LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

அன்புதான் இன்ப ஊற்று !

அசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர்  வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து   விட்டான்.  அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த அமைச்சர்  பெருமக்கள், அவன் கொண்ட போர் வெறியை போக்குமாறு, எடுத்துக்  கூறியபோதும், அவன் செவிமடுக்கவில்லை. புத்தசாமியார்களும் அவனுக்கு உயிர்க்கொலைபுரியும் போர் வேண்டாம்,  உயிர்களிடத்தில் அன்பு கொள்ள வேண்டும். அன்பு வடிவான புத்த பகவானும்  அன்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கூறியதையும், அதனைக்   கடைபிடித்தால்,  நாட்டில் அமைதிநிலை ஏற்படும் என்றும்  கூறினார்கள். அவர்கள் கூறியதெல்லாம் அசோக மன்னருக்கு அப்போது  வேம்பாக கசந்தது.   அந்த அளவுக்கு அவனிடம் போர் வெறி தாண்டவமாடியது.

அதோ கலிங்க நாட்டில் போர் நடைபெறுகிறது.  அப்பப்பா! எத்தனை  தலைகள் கீழே உருண்டோடுகிறது. வேட்டுண்ட கைகள் துடிப்பதைப் பாருங்கள் , எங்கு பார்த்தாலும் குருதி வெள்ளம்.  குருதி வெள்ளத்தில் மனித உடல்கள் அடித்துச் சென்றது.  எங்கு பார்த்தாலும் மரண ஓசை ! அழுகுரல்கள் ! ஒருபுறம்  வெற்றிப் பெருமிதத்தில் சில போர் வீரர்களிடையே களிப்புக் கொண்டாட்டாம். ஆயிரக்கணக்கான கபால ஓடுகளின் மீது நின்று, தன் வெற்றி கொடியைப் பறக்க விட்டான் அசோக மன்னன்.

சரணடைந்து விட்டது. கலிங்கம். அன்று இரவு கலிங்க நாட்டின் பாசறையில், தங்கள் வெற்றியை மது, மாதுவின் மயக்கத்தில் இன்பம் துய்க்கலாம் என நினைத்து  போர்வீரர்கள் குதிரைகளிலும் , யானைகளிலும்  , கலிங்க நாட்டின் அகன்ற  வீதிகளில் பவனியும் பற்ந்தும் வந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால்  அந்த போர்வீரர்கள் கூட்டத்தில் ஒரு போர்வீரன் மட்டும் அந்தக் கூட்டத்திலிருந்து விலகிச் சென்றான்.  அவன் துன்பமறிந்து  அவனை சுமந்துகொண்டு சென்ற குதிரையும் பூப்போல் நடந்து  சென்றது.  அவன் குதிரை லகானை எந்த  நேரத்திலும் விட்டு  விடுவான்போல் கை சோர்ந்தது.  அவன் இடையில் ஒரு கட்டாரி புகுந்து  அதிலிருந்து குருதி கண்ணீர்போல்  வடிந்து கொண்டிருந்ததது.  அவனை சுமந்துகொண்டு சென்ற குதிரையானது மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது அவன் ‘ ஆ... ஐயோ வலி தாங்க முடியவில்லையே ! ‘ என்று முணங்கிக்  கொண்டான்.

யுத்த தர்மப்படி பார்த்தால் அசோக மன்னனுக்கு கிடைத்தது  என்னமோ மிகப்பெரிய வெற்றிதான்.  ஆனால் தன்னை சுமந்து செல்லும் குதிரை எடுத்து  வைக்கும் ஒவ்வொரு அடியினால் ஏற்படும் தனக்கு ஏற்படும் வலியினாலும், ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட வெற்றியானது  அருமையாக இருந்தால் என்ன ? கொடுமையாகவும் இருந்தால்தான் என்ன? என்றுதான் அவனால் நினைத்துப் பார்க்க முடிந்ததது.

மூச்சிரைக்க கண்கள் இரண்டும் இருண்டு வர கீழே விழப்போனவன், சற்று நிதானித்து வலது கையினால் குதிரை லகானை பற்றிக் கொண்டு, இடது கையினால் இடுப்புக் கச்சையில்  முடிந்திருந்த பச்சிலை முடிச்சு இருக்கிறதா ? எனத் தொட்டுப்  பார்த்துக் கொண்டான்.

