காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இறுதித்தீர்ப்பில், தமிழகத்திற்கான நீரின் அளவை குறைத்திருப்பது ஏமாற்றமளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாநிலத்திற்கு சாதகமான பல அம்சங்களும் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் முக்கிய தகவல்கள்:
- நடுவர் மன்றம் ஒதுக்கிய 192 டிஎம்சி-யை விட தற்போதைய தீர்ப்பின் படி ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீரின் பங்கீட்டு அளவு குறைவானதாகும். நடுவர் மன்றம் ஒதுக்கிய நீரில் இருந்து 14 புள்ளி ஏழு ஐந்து டி.எம்.சி நீர் குறைக்கப்படுவதாக கூறிய உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான ஒதுக்கீட்டு அளவான 177 புள்ளி இரண்டு ஐந்து டிஎம்சி தண்ணீரை ஒவ்வொரு ஆண்டும் தடையின்றி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
- உச்சநீதிமன்ற தீர்ப்பால் காவிரியில் 284.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கிடைக்கும். கேரளாவிற்கு 30 டிஎம்சி நீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை.
- நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக செயல்திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான 6 வார காலக்கெடு எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது,
- இதே போன்று பன்மாநிலங்கள் வழியாக பாயும் நதிகள் தேசியச் சொத்து என்பதையும், எந்த ஒருமாநிலமும் இதில் தனி உரிமை கோர இயலாது என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான 1892 மற்றும் 1924ம் ஆண்டின் ஒப்பந்தங்கள் செல்லாது என்ற கர்நாடகத்தின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை .
- இதே போன்று காவிரி வடிநிலப் பகுதிகளில் நீர்ப்பாசன பரப்பை 24.708 லட்சம் ஏக்கரிலிருந்து 21 லட்சம் ஏக்கராக குறைக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் வாதமும் ஏற்கப்படவில்லை.
- வரும் 15 ஆண்டுகளுக்கு மாதாந்திர வாரியாக தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கப்பட வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- டெல்டா பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பாசன உபயோகத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதற்கு மாறாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் நிலத்தடி நீர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது தமிழகத்திற்கு பாதகமாக அமைந்துள்ளது. டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் 10 டி.எம்.சி. இருப்பதை கணக்கில் கொண்டு காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பில் 205 டி.எம்.சி. என்றும், இறுதி தீர்ப்பில் 192 டி.எம்.சி.யிலிருந்தும் தற்போது 14.75 டி.எம்.சி. நீரை குறைத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது நியாயமானதல்ல.
- தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை 192 டிஎம்சியிலிருந்து 177.25 டிஎம்சியாக குறைத்திருப்பது தமிழகத்திற்கு பாதகமாக அமைந்துள்ளது.
- நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த சில பிழைகள் இந்த தீர்ப்பில் சரிசெய்யப்பட்டுள்ளன.
- 1892, 1924 ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். அதன்படி, தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது.
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன.
- இறுதிதீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது.
- தீர்ப்பின்படி மாதாந்திர அடிப்படையில் தண்ணீரை திறந்தவிட வேண்டும்.
- தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டிஎம்சிக்கு கீழே செல்லும் போது தமிழகம் கூடுதலாக 10 டிஎம்சி கன அடி தண்ணீர் பெற சுப்ரீம்கோர்ட் அனுமதியளித்துள்ளது.
|