LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

இன்னொரு பாண்டியனைக் காண்போமா?

அறிஞர், பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் மறைவைப் பற்றி எழுதும்போது கண்ணீர் வராமல் எழுதமுடியவில்லை. ஈடுசெய்ய முடியாத இழப்பு என்ற சொற்றொடர் அவரைப் பொருத்தவரை சம்பிரதாயமானதல்ல.

 

திராவிட இயக்கம் பற்றியும், சாதியச் சூழல் பற்றியும் விளிம்புநிலை மக்களின் பார்வையில் இருந்து ஆங்கிலத்தில் இயங்கியவர். அவரது ஆய்வுக் கட்டுரைகளையோ, நூல்களையோ, அகராதியின் துணையின்றி என்னால் படிக்க முடிந்தது இல்லை. சொற்பிரயோகங்களும், தர்க்கங்களும், தனது கொள்கை நிலையில் சற்றும் வழுவாதும் ஆணித்தரமாகவும் எழுதும் அவரது எழுத்துக்கு ஈடாக ஆங்கிலத்தில் தரமாக எழுதும் ஆளுமைகளைக் காண்பது அவ்வளவு எளிதல்ல. அவரது விரிந்த பார்வையைப் புரிந்துகொள்ள அவரது சில கட்டுரைகளை இணைத்துள்ளேன்.

  

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றில் துணைவேந்தராக வீற்றிருந்திருக்க வேண்டியவர். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் வாய்ப்பில் முடங்கியவர். உலகம் முழுவதும் பயணித்து, புகழ்வாய்ந்த பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராக அவர் சுற்றிப் பறந்தபோதும், தமிழ்நாட்டின் அரசியல், சமூகப் போராட்டங்களின் போக்கைக் கூர்ந்து பார்க்கத் தவறாதவர். மாணவர் போராட்ட எழுச்சியோ, தருமபுரி கலவரமோ, தமிழ்நாட்டைப் பற்றி ஆங்கில ஊடகங்கள் கற்பித்த சித்திரங்களுக்கு மாறாக, போராடுவோரின் பார்வையில் இருந்து ஆங்கிலத்தில் எழுதி, மாற்றுக் கருத்துக்களைப் பதியவைப்பவதைத் தனது கடமையாகக் கொண்டிருந்தவர். இரண்டு மாதங்களுக்கு முன், சென்னை வந்த அவர் மாலைப் பொழுதில் சந்தித்தபோது நிறைய பேசிக் கொண்டிருந்தார். விழுமியங்களின் வீழ்ச்சி அவரை வேதனைக்குள்ளாக்கி இருந்தது.

 

எம்ஜிஆரின் எழுச்சி பற்றி அவர் எழுதிய The Image Trap: MG Ramachandran in Films and Politics (Sage publications 1992) ஆகச்சிறந்த ஆய்வுகளில் ஒன்று திடமாகக் கூறலாம். அதன் பிரதி விற்பனைக்கு இல்லாத நிலையில், அவரிடம் இருந்த பழைய பிரதியின் படியொன்றை பி.டி.எப். வடிவில் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அதைப் படித்த, ஆங்கில ஊடகங்களில் பணியாற்றும் நண்பர்களில் பலர் வியப்பை வெளிப்படுத்தத் தயங்கியதில்லை. அந்த நூலைத் திருத்தி விரிவாக்கி வெளியிடப் போவதாகச் சொன்னார்.

 

தமிழ்நாட்டைப் பற்றி இன்னும் நிறைய எழுதும் எண்ணமும் திட்டமும் அவருக்கு இருந்தது. அவருக்கு ஈடாக, ஆழமாக எழுதும் இன்னொருவரைத் தேடிப் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.

 

தமிழ்நாட்டில் நடக்கும் செய்திகளை, சில சிற்றிதழ்களை அவருக்கு அனுப்பும்போது, ஒவ்வொரு முறையும் தவறாமல் நன்றி தெரிவித்து பதில் அனுப்பிய பண்பாளர். இளம் பத்திரிகையாளர்கள், தங்கள் விமர்சனக் கட்டுரைகளுக்கு அவரது கருத்தை அறிய முற்படும் தருணங்களில் அவர்களின் பெரும்பாலான, தவறான புரிதலை விளக்கிவிட்டு, பின்னர் கருத்தியம்பும் பாங்கு அவருடையது. நச்சென்ற கருத்தும், தாட்சண்யம் இன்றி முகத்திலடித்தாற்போல சொல்வதும் பாண்டியனின் இன்னொரு முகம்.

 

அரசியல் வேட்கை கொண்ட மாணவர்கள் நிறைந்த ஜேஎன்யூவில் பாண்டியன்தான், மாணவர்களால் அதிகம் விரும்பப்பட்ட பேராசிரியர் என்பது எனக்கு ஆச்சரியம் தந்தது இல்லை. அவரது வகுப்பென்றால், அறை நிரம்பி வழியும் என்று நண்பர் கலை அவ்வப்போது சொல்வதுண்டு. “குஜராத்தின் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?” தேர்தல் பரப்புரையில் ஜெயலலிதா ஒப்பிட்டுக்காட்டிய புள்ளி விவரங்களுக்குத் தரவாக இருந்த கலையரசனின் கட்டுரைக்கு ஆதாரப்புள்ளி பாண்டியன்தான். “இப்படி, தவிக்க விட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே… அவரது ஆகிருதி என்னவென்று நம் மக்கள் அறிவார்களா” என்று கண்ணீரோடு கதறினார் கலை. இறுதிக்காலத்தில் பாண்டியனோடு மிக அணுக்கமாக இருக்கும் வாய்ப்பு அவருக்கு வாய்த்திருந்தது.

 

எப்போதும் வாஞ்சையுடன் பேசும் குரல். எவ்வளவு அழைத்தும் தொலைக்காட்சி விவாதங்களுக்கு வர மறுத்துவிட்டார். எந்த மக்களுக்காக, எந்தக் கருத்தியலைப் பற்றி எழுதினாரோ, அந்தத் தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரும்பாலோருக்கு அறியப்படாத ஆளுமையாகப் போனது நம் காலத்தின் அவலம்.

 

அவரது கட்டுரைகள் சில...

 

http://kafila.org/2007/09/23/kaurnanidhi-knows-his-ramayana-well-mss-pandian/

http://www.epw.in/system/files/pdf/2014_49/25/Decisionism_and_the_Cult_of_Narendra_Modi.pdf

http://www.epw.in/commentary/caste-tamil-nadu.html

http://www.epw.in/commentary/caste-tamil-nadu-ii.html

http://www.epw.in/commentary/caste-tamil-nadu-iii.html

http://www.epw.in/commentary/tamil-spring.html

 

நன்றி:திரு.குணசேகரன்

by Swathi   on 11 Nov 2014  0 Comments
Tags: MSS Pandian   Social scientist Pandian   எம்.எஸ்.எஸ். பாண்டியன்   பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன்           
 தொடர்புடையவை-Related Articles
இன்னொரு பாண்டியனைக் காண்போமா? இன்னொரு பாண்டியனைக் காண்போமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.