அவன் அந்த பச்சிலையைத் தொட்டுப் பார்த்தவுடன், தன ஒரே மகள் மலர்விழி திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாமல், அவளை நினைத்துப் பார்க்கச் செய்தது.  ஏன் என்றால் அவனது  அன்பு மகள் அவன் போருக்குச் செல்லும்போதெல்லாம் மறக்காமல் இந்த பச்சிலையைக்  கொடுத்து ‘ அப்பா இதை எப்போதும் இடையில், முடிந்து வைத்துக்கொள்ளுங்கள்.ஆபத்துச் சமயத்திற்கு உதவும். எப்படிப்பட்ட காயத்தையும் நொடிப்பொழுதில் தீர்த்துவிடும்’ என்று கூறி பச்சிலையை கொடுத்து அனுப்புவாள்.

ஆனால் இதுவரையில் அவள் கொடுத்து அனுப்பிய பச்சிலையை  அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை.  காரணம் இதுபோல் இதுவரை அவன் இடையில் கட்டாரி  புகுந்து இப்படிப்பட்ட காயம் எதுவும் அவனுக்கு  ஏற்பட்டதில்லை.   ஆனால் இப்போது  அதற்கு அவசியம் ஏற்பட்டு விட்டது.  அந்த பச்சிலையில் சிறிது தண்ணீர் தெளித்து, அதனை தட்டி காயத்தின் மீது வைத்து கட்ட வேண்டும்.  பச்சிலை தட்டுவதற்கு கூட அவனுக்கு  பலம் அப்போது இருப்பதாகத் தெரியவில்லை.

அவன் நண்பர்கள் யாராவது தன பின்னால் வருகிறார்களா? என்று தலையை கஷ்ட்டப்பட்டு சிறிது உயர்த்திப் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் வரவில்லை. அப்படி யாரும் வந்தாலும், தன்னால் அவர்களை குரல் கொடுத்து அழைக்க முடியுமா ? என்பது அவனுக்கு  சந்தேகமாகத்தான் இருந்தது. தன  உலர்ந்து போன தன இதழ்களை நாவினால் நீவிக்கொண்டான்.  .      

பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் மின்னலென தெரிந்த ஒற்றையடிப்பாதை வழியே குதிரை அவனை சுமந்து கொண்டு சென்றது.  குதிரை சில சமயங்களில் ‘இதே வழியே செல்லவா’ என்று கேட்பது போல் நின்று கனைக்கும்போது அவன் அதன்  முதுகில் தட்டி, தட்டி போகச  செய்தான்.

அவனுடைய நல்ல நேரமோ அல்லது கெட்டநேரமோ குதிரை ஓரிடத்தில் வந்தவுடன், ஓட ஆரம்பித்தது . .ஓடிய வேகத்தில்  அதன்  முதுகில் சுமந்து வந்த போர் வீரனை மறந்தது.  எனவே  அவனுடைய  லகான் பிடி தளர்ந்து,  அவன் பொத்தென்று கீழே விழுந்தான். விழுந்தவன் எழுந்து நிற்க முயற்சி  செய்து தோற்றுப்  போனான்.  வலியும்  அவனை எழவிடவில்லை.

தன இரு கைகளையும் தரையில் ஊன்றிக்கொண்டு கஷட்டப்பட்டுத்  தலையைத் தூக்கிப் பார்த்தான்.  ஐந்து  அடி தூரத்தில் நிலவொளியில்   ஒரு இடிந்த கல்மண்டபம் தெரிந்தது.  அதனருகில் நீர் நிரம்பிய குட்டையும் இருப்பது தெளிவாக் அவனால் பார்க்க முடிந்தது.

தண்ணீரைக் கண்டவுடன் அவனுக்கு தாகம் எடுப்பதுபோலும் தோன்றியது. எப்படி எழுந்து செல்வது என்று யோசிக்க யோசிக்க அவன் கால்கள் இருந்தும் இப்படி பயனற்று போய்விட்டதே !

