LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்

முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் தள்ளுவண்டியில் ஏறியமர்ந்து ஒரு ரூபா கொடுத்து வீட்டுக்குப் போன அதே பேருந்து நிலையத்தில்தான் இன்று கையில் இரண்டு லட்சம் பணத்தோடு நின்றிருந்தார் இனியவேந்தன்.

 

‘தள்ளுவண்டி ஒரு மேல் கீழ் விகிதாச்சாரத்தை வளர்க்குதே, அதென்ன அவன் மாடு மாதிரி இழுத்துட்டுப்போவான்’ நாம சொகுசா உட்கார்ந்து வண்டியில போவது? மனிதமின்னும் செத்துப்போகாது? இப்படி மனுசனுக்குள்ளையே மனுசன் பெரியவன் சின்னவன்னுப் பார்த்தால் அது மனித உறவுச்சங்கிலியை வேகமாய் அறுத்துவிடுமே, பிறகு சுயநலம் மட்டும்தான் பெருசா தெரியுமென்பார் இனியவேந்தன்.

 

“அப்படிப் பார்த்தா அப்புறம் அவன் குடும்பம் எப்படி சார் ஓடும்? அவன் பிழைக்கவேண்டாமா?” என்று கேட்டால், “அச்சச்சோ அதுவேற இருக்கா, சரி வா அப்போ அதுலையே போலாமென்பார். ஆனாலும் அந்த தள்ளுவண்டிக் காரார் இழுத்துக்கொண்டுபோய் வீட்டருகே அவரை விட்டதும், இறங்கி வியர்வைசொட்டும் அந்த வயதான மனிதரைப் பார்க்கையில், ச்ச இதுக்கு நாமலே நடந்துவந்திருக்கலாம்’ இதென்ன நமக்கு பணமிருக்கேன்ற மேதாவித் தனம்தானே என்று மீண்டும் வருந்துவார்.

இனியவேந்தனுக்கு ஒரு ஐம்பத்தைந்தைத் தாண்டி வயதிருக்கும். தள்ளாடமாட்டார். தடுமாற மாட்டார். நிதானமாக பேசுபவர். பத்து காசுன்னா கூட தனக்காக செலவு செய்ய அஞ்சுவார். நடுத்தரத்தைக் கூட எட்டாத ஒரு விளிம்புநிலை மனிதர். சமூகம் நாடு அது இதுன்னு பெரிய அக்கறையெல்லாம் அவருக்கில்லை. அன்றைய ஒருநாள் பொழுது வீட்டில் அரிசி இல்லையென்று பேச்சில்லாமல்போனால் அவருக்கது பெரிது. அவரை பொறுத்தவரை தான் சரியா இருக்கணும். தான் சரியாயிருந்தா எல்லாம் சரியாகும். தன்னை முதல்ல சரி செய். தன்னை யார்னு புரிந்திரு. தனது பலம் என்னன்னு தனக்கு தெரிந்திருந்தால்தான் பிறருக்கு மத்தியில் நான் யார், என்னால் வேறென்ன செய்ய இயலும், எப்படி நடந்துக்கொள்ள முடியும், எதுவரை என்னால் எட்டித்தொட முடியுமென்றெல்லாம் ஒரு வரம்பு வைத்துக்கொள்ள சாத்தியப்படுமென்றுச் சிந்திப்பவர்.

அதுபோல் தனது தவறுகளையும், ஆசைபடும் மனசையும்கூட அறிந்திருக்க வேண்டுமென்பார்; அப்போதுதான் அந்தந்த இடம் பொருத்து; தன்னை எடைபோட்டுக்கொள்ள முடியும், நான் எவ்வளவு கீழானவன் என்பதையறிந்துக்கொள்ள முடியுமென்பார். இது தவறுன்னா அதை ஏன் நான் செய்யுறேன், அப்போ தவறு செய்யாம எப்படி வாழறது, தன்னாலேயே முடியாதபட்சத்தில் பிறரை எப்படி நான் நல்லவராக எதிர்ப்பார்க்க இயலும்’ என நல்லதும் கெட்டதுமாய் தன்னை அலசிப் பார்த்துக்கறது தான் அவருக்கு முக்கியம். யார் எப்படியோ அவரவருக்குப் புரிந்த வாழ்க்கையை அவரவர் வாழ்ந்துட்டுபோகட்டும். எனக்கு நான் சரியா வாழ்ந்தேன்னா அது போதுமிந்த பிறப்புக்கு என்பார்.

