|
|||||
237 கோடி ரூபாய்க்கு ஏலம் போன நடிகை ஜூடி கார்லேண்ட் காலணிகள் |
|||||
புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான 'தி விசார்ட் ஆஃப் ஓஸ்'-இல் (The Wizard of Oz) நடிகை ஜூடி கார்லேண்ட் அணிந்திருந்த ஒரு ஜோடி ரூபி சிவப்பு காலணிகள், அமெரிக்காவில் நடந்த ஒரு ஏலத்தில் 28 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 237 கோடி ரூபாய்) விற்கப்பட்டுள்ளன. கடந்த 1939இல் வெளியான இந்தத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதில், நான்கு ஜோடி காலணிகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அதில், ஒரு ஜோடி புகழ்பெற்ற ஹீல்ஸ் காலணிகள் தான் சமீபத்தில் ஏலமிடப்பட்டன.
இதற்கான ஆன்லைன் ஏலம் ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. இந்தக் காலணிகளை ஏலம் விட்ட ஹெரிட்டேஜ் ஏல நிறுவனம், காலணிகளுக்குச் சுமார் 25 கோடி ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் சுமார் 237 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
ஏலத்தில் இதுவரை விற்கப்பட்ட திரைப்படங்கள் தொடர்பான பழங்காலப் பொருட்களில், அதிக விலைக்கு ஏலம் போனது இந்தக் காலணிகள் தான் என்று ஹெரிட்டேஜ் ஏல நிறுவனம் கூறுகிறது.
பிரபலப் பாப் பாடகி அரியானா கிராண்டே நடித்த 'விக்ட்' (Wicked) திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படம், 'தி விசார்ட் ஆஃப் ஓஸ்' கதையின் முந்தைய பாகம். எனவே, இத்திரைப்படம் வெளியான பிறகு, 'தி விசார்ட் ஆஃப் ஓஸ்' திரைப்படம் குறித்து மீண்டும் பேசப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காலணிகள் ஏலம் விடப்பட்டன.
'தி விசார்ட் ஆஃப் ஓஸ்' திரைப்படம் 1939ஆம் ஆண்டில் வெளியானபோது, அதில் நடித்த நடிகை ஜூடி கார்லேண்டுக்கு அப்போது பதினாறு வயது தான். பிரபல ஊடகமான 'வெரைட்டி' வெளியிட்ட 'உலகின் 100 சிறந்த திரைப்படங்கள்' பட்டியலில், இந்தத் திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தத் திரைப்படம், 1900ஆம் ஆண்டில் எல்.பிராங்க் பாம் எழுதிய 'தி வொண்டர்ஃபுல் விசார்ட் ஆஃப் ஓஸ்' என்ற குழந்தைகள் கதைப் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
புத்தகத்தின் கதைப்படி இந்தக் காலணிகள் வெள்ளியால் உருவானவை என்றாலும், திரைப்படக்குழுவினர் 'டெக்னிகலர்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நினைத்ததால், படத்தில் சிவப்பு காலணிகள் காட்சிப்படுத்தப்பட்டன. திரைப்படம் மற்றும் புத்தகம் இரண்டிலும், இந்தக் காலணிகளை வைத்து ஒரு முக்கிய காட்சி உள்ளது. அதில் கதையின் நாயகி டோரத்தி, 'ஓஸ்' (Oz) எனப்படும் மந்திர உலகத்தை விட்டு வெளியேறி, தனது வீட்டிற்குத் திரும்புவதற்காக, தனது காலணிகளை மூன்று முறை அழுத்தி, "வீட்டைப் போல வேறு இடம் ஏதும் இல்லை" என்று மீண்டும் மீண்டும் கூறுவது போல ஒரு காட்சி உள்ளது.
படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட பல ஜோடி காலணிகளில், 4 மட்டுமே இன்னும் அப்படியே உள்ளன. அதில் ஒன்று 'ஸ்மித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகத்தில்' காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
|
|||||
by hemavathi on 09 Dec 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|