|
||||||||
17 மணி நேர திக் திக் பயணம் - பத்திரமாகப் பூமி திரும்பினர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் |
||||||||
![]() சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாகத் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாகப் பூமிக்குத் திரும்பினார். இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.
விண்கலத்திலிருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேரப் பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார்.
இந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல மறு நுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கிப் பயணித்தது. பிறகு பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, நீரில் இறங்கி, மிதந்தது.
இதற்குப் பிறகு இந்த நான்கு விண்வெளி வீரர்களும் அமெரிக்க நேரப்படி இரவு 11:19 மணிக்கு ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின் எலிங்டன் ஃபீல்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
அவர்கள் வந்த விண்கலம் ஸ்பிளாஷ்டவுன் (splashdown) என்ற செயல்முறையின் மூலம் கடல் பகுதியில் இறங்கியது. அதாவது, விண்கலம் இறங்கும்போது கடலில் உள்ள தண்ணீர் மிகப்பெரும் அளவில் தெறிக்கும் என்பதால், அந்தச் செயல்முறையை 'ஸ்பிளாஷ்டவுன்' என்கின்றனர். சற்றுத் தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டனர்.
துண்டிக்கப்பட்ட தொடர்பு
டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது சற்று நேரத்துக்குக் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது வழக்கமான நடைமுறையாகும். அப்போது விண்கலத்தைச் சுற்றி 1927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. டிராகன் விண்கலத்தின் வெப்பத்தடுப்பு ஓடுகள் உள்ளே இருந்த விண்வெளி வீரர்களைப் பாதுகாத்தன. சிறிது நேரத்துக்குப் பிறகு தகவல் தொடர்பு மீட்கப்பட்டு கடலில் இறங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தன்னிச்சையாக விண்கலம் பூமியை நோக்கி விரைந்தது.
அப்போது விண்கலம் சுமார் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. பின்னர் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கும் பாரசூட்கள் விரிந்தன. நாசாவின் படக்கருவிகளில் இந்த நிகழ்வுகள் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு கடலில் வந்து விழுந்த விண்கலத்தை, நாசாவின் மீட்புப் படகுகள் பத்திரமாகக் கப்பலுக்கு எடுத்து வந்தன.
நீந்திய டால்பின்கள்
விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றிப் பல டால்பின்கள் மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தது நாசாவின் படக்கருவிகள் காட்டின. அது மீட்புக் குழுவுக்குக் கிடைத்த பெருமை என்று நாசா விஞ்ஞானிகள் நகைச்சுவையாகக் கூறினர்.
கடலில் இருந்து விண்கலம் மீட்புப் படகில் ஏற்றப்பட்டபோது அதில் இருந்த கடல் நீர் கொப்பளித்து வெளியேறியது.
விண்வெளியில் என்ன நடந்தது?
பயணம் தொடங்குவதற்குச் சில நிமிடங்கள் முன், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹாக் மற்றும் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் தங்கள் பொருட்களுடன் இருக்கைகளில் தயாராகும் காணொளியை நாசா வெளியிட்டது.
அதற்கு முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்களுடன் உடன் பணிபுரிந்த மற்றும் புதிதாக இணைந்துள்ள வீரர்களுக்கு அவர்கள் விடை கொடுத்தனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் தத்தமது இருக்கைகளில் அமர்ந்து, தயாரானதும் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. நாசா திட்டமிட்டிருந்தபடி, இந்திய நேரப்படி சரியாகக் காலை 10.35 மணிக்குச் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் பிரிந்தது.
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் அந்த விண்கலம் இந்திய நேரப்படி புதன்கிழமை (19/03/2025) அதிகாலை சுமார் 3.30 மணிக்குப் பூமியை வந்தடைந்தது. இதற்கான நேரலையை இந்திய நேரப்படி புதன்கிழமை (19/03/2025) அதிகாலை சுமார் 2.15 மணியளவில் நாசா தொடங்கியது.
விண்வெளியில் என்ன செய்தார்கள்?
விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே அதிக மணிநேரம் செலவழித்த பெண் ஆகிய சாதனைகளை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். இது சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளிப் பயணம். மூன்று பயணத்திலும் சேர்த்து மொத்தமாக ஒன்பது முறை விண்வெளியில் நடந்துள்ளார் சுனிதா. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்களை அவர் விண்வெளி நடையில் செலவிட்டுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தது, கிறிஸ்துமஸ் கொண்டாடியது, ஏற்கனவே வீட்டில் செலவிடத் திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸுக்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பியது, செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியது எனப் பலவற்றையும் அவர்கள் சாதித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சுனிதா, எதிர்காலத்தில் நீண்ட நாள்கள் விண்வெளிப் பயணம் மேற்கொண்டால் விண்வெளியில் பயிர்த் தொழில் செய்து உணவை உற்பத்தி செய்ய முடியுமா என ஆய்வு செய்ய லெட்யுஸ் எனப்படும் கீரைச் செடியை வளர்த்து ஈர்ப்பு விசையின் இழுவை அற்ற விண்வெளியில் தாவர வளர்ச்சி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஆவி பறக்கும் சூடான உணவிலிருந்தும் வியர்வை மூலம் ஆவியாகும் நீர் விண்வெளி நிலையத்தின் காற்றில் கலந்துவிடும். இந்த நீரைப் பிரித்து எடுக்கும் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்தக் கருவியைப் பரிசோதனை செய்துபார்த்தார். ரோடியம் உயிரி உற்பத்திப் பரிசோதனையில் விண்வெளி நிலையத்தில் ஈஸ்ட் போன்ற பாக்டீரியா வளர்ச்சி குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கு கொண்டார். விண்வெளி நிலையத்தின் உள்ளே சுவர்களில் வாழும் நுண்ணுயிரிகளை இனம் கண்டு சோதனை செய்தார்.
பதப்படுத்தி நீண்ட நாள்கள் வைக்கப்பட்ட உணவில் ஊட்டம் குறையும். ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி உணவில் உள்ள உயிர்ச்சத்துகள் போன்ற ஊட்டச் சத்துகளைத் தயாரிக்கும் உயிரித் தொழில்நுட்ப ஆய்வுகளில் ஈடுபட்டார். இப்படிச் சிறிதும் பெரிதுமாக 150-க்கும் மேற்பட்ட அறிவியல் தொழில்நுட்பப் பரிசோதனைகளில் சுமார் 900 மணி நேர ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்.
அடுத்து என்ன?
9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் விரைவில் டெக்ஸாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அங்கு அவர்கள் மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவார்கள்.
நீண்ட கால விண்வெளிப் பயணங்கள் உடலைப் பாதிக்கின்றன, விண்வெளி வீரர்கள் எலும்பு அடர்த்தியை இழந்து தசை இழப்பைச் சந்திக்கின்றனர். இரத்த ஓட்டமும் பாதிக்கப்படுகிறது. கண் பார்வையும் பாதிக்கப்படலாம்.
உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகலாம், எனவே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரின் உடலும் புவி ஈர்ப்பு விசையுடன் வாழ்வதற்கு மீண்டும் பழகுவதால் அவர்களுக்கு விரிவான உடற்பயிற்சி முறை வழங்கப்படும்.
யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?
சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது.
1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா. அவருடைய அப்பா தீபக் பாண்டியா, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். சுனிதாவின் அம்மா போனி பாண்டியா. சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவரும் ஒரு விமானியாகப் பணியாற்றியவர். தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராகத் தேர்வு செய்தது. சுனிதா அமெரிக்கக் கடற்படை கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு திறமையான போர் விமானி. இதுவரை 30 வகையான விமானங்களை இயக்கியுள்ளார். அதில் அவர் 2700 மணி நேரம் பறந்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ் கடற்படையில் விமானியாகத் தன்னுடைய பணியைத் துவங்கினார்.
இது மூன்றாவது முறை
டிசம்பர் 9, 2006-ல் பணிக்குழு 14-ன் உறுப்பினராக விண்வெளிக்குச் சென்று விண்வெளி நிலையத்தில் சேர்ந்தார். பூமிக்குத் திரும்பாமல் அடுத்த பணிக்குழு 15-இலும் நீடித்துப் பங்கெடுத்து மொத்தம் 192 நாள்கள் விண்வெளியில் பணியாற்றி 2007 ஜூன் 22-ல் பூமிக்குத் திரும்பினார்.
இரண்டாவது முறையாக மறுபடி பணிக்குழு 32-ன் பகுதியாக 2012 ஜூலை 15இல் விண்வெளி நிலையத்துக்குப் பயணம் செய்த சுனிதா, மறுபடி அடுத்த பணிக்குழு 33-இலும் இணைந்து 2012 நவம்பர் 19 அன்று பூமிக்குத் திரும்பினார்.
இதன் பின்னர் போயிங், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் விண்கலங்களை ஓட்டும் பயிற்சியைப் பெற்றார். இதன் நீட்சியாகத்தான் ஸ்டார்லைனர் விண்கலத்தைச் சோதனையோட்டம் செய்ய மூன்றாவது முறையாக 59 வயதான சுனிதா கடந்த ஜூன் 2024இல் விண்வெளிக்குச் சென்றார்.
நான்கு விண்கலங்களில் பயணித்தவர்
இதுவரை விண்வெளி வீரர், வீராங்கனைகள் அதிகபட்சமாக இரண்டு வெவ்வேறு விண்கலங்களில் மட்டுமே பயணம் செய்துள்ளனர். ஆனால் சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் ஷட்டில், சோயூஸ், போயிங் ஸ்டார்லைனர், ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் ஆகிய நான்கு வெவ்வேறு விண்கலங்களில் பயணம் செய்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்.
|
||||||||
by hemavathi on 19 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|