LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- சார்லஸ் டார்வின் (Charles Darwin )

சார்லஸ் டார்வின்-பகுதி 1

 

சார்லஸ் டார்வின்-பகுதி 1  
-சூர்யா சரவணன் 

சார்லஸ் டார்வின்-பகுதி 1  

-சூர்யா சரவணன் 


 

 

           பொருளடக்ம்  

 

 

1.      டார்வினின் பிறப்பு 

2.      பீகிள் பயணம் 

3.      நோயின் பிடியில் சார்லஸ் டார்வின் 

4.      ஜீவராசிகளின் மூலம் 

5.      கடவுள் பற்றி ஒன்றும் தெரியாதவன் 

6.      பரிணாம வளர்ச்சி  

7.      ஜீவ மரணப் போராட்டம்  

8.      டார்வீனிசம் 

9       மண்புழு ஆராய்ச்சி  

10.   கடவுளும் டார்வினிஸம் 

 

      முன்னுரை

 

    நாம் எத்தனையோ சுவாரஸ்யமான கதைகளையும் படித்துள்ளோம் மனிதனின் தோற்றமும் பரிணாமகொள்கையும் ஒரு சுவரஸ்யமான கதைதான் என்பதை நாம் மறந்துவிட்டோம்.  அந்தகதையை நான் எப்படி ஆச்சர்யத்துடன் அனுகினோனோ அதேபோல் வாசகர்களும் அறிய வேண்டும் என்ற நோகத்தில் இந்த நூல் எழுதப்பட்டது.

 

 

இந்நூலை சிறப்புடன் வெளியிடும் வலைதமிழ் இணைய இதழ் வலைத்தமிழ் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.  

                              

                             அன்பன்

                            சூர்யா சரவணன் 

 

 

 -----------------------*-----------------------------------

              டார்வினின் பிறப்பு 

 

      

      உலகை கூர்ந்து கவனிப்பதையும் ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நிர்மந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினம் நான் இறந்துபோவேன்  

                                          & சார்லஸ் டார்வின் 

 

     தினெட்டாம் நூற்றாண்டில் புகழ் பெற்ற வைத்தியராக இருந்தவர் இராஸ்மஸ் டார்வின் (1731&&1802) இயற்கை விஞ்ஞானி. மூலதத்துவ ஆராய்ச்சியாளர். கவிஞர். பகுத்தறிவு சிந்தனையாளர். பெண்கள், காதல் பற்றியோ பக்கம் பக்கமாக் கவிதை எழுது பெண்களை மயக்க விரும்பவில்லை.  ஆகாய விமானம் எப்படி பறக்க வேண்டுமென்பதை பற்றி கற்பனைசெய்து கவிதை எழுதினார். பேசுகிற இயந்திரம், காற்று அடிக்கும் திசைக் காட்டும் கருவி, தந்திக்கருவி ஆகியவை பற்றி தன்னுடைய வீட்டிலேயே சிறு சிறு கருவிகள்  செய்தார். பலதுறைகள் குறித்து அறிந்துவைத்திருந்தார்.

 

 இங்கிலாந்து மன்னன் மூன்றாம் ஜார்ஜ் லண்டனுக்கு இராஸ்மஸை  அழைத்தார். ஆனால் இராஸ்மஸ் அப்போது, தன்னுடைய முதல் மனைவியை இழந்து, இரண்டாவது திருமணம் செய்யும் நிலையில்  இருந்ததால் அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

 

இராஸ்மஸ் டார்வின், உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் பரிணாம வளர்ச்சிபெற்றே தற்போதைய நிலைக்கு வந்துள்ளதாக கவிதைகளாக எழுதினார். இவரது கவிதைகள் இலகிய உலகை அலங்கரிகவில்லை. நோபல் பரிசை தேடியோ வேறு எந்த இலக்கிய விருதை தேடியோ இவரது கவிதை செல்லவில்லை. இவரது கவிதை, விஞ்ஞான உலகிற்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் பெரிதும் பயன்பட்டன. இராஸ்மஸ் தன் கவிதைகளையும் கருத்துக்களையும் எளிதாக அனைவருக்கும் புரியும்படி எழுதவில்லை. என்றாலும் தான் கண்ட உண்மைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்தது.

 

பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற விலங்கியல் ஆய்வாளர் லாமார்க், 1809-ம் ஆண்டில் விலங்கு சாஸ்திரத் தத்துவம்என்ற நூலையும், 1815-ம் ஆண்டில் முதுகெலும்பு விலங்குகளின் சரித்திரம்என்ற நூலையும் எழுதினார். லாமார்க் எழுதிய பாரிணாமக் கொள்கைகள் பற்றிய நூல்களும் போதிய பலமின்மையால் வரவேற்பு பெறவில்லை.

 

டார்வினின் தாய்வழி பாட்டனார் ஜோசியா வெட்ஜ்வுட் (1730-&1795). இவருடைய இளமைப் பருவம் இனிமையாக அமையவில்லை. அவர் தினசரி ஆறு மைல் தூரம் நடந்து சென்று படித்தார். ஒன்பது வயதில் தந்தையை இழந்த இவருக்கு 12 வயதில் சின்னம்மையால் வலது காலும் பாதிப்புக்குள்ளானது. எனினும் ஜோசியா தனது அசாதாரணமான படைப்புத்திறன், பொறுமையினால், இங்கிலாந்தின் மிகச்சிறந்த களிமண் பாத்திர நிறுவனத்தை உருவாக்கினார்.

