|
||||||||||||||||||
இதுவும் அறமே! |
||||||||||||||||||
ஊரை விட்டு வந்த இடத்தில் ஊரடங்கு! விடுதியில் தங்க வேண்டுமே பணம்? வந்தேன் வீதிக்கு அதுதான் வீடு ஏழைக்கு! ஊரில் சிலர் உணவளித்து உதவினர்! ஒரு நாள் மழைக்கு, ஒதுங்க இடமில்லை! நடை பாதை வாழ்க்கை நரகமானது! கடை வாசலில் கிடை போடாதே என்று, படுத்திருந்த இடத்தில் பரப்பினான் எந்திர எண்ணெயை! குளிக்க இடமின்றி குடிக்க நீரின்றி, கந்தலாடையையும் கசக்காமல் கட்டிக்கொண்டு, கழிப்பறை இன்றி கழியும் நாட்கள்! திறந்தவெளிக் கழிப்பிடம் தொற்று நோயின் இருப்பிடம் தெரிந்தும் எனக்குத் தெரிய வில்லை ஒரு வழியும் திக்கற்ற நகரில் திறந்த வெளியுமில்லை தேடியும் பயனில்லை அடைபட்டுப் போனது அந்த வழியும்! பெட்ரோல் பங்க்கிலாவது பயன்படுத்தலாமா கழிப்பறையை? பணியாளர்கள் துரத்தினர் பார்த்தவுடன் பல காத தூரங்களுக்கு சில பச்சை வண்ணக் கழிப்பிடங்கள் பயன்பாடு இன்றி பளபளக்கும் பூட்டுகள்! தூய்மை இந்தியாவா? துயர இந்தியாவா? போக்கற்றவர்கள் எங்கே போவது? என்று விடியும் என்வாழ்வு என்று ஏங்கி ஏழையான என்னைக் கோழையாக்கி மானம் இழந்து மன்றாடவைத்தது உணவுக்காகக் கூட உதவி கேட்கவில்லை கழிப்பறைக்காகக் கெஞ்சினேன் காலில் விழாக்குறையாக உதவ மனமில்லை ஒரு சிலருக்கு பேச்சுலர்ரூம் என்று புறம் தள்ளும் சமூகத்தில் கழிப்பறை தந்து காத்தனர் இளைஞர்கள் கழிப்பறையை பகிர்ந்து கொள்ளும் காலமும் வருமா? ஒவ்வொரு தெருவுக்கும் வருமா ஒரு பொதுக் கழிப்பறை? இல்லை என்ற நிலை இல்லது போகுமா கழிப்பறைக்காவது? உண்ண உணவும் பருக நீரும் கொடுப்பது மட்டுமா அறம்? கழிப்பறையைப் பகிர்வதும் அறம் தானே? பிச்சைக்கார வாழ்க்கை புரியவைத்த பொதுவுடைமை!
--சடகோபன் வேணுகோபால் |
||||||||||||||||||
by Sadagopal Venugopal on 09 May 2020 0 Comments | ||||||||||||||||||
|
||||||||||||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|
|