எப்படியோ தள்ளுவண்டி, மாட்டுவண்டி, குதிரைவண்டின்னு எல்லாம் மாறி, சைக்கிள் ரிக்ஷா மாறி, ஆட்டோ' சேர்ஆட்டோ' மேஜிக் ஆட்டோன்னு' சென்னை தனது ஆடையை வெவ்வேறு பரிமாணங்களில் வேறுவேறாக உருவி உருவி தூர எறிந்துவிட்டு வேறு வேறான பல வண்ணஆடைகளோடு மாறிக் கொண்டிருக்க, தனது முப்பத்தைந்து வருட உழைப்பை கணக்குத் தீர்த்து ஒரு சிறிய நிறுவனம் தந்த ரெண்டு லட்சத்தை வாங்கி ஒரு பாலிதீன் கவருக்குள் சுற்றிவைத்துக்கொண்டு எப்போதும் நிற்கும் அதே பேருந்து நிலையத்தில் வந்துநின்றார்.

கணக்கெல்லாம் பார்த்து வெளிய வரவே மணி எட்டாயிப்போச்சு, ஆபிஸ் மூடி வெளியே வந்தா பஸ் ஸ்டாப். பற்றவாக்கம் போனோம் பஸ் வரும்னு காத்துநின்னா வேலையாகாது, கூட்டம் தள்ளிகிட்டு வரும். அதும் பகலெல்லாம் ஆபிஸ்ல உழைக்கிறது, தெருவில் நின்னு மண்ணு அல்லுறதுகூட பெரிய கஷ்டமில்லை, அந்த எல்லோரையும் மொத்தமா போட்டு ஒரு பெட்டிக்குள்ள அடச்சி இடிச்சு நெருக்கி குலுக்கி குலுக்கி ஊருக்குள்ளக் கொண்டுபோய் சேர்ப்பதற்குள்ள பாதி சீவன் போய்டும். இன்னைக்குன்னு பார்த்து கையில் இவ்வளோ பெரிய பணம் வேற இருக்கு.

வேலைக்குபோய் முதல்ல வருமானம்னு அவருக்கு கிடைத்தது வெறும் பத்து ரூபா தான். பிறகந்த பத்துருபா முப்பது ரூவா ஆயி, பின்ன அது எழுபத்தஞ்சி இருநூறு ஆயிரம் இரண்டாயிரம் மூனாயிரம்னு ஏறி ஏறி என் வயதை இளமையை மிதித்துக்கொண்டு எனது திறமையை உழைப்பையெல்லாம் காசாக்கிக்கொண்டு என் வீட்டுக்கு சோறுபோட்ட ஒரு முப்பத்தைந்து  வருடத்து உழைப்புக்கு, நான் இதுவரை சுமந்த பாரத்திற்கு ஏதோ அவர்களால் கொடுக்கமுடிந்த ஒரு சன்மானம் இந்த இரண்டு லட்சம் தான்..

இனி இதை வைத்துத்தான் என் சின்னப்பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும், இதை வைத்துத்தான் சின்னவனை எதுளையாவது சேர்த்துவிட்டு ஒரு மதிக்கத்தக்க ஆலாக்கணும், இதை வைத்து முதலில் என் தங்கச்சி குழந்தைங்க அம்மா பொண்டாட்டி என் தம்பி குடும்பம் என் பிள்ளைங்க எல்லோருக்கும் ஒரு ஒத்தத் துணியையாவது சந்தோசமா எடுத்து தரனும். முதல் வேலையா என் மனைவியை கூட்டிபோய் ஒரு நல்ல ஓட்டல்ல சாப்பாடு வாங்கித் தரனும். எவ்வளவு உழைப்பு அவளுக்கு.., இந்த பணம் அசலாப் பார்த்தா அவளுக்குச் சொந்தம். அவளும் எனக்கீடா அந்தளவிற்கு உழைச்சிருக்கா. இத்தனை வருஷம் ஒரு வார்த்தைக்கு மூச்சு விடாம எனக்காக வாழ்ந்திருக்கா அவளுக்கு கணக்கு பார்த்தா இந்த பத்துலட்சம் ஒன்னுமேயில்லை..

