LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 847 - நட்பியல்

Next Kural >

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அருமறை சோரும் அறிவிலான் - பெறுதற்கு அரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - அவ்வுறுதி அறியாமையால் தானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்து கொள்ளும். ('சோரும்' என இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. மிக்க வருத்தம் - பொறுத்தற்கு அரிய துன்பங்கள். இனி அருமறை சோரும் என்பதற்குப் பிறரெல்லாம் 'உள்ளத்து அடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்கு உரைக்கும்' என்று உரைத்தார். அது பேணாமை என்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மையன்மை அறிக.)
மணக்குடவர் உரை:
அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன். சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அருமறை சோரும் அறிவு இலான்- பிறரிடம் சொல்லக் கூடாத உயிர்நாடியான மருமச் செய்திகளைத் தன் வாய்காவாது வெளிவிட்டுவிடும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - தானே தனக்குப் பெருங்கேட்டை வருவித்துக் கொள்வான். இக்குறட்கு, 'பெருதற்கரிய உபதேசப் பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன், அவ்வுறுதி யறியாமையாற் றானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்துகொள்ளும்". என்று தொடருரையும் , "இனி 'இருமறை சோரு' மென்பதற்குப் பிறரெல்லாம் உள்ளத்தடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்குரைக்கு மென்றுரைத்தார்; அதுபேணாமை யென்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மை யன்மை யறிக." என்று சிறப்புரையும் வரைந்தார் பரிமேலழகர். சமய குரவன் செவியறிவுறுத்தும் மந்திரப் பொருளைப் பண்பட்ட மாணவன் பெறுதல் அறத்துப்பாலில் துறவறவியலில் 'மெய்யுணர்தல்' என்னும் அதிகாரத்திற்கு ஏற்குமேயன்றி,பொருளீட்டுதல் பற்றிய பொருட்பாலில் எவ்வதிகாரத்திற்கும் ஏற்காது. சமயத்துறையும் மெய்ப்பொருளியலும் பற்றியவுரையே சாலச்சிறந்ததென்பது,பரிமேலழகர் கடைப்பிடித்த நெறிமுறையாத் தெரிகின்றது. 833 ஆம் குறளுரையில்,"பேணவேண்டுமவை; குடிப்பிறப்பு, கல்வி ,ஒழுக்க முதலியன. "என்று அவரே உரைத்தார் . அவை வெளிப்படையாகப் பேணவேண்டிய பண்பாட்டுக் கூறுகளே யன்றி, மறைவாக மனத்துள் வைத்துக் காக்கும் மருமச் செய்திகளல்ல. ஒருகால் மறை என்பதை மறைநூற் பொருளென்று பரிமேலழகர் கொண்டார் போலும். "அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான்." (குறள்.1076.) என்பதிற் குறித்தது பிறரைப் பற்றிய மறையென்றும் ,இங்குக் குறித்தது தன்னைப் பற்றிய மறையென்றும், வேறுபாடறிக. வெளிப்படின் பதவியும் செல்வமும் உயிரும் இழத்தற்குக் கரணியமாகும் மறைவுச் செய்திகளையே 'அருமறை' என்றார். அவை சிமிசோன் தன் மதவலிக்குக் கரணியமான பிறவிச்சடை நிலைமையைத் தெலீலாள் என்னும் பொதுமகளிடம் வெளிபடுத்தியது போல்வன . 'அருமறை சோரும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இனி, ஒரு சொற்றன்மைப்பட்ட கூட்டுச்சொல் எனினுமாம். அருமறை சோர்தல் அறிந்து சோர்வதும் அறியாது சோர்வதும் என இருவகைப்படும் . சிமிசோன் அறிந்து சோர்ந்தான்.
கலைஞர் உரை:
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.
Translation
From out his soul who lets the mystic teachings die, Entails upon himself abiding misery.
Explanation
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.
Transliteration
Arumarai Sorum Arivilaan Seyyum Perumirai Thaane Thanakku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >