LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி

அண்ணனும் தங்கையும்

                                    அண்ணனும் தங்கையும்

 

இடுப்பிலே, ஈரத்துணி, கையிலே சுருட்டிய தாமரை இலை, தோள் மேல் காம்புடன் கூடிய தாமரைப் பூ - இந்த விதமாக முத்தையன் பூங்குளம் கிராமத்து வேளாளர் வீதி வழியாகச் சென்றான். இயற்கையாகவே வேகமான அவனுடைய நடை, வீதி நடுவிற்கு வந்ததும் இன்னும் சிறிது விரைவாயிற்று. அப்போது அவன் முகம் சிவந்து, கண் கலங்கிற்று. பெருமூச்சு வந்தது. நேரே எதிர்ப்புறமே பார்த்துக் கொண்டு சென்றவன் சட்டென்று இடது புறம் நோக்கினான். ஏதோ அவனால் தடுக்க முடியாத ஒரு காந்தசக்தி அவனுடைய கண்களை அப்படி வலிந்து இழுத்ததாகவே தோன்றியது. அவன் பார்த்த இடத்துக்கு நேரே வாசலில் பந்தல் போட்ட ஒரு வீட்டின் காமரா உள் தெரிந்தது. அதன் ஜன்னலுக்குப் பின்னால் ஒரு பெண்ணின் முகம் காணப்பட்டது. அந்த முகத்தின் கரு விழிகளில் ததும்பி நின்ற ஜலத்துளியை ஊடுருவிக் கொண்டு ஒரு பார்வை கார்காலத்து மின்னலைப் போல் கிளம்பி வந்தது. அதன் வேகத்தைச் சகிக்க முடியாமல் முத்தையன் உடனே தன் கண்களைத் திரும்பிக் கொண்டான். முன்னைவிட விரைவாக நடந்து சென்று வீதியின் கோடியிலிருந்த தன் வீட்டை அடைந்தான்.

     அவன் வீட்டுக்குள் நுழைந்த போது சமையலறை உள்ளிருந்து இனிய பெண் குரலில், பாபநாசம் சிவன் பாடிய குந்தலவராளி கீர்த்தனம் பாடப்படுவது கேட்டது.

     "உன்னைத் துதிக்க அருள்தா - இன்னிசையுடன்
     உன்னைத் துதிக்க அருள்தா!"

     பாட்டைக் கேட்ட முத்தையன் தன்னையறியாமல் உற்சாகத்துடன் தலையை ஆட்டினான். மேற்படி பல்லவியை அடுத்து அநுபல்லவியைத் தானே பாடத்தொடங்கினான்.

     "பொன்னைத் துதித்து மடப் பூவையரைத் துதித்து
     சின்னத்தன மடைந்து சித்தமுங்க கலங்கிடாமல்" (உன்னைத்)

     முத்தையன் இந்த அநுபல்லவியைப் பாடிக் கொண்டே ஈர வேஷ்டியைக் கொடியில் உலர்த்திக் கொண்டிருந்தான். அப்போது சமையலறையின் கதவைச் சற்றே திறந்து கொண்டு ஒரு பெண் நிலைப்படியில் நின்றாள். அவளுக்கு வயது பதினாலு பதினைந்து இருக்கும். முகத்தில் குறுகுறுப்பு. கண்ணிலே விஷமம். அவளைப் பார்த்ததும் முத்தையனின் உடன் பிறந்தவளாயிருக்க வேண்டுமெனத் தெரிந்து கொள்ளலாம்.

     முத்தையன் அநுபல்லவியை நிறுத்தியதும் அவள், "அண்ணா! இந்தப் பாபநாசம் சிவன் ரொம்பப் பொல்லாதவராயிருக்க வேண்டும். அவர் என்ன, எங்களை அப்படித் திட்டுகிறார்? 'மடப்பூவையர்' என்கிறாரே! ஸ்திரீகள் எல்லாருமே மடத்தனமுள்ளவர்களா?" என்று கேட்டாள்.

     முத்தையன் கலகலவென்று நகைத்தான். "இல்லை. அபிராமி! அதற்கு அப்படி அர்த்தமில்லை. 'மடப் பூவையர்' என்றால் 'மடம் உள்ள ஸ்திரீகள்' என்று அர்த்தம். 'மடம்' என்பது ஸ்திரீகளுக்கு வேண்டிய நாலு குணங்களில் ஒன்று. நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு. அதாவது, முக்கியமாக உன்னைப்போல் வாயாடியாயிருக்கக்கூடாது" என்றான்.

     "போ, அண்ணா! நான் வாயாடிதான். நீ வாயேயில்லாத ஊமைப் பெண் ஒருத்தியைக் கட்டிக் கொள்... அது இருக்கட்டும்! ஸ்திரீகள் பேசத்தான் படாதே தவிர, பாடலாமோ கூடாதோ? அதையாவது சொல்லிவிடு" என்றாள் அபிராமி. அதற்கு அவன் பதிலை எதிர்பாராமலே சடக்கென்று சமையலறை உள்ளே போய் மேற்படி கீர்த்தனத்தின் சரணத்தைப் பாடத் தொடங்கினாள்.