இரு கைகளையும் தரையில்  ஊன்றிக்கொண்டு சிறு குழந்தைபோல் தவழ ஆரம்பித்தவுடன், அவனுக்கு  வலி அதிகம் ஏற்பட்டு ‘கட்டாரியானது  உன் இடையில் புகுந்திருக்கிறேன்...’ என்று கூறியது. அவன் பல்லை கடித்து கொண்டு தவழ்ந்தும் நகர்ந்தும் நான்கடி நகர்ந்திருப்பான்

அங்கு  ஒரு மனித உடல். ஒரு பக்கம் சாய்ந்து கிடந்தது. அவனால் அந்த முகத்தை தெளிவாகப்  பார்க்க முடியவில்லை. அவன் அணிந்திருந்த அங்கியை பார்த்ததில்,அவனும் ஒரு போர்வீரனாகத்தான்   இருப்பான் என்று நினைத்துக் கொண்டே, தன பலம் கொண்ட மட்டும் கையினால் அப்போர் வீரனின் பிடரி முடியைப் பிடித்து இழுத்து அவன் முகத்தை   வானத்தைப் பார்க்க நிமிர்த்தி விட்டான்.  போர் வீரன்தான் என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அவன் தன்னைப்போல் முதியவனாக் இல்லாமல், இளைஞனாக  இருந்தான். அவன் வயிற்றிலே ஆழமாக அம்பு ஓன்று தைத்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டு, அவனுக்கு மூச்சு இருக்கிறதா என்று தன கையை அவன் மூக்கின் அருகில் கொண்டு சென்றான்., அப்போது தான் கடந்து வந்த ஒற்றையடிப் பாதையில், விரைவாக குதிரைகளில் சில போர்வீரர்கள் செல்வதும், தெளிவாக அவனுக்குத் தெரிந்தது.

குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டதாலோ அல்லது அந்த முதிய போர்வீரன் தன்னை தொட்டதாலோ அந்த இளைஞன் இமைகளை சிரமப்பட்டு திறந்து, தண்ணீர் வேண்டும் என்பதுபோல் தன் கைக்கட்டை விரலை வாயில் அருகில் வைத்து சைகை செய்தான்.       

அப்போதுதான் அந்த முதிய போர்வீரன் தானும் தாகத்திற்கு தண்ணீர் அருந்த அங்கு வந்ததை உணர்ந்தான் உணர்ந்தாலும் தன்னை விட அந்த இளைஞனுக்குத்தான்  தண்ணீர் முதலில் கொடுத்து, இன்னும் சற்று நேரத்தில் போகப்போகும் அவனது உயிரை நிறுத்தவேண்டும் என்று நினைத்தான் அந்த முதிய போர்வீரன்..

நினைத்தவன் செயல்பட்டான்.  மேலும் தவழ்ந்து சென்று , தண்ணீர் அவனுக்கு வசதியாகவே  தரையோடு பரவலாக கிடந்தது.  கையினால் எடுத்து எப்படி அந்த இளைஞனருகில் எடுத்துச் செல்ல முடியும் என்று தனக்குத்தானே சொல்லிகொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்.  ஓர் உடைந்த மண்பானை ஓடு  தண்ணீர் எடுக்கும் வகையில் கிடந்தது. அந்த மண்பானைத்  ஓட்டில்  தண்ணீர் எடுத்து ஒரு கையை  தரையில் ஊன்றிக் கொண்டே தவழ்ந்தது செல்வது அவனுக்கு மிகவும் சிரமமாகவே  இருந்தாலும் அந்த முதிய போர்வீரர் அதைப் பொறுப்படுத்த்வில்லை

இளைய போர்வீரன் வாயினருகில் தண்ணீரை சாய்த்து, அவன் மெதுவாக அருந்தும்படி செய்தான். தண்ணீர் சிறிது அருந்தியவுடன் அந்த இளைஞருக்கு பாதி உயிர் வந்ததுபோல் தெரிந்தது.

அவன் கிணற்றுக்குள் இருந்து பேசுவதுபோல் பேச ஆரம்பித்தான். “அய்யா என்னை கொன்று விடாதீர்கள் ”என்று பயத்துடன் கூறினான்.

“ உன்னை நான் எதற்காக கொல்லவேண்டும். கொல்ல நினைத்தால் உனக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்திருப்பேனா? “ என்று  கூறி அவன் பயத்தை தெளிய வைத்தான் அந்த முதிய போர்வீரன்.

“இல்லை ! நான் உங்கள் எதிரி கலிங்க நாட்டு மன்னனின் போர்வீரன். தாங்களோ அசோக சக்கரவர்த்தியிடம் பணியாற்றும் போர்வீரர். அதனால்தான் அப்படி பயந்தேன் “ என்றான் அந்த இளைய போர்வீரன்.

“நீ எதிரி நாட்டு போர்வீரன் என்பது, உன் அங்கியில் இருக்கும் சின்னத்தினை வைத்தே முன்பே தெரிந்து கொண்டேன். என்னோட  பெயர் மணிமாறன். உன் பெயர் என்ன ? “ என்று தன்னைத்தானே அவனுக்கு அறிமுகம் செய்து கொண்டே அவனைப் பற்றிக் கேட்டான் முதிய போர்வீரர்.

“ என்னோட பெயர் ராஜதிலகம் “ என்று கூறியவன், பேசமுடியாமல் மேலும்  களைப்படைந்தான் மறுபடியும் மணிமாறன் அவனுக்கு சிறிது தண்ணீர் கொடுத்தவுடன் “ அய்யா தயவுசெய்து என்னை என் காதலி அமுதவல்லியிடம் கொண்டு சேர்த்து விடுங்கள். அவள் மடியில் என் உயிரை விட்டால் எனக்கு சந்தோஷமாக இருக்கும். “ என்று ஆசை பொங்கக் கூறினான்.

“ உன்னை என்னால் உன் காதலியிடம் சேர்க்க முடியாது “ என்று மணிமாறன் கூறிக்கொண்டே தன இடையில் புகுந்துகொண்டு செந்நீர் வடிக்கும் காட்டாரியை காட்டினான்.  அந்த முதிய போர்வீரன் மணிமாறன்.

“ அய்யா ! என்ன கொடுமை ! தங்களுக்கு.,  என்னை மன்னித்து விடுங்கள்.  உங்கள் நிலையைப் பார்க்காமல் எதோ எதோ பேசி விட்டேன்.  என் காதலியின் மீது கொண்ட காதல் மிகுதியால்...” என்று கூறியபோது அவனுடைய வருத்தமும், அதே சமயத்தில் தன ஆசைக் காதலியைப் பார்க்க முடியாதுபோல் இருக்கிறது என்ற ஏக்கமும்  அவன் முகம் காட்டியது.

“ உன்னை என்னால் உன் காதலியிடம் கொண்டு சேர்க்க முடியாது என்றுதான் கூறினேன்.  ஆனால் உன்னை உன் காதலியிடம் வாழ வைக்க முடியாது என்று கூறவில்லையே.! உனது  காதலி அமுதவல்லியிடம் சேர்ந்து வாழ வைக்கிறேன் பயப்படாதே ராஜதிலகா !  உனக்கு சந்தோஷம்தானே !“ என்றார்  மணிமாறன்

“ எப்படி அய்யா தங்களால் முடியும் ! இன்னும் சற்று நேரத்தில் என் உயிரை இந்த அம்பு கொன்றுவிடும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எதையாவது கூறி ஆசையை வளர்க்காதீர்கள். அமுத்வல்லியின் நினைவாகவே  இறந்து விடுகிறேன். “ என்று கண்ணீர் பெருக  ராஜதிலகம் கூறினான்.

“ ராஜதிலகா ! என்னிடம் காயத்தை ஒரு நொடியில் ஆற்றும் அபூர்வமான பச்சிலை வைத்து இருக்கிறேன்.  அதை தட்டி உன் காயத்தில் வைத்து கட்டிவிட்டால், உன் காயமும் மறைந்து விடும், உன் ஆசையும் நிறைவேறிவிடும். என்று கூறிக்கொண்டே மணிமாறன் தன இடையில் வைத்திருந்த பச்சிலையை” எடுத்துக்காட்டினான்.

"அப்படியா அய்யா ! தயவுசெய்து அந்த பச்சிலையை இருவரும் தட்டிக் காயத்தில் வைத்துக்  கட்டிகொள்வோம்” ராஜதிலகம் மகிழ்ச்சி மிகுதியில்  கூறினான்.

