|
||||||||||
அறிஞர் அண்ணாவின் பெயரில் அமெரிக்காவில் தமிழ்த் துறை |
||||||||||
நாவலர் நெடுஞ்செழியன் பெயரால், 'நாவலர் தகைசால் விரு'தினை நிறுவியிருப்பவர் டாக்டர் விஜய் ஜானகிராமன். அமெரிக்க வாழ் தமிழரும் இதயநல மருத்துவருமான இவர், ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைந்திட, 'ஹாவர்டு தமிழ் இருக்கை அமைப்'பைத் தொடங்கி, தொடக்க நன்கொடையாக ரூபாய் மூன்று கோடி வழங்கியவர். ஹாவர்டு, டொரண்டோவைத் தொடர்ந்து உலகின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கை அமைக்கும் பணியில் கரம்கொடுக்க, தன் பணி ஓய்வு காலத்தைச் செலவிட்டுவருகிறார். இந்நிலையில், சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெறும் 'நாவலர் தகைசால் விருது விழா'வில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தவருடன் உரையாடியதிலிருந்து... ஹார்வர்டு, டொரண்டோ பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இருக்கைகளுக்குத் தலைமைப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டார்களா? ஹார்வர்டு பல்கலைக்கழகம், தமிழ் இருக்கைக்கான நிரந்தரப் பேராசிரியர் தேர்வுப் பணியை முடித்துள்ளது. கரோனா காலம் காரணமாகப் பணிகள் முடங்கியதால் விரைவில் அதிகாரபூர்வமாகப் பேராசிரியர் தேர்வை அறிவிப்பார்கள். டொரண்டோ தமிழ் இருக்கைக்கான பேராசிரியர் தேர்வு தாமதமாகிப்போனதற்கும் கரோனாவால் ஏற்பட்ட சுணக்கம்தான் காரணம். இதுபோன்ற உலகப் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கென்று பாரம்பரிய நடைமுறைகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்கின்றன. தேர்வுத் தாமதத்துக்கு அவையும் காரணம்.
ஹார்வர்டில் இருக்கை அமைந்த பிறகு டொரண்டோவில் இருக்கை அமைந்தது. அடுத்து லண்டனில் ஒன்று அமைகிறது. இப்படி உலகின் பல பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கை அமைக்கும் பணிகள் பெரும் தன்னெழுச்சியுடன் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. கடந்த 25 ஆண்டுகளாகத் தமிழ் பயிற்றுவிக்கும் துறை அங்கே செயல்பட்டுவருகிறது. இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் இத்துறையின் பேராசியராக இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். தற்போது மதுரையிலிருந்து சென்று இத்துறையில் தமிழ் பயிற்றுவித்துவரும் பாரதி ராஜுவை முழுநேர விரிவுரையாளராக அமர்த்துவதற்குப் பல்கலைக்கழகத்திடம் நிதி இல்லை; துறையை மூடும் நிலை என்றார்கள். நாங்கள் ஒரு மில்லியன் டாலர் நிரந்தர வைப்பு நிதி கொடுக்கிறோம்; ஆனால், துறையின் பெயரை ‘அறிஞர் அண்ணா எண்டோவ்மென்ட் ஃபார் தமிழ் ஸ்டடீஸ்’ என்று மாற்றித்தர வேண்டும் என்று துறைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தோம். ஒப்புக்கொண்டு உத்தரவும் பிறப்பித்துவிட்டார்கள். இதை ‘இந்து தமிழ் திசை’ வாசகர்கள் வழியாக அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். நம் மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்த அறிஞர் அண்ணாவை வரும் தலைமுறைகள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும் ஹார்வர்டுக்கு முன்பே தொடங்கப்பட்ட இத்துறை காப்பற்றப்படவும் தமிழ்நாடு அரசின் உதவியைக் கேட்டு முதல்வரைச் சந்திக்க இருக்கிறேன். அதேபோல் மூடுகிற நிலைக்கு வந்துவிட்ட ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் இயங்கிவந்த தமிழ்த் துறைக்கு, தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரூ 1.20 கோடி கொடுத்து அதைத் தடுத்திருக்கிறது. இப்படிப் பல முயற்சிகள் உத்வேகம் பெற்றிருக்கின்றன. ‘நாவலர் தகைசால் விருது’ நிறுவப்பட்டதன் நோக்கம் என்ன? நாவலரின் நூற்றாண்டையொட்டி, ‘நாவலர் தலைசால் விரு’தை ஒரு சர்வதேச விருதாக அமைத்திருக்கிறேன். அதற்கு எனக்கு உத்வேகம் அளித்தது, ‘கனடா - தமிழ் இலக்கியத் தோட்டம்’ அமைப்பு. அவர்கள் பல முக்கிய விருதுகளை வழங்கினாலும், அவற்றில் ‘இயல் விருது’ வாழ்நாள் இலக்கியச் சாதனைக்காக வழங்கப்படும் உயரிய விருது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் முன்னத்தி ஏராக இருந்து உலகத் தமிழ் எழுத்தாளர்களையெல்லாம் ஒருங்கிணைக்கும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் எனக்கு பெரும் நம்பிக்கையை அளித்தன. அதனால், டொரண்டோவில் தமிழ் இருக்கை அமைந்த பிறகு, இந்த விருதை ‘கனடா இலக்கியத் தோட்டம்’ அமைப்பும் டொரண்டோ பல்லைக்கழகத் தமிழ் இருக்கையும் இணைந்து வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். தமிழின் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் வாழ்நாளில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய தமிழறிஞர் ஒருவரை ஆண்டுதோறும் தேர்வுசெய்து வழங்கப்படும் இவ்விருது, ரூபாய் 2 லட்சம் பண முடிப்புடன் கூடிய விருது கேடயமும் கொண்டது. விருதுபெறும் தமிழறிஞர் டொரண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வில் விருது பெறுவதுடன், தமிழ் வளர்ச்சியை முன்னிறுத்தி அவர் விரும்பும் தலைப்பில் ‘நாவலர் நினைவுச் சொற்பொழி’வை நிகழ்த்துவார். அது அனைத்து வடிவங்களிலும் ஆவணப்படுத்தப்படும். ஆனால், தற்போது இவ்விருது விழா சென்னையில் நடைபெற என்ன காரணம்? இன்னும் டொரண்டோ தமிழ் இருக்கைக்குத் தலைமைப் பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்படாததால், 2020, 2021-ம் ஆண்டுகளுக்கான விருது நடுவர் குழுவால் அறிவிக்கப்பட்டுவிட்டது. கரோனா பெருந்தொற்றால் தாமதமான இவ்விழாவை நடத்தும் பொறுப்பை வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தரும், ‘நாவலர் - செழியன் அறக்கட்டளை’யின் நிறுவனருமான கோ.விசுவநாதன் ஏற்றுக்கொண்டு தலைமையேற்று நடத்துகிறார். அவர், நாவலராலும் அவரது தம்பி இரா.செழியனாலும் அரசியல் அரங்கில் பயிற்றுவிக்கப்பட்டவர். முனைவர் மறைமலை இலக்குவனாரும் கவிஞர் ஈரோடு தமிழன்பனும் விருது பெறுவதும் விருதுகளை கோ.விசுவநாதன் வழங்குவதையும்விட 2020, 2021-ஆண்டுகளுக்கான விருதுகளுக்குச் சிறப்பு சேர்க்க முடியாது. |
||||||||||
|
||||||||||
|
||||||||||
|
||||||||||
|
||||||||||
|
||||||||||
by Swathi on 10 Mar 2025 0 Comments | ||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|