     முத்தையன் உலர்ந்த வேஷ்டி கட்டிக் கொண்டு, நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்துக் கொண்டு, கூடத்தில் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடலானான். அபிராமியுடன் சேர்ந்து சரணத்தின் பிற்பகுதியை அவனும் பாடினான். ஆனால், அவன் வாய் பாடிற்றே தவிர மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததென்பதை அவன் முகம் காட்டிற்று.

     பாட்டு முடிந்ததும் அபிராமி மறுபடியும் நிலைப்படியண்டை வந்தாள்.

     "அண்ணா! ஒரு சமாசாரம் கேட்டாயா?" என்றாள்.

     "என்ன சமாசாரம்? எதிர்வீட்டுப் பூனைக்கு நாய்க் குட்டி பிறந்திருக்கிறதே, அந்தச் சமாசாரந்தானே?"

     "இல்லை அண்ணா! கல்யாணிக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாமே; உனக்குத் தெரியுமா என்று தான் கேட்டேன்!"

     முத்தையனுடைய முகத்தில் வேதனையின் அறிகுறி காணப்பட்டது. அவன் சற்றுக் கடுகடுப்போடு, "ஆமாம் அதுதான் இப்போது எனக்குத் தூக்கம் வராமல் கவலையாயிருந்தது. நீ போய் உன் காரியத்தைப் பார்!" என்றான்.

     "மாப்பிள்ளை அப்படி ஒன்றும் கிழடு இல்லையாம், அண்ணா! நாற்பத்தெட்டு வயதுதான் ஆச்சாம்!" என்று சொல்லிவிட்டு, குதித்துக் கொண்டு உள்ளே சென்றாள் அபிராமி.

     ஒரு நிமிஷத்துக்கெல்லாம் மறுபடி அவள் கதவண்டை முகத்தைக் காட்டி, "அண்ணா! மாப்பிள்ளை தலையிலே எண்ணிப் பத்துக் கறுப்புமயிர் இருக்காம். வெள்ளெழுத்து இப்போது தான் வந்திருக்காம். பத்து அடி தூரத்திற்குள் இருந்தால், தடவிப் பார்த்து எருமை மாடா, மனுஷ்யாளா என்று கண்டு பிடிச்சுடுவாராம்" என்று கூறிவிட்டு மறைந்தாள்.

     மறுபடியும் திரும்பி நிலைப்படிக்கு வந்து "ரொம்பப் பணக்கார மாப்பிள்ளையாம், அண்ணா! அவர்கள் வீட்டிலே மரக்காலைப் போட்டுத்தான் பணத்தை அளப்பார்களாம்! மூத்த தாரத்தின் நகைகள் மட்டும் முப்பதினாயிரம் பெறுமாம். அவ்வளவு நகையையும் கல்யாணிக்குத்தான் போடப் போகிறாராம். அடே அப்பா! கல்யாணியின் அழகுக்கு அவ்வளவு நகைகளையும் பூட்டி விட்டால், தூக்கிக் கொண்டே போய்விடாதா?..." என்று அடுக்கிக் கொண்டே போனாள்.

     முத்தையனுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் எரிச்சல் அதிகமாகிக் கொண்டு வந்தது. அவன், "இந்தா அபிராமி! உன்னை யார் இந்தக் கதையெல்லாம் கேட்டார்கள்? உள்ளே போய் அடுப்புக் காரியத்தைப் பார்! நீ இங்கே வம்பு வளர்த்துக் கொண்டு நிற்பாய்! அங்கே சாதம் கூழாய்ப் போய்விடும்" என்றான்.

     "இல்லை, அண்ணா! என்னதான் சொன்னாலும் இந்தக் காலத்திலே பணம் தான் பெரிதாயிருக்கிறது. அவர்கள் மேலே நாம் கோபித்துக் கொண்டு என்ன பண்ணுவது! கல்யாணியை இப்போது உனக்குக் கட்டிக் கொடுத்தால், நம்மால் ஒரு பொன் சரடாவது பண்ணிப் போட முடியுமா? பணக்காரன் பேச்சு பந்தியிலே, ஏழைப் பேச்சு சந்தியிலேதான்..."

     இப்படிப் பேசிக் கொண்டே அபிராமி ஊஞ்சலின் அருகில் வந்துவிட்டாள். முத்தையனால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. சட்டென்று எழுந்திருந்து அபிராமியின் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய்ச் சமையலறைக்குள் தள்ளினான். கதவைத் தடாலென்று சாத்தி நாதாங்கியைப் போட்டு விட்டுத் திரும்பினான். 

by C.Malarvizhi   on 29 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.