தவத்திரு அழகரடிகளின் "மாபெரும் குறள் செயல்திட்டம்"
தவத்திரு அழகரடிகள் (10.04.1904 – 18.02.1981)
திருக்குறள் மறைநூல் என்றும், வாழ்க்கைமறை என்றும், உலகப் பொதுமறை என்றும், முதல் நூல் என்றும், பெருங்குரவர் பலரும் விரும்பிப் பின்பற்றும் ஒரு நூல் என்றும், தெளிவு செய்து கொண்ட பின்பு, அந்தப் பெருநூலின்வழி அனைவரும் தமது வாழ்க்கையை நிகழ்த்தி அப்பெருமான் உள்ளம் குளிரும் படி உயர்ந்த வாழ்வை வாழவேண்டிய கடமை உலகுக்கு உள்ளது.
அதற்குரிய செய்கைகளை, தொண்டுகளை, அரசும், இயக்கத் தலைவர்களும், அறிஞர்களும், ஓர் ஒற்றுமையிலும் உறுதிப் பாட்டிலும், நின்று ஆற்றலாம்.
- வழிபாட்டுக்காகத் திருவள்ளுவர் கோயில் உயர்ந்த முறையில் நன்றாக நடைபெறுதல் முதன்மையானது.
- அடுத்து, மதுராந்தகம் குருகுலத்தில் இப்போது விளங்கிவரும் 'திருக்குறள் பீடம்' என்னும் 'திருவள்ளுவர் ஆசிரமம்' உலகப் பொது பீடமாகத் திகழ்வதனால் அனைவரும் அதனோடு இணைந்து திருக்குறள் தொண்டர்களாகி உலகு முழுதும் சேவை செய்ய முற்படுதல் இன்றியமையாதது. கோயிலும் மடமுமாகிய இவையிரண்டும் அரிதாக அமைந்தவை; உலகத்தில் எங்கும் அமையாதவை.
- பதிப்பு நிலையங்களில் திருக்குறளை வகை வகையாக அச்சிட்டுப் பதித்து நாடெங்கும் பெருகப் பரவச் செய்ய வேண்டும்
- திருக்குறள் கண்காட்சி ஒன்று சிறந்த மாளிகையில் நிலைகொண்டு நடைபெறுதல் இன்றியமையாதது.
- சென்னை, அண்ணாமலை நகர், மதுரை என்னும் இடங்களில் விளங்கும் பல்கலைக் கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சிகள் செய்வதற்காகத் தமிழக அரசு வாய்ப்பளித்துள்ளது. அவை தொடர்ந்து தக்க நெறிகளில் நடைபெற வேண்டும்,
- இப்பல்கலைக் கழகங்களின் செயல்களோடு, திருக்குறளுக்கு என்றே ஒரு தனிப் பல்கலைக்கழகமும் அமைவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். திருக்குறளுக்கென்று 'பல்கலைக்கழகம்,' ஒன்றை நிறுவி அதன்கண் பயில்வோரைக் கற்றபடி நடந்து அருஞ்செயல்களில் நடைபயிற்றும் நிலையமாக அமைதல் இன்றியமையாதது. அதற்கு அது, சிறந்த அருட்குரவர் வழியில் பண்டைக் குருகுல ஆசிரம முறையில் இயங்குதல் முதன்மை!
- திருக்குறள் கலைக் களஞ்சியம் ஒன்றும் வெளி வருதற்கான செயல் முறைகளும் அமைவது தகுதியாகும்.
- திருக்குறள், உலகுக்கு வேதநூலாதலால், அதனைப் பற்பல கோணங்களில் வாழ்க்கைத் துறைகள் பலவற்றிலும் பல பல பிரிவுகளாக ஆய்வுகள் விளக்கங்கள் செய்ய வேண்டிருக்கின்றன.
- திருக்குறளின் வழி மன்பதை உருவானால் வாழ்க்கையில் முறைமை செழுமை இனிமை உரிமை என்னும் அறம் பொருள் இன்பம் வீடு எளிதில் அமைந்து நாடு அமைதியும் ஊக்கமும் அருஞ்செயலும் பெரும் பயனும் எய்துதல் உறுதி!
- உலகத்தோடு ஒட்ட ஒழுகல் வேறாகவும், கற்றல் வேறாகவும் இயங்காமல் இருவகை வழக்குகளும் ஒருமை கொண்டு இயங்குதலையன்றோ 'ஒழுக்கம்' எனக் கருதினார் ஆசிரியர்! அந்த ஒழுக்கம் கல்லாதாரைக் கல்லாதார் என்றும் அறிவிலாதார் என்றுங்கூட உறுத்தலாகக் கூறினார். கற்றபடி நடக்க வேண்டுமென்று பன்னிப் பன்னிப் பேசுவதெல்லாம் இருவகை வழக்குகளையும் வேறு வேறாகக் கருதியதனால் வந்த விளைவுகள்!
- திருக்குறள் இயக்கத்தைப்போல உலகத்துக்கு நலந்தரும் பேரியக்கமொன்று சேவையிற் சிறக்கவேண்டுமென்றால் அது உலகெங்கும் கிளை பரப்பி ஒவ்வொரு கிளை நிலையமும் ஒவ்வொரு வகையான பணியைத் தமக்குள் வகுத்துக்கொண்டு பிரிவு பிரிவாகவும் தாம் ஓர் அமைப்பின் உறுப்புக்கள் என்னும் ஒருமையில் இயங்குவதாகவும் திகழ்ந்து தழைத்தல் முக்கியம்.
- தமிழகத்தில் இப்போதும் திருக்குறள் பெயராலும் திருவள்ளுவர் பெயராலும் பலநிலையங்கள் தோன்றி இயன்ற சேவைகளில் இயங்கி வருகின்றன. அவை பலவும் ஒன்றின் கிளைகளாக இல்லை, ஒன்றின் கிளைகளாகக் கூட்டுறவு கொள்ளும்போதுதான் பணிகள் முறைப்படும்; திருக்குறள் நிலையங்கள் அனைத்தும், திருக்குறள் தொண்டர்கள் அனைவரும் ஒரு தலைமையில் ஒருமையுற்று முறையோடு இயங்கினால் மட்டுமே நாட்டுக்கு உய்தியுண்டு. செலவினங்கள், முயற்சிகள், ஆற்றல்கள், எல்லாம் அளவில் நிகழ்ந்து வீண்படாமல் ஓங்கும்.
இங்ஙனம், கோயிலும், மடமும் பதிப்பு நிலையமும், கண்காட்சியமைப்பும், பல்கலைக் கழகமும், ஒன்றின் உறுப்புக்களாகப் பல கிளை நிலையக் கூட்டுறவும் திருக்குறள் திருமறைக்காக அமைந்து சான்றாண்மை யியக்கமாகத் திருக்குறள் இயக்கம் இரு வழக்குகளின் ( உலக வழக்கு, நூல் வழக்கு) ஒருமையில் தலைமைச் சிறப்புடன் திகழ்தல் நாட்டுக்கு நல்வாழ்வு அருளும்.
|
வழிகாட்டிகளை வணங்குவோம்..
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
www.KuralWorld.org
|
|