LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 501 - அரசியல்

Next Kural >

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் - அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும், நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் - உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளி்யப்படும். (அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல், பொருள் உபதையாவது: சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் இவ்வரசன் இவறன் மாலையன் ஆகலின், இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவருக்கும் இயைந்தது, நின் கருத்துஎன்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்பஉபதையாவது, தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும்என்று என்னை விடுத்தாள், அவனைக் கூடுவையாயின் நினக்குப்பேரின்பமே அன்றிப் பெரும்பொருளும் கைகூடும் எனச்சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது, ஒருநிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான்எண்ணற்குக் குழீயினார் என்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம்முற்படச் செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல்ஈண்டை யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை?எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும்திரிபிலன் ஆயவழி, எதிர்காலத்தும் திரிபிலன் எனக்கருத்தளவையால்தெளியப்படும் என்பதாம். இவ்வடநூற் பொருண்மையைஉட்கொண்டு இவர் ஓதியது அறியாது,பிறரெல்லாம் இதனைஉயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத்தோன்றியவாறே உரைத்தார்.)
மணக்குடவர் உரை:
அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான். முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார்.
தேவநேயப் பாவாணர் உரை:
அறம் பொருள் இன்பம் உயிரச்சம் - அரசனால் ஆட்சித்துணையதிகாரியாக அமர்த்தப்படுபவன் அறமும் பொருளும் இன்பமும் உயிர்க்கேடு பற்றிய அச்சமும் ஆகிய ; நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் - நான்கு தேர்திறத்தால் மனப்பான்மை ஆராய்ந்து தெளியப்படுவான். நால்வகைத் தேர்திறத்துள் அறத்தேர்திறமாவது ; அரசன் குருக்களையும் அறவோரையும் ஆராயப்படுவானிடம் மறைவாக அனுப்பி "நம் அரசன் அறவோனன்மையின் அவனை நீக்கிவிட்டு அவனிடத்திற்கு அறவாணனான வேறொருவனை அமர்த்தத் தீர்மானித்துள்ளோம் . இது அனைவர்க்கும் உடன்பாடே , இது பற்றி உன் கருத்தென்ன?" என்று அவன் கருத்தைச் சூளுறவோடு தெரிவிக்கச் செய்தல். பொருள் தேர்திறமாவது ; அரசன் படைத் தலைவனையும் படைமறவரையும் ஆராயப்படுவானிடம் மறைவாக அனுப்பி , "நம் அரசன் கஞ்சனுங் கையழுத்தக்காரனுமா யிருத்தலின் அவனை நீக்கிவிட்டு அவனிடத்திற்குக் கொடையாளியான வேறொருவனை அமர்த்தத் தீர்மானித்துள்ளோம். இது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததே . இது பற்றி உன்கருத்தென்ன?" என்று அவன் கருத்தைச் சூளுறவோடு தெரிவிக்கச் செய்தல். இன்பத் தேர்திறமாவது : அரசன் தன்னுடைய உரிமைச் சுற்றமான மகளிர் கூட்டத்தொடு தொன்றுதொட்டுப் பழகிய ஒருதவ மூதாட்டியை ஆராயப்படுவானிடம் மறைவாக அனுப்பி , "அரசனது உரிமைச் சுற்றத்துள் இன்னாள் உன்னைக் கண்டு கரைகடந்த காதல் கொண்டு உன்னைக் கூட்டுவிக்குமாறு என்னை விடுத்தாள் அவளொடு கூடுவையாயின் , உனக்குப் பேரின்பமும் பெருஞ்செல்வமுங் கிட்டும்" , என்று சொல்லி அவன் விருப்பத்தைச் சூளுறவோடு தெரிவிக்கச் செய்தல். உயிரச்சத் தேர்திறமாவது : அரசன் ஆராயப்படுவான் வீட்டிற்கு ஓர் அமைச்சனைக் கொண்டு ஏதேனுமொரு பொருட்டின் (நிமித்தத்தின்) மேலிட்டுப் பலரை வருவித்து , ஆராயப்படுவானுள்ளிட்ட அனைவரையும் அரசனுக்குக் கேடு சூழக்கூடினாரென்று சிறை செய்து , அவருள் ஒருவனைக்கொண்டு "இவ்வரசன் நம்மைக் கொல்லச் சூழ்கின்றமையால் நாம் அதற்குமுன் அவனைக்கொன்று விட்டு நமக்கேற்ற வேறொருவனை அரசனாக்கிக் கொள்வோம் . இது இங்குள்ள எல்லார்க்கும் இயைந்ததே . இது பற்றி உன்கருத்தென்ன?" என்று அவன் கருத்தைச் சூளுறவோடு தெரிவிக்கச் சொல்லுதல் , இந்நான்கு தேர்விலும் திரியாது தேறினனாயின் எதிர்காலத்திலும் திரியானென்று தெளியப்படுவான் என்பதாம் . தெளிதல் வினைக்கமர்த்தத் தீர்மானித்தல் . தேர்திறத்தைத் தேர்வையெனினும் ஒக்கும். "இவ்வடநூற் பொருண்மையை யுட்கொண்டு இவரோதியதறியாது , பிறரெல்லாம் இதனை உயிரெச்சமெனப் பாடந்திரித்துத் தத்தமக்குத்தோன்றிய வாறேயுரைத்தார்" , என்றுபரிமேலழகர் இங்குந்தம் நஞ்சைக் கக்கியிருக்கின்றார் . மூவேந்தராட்சி படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருவதென்று இவரே வேறோரிடத்திற் கூறியிருந்தும் , பாட்டி பேர்த்தியிடமிருந்து நூல்நூற்கக் கற்றுக்கொண்டாள் என்பது போல , தமிழவேந்தர் பிற்காலத்தாரியரிடம் அரசியல் , திறங்களை அறிந்து கொண்டார் என்பது தன்முரணானதே . இத்தேர் திறம் வடமொழியில் உபதா (upadha) எனப்படும் . அதற்கு மேலிடுதல் என்பதே மூலப்பொருள் . இப்பிற்காலக் குறியீடு காமந்தகீய நீதிசாரம் , பட்டி காவியம் , சிசுபாலவதம் முதலிய நூல்களில் வந்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது . சென்னை நாட்டு வேத்தவை வடமொழிப்புலவராயிருந்த ஒருவர் , வட நூல்களில் விளங்காதிருந்த உபதா என்னும் செய்தி , திருக்குறளைப் படித்தபின்புதான் தமக்கு விளங்கினதாகச் சேலங்கல்லூரியில் ஒரு முறை தாம் ஆற்றிய சொற்பொழிவிற் கூறினார் . பண்டைத் தமிழ்ப் பொருள்நூல்களெல்லாம் அழிக்கப்பட்டு விட்டதனாலும் , உரையாசிரியர் மரபு ஆரிய இனமாக மாறியதினாலுமே , தமிழர் பழந்தமிழ் நாகரிகத்தைச் செவ்வையாய் அறியக் கூடாது போயிற்றென அறிக.
கலைஞர் உரை:
அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.
Translation
How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake, Comports himself? This four-fold test of man will full assurance make.
Explanation
Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.
Transliteration
Aramporul Inpam Uyirachcham Naankin Thirandherindhu Therap Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >