|
||||||||
பகவத்கீதையை சாட்சியாக வைத்துப் பதவியேற்ற கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் |
||||||||
கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த் பகவத்கீதையை சாட்சியாக வைத்துப் பதவியேற்றுக்கொண்டார்.
அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மெலனீ ஜோலி, தொழிற்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த்துக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னேவுடன் சேர்ந்து, வளமான, பாதுகாப்பான நாட்டை கட்டமைக்கக் காத்திருப்பதாக அனிதா தெரிவித்தார். இவர் முன்னதாக அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அரசியலிலிருந்து விலக உள்ளதாக அவர் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில், மார்க் கார்னேயின் அறிவுறுத்தலால் அவர் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவத் தம்பதிகளான பஞ்சாப்பைச் சேர்ந்த சரோஜ் டி.ராம், தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.வி.ஆனந்த் ஆகியோரின் மகளான அனிதா ஆனந்த்.1967-ல் பிறந்தார். குயின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முறையே அரசியல் ஆய்வுகள் மற்றும் நீதித்துறையில் இரண்டு இளங்கலை கலைப் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.
டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டமும், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். 2019 வரை பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல பதவிகளில் இருந்திருக்கிறார்.
லிபரல் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்திவந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். கனடாவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்ற முதல் இந்துப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 2021-ம் ஆண்டில், கனடாவின் பாதுகாப்பு அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். கனடாவின் வரலாற்றில் இரண்டாவது பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றார். ஜூலை 2023 வரை இந்தப் பொறுப்பில் இருந்தார். ஜூலை 2023 முதல் டிசம்பர் 2024 வரை கருவூல வாரியச் செயலகத்தின் தலைவராகவும், பின்னர் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றினார்.
எப்போதும் ஒரு கனடியன் என்பதில் பெருமை கொள்ளும் அனிதா ஆனந்த வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்திய - பஞ்சாப் கலாச்சாரத்தைப் பின்பற்றிவந்தார். இந்து மற்றும் சீக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். தீபாவளி விருந்துகளை நடத்துகிறார். இந்தியாவின் சுதந்திர தினத்தைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.
தன் செயல்பாடுகளுக்கு விளக்கமளிக்கும் விதமாக, ``நான் ஒரு கனடியன், என்னுடைய பஞ்சாபி மற்றும் தமிழ் பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
|
||||||||
| by hemavathi on 15 May 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|