LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- நிர்மலா ராகவன்

அரிசிச் சோறு - நிர்மலா ராகவன்

அம்மா அழைத்தது தனலட்சுமியின் செவிகளில் விழவில்லை. அவ்வளவு தூரம் தொலைகாட்சியில் மூழ்கியிருந்தாள்.

"சாப்பிட வா, தனம்!"மீண்டும் அம்மா அழைத்தாள், சற்று உரக்க.

இப்போது தனலட்சுமிக்குக் கேட்டது. ஆனாலும், காதில் விழாததுபோல் நடித்தாள்.

`எப்போதும் அரிசிச் சோறுதான். ஒரு சப்பாத்தி, பூரி என்று ஏதாவது மாறுதல் உண்டா? கேட்டால், தோள்வலி என்பார்கள் இந்த அம்மா!` என்று  அலுத்துக்கொண்டாள்.
 
சமையலறையிலிருந்து அம்மா வெளிப்பட்டாள்.

சாய்வு நாற்காலியில், சாய்ந்து விழாத குறையாக அமர்ந்து கொண்டிருந்த மகளைப் பார்த்ததும் ஆத்திரம் உண்டாயிற்று.

அந்த  நாற்காலி தனலட்சுமியின் தாத்தாவுடையது. அவர் போய் விட்டார். ஆனால், நாற்காலி இருந்தது, தனலட்சுமியின் ஏகபோக உரிமையாக.

"கரடியாகக் கத்தினேனே! காது செவிடாகிவிட்டதா?"என்று இரைந்தாள்.

"எனக்குப் பசிக்கவில்லை," என்றாள் மகள், தாயின் முகத்தைப் பாராமலேயே.

அவள் மறுத்த காரணம் அம்மாவுக்கும் தொரியும்.வருத்தத்துடன் உள்ளே சென்றாள்.

திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறந்த மகள் என்று அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்ததன் விளைவு.

பொரியவர்களின் பேச்சை அச்சிறுமி கேட்பதற்குப் பதில், அவள் போக்கிற்கு விட வேண்டியதாகி விட்டது.

தமது வேலை முடிந்து, சீருடை அணிந்த அப்பா விடு திரும்பினார்.மகிழுந்து ஓட்டும் உத்தியோகம் அவருக்கு.

"சாப்பிட்டு விட்டாயா, தனம்?"என்றார் அன்புடன்.

"உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன், அப்பா!" இன்னொரு பொய்.

சாப்பிடும்போது, "உன்னைப் பார்த்தால், பதினோறு வயதுப் பெண் மாதிரியாகவா இருக்கிறது! ஒரே ஆண்டு நிறைந்த குழந்தை கூட உன்னைவிட அதிகமாகச் சாப்பிடும். அது போகட்டும், ஒரு நாளைக்கு எட்டு கோப்பை தண்ணீராவது பருக வேண்டுமாம். பலமுறை சொல்லி இருக்கிறேனே! அதையாவது செய்கிறாயா?"என்றார் சற்றுக் கடுமையாக.

தனலட்சுமி தன்னுடைய ஆயுதத்தை வீசினாள்.

தந்தையைப் பார்த்து வசீகரமாகச் சிரித்தாள். தலையை ஆட்டிவைத்தாள்.

அவ்வளவுதான். அவர் மனம் இளகிவிட்டது. இடது கையால் அவளுடைய முதுகை வருடினார்.

"நாளையிலிருந்து ஒரு வாரம்பள்ளி விடுமுறைதானே! உன்னை வெளியூர் அழைத்துப் போகப் போகிறேன்," என்று ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார்.

அவள் ஓயாமல் தொலைகாட்சி பார்த்ததால், சிறு வயதிலேயே மூக்குக்கண்ணாடி அணிய வேண்டி வந்துவிட்டது. காற்றோட்டமான வெளியில் ஓடி விளையாடாததாலும் கண் கெடும் என்று கண் மருத்துவர் கூறியிருந்தார்.எல்லாவற்றையும் யோசித்துதான் அப்பா அந்த முடிவை எடுத்திருந்தார்.

