக்கும்போது கணினியில் தமிழை இந்த அளவு சேர்த்தமைக்கு அவரின் உழைப்பு மிக முக்கிய காரணம்.அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்,கான்பூர் ஐஐடி தலைவர் , உத்தமம் எனும் உலகத் தமிழ் இணைய மன்றத்தின் நிறுவனத் தலைவர் ,கலைஞரின் காலத்தில் முதல் அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் ,என் போன்ற அடையாளம் இல்லாதவர்களுக்கு அடையாளம் தந்தவர்....அன்பே மாண்டவர் மீண்டிலர்...அன்புடன் விடை தருகிறோம்.என் போன்ற பலருக்கும் ஞானதகப்பனான ஆனந்தகிருஷ்ணன் அவர்களே...


*சமூக செயற்பாட்டாளர் திரு.ஆழி செந்தில்நாதன்*விடைபெற்றார் பேரா.மு ஆனந்தகிருஷ்ணன்.தலைமுறையை அழிக்கும் நோயின் இன்றைய உயிர் பறிப்பாக அமைந்திருக்கிறது முதுபெரும் முனைவர் பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணனின் மறைவு. கல்வித்துறையில் , கணித்தமிழ் துறையில் இது ஒரு சகாப்தத்தின் மறைவு.சமூகநீதி பார்வை கொண்ட கல்வியாளரான ஆனந்தகிருஷ்ணனின் மறைவு எனக்கு ஒரு தனிப்பட்ட பேரிழவு... தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை என்றான் புரட்சிக் கவிஞன். நீங்களும் நீடித்து நிற்பீர்கள்.


*மாலன் நாராயணன்*


பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணனை நினைக்கும்போது பாரதி சொன்ன மலர்ந்த முகம் ,இனிய சொல், தெளிந்த சித்தம் இவைதான் கண்முன் தோன்றுகின்றன.அவரும் பேராசிரியர் வா.செ. குழந்தைசாமியும் தான் என்னை உத்தமம் அமைப்பிற்குள் தள்ளிவிட்டார்கள். நிறைய சர்ச்சித்திருக்கிறோம் சிலசமயம் காரமாக. ஆனால் அப்போதும் அவர் புன்னகை மாறியதில்லை. போய்வாருங்கள் prof.


*திரு.Vrs.சம்பத்*

 அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்,நியூயார்க்கில் ஐநாவின் இயக்குனராக பணியாற்றினார், கான்பூர் ஐஐடி தலைவராக பணியாற்றினார்.அவர் தமிழக அரசின் ஆலோசகராக பணியாற்றினார் இந்திய அரசாங்கத்திடமிருந்து பத்ம விருது பெற்றார். அவரை ஐம்பதில் எனக்கு தெரியும்...அவர் என்னுடன் மிகவும் நட்புடன் இருந்தார். அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

*திரு.ச.பார்த்தசாரதி*

பேராசிரியர் டாக்டர். பத்மஸ்ரீ .மு.ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் மறைவுக்கு அஞ்சலிகள்... அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், கான்பூர் ஐஐடி தலைவர், கணித்தமிழ்ச் சங்கம், உத்தமம் போன்ற அமைப்புகள் உருவாக்கி வழிகாட்டியவர்.தமிழ்மொழி கணினியில் இத்துணை வளர்ச்சி அடைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலக அளவில் அயராது பாடுபட்டவர். தமிழகத்தில் பொறியியல் கல்விக்கு பெரும் பங்களித்த மிகச் சிறந்த கல்வியாளர். மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் தனது 93வது வயதில் விடைபெற்றுக் கொண்டார் .ஐயாவின் ஆன்மா இறையருளில் இளைப்பாற  வேண்டுகிறேன்.


*திரு.மறைமலை இலக்குவனார்*


கான்பூர் மெச்சிய கலங்கரை விளக்கே!
காரிருள் சூழ்ந்தது உங்கள் மறைவால்...
ஐக்கிய நாடுகள் அமைப்பினில் உறுப்பாம்
தொழில்நுட்ப அவையில் மிளிர்ந்தீர் சிறப்பாய்
பிரேசில் நாட்டின் குடியரசுத் தலைவரால் பெருமை உமக்கா? பாரதம் தனக்கா?
இருந்தும் எளிமையே போற்றினீர் இந்திய நாட்டின் இளைஞர் அனைவரும் இணையிலா அறிவுடன் ஏற்றம் பெறவே ஓய்விலாது உழைத்த உயர்குணச் செம்மலே!
பிரிந்துசென்றீரே பெருந்துயர் கொள்ளவே!


