|
|||||
அங்குசம் திரைவிமர்சனம் - சமூக ஆர்வலர்களின் பார்வையில் !! |
|||||
![]() அங்குசம் படம் பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் மனுக்கண்ணன் அவர்கள், சமூக ஆர்வலர்களுக்கு இப்படத்தை திரையிட்டுக் காட்டி, மக்களிடம் படம் குறித்த செய்தியை கொண்டு சேர்ப்பதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர்-பிரேம்ஸ் அரங்கில் சிறப்புக் காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த சிறப்பு காட்சியில் 125 சமூக ஆர்வலர்கள் வந்திருந்தனர். அங்குசம் படம் குறித்து சமூக ஆர்வலர் ஒருவரின் திரை விமர்சனம் இதோ, அங்குசம் "சமுதாயத்தின் பழுது போக்கும் செய்தியுள்ள பொழுதுபோக்கு படம்”. படத்தில் வரும் சாராயம், குத்துப்பாட்டு, மற்றும் பல கமர்சியல் காட்சிகள் நமக்கு உடன்பாடில்லை. ”புகை உயிருக்குப் பகை, மது உயிருக்குக் கேடு” என்ற வாசகங்கள் படத்தில் அடிக்கடி வருவதற்கு அவசியம் இல்லாமல் செய்திருக்கலாம். இருந்த போதும், தகவல் உரிமை சட்டத்தை சாமானியனுக்கு எடுத்துச் செல்வதற்காக சிந்தித்து, மக்களுக்குப் புரியும் வண்ணம் காட்சியமைத்த இயக்குனருக்குப் பாராட்டுக்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்த பாட்டு எழுச்சியூட்டுகிறது. படத்தின் துவக்கத்தில் இந்தியாவின் பழங்காலப் பெருமைகள், இப்போதைய இலஞ்ச ஊழல் குறித்த காட்சிகள் நெகிழ்ச்சியூட்டுகிறது. பாடல்கள் ரசிக்கத் தக்கதாக இருக்கிறது. குறிப்பாக, ”ஓசோன் படலம்” பாடல் நெஞ்சை வருடுவதாக இருந்தது. சராசரி இளைஞன், தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளூர் ஊழல்களை அம்பலப்படுத்தி, ஆளுங்கட்சி அமைச்சரை சிறைக்கு அனுப்பி சாதனை இளைஞனாக மாறுவதுதான் படம். அரசு அலுவலகத்தில் மனு கொடுத்தால், கட்டாயம் ஒப்புகைச் சீட்டு(acknowledgement) வாங்க வேண்டும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் யார் வேண்டுமானாலும் தகவல் கேட்கலாம், தகவல் கேட்பது எளிது என்பது போன்ற மக்களுக்குப் பயனுள்ள காட்சிகள் பல அமைத்தது அற்புதம். அரசாங்கத்தின் நேரடி,மறைமுக தடைகளைத் தாண்டி இப்படம் முறையாக வெளியாகி, மக்களைச் சென்று சேர்ந்தால் இப்படத்தின் தாக்கத்தால், பல ஆயிரம் இளைஞர்கள், இச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பார்கள். அதுவே அங்குசம் படத்தின் பெரிய வெற்றி. அதற்கு இன்றைய அரசியல் அனுமதிக்காது. நம்மால் முடிந்த அளவு, இப்படம் குறித்த செய்தியை மக்களிடம் பரவச் செய்வோம். அதுவே, இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு நாம் தரும் சிறு ஆதரவு. படம் வெளியாகும் போது, நண்பர்களிடம், உறவினர்களிடம் திரையரங்கு சென்று படம் பார்க்கச் செய்யவும். இயக்குனர் மனுக்கண்ணனின் இப்போதைய நிலைப்பாடு “... படத்தை முறையாக வெளியிட முடிந்து, தயாரிப்புச் செலவை மீட்டெடுக்க முடிந்தால்(தயாரிப்பாளரும் இவரே..) மீண்டும் இதுபோன்றதொரு செய்தி சொல்லும் படமெடுப்பேன், இல்லையேல் மீண்டும் துபாய்க்கு சென்று வேலையில் சேர்ந்துவிடுவேன்” என்பதுதான். மனுக்கண்ணன் அடுத்த படம் எடுப்பாரா ? இல்லை அடுத்த விமானத்தை பிடிப்பாரா என்பது நம்மைப் போன்ற சமூக ஆர்வலர்களின் கையிலும், பொதுமக்கள்-இளைஞர்களின் கையில்தான் உள்ளது. |
|||||
by Swathi on 30 Oct 2013 0 Comments | |||||
Tags: Angusam Angusam Review அங்குசம் அங்குசம் விமர்சனம் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|