"சார் எங்க சார் போனோம்.."

"பற்றவாக்கம்.."

"இல்ல போவாது.."

அவன் விர்ரென்று போனான். இனியவேந்தன் ஏதேதோ யோசித்துக்கொண்டே நின்றிருந்தார். நேரம் கடந்துக்கொண்டே இருந்தது. இருட்டும்வேளையில் சென்னைப் பேருந்து நிலையைத்தில் நிற்பது ஒரு பயம் சூழ்ந்த மனநிலை. எப்போ வண்டி வரும், எப்போ போவோம், போய் குளிக்கணும், சாப்பிடனும், பிள்ளைங்க என்ன பன்னுச்சோ, மனைவி காத்திருப்பா., இப்படி அது இதுன்னு மனசு பேருந்தை நோக்கி அலைந்துக் கொண்டேயிருக்கும்.

"மணி வேற ஒன்பதாயிடுச்சி, வர பஸ்செல்லாம் ஃபுல்லா வறானே.. வேற வழியில்ல ஆட்டோ தான் புடிக்கணும்.." மனதில் நினைத்துக்கொண்டார்.

"ஏன்பா ஆட்டோ.."

"எங்க சார் போனோம்..?"

"பற்றவாக்கம்"  

"முன்னூறு ஆவும் சார்"

"இன்னாப்பா தோ இருக்குற பற்றவாக்கத்துக்கு ......... "

"தோ..ன்னா; பெட்ரோல் போட்டு போவவேண்டாமா சார்? 75ரூபா விக்கிது எண்ணெய், முன்னூறே கம்மி சார்.."

"இல்லப்பா நீ போ, நான் வேற பார்த்துக்குறேன்"

"பாரு பாரு உனக்கு பற்றவக்கதுக்கு போறதுக்கு பிளைட் வந்து தூக்கினு போவும்” அவன் முனங்கிக்கொண்டே போனான். மனிதர்கள் வேறு வேறானவர்கள். கொடுக்கவில்லை என்றால் விட்டுப் போவதை கடந்து திட்டிப்போகுமளவு இழிவாகி விட்டது, நமது சமுதாயம். அவரவருக்கு அவரவர் தேவை மட்டுமே பெரிதாக இருந்தது.

"சார் பிச்சை போடு சார்..” பெண் குரல் கேட்டு திடுக்கிட்டார். காலையிலருந்து நிக்கிறேன் சார்., பசி உயிர் போவுது சார்....

"போமா அங்கிட்டு, கூன் போட்டு நடக்க முடியாத கிழவி தெருவுல தயிர் கூடைய சுமக்குறா, கீற விக்கிறா, உனக்கென்னமா கல்லு மாதிரி இருக்கியே' போய் வேலைய எதனா செய்யறதுதானே?"

"நீ வேலை குடு சார் செய்றேன்"

"தேடு.., நாலு இடம் சுத்தி அலை, இருபது ரூவா பிச்சை எடுக்கறதுக்கு பத்துரூபா சம்பாதுச்சி மானத்தோட ஒரு சொம்பு காஞ்சி குடி. நாளைக்கு உன் பிள்ளை குட்டி பெருசா வளர்ந்து அதுங்க தலைமுறையில அதுங்க ஜெயிக்குமுல்ல, ஏன் இப்படி அது முகத்தை காட்டி நீ பாவத்தை சுமக்குற..?” 

அக்கம் பக்கம் சற்று முகம் சுழித்தார்கள், ஒரு சிலர் சரி என்றார்கள். அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்து இன்னொருவரிடம் கைநீட்டினாள். இனியவேந்தனுக்கு மனசு வலித்தது. யார் தூக்கி சுமக்கிறது இந்த உலகத்தை(?) யார் வந்து திருத்துறது? பெரிய சாமியா நேர்ல வந்து தோ இங்க போ அங்க பொண்ணு சொல்லும்? நாமதான் மாத்திக்கணும். நாள்பட நாள்பட ஒருத்தர் சொல்லி ஒருத்தர் தோள் தந்து தன்னை சரி செய்துக்கணும். தான் திருந்துனா இந்த உலகம் தானே மாறிட்டுபோது.. ச்ச யார் வந்து இதலாம் சொல்றது...." மனதில் சலித்துக்கொண்டார்.

நிறைய பேருந்துகள் கூட்டம் கூட்டமாக வந்தது. பக்கத்தில் வேர்கடலை அவிக்கும் வாசனை, தள்ளு வண்டியில் நின்று ஒருவர் வேர்கடலை மாங்கா வெள்ளேரிக்கா விற்றுக்கொண்டிருந்தார். தெருவோரக் கடைகள் அசதியை விரட்டி விளக்கினை ஏற்றிவைத்துக்கொண்டிருந்தது. வேகமாக வரும் போகும் பேருந்துகள் மரநிழலுள் அண்டும் இருட்டையெடுத்து பின்னே வீசிவிட்டு முன்னெப் போகும் வெளிச்சத்தோடு சர் சர்ரென போய்க்கொண்டும் வந்துக்கொண்டுமாய் இருந்தது. கையில் வேறு பை நிறைய பணம். இன்னொரு ஆட்டோவை நிறுத்தினார் இனியவேந்தன்.

"ஐநூறு ஆவும் சார்.."

"எங்க தோ இருக்க ப...."

அவன் நிற்கவே இல்லை, பேசிமுடிப்பதற்குள் சர்ரென வண்டியை முறுக்கிக்கொண்டு போனான். 'என்னடா ஆளுங்க இவனுங்க, ஒருத்தன் முன்னூறுன்னா, இவன் ஐநூறுன்றான், இவனுங்களுக்கு ஒரு அளவே கிடையாதா? ச்ச.. யாருக்கு இருக்கு அளவு; எவன்னா செத்து எக்கேடோ கெட்டுப்போகட்டும் எனக்கு வயிறு ரொம்பினா போதும்ற சமூகம் இனி எங்க போய் தன்னை செதுக்கிக்கப் போகுது..(?)

"எங்கணா பற்றவாக்கமா போறீங்க?" பக்கத்தில் ரொம்ப நேரம் நின்று இனியவேந்தனை பார்த்துக்கொண்டிருந்தவர் தானே முன்வந்து கேட்டார்.

"ஆமா தம்பி, ஒருத்தன் போகமாட்டென்றானே..?" 

"எவ்வளோ சொல்றான்"

"எங்க  ஒருத்தன் முன்னூறுன்றான் இன்னொருத்தனுக்கு ஐநூறு வேணுமாம்"

"ஆமாணே இருட்டி போச்சில்ல, அப்படித்தான் கேப்பாங்க.., முதல்ல அந்தப்பக்கம் யாரும் வரமாட்டாய்ங்களேணே(?) வேணும்னா ஒன்னு பண்ணுவோம், நானும் அங்கதான் போறேன், ரெண்டுபேரும் பாதி பாதி போட்டு போவோமா?"

"ம்ம்.. போய்க்குனா போது.., ஆனா இந்த பாதி பணம் கொறையைறது இல்லக் கண்ணு பாதை, ஐநூறு கேக்குறான் பார்; அநியாயமா இல்லை அது?" அவர் கலப்பின்றி கண்கள் விரிய கேட்டார்.

"அதலாம் பார்த்தா கதைக்காவுமா, எங்கணா வேலை செய்யுற?"

"தோ இங்க தான்; கொஞ்சம் தள்ளி ஒரு பேப்பர் மில்லுல, பொழுதோட வந்தா பஸ்சுல போய்டுவேன், இன்னிக்கு கொஞ்சம் நேரம் தாழ்ந்து போச்சு கண்ணு.."

"எங்க சார் போனோம் ? ஆட்டோ வேணுமா?"

"பற்றவாக்கம்ப்பா ராஜா, எவ்வளோ கேப்ப ?"

"முன்னூறு குடு"

"நூருரூபா தானேய்யா.. முன்னூறு கேக்குறியே.."