"இப்பொழுது எதற்கு அநாவசியமான செலவு?"என்று அம்மா ஆட்சேபித்தாள்.

சற்றேபயந்து, "அம்மாவையும் அழைத்துப் போகலாம் அப்பா!"என்று சிபாரிசு செய்தாள் தனலட்சுமி.

அப்பா சிரித்தார்.

கடந்த முறை பினாங்கிற்குச் சென்றபோது, புதிய சட்டை, வளையல், மாலை எல்லாம்வாங்கிக் கொடுத்தாரே,  அப்பா! இம்முறையும் ஏதாவது வாங்காமலா போய்விடுவார் என்றெல்லாம் இரவு நெடு நேரம் வரை, இதழ்கள் புன்னகையால் விரிய, யோசித்துக் கொண்டிருந்தாலும், மறுநாள் அதிகாலையிலேயே எழுந்திருந்தாள் தனலட்சுமி.

வழக்கம்போல் அவளை எழுப்ப வந்த அம்மாவிற்கு அதிசயமாக இருந்தது.

"காலை வணக்கம், அம்மா!"என்று தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சினாள் மகள்.

வெளியூர் போனால், பள்ளிக்கூடம் போக வேண்டியதில்லை. அதனால் வீட்டுப் பாடமும் கிடையாது. அது மட்டுமா, `வெங்காயம் அரிந்து கொடு, சிறிய பாத்திரங்களைக் கழுவு,` என்று அம்மா வேலை ஏவ மாட்டார்கள். ஏனெனில், சாப்பாடு எல்லாம் கடைகளில் தானே!  

பினாங்கைத் தாண்டிப் போனார்கள். தனலட்சுமிக்கு ஆர்வம் தாங்கவில்லை.

அவள் கேளாத கேள்விக்கு அப்பா பதிலளித்தார். "நம் நாட்டின் வடக்குக் கோடியில்இருக்கும் மாநிலத்தை நீ பார்த்ததே இல்லையே!"

"கெடாவா!" வாயைப் பிளந்தாள் மகள்.

வழியெங்கிலும் பசுமையான வயல்கள். "கொஞ்சம் நிறுத்துகிறீர்களா அப்பா?" என்று கெஞ்சலும், கொஞ்சலுமாகக் கேட்டாள் தனலட்சுமி.

மறு பேச்சின்றி, அவள் சொல்படி நடந்தார் அப்பா.

"அம்மா!வயலில் அந்த தாத்தா என்னம்மா செய்துகொண்டிருக்கிறார்?"

இதற்கு அப்பாவே பதிலளித்தார். "நீயே போய் கேளு, தனம்!"

அவள் தயங்கியதும், தானும் இறங்கினார்.

வயலில் கணுக்காலுக்குமேல் இருந்த நீரில் ஒரு முதியவர் நின்றிருந்தார். அவரது இடக்கையில் கத்தை கத்தையாக ஏதோ பயிர். ஓரடி உயரம் இருக்கலாம் என்று ஊகித்தாள் தனலட்சுமி.

முதலில் அவருக்கு வணக்கம் தொரிவித்தாள். பள்ளியில் கற்ற நற்பழக்கம் அது. "இது என்ன செடி, தாத்தா?" என்று கேட்ட சிறுமியைப் பார்த்துச் சிரித்தார் அவர்.

"நீ தினமும் சாப்பிடுகிற சோறு எதிலேயிருந்து வருகிறது?"என்று எதிர்க் கேள்வி கேட்டார்.

தனலட்சுமிக்குப் புரிந்தது. "ஓ! நெற்பயிரா?"

"ஆமாம். நான் நாற்று நடுகிறேன்," என்றபடி, ஒரு சிறிய கத்தையை அப்படியே நீரில் வைத்தார். அது சாயாமல், அல்லது ஓடாமல் அதே இடத்தில் நின்றது தனலட்சுமிக்கு ஆச்சாரியத்தை விளைவித்தது.