*திரு.தெய்வசுந்தரம் நயினார்*


பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் இன்று காலை மறைந்தார் என்ற மிகுந்த துயரம் மிக்க செய்தி அறிந்தேன்.அனைவராலும் மதிக்கப்படுகிற ஒரு பேராசிரியர் அவருடைய கல்விப் பணியின் சிறப்பு பற்றி எழுதத் தொடங்கினால் ஆயிரக்கணக்கான பக்கங்கள் தேவைப்படும்....2010 இல் கோவையில் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழ் இணைய மாநாடு சிறப்புற நடைபெற முயற்சி மேற்கொண்டார். அதையொட்டி தமிழகத்தில் கணினித் தமிழுக்கு என்று தனி உராய்வு மையம் நிறுவுவதற்கு 50 கோடியில் ஒரு திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பை என்னிடம் அளித்தார்...தனிப்பட்ட முறையிலும் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் அவருடைய இழப்பு உலகிற்கும் குறிப்பாக கணினி தமிழுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


*சுபாஷினி  , தமிழ் மரபு அறக்கட்டளை*


பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டேன். தமிழ்க்கணினித் துறை வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு அவருக்கு உண்டு என்பதோடு மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் தமிழ்க்கணினித் துறை வளர்ச்சி, உத்தமம் அமைப்பு தோற்றத்திற்கு காரணமானவர். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின்(TUV~Tamil Virtual University) உருவாக்கத்தில் பங்களித்தவர் என்பதோடு,தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பை நாங்கள் இரண்டு 2001ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கியபோது அதன் தொடக்கத்தில் பங்கு கொண்டவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு....உலகளாவிய வகையில் ஒட்டுமொத்த தமிழ் கணினி வளர்ச்சியில் பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணனின் பங்கு தவிர்க்க முடியாது  தனிச்சிறப்பிடம் பெறுவது!தமிழ் மரபு அறக்கட்டளையின் அஞ்சலிகள்!முனைவர் க. சுபாஷினிதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


*சமஸ்


தொலைநோக்ககர்,தமழக உயர்கல்வித் துறையின் கண்ணியமிக்க அடையாளங்களில் ஒருவர் ...பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணனுக்கு என் இதயபூர்வ அஞ்சலி!


*சாவித்திரி கண்ணன்*
சான்றோர்களுக்கெல்லாம் சான்றோராக திகழ்ந்தவர்! அன்புக்கு இனிய பண்புக்கும் இலக்கண மாணவர் ஆனந்த கிருஷ்ணன். அவர் கல்வியாளர் மட்டுமல்ல, செயற்பாட்டாளர், துணிச்சலானவர், நேர்மையானவர், சுயநலமற்றவர்.அண்ணா பல்கலையில் ஆனந்தகிருஷ்ணன் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தை ஒரு பொற்காலம் எனலாம் .நேர்மையான வகையில் பேராசிரியர்கள் நியமனம் கல்வி கட்டணங்களை கட்டுப்பாட்டில் வைத்து ஏழை எளிய மாணவர்கள் படிக்க உதவியது, யாரும் எவரும் எந்த நேரமும் தன்னை சந்திக்கும்படி வைத்துக்கொண்ட எளிமை ,பிரச்சனைகள் என்று வந்தால் உடனே களம் கண்டு தீர விசாரித்து சுமூகமாக தீர்த்து வைக்கும் சான்றாண்மை ஆகியவற்றைச் சொல்லலாம்.' மண்டல் கமிசன் பரிந்துரைகள் அண்ணா பல்கலையில் செயல்படுத்தப்படும்' என்று ஆனந்த கிருஷ்ணன் அறிவித்தார். தன் வாழ்நாளில் இறுதி மூச்சு உள்ளவரை இந்த சமூகத்திற்கு அவர் பங்களிப்பு தந்து கொண்டே இருந்தார். அறச்சீற்றம் கொண்டவரான ,மிக உயர் பதவி வகித்த ஒரு சான்றோரை இனி காண்பது அரிது. அவர் என்றென்றும் நம் இதயங்களில் வாழ்வார்.
சாவித்திரி கண்ணன் அறம் இணைய இதழ்


*திரு.S.V.பழனிசாமி*

1991-2001ஒன்றாம் ஆண்டு மாணவர்கள் படிப்பின் முடிவில் அதிக பணம் கேட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிரச்சனையை நீக்கினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் பிரச்சினையை வெளிப்படையாக கலைத்துவிட்டார். ஆனந்தகிருஷ்ணன் எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார் .அவருக்குச் சொந்தமாக கார் இல்லை .அவர் வேலைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பயணிப்போர் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்கல்வி பற்றிய தனது கருத்துக்களை   யாருடனும் பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருந்திருக்கிறார்.


*திரு. நலங்கிள்ளி*


ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய A Brief History of Time நூலைக் 'காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் 'என்ற பெயரில் நான் தமிழாக்கம் செய்தேன். அந்த நூலை சென்னை ராணி சீதை மன்றத்தில் வெளியிட்டு, தமிழாக்கத்தில் ஆங்கில மூலத்திற்கு ஏற்ற மிகச்சரியான கலைச் சொற்களை நான் பயன்படுத்தி இருப்பதாக என்னைப் பாராட்டி பேசினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன். அவர் இன்று கொரோனாவுக்கு பலியான செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவருக்கு எனது புகழ் வணக்கம்.


*திரு .மு .சிவலிங்கம்*


பேராசிரியர் முனைவர். மு .ஆனந்தகிருஷ்ணன் ஐயா அவர்கள் 2000ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்தார். அப்போது தமிழ்நாடு அரசின் கல்வி அமைச்சகம் பல்வேறு அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்கும் பணியை முன்னெடுத்தது. கணிதம் ,இயற்பியல், வேதியியல், வேளாண்மை, பொறியியல் மருத்துவம் ,கணினியியல் என 14 துறைகள் சார்ந்த தமிழ் கலைச்சொற்களை உருவாக்கும் பொறுப்பு பல்வேறு பல்கலைக்கழகங்களிடம் ஒப்படைக்கப்பட்டது கணினியியல் கலைச்சொற்களை உருவாக்கும் பொறுப்பை ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டார்கள்.கணினி இயலுக்கு நாங்கள் உருவாக்கிய 8000 தமிழ் கலைச்சொற்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அச்சில் நூலாகவும் வெளியிடப்பட்டது. மாநாடுகள் ,கூட்டங்கள் சந்திக்கும்போதெல்லாம் என்னிடம் மிகவும் அன்போடும் ஆதரவோடும் உரையாடுவார்கள். இன்று பேராசிரியர் ஐயா அவர்களின் பிரிவு அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பேராசிரியர் முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் ஐயா அவர்களின் நினைவுகள் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.


*திரு ஆனந்தன் சொக்கலிங்கம்*


உலக அளவில் சிறந்த கல்வியாளராக திகழ்ந்தவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கான்பூர் ஐஐடி முன்னாள் இயக்குநர் மற்றும் தலைவரும், தமிழ்மொழி கணினியில் இத்துணை வளர்ச்சி அடைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலக அளவில் அயராது பாடுபட்டவரும், கணினி தமிழ்ச்சங்கம் உத்தமம் போன்ற அமைப்புகளை உருவாக்கி எங்களைப் போன்றோரை  கணித்தமிழ் வளர்ச்சிக்கு உழைக்க வழிகாட்டி உருவாக்கிய எங்களின் அன்பு பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் இன்று 29.5.2021  காலை 5 .15மணிக்கு சென்னையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.*திரு. குணா குணசேகரன், ஊடகவியலாளர்*
மெரிட் வெர்சஸ்  இட ஒதுக்கீடு விவகாரத்தில் கருத்துரை டாக்டர் எம் ஆனந்தகிருஷ்ணன் (தலைவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ்) ஒரு தேர்விற்கு இட ஒதுக்கீடு என்பது போதுமான ஆதாரத்தின் அடிப்படையில் சிறப்பான மற்றும் தரத்தை உருவாக்கும் என்று சுட்டிக்காட்டுகிறது. இட ஒதுக்கீட்டின் கீழ் வந்தவர்கள் பொதுவாக தகுதியற்றவர்கள் என்றும் IIT மற்றும் IIM களில் எதிர்பார்க்கப்படும் செயல்திறன் அளவை சமாளிக்க முடியாது என்று வாதிடுவது தவறு என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆகிய ஆனந்த கிருஷ்ணன் கூறினார்.


*திரு. மணிவண்ணன்*


அதிர்ச்சி தரும் செய்தி அண்மையில் என் பிறந்தநாள் அன்று அவரோடு பேசிய போது நலமாக இருந்தார். கலகலப்பாக பேசினார். கணித்தமிழ் வளர்ச்சியில் அவருடைய தலைமை முக்கியமான நேரத்தில் கிடைத்தது. பலவிதத்தில் இந்தியாவில் கணித்தமிழ் முன்னோடியாக இருப்பதற்கு அவரது வழிகாட்டுதல் ஒரு முக்கியமான காரணம். உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் எனும் உத்தமம் அமைப்பின் நிறுவன தலைவராக அவர் எங்களுக்கு வழிகாட்டியவர். இது ஒரு பேரிழப்பு அவரோடு பல தலைப்புகளில் உரையாடிய வாய்ப்புகளில் அவருடைய அறிவாற்றலையும் பொறுமையையும் பெருந்தன்மையையும் கண்டு போற்றியிருக்கிறேன். பேரிடியாக வந்த இந்த செய்தி ஒரு கெட்ட கனவாக இருந்து விடக்கூடாதா?

by R.Gnanajothi   on 02 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.