“ ராஜதிலகா இது ஒருவருக்கு வைத்து கட்டுவதற்கு  மட்டும்தான் பச்சிலை இருக்கிறது.  எனவே நானே உனக்கு கட்டி விடுகிறேன்  “என்று மணிமாறன்  கூறினார்.    .  

“வேண்டாம் அய்யா தயவுசெய்து நீங்களே பச்சிலையை கட்டிகொள்ளுங்கள் . என்னைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்.  நீங்க என் மீது கருணை கூர்ந்து கூறியதற்கு மிகவும் நன்றி  “ என்று இரு கரம்கூப்பினான் ராஜதிலகம்.

“ இல்லை ராஜதிலகா ! நீதான் வாழ வேண்டும்.  ஏன் எனில் நீ வாழ வேண்டிய இளைஞன்.  நானோ எல்லாம் ஆண்டனுபவித்தக் கிழவன். உன் ஆசைகள் அழியக்கூடாது “ என்று கூறிக் கொண்டே ராஜதிலகம் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அவன் மீது தைத்திருந்த அம்பினை உருவி விட்டு, அந்த இடத்தில் அபூர்வ பசசிலையை வைத்துக் கட்டினார் மணிமாறன். ‘ எப்படி இவ்வளவு சக்தி தனக்கு வந்தது என்றே தெரியவில்லை. எப்படியோ ராஜதிலகத்தின் காயம் மீது கட்டிவிட்டார்.

கட்டிய சில நொடிகளில் ராஜதிலகம் எழுந்து நின்று விட்டான். “ஐயா என்னையும் அமுத்வல்லியையும் வாழ வைத்த தெய்வம் நீங்கள்தான்.  உங்களுக்கு எப்படி நன்றிக்கடன் செலுத்தப்போகிறேன் என்பது எனக்கே தெரியவில்லை “ என்று இருகரம் கூப்பி மண்டியிட்டு வணங்கினான்.

“ ராஜதிலகா எனக்கு ஒரு உதவி செய்வாயா? “ என்று மணிமாறன் கேட்டார்.

“ கட்டளையிடுங்கள் ஐயா காத்திருக்கிறேன்.  என்ன செய்ய வேண்டும் கூறுங்கள். மறுக்காமல் செய்கிறேன் “ என்றான் ராஜதிலகம்.

“ ராஜதிலகா என் இடையில் புகுந்து இதுவரை என்னை நரக வேதனைப்படுத்தும் இந்தக் கட்டாரியை உருவி, எனக்கு இந்த உலகத்தில் இருந்து விடுதலை கொடு.  மறுத்து விடாதே ! “ என்றார்.

முதிய போர்வீரன் மணிமாறனின் கண்கள் ராஜ திலகத்தைக் கெஞ்சியது.  ராஜதிலகம் கண்களில் நீர் பெருக , தன கண்களை  இறுக மூடிக்கொண்டு மணிமாறன் இடையில் உள்ள கட்டாரியை உருவியவுடன் மணிமாறன் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

ராஜதிலகம் கண்களைத் திறந்து பார்த்தான் குருதி வெள்ளத்தில் மிதக்கும் மணிமாறனைக் கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதான். கதறியவன் பின்னால் ‘ அன்புதான் இன்ப ஊற்று ! அன்புதான் இன்ப ஊற்று ! “ என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான்.  அங்கு அசோக மன்னன் நின்றுகொண்டிருந்தான். ராஜதிலகா ! பயப்படாதே ! இங்கு நடந்தவையெல்லாம்,  உங்கள் இருவருக்கும் தெரியாமல் கவனித்துக் கொண்டேதான் வந்தேன்.  ராஜதிலகா  ! அன்பிற்கு இவ்வளவு சக்தி இருக்கும் என்று கனவில்கூட நான் நினைக்கவில்லை அன்புதான் இன்ப ஊற்று ! “ என்று மென்மையாகக் கூறிக்கொண்டே,  தனது இடையில் இருந்த வாளையையும் கேடயத்தையும் அசோக மன்னன் தூக்கிக் கீழே எறிந்தான்.  

பூ. சுப்ரமணியன்,
பள்ளிகரணை, சென்னை

by Subramanian   on 15 Jan 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.