"நம் நாட்டில வெப்பம் அதிகம். இல்லையா? அதனால் அரிசிச் சோறுதான் உகந்தது. அதிக சக்தி கொடுக்கும்,"  என்று அன்புடன் விளக்கியவாரிடம், "சப்பாத்தி?" என்று வினவினாள்.

முதியவர் சிரித்தார்."அது கோதுமைப் பண்டம். அதிலும் வெப்பம்தான். ஆகையால், குளிர்ச்சியான நாடுகளில் அதைச் சாப்பிடுவார்கள்".

திரும்பப் போகும் வழியில், "அந்த தாத்தாவின் முதுகு ஏன் அப்படி வளைந்திருக்கிறது?"என்று மெல்லக் கேட்டாள் தனலட்சுமி.

"நீயும், நானும், நம்மைப் போன்ற பலரும் சாப்பிடுவதற்காக அவர் கடும் வெயிலில் எப்படி உழைக்கிறார், பார்! அதிக நேரம் குனிந்தே வேலை செய்வதால், முதுகுத் தண்டு வளைந்துவிட்டது," என்று விளக்கினார்.

"பாவம்!" என்ற தனலட்சுமிக்கு ஏதோ உறைத்தது. தன் முதுகும் வளைந்திருக்கிறது என்று ஆசிரியை தினமும் குறைகூறுகிறார். முதுகில் தட்டி, "நிமிர்," என்றுமிரட்டுகிறார்.

தான் அப்படி என்ன வேலை செய்து கிழிக்கிறோம்!

வீடு திரும்பியதும், ஒரு கனமான புத்தகத்தைத் தலையில் வைத்துக்கொண்டு, நடந்து பழக வேண்டும். அது விழாமல் இருக்கவென நிமிர்ந்து நடந்தால், நாளடைவில் முதுகு நேராகிவிடும் என்று ஆசிரியை அறிவுறுத்தவில்லை?

அன்றிரவும் வீட்டில் அம்மா அரிசிச் சோறுதான் சமைத்திருந்தாள்.

சாப்பிடுகையில், வயலில் பார்த்த தாத்தாவின் முதுகே தனலட்சுமியின் நினைவில் நின்றது.

ஒரு பருக்கைகூட விடாது உண்ட மகளை ஆச்சாரியத்துடன் பார்த்தாள் தாய்.

 

- நிர்மலா ராகவன்

by Swathi   on 12 Jan 2015  0 Comments
Tags: நிர்மலா ராகவன்   விவசாயம்   அரிசிச் சோறு   Arisi Soru           
 தொடர்புடையவை-Related Articles
விவசாயம் பேசுவோம் -4 : திரு.சாவித்திரி  கண்ணன் (Let's Talk Agriculture - Thiru.Savithri Kannan) விவசாயம் பேசுவோம் -4 : திரு.சாவித்திரி கண்ணன் (Let's Talk Agriculture - Thiru.Savithri Kannan)
இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு உதவ இவர்களும் ரெடி!! இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு உதவ இவர்களும் ரெடி!!
இயற்கை வேளாண்மையில் சாதித்து வரும் முதல் தலைமுறை விவசாயி செந்தில்குமார் !! இயற்கை வேளாண்மையில் சாதித்து வரும் முதல் தலைமுறை விவசாயி செந்தில்குமார் !!
கண்ணாடி முன் - நிர்மலா ராகவன் கண்ணாடி முன் - நிர்மலா ராகவன்
அய்யா...அய்யா..- பழநிபாரதி அய்யா...அய்யா..- பழநிபாரதி
மானசீகக் காதல் - நிர்மலா ராகவன் மானசீகக் காதல் - நிர்மலா ராகவன்
மோகம் - நிர்மலா ராகவன் மோகம் - நிர்மலா ராகவன்
தனக்கு வரும்போது - நிர்மலா ராகவன் தனக்கு வரும்போது - நிர்மலா ராகவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.