வாணிகம் என்ற அமைப்பு ஒரு சமுதாயத்துக்கு ஏற்றன செய்வதாகும். எனவே, சமுதாயத்துக்கு ஏற்றன செய்பவர் வாணிகர் ஆவர். வாணிகர் எத்தகைப் பண்பு நலன் உடையவராக இருத்தல் வேண்டும் என்று நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.
1. தனிமையாற்றல்,
2. முனிவிலன் ஆதல்,
3. இடன் அறிந்து ஒழுகல்
4. பொழுதொடு புணர்தல் (காலத்தையொட்டி செயல்படுதல்).
5. உறுவது தெரிதல்,
6. இறுவது அஞ்சாமை,
7. ஈட்டல்,
8. பகுத்தல் என்னும்
எண் குணங்களும் வாணிகர்க்கு உரியனவாம்.
தனிமை ஆற்றல் என்பதன் விளக்கமாகத் தனித்துவமாகச் செயல் ஆற்றல் என்பதனையும் சிறப்பாந் தன்மை என்பதனையும் முதன்மைப்படுத்திச் சொல்வர். அறிந்திருத்தல் தன்னையும், தான் விற்பனைக்கு விடுக்கும் பொருளின் தன்மையையும் அறிந்து செயல்படுபவனாக அவன் இருக்க வேண்டும்.
சரக்கு முறுக்கா, செட்டியார் முறுக்கா என்ற சொலவடை கேட்டிருக்கலாம். சரக்கும் முறுக்காக இருக்க வேண்டும்; சரக்கை விற்கும் செட்டியாரும் முறுக்காக இருக்க வேண்டும். இந்நிலை இருப்பதற்காக எழுந்த சொல்லே அது. இரண்டிலும் உயர்ச்சி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுறுத்துகின்றது. இவை பற்றிய சிந்தனைகளைக் கருதிப் பார்ப்போம்.
வீட்டுக்குச் சோறாக்க அரிசி வாங்க எண்ணுகிறோம். எத்தகைய அரிசியாக அது இருக்க வேண்டும்? நல்ல சன்னமான அரிசியே சாப்பாட்டுக்குச் சுவை கூட்டும். எனவே, அத்தகைய அரிசியையே நாட வேண்டும். அது விலை கூடுதலாக இருந்தாலும் சோறாக்கும் போது மிகுந்து விளங்கும். மேலும், வாங்கும் அரிசி, சில்லுகள்(குருணை) இல்லாமல் இருக்க வேண்டும். கல்லுகள், பழுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்; மணக்கும் அரிசியாக இருக்க வேண்டும். பச்சரிசியானால் வெண்மையாக இருக்க வேண்டும். புழுங்கலரிசியானால் வயிற்று வெள்ளையின்றி நன்கு புழுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
இத்தனைக்கும் மேலாக அவ்வரிசி பழைய அரிசியாக இருக்க வேண்டும். பழைய அரிசி என்பது நெல்லை அவித்து 6 மாத காலம் கழித்து அரிசியாக்கி அனுப்பப்படுவதாகும். ஈரப் பதமற்று, ஒண்டல்(புழு) விழாததாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கவனித்து வாங்குவதே தனித்துவமாகும். இத்தகைய அரிசிச் சோறு குழையாமல், மணமாக இருக்கும்.
ஆனால், இட்டலிக்கு ஏற்ற அரிசி, மோட்டா அரிசியே அன்றிச் சன்ன அரிசி ஏற்றது அன்று. மேலும், உளுந்து புத்தம் புதியதாக வந்துள்ளதே இட்டலிக்கு நயமாகும். பழைய உளுந்து, மாவு நிலையில் பொங்கி வராது. பொங்கி நிற்கச் செய்யும் புது உளுந்தே இட்டலிக்கு ஏற்றதாகும்.
நன்றி: நதிராசா
|