"பொழுது போச்சிண்ணா, இந்த இருட்டுல எவன் வருவான் திரும்ப, காலியா ஓட்டிவரனும் திரும்பி வரப்ப, இல்லைனா சேர் ஆட்டோ புடிச்சி போ.. பத்துரூபாய்க்கு வருவான்.." அவன் சொல்லிக்கொண்டே சர்ரென நகர்ந்துப்போய் விட்டான்..

"அடப்பாவிங்களா.., முன்னூறுக்கு போய் இருக்கலாம், இப்படி போயிட்டானே.." அவரும் புலம்பியவாறே சற்று தள்ளி நின்ற மற்றொரு ஆட்டோவிடம் சென்று நிற்க, அதற்குமுன் அந்த கூடநின்ற ஆள் ஓடிப்போய் கேட்டார் 

"ஆட்டோ பற்றவாக்கம் போகுமா ?"

"போவும்.."

"யண்ணா வாண்ணா.." ஆட்டோவில் ஏறியவாறே கூவினான் அவன்.

"எவ்வளோ ப்பா" ஏறிக்கொண்டே கேட்டார் இனியவேந்தன்.

"முந்நூத்தம்பது கொடு"

"இவ்வளோ........."

"நான் நிறைய எல்லாம் கேட்கலை சார், பொழுது போச்சு, வரும்போது சவாரி கிடைக்காது, வண்டி காலியாதான் வரும், சரி உனக்கு வேணாம் எனக்கும் வேணாம் முன்னூறு கொடு.."

சரியென இருவரும் ஏறிக்கொண்டார்கள். ர்ர்ர்ரென காதுக்குள் குடைவதுபோல ஆட்டோ உறும்பும் சத்தம் மண்டைக்குள்வரை பதிவாகிக்கொள்ளும். ஆட்டோ காரர்கள் தனியாக அவர்களுக்கென்றொரு எழுதாச் சட்டம் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு லட்சியம் இருக்கிறது. இவ்வளோ சேர்ஆட்டோ வந்திருக்கு மேஜிக் அட்டோன்னு பத்து பத்தா அல்றான் நீங்க அப்படி போகக் கூடாதா என்றால், போகக் கூடாது என்கிறார்கள் ஆட்டோ காரர்கள். 

அவர்களுக்கு இது தான் தொழில். ஆட்டோ மட்டும் தான் சாமி. அதை விட்டு அத்தனை எளிதில் அவர்களால் வெளியே வந்து விட முடிவதில்லை. என்ன தான் ஒரு நூருபா கேட்டு அழிச்சாட்டியம் பண்ணாலும், வயசானவங்களுக்கு புள்ளையாவும், புருஷன் கூடவராத அக்காங்களுக்குத் தம்பியாவும், தனியே போகும் பெண்களுக்கு அப்பாவாவும் ஒரு துணையாக வந்துப்போறது இந்த ஆட்டோகாரர்கள் தான்.

இனிய வேந்தன் ஏறி உள்ளே அமர்ந்து அந்தப் பையை பத்திரமாகப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் ஒரு கம்பியைப் பிடித்துக் கொண்டு ஆட்டோவின் பக்கவாட்டுக் கண்ணாடியில் தெரியும் அட்டோகாரனின் முகத்தைப் பார்த்தார். அத்தனை உழைப்பு, அசதி, தீரா கவலையென முகம் சோகம்  நிரம்பி கிடந்தது.

"எங்க தம்பி வீடு.. ?"

"இங்கதாண்ணா பக்கத்து தெரு"

"ஓ இந்த ஏரியா மட்டும் தான் ஓட்டுவீங்களா?"

"அப்படிலாம் இல்லங்ணா, இந்த மூளை அந்த மூளை எங்க போனோம்னாலும் போவ வேண்டியது தான் நம்ம வேலை"

"பற்றவாக்கம் னா பயப்படுறாங்களே ஏன்?"

"அது டொக்குண்ணா அது, போனா வந்தா வேற சவாரி கெடைக்காது. ஏறி இறங்கி மனுஷன் சாவனும். ஏதோ பெரியவங்களாச்சேன்னுதான் நானே சரின்னு ஏத்திக்குனேன், இல்லைனா நான்கூட அங்கே போகமாட்டேன்"

"சும்மாவா ஏத்துன, நூறு ரூபாய்க்கு முன்னூறு வாங்கறல்ல, பக்கத்துல இருந்தவர் பேசினார்"

"நீ வேற.. போ.., அவ்வளோ சுலுவா சொல்ட்ட, எங்க பொழப்பு வோடறதே எவ்வளோ பெரிய பாடுன்னு எங்களுக்கு தான் தெரியும். எங்க பார்த்தாலும் சேர்ஆட்டோ மேஜிக்ஆட்டோ மினிபஸ்சுன்னு போது, நடுவுல நாலு காசு பார்க்குறதே நாய்ப்பட்ட பொழப்பு. ஏதோ உங்களை மாதிரி அட்டோவுக்குன்னு வரவங்க வந்தா தான் எங்களுக்கு வருமானம்"

"ஆயிரபா சம்பாதிப்பீங்களா தம்பி?"

"ம்ம் வரும் சார்.. பெட்ரோல் வெலை ? அதுக்கு இதுக்குன்னு தானிக்கு தீனி தான் எல்லாம்.."

"கல்யாணம் ஆயிடுச்சா?"

"ம்ம் ரெண்டு புள்ளைங்க பள்ளிக்கொடம் போவுது"

"அப்பாம்மல்லாம்....?"

"இருக்காங்க சார், ஒரு அண்ணன், அப்பாம்மா, தம்பி எல்லா இருக்காங்க. நாந்தான் அல்லாத்தையும் பார்த்து பார்த்து போய் சேர்ந்துடுவன்போல"

"சொந்தங்களை நாமதானேப்பா பார்க்கணும்? நம்ம அண்ணன் தம்பியை நம்ம அப்பாம்மாவ வேற யார் பார்ப்பா?"

"பதினெட்டு வருஷமா ஆட்டோ ஓட்டுறேன் சார், சம்பாரிச்சேன் இல்லன்னு சொல்லல, ரெண்டு இடத்துல இங்க அங்கன்னு மண்ணு வாங்கனேன், ஆனா பிரயோசனம் இல்லையே"

"யான் என்னாச்சு?"

"என் தம்பி சாவ கெடக்குறான் சார்"

"சாவவா......... ஏன் ?"

"தோ சுகர்னாங்க, பிளட் பிரசராம், நாய் குடிச்சு குடிச்சு உடம்பை கெடுதுக்குனு, இப்போ ரெண்டு கிட்னியும் போச்சு"

"......................"

"இன்னா ஆளு தெரியுமா சார் அவன்? சும்மா நின்னா நாலு பேரை அடிப்பான். இப்போ ஒன்னுக்கு போவாது, வெளிய போவமாட்டான், ரெண்டு நாளைக்கு மூணு நாளைக்கு ஒருமுறை தோ அவ்வலோண்டு சோறு.. ம்ஹூ ம்ஹூ" சொல்லும்போதே கேவினான்..

தொண்டை அடைத்தது இனியவேந்தனுக்கு.

"வாரத்துல நாலுநாள் மூனுநாள்னு டேயுலூட் பண்ணனும். இல்லன்னா ஒன்னும் வெளிய வராது. வலில துடிக்கிறான் கடந்து.., கண்களை துடைத்துக்கொண்டே ஓட்டினான். இரண்டு பக்கமும் வண்டிகள் சரமாரியாகப் போய்க்கொண்டிருந்தது. வண்டி பாரிசுலிருந்து தாண்டி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்தது.

இனிய வேந்தன் அவனுடைய முகத்தையே தன் முகம் சுருக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

"நானும் அவனுக்கு 'இது புடிக்கும் 'அது புடிக்கும்னு வாங்கிப் போவேன், எதையும் வெளிய போறதுக்கு பயிந்துக்குனு தொடமாட்டான் சார். எனக்கு இதலாம் பார்த்து பார்த்து உசுரே போய்டும் சார்.., அவன் அந்த தின்ற பொருள சாப்பிட முடியாம பார்க்குறதுக்கு இருக்கே.. ச்சே.. அதுக்கு அவன் செத்தேபோயிடலாம் அதே மேல்.., சில சமயம் முடிஞ்சி கொண்டுப்போய் குப்பையில கடாசிடுவேன்.

அவன் கூட இருந்தவன்லாம் செத்துப் போய்ட்டாங்க"

"செத்துப் போயிட்டாங்களா?.." ஏதோ பயம் கருணை உருக்கமென தொண்டையைக் கவ்வியது.

"ஆமா சார், யார் அழுவுறது இவ்வளோ பணம்(?) வாரத்துக்கு அம்பதாயிரம் ஆவும். மூணு தடவை டேயுலூட் பண்ணா நல்லுது, இப்போல்லாம் ரெண்டு தடவைதான் பண்றோம். காசுல்ல, நானும் எவ்வளோ உழைக்கிறது? அவன் கண்டி ஒழுங்கா இருந்திருந்தா இன்னைக்கு பத்து ஆட்டோ ஓடும் சார் ஏங் கூட, எல்லாம் பணமும் போச்சு, இருந்த எடத்தை எல்லாம்கூட வித்துட்டேன் சார்.."

"ஐயோ.. கடவுளே.."

"அவருக்கு கலியாணம் ஆச்சாணா’ பக்கத்தில் இருந்தவர் கேட்டார்.

"ஆச்சுண்ணா, அது அவுங்க அப்பா வீட்டுக்கு ஓடிப் போச்சு"

"ஒரு மவன் இருந்தான், அதுவும் நோய் வந்து செத்துப்போச்சு, இனி அவனுக்கு யாரு இல்ல, என்ன வுட்டா அனாதை அவன்" தேம்பி அழுதான்

"இவ்வளோ கஷ்டப்பட்டு வெச்சிருந்து என்னப்பா செய்யபோற? இன்னும் எவ்வளவு நாளைக்கு பார்ப்ப?"

"பார்ப்பேன் சார், என் உடம்புல பொட்டு உயிர் இருக்கவரைக்கும் பார்ப்பேன். என் தம்பி சார் அவன். அவன் பாவம் சார்.. சின்ன பையன் சார்.. ஒழுங்கா வாழவே இல்லை சார்.. ஒரு நாளைக்கு வேண்டி அவனை காப்பாத்தி வைக்கமுடியும்னாலும் வெப்பேன் சார். அவன் போய்ட்டா எனக்கு யார் சார் தம்பின்னு இருப்பா..??? அவன் கேவி கேவி அழுதான். கண்ணீர் பாதையை மறைத்தது. ஓரங்கட்டி வண்டியை நிறுத்தினான்.

இனிய வேந்தன் அவனுடைய தோளைத் தொட்டு மார்பில் அணைத்துக்கொண்டார். கொஞ்சம் அவனை சமாதனம் செய்து.. வண்டியில் அமரவைத்தார். மூவரும் ஆட்டோவினுள் அமர்ந்தார்கள்.

"வண்டியை எடு"

"எங்க" என்பதுபோல் அவன் அவரைப் பார்த்தான். 

"எடு சொல்றேன், பாரிஸ் கார்னர் போ.." என்றார்.

அவன் வேறொன்றுமே பேசவில்லை. எந்திரம்போல மரத்துக்கிடந்தான் அவன். பிள்ளைகள் டையர் வைத்து விளையாட்டிற்கு ஓட்டுவதைப்போல வண்டி உருண்டு ஓடியது. பாரிஸ்கார்னர் வந்தது. ஒரு ஏடிஎம் எந்திரத்திற்கு அருகில் நின்றார்கள். இனியவேந்தன் இறங்கி, பையை துழாவி தனது பணத்தைத் தள்ளிவிட்டு விட்டு அடியிலிருந்த சிறிய பணப்பையை எடுத்தார். அதிலிருந்த ஏடிஎம் கார்டு எடுத்துப்போட்டு தனது வங்கிக் கணக்கிலிருந்த ஒம்பதாயிரத்து ஐநூறையும் எடுத்துக்கொண்டார். எடுத்துக்கொண்டு அவனை நோக்கி வந்தார். அவனிடம் வந்துநின்று அந்த பணத்தோடு பையிலிருந்த இரண்டு லட்சத்தையும் சேர்த்து வாரி நீட்டினார் -

"இந்தா.. இதில் மொத்தம் ரெண்டு லட்சாதி ஒம்பதாயிரம் சொச்சம் இருக்கு, இவ்வளோதான் என்னால் முடியும், கொண்டுபோய் உன் தம்பியை இன்னும் ஒரு மாதத்துக்கு உயிரோட வெச்சிரு போ.." என்றார்.

அவனுக்கு அதை அத்தனைப் பெரிய உதவியாக பார்த்துக்கொள்ளத் தெரியவில்லை. நன்றியை அத்தனை உணர்ச்சிப் பூர்வமாக அவனுக்குக் காட்ட தெரிந்திருக்கவில்லை. அவனுடைய பாரம் உயிரைப் பற்றியது. ஏதோ கொடுக்கிறார். வாங்கிக் கொள்வோமென வாங்கிக்கொண்டான். அவனால் பேச முடியவில்லை. அவருடைய இரண்டு கைகளை இறுகப் பற்றிக்கொண்டான், அவர் இதலாம் பெருசில்லை விடு.. என்றார். அவன் அவருடைய கைகளை எடுத்து தனது முகத்தில் தாயின் முந்தானையைப் போல ஒற்றிக்கொண்டான்.

அவருக்கு பாரம்.. பாரம்.. மனசெல்லாம் பாரம். ஒருவன் சாகக்கிடக்கையில் நான் எனது வாழ்வதைப பற்றி யோசிப்பது சிறப்பில்லை. அத்தனைப் பெரிய மனிதமில்லை அது. எனக்கு வாழ்க்கை இதுதான். என்னை சார்ந்தவர்களுக்கு வாழ்க்கை இதுதான். இதலாம் விட அந்த ஒரு உயிர்.. இன்னும் ஒரு நாளைக்கோ இரண்டு நாளைக்கோ வாரத்திற்கோ மாதத்திற்கோ மட்டுமே இந்த மண்ணிலிருந்து விட்டு போகப்போற அந்தத் தம்பியின் உயிர் பெருசு. அவனுடைய கண்ணீர் என் தோளில் சாய்ந்தழும்போது எப்படி சுட்டதே, அந்த சூட்டை தணிக்கும் பொதுநியாயம் நிறைந்ததொரு சமுதாயம் எனக்கு வேண்டும். அது என்று பிறக்கும்? எனக்கு' என் மனைவிக்கு' என் பிள்ளைகளுக்கு இந்த பணமில்லாதுபோனால் போகட்டும். ஆனால் எங்களுக்கந்த சமுதாயம் வேண்டும். அது என்று பிறக்கும்?

பிறக்கட்டும். என்னால், என்னைப் போன்றோரால் பிறக்கட்டும். பிறக்கட்டும்.. அவர் இரண்டு கையை விரித்து முகத்தை துடைத்தவாறே பெருமூச்சி விட்டுகொண்டு நடந்தார். 

வானம் டமடம என்றது. 

மேகங்கள் நகர்ந்து ஒன்றோடொன்று உரசியது.. 

மரங்கள் இங்கும் அங்கும் சாய்ந்து சாய்ந்து ஆட இரவு நேரக் காற்று சில்லென்று வீச.. ஆந்தை ஒன்று தெருவிளக்கு கம்பத்தின் மீது நின்றுக்கொண்டு கோக் கோக் கோக்கென்று கத்தியது. மழை லேசாக தூரலிட இனியவேந்தன் சற்று கடைகளின் ஓரமாக ஒதுங்கி வீட்டை நோக்கி நடந்துக்கொண்டிருந்தார்..

மழையின் ஈரத்தில் இனியேனும் கொஞ்சம் மனிதம் முளைத்துக்கொள்ளட்டும்..

by Swathi   on 24 Aug 2015  0 Comments
Tags: Autokaran   Ravi   Autokaran Story   Thambi Story   vidhyasaagar Story   ஆட்டோ காரன்   ஆட்டோ ரிக்ஷா  
 தொடர்புடையவை-Related Articles
கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !! கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர் ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
டி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி !! டி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி !!
ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா? ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா?
ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !! ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !!
பூலோகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதாம் !! பூலோகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.