 

ஜோசியா பல ஆய்வுகளைச்செய்து, கலைவண்ணம் மிக்க பானைகள், ஜாடிகளை உருவாக்குவதில் பல புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தார். இவர் உருவாக்கிய ஜாஸ்பர்வேர்’, இவரின் சிறந்த வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்தச் சிறப்பு வகை செராமிக்பாத்திரம், நுண்ணிய தூளாகத் தூவப்பட்ட போர்சலைன்’, வெண்ணிற அலங்காரங்களுடன் தனித்தன்மையாகத் திகழ்கிறது. புகழ்பெற்ற பழமையான ரோமானிய கண்ணாடி ஜாடியான போர்ட் லாண்ட் வாஸை”-ப் போன்ற ஒன்றையும் ஜோசியா உருவாக்கினார். இங்கிலாந்து ராணி ஜோசியாவின் படைப்புகளைப்பார்த்து வியக்க, இவர் தன்னை மேதகு பானைக் கலைஞர்என்று அழைத்துக் கொண்டார். அவரின் வெட்ஜ்வுட் நிறுவனம் தான் தயாரித்த காபி கோப்பைகள் மிகவும் உறுதியானவை என்று கூறுகிறது. அந்தக் காபிக் கோப்பைகள் மீது, 40 பேர் உள்ள பேருந்தை நிறுத்தினாலும் உடையாதாம். தற்போதும் இந்த நிறுவனம் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இப்படி சாதனையாளர்களின் மரபு வழியில் வந்த டார்வின் தன்னுடைய வாழ்நாளில் தான் கண்டுபிடித்த ஆய்வுகளினால் புகழின் உச்சிக்கு சென்றவர்.

 

இராஸ்மஸின் மகன் ராபர்ட் டார்வினுக்கு ஆறு குழந்தைகள். அதில் ஐந்தாவது மகன்தான் சார்லஸ் டார்வின். தன்னுடைய தந்தையின் மருத்துவத் தொழிலையே ராபர்ட் டார்வின் தொடர்ந்தாலும், அவரது பரிணாம கொள்கைகள் இவரை ஈர்க்கவில்லை. ஆனால் இத்தகைய பரிணாமக் கொள்கைகளை உலகிற்கு பறைசாற்ற பிறந்த சார்லஸ் டார்வினை உலகிற்கு அளித்த பெருமை ராபர்ட் டார்வினை சேரும். உலகின் உயிர்கள் அனைத்தும் கடவுளின் படைப்பு என்று கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த மதவாதிகளின் மூக்கை உடைக்கும் பொருட்டு 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி ஷ்ரூஸ்பாரி என்ற ஊரில் சார்லஸ் டார்வின் பிறந்தார்.

 

மனித இனத்தைப் பற்றியும், அதன் தோற்றம் பற்றியும் மேலும் மனோ தத்துவ இயலையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக்கூறிய டார்வின், சிறிய வயதில் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே இருந்தார். இவருடைய எட்டாவது வயதில் அவரது தாய் இறந்துவிட்டார். ’’என்னுடைய தாயைப்பற்றி எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை.  அவர் மரணத் தருவாயில் கருப்பு அங்கி அணிந்திருந்தது தான் எனக்கு நினைவில் உள்ளது.’’ என பின்னாளில் கூறினார்.  தாயிடம் அதிக அன்பு கொண்டவராகவே டார்வின் இருந்துள்ளார். மிகச் சிறிய வயதிலேயே தன்னுடைய தாயை இழந்ததால் இவருக்கு வெகு விரைவிலேயே உலக அனுபவம் கிடைத்தது.

 

தாய் இறந்த அடுத்த வருடமே பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஷ்ரூஸ்பாரியில் உள்ள திருச்சபை சார்ந்த உண்டு உறை பள்ளியில் சேர்ந்தார். ஆனால் டார்வின், கல்விக் கற்பதில் ஆர்வம் காட்டவில்லை. காரணம் அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கல்விமுறை மிகவும் மோசமானதாக இருந்தது. அதைக் கற்பதால் குழந்தைகளுக்கு எந்தவித பலனும் இல்லை. காரணம், மதக் கல்வியும் குலதர்மக் கல்வி மட்டுமே போதிக்கப்பட்டது. இந்தக் கல்வியைப் பயின்றவர்களால் சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னுடைய பங்களிப்பை எந்தவகையிலும் அளிக்க முடியவில்லை.

 

இந்தக் கல்வியைப் பயிலாத ஒருசிலரே பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் பீட்ரூட் கிழங்கிலிருந்து சர்க்கரை, நீராவிக் கப்பல், ரயில்,தந்திக் கருவி, நெருப்புப் பெட்டி, புகைப்படம், மின்சார சக்தி ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

 

இத்தகைய பயனற்ற கல்வியை கற்க டார்வின் ஆர்வம் காட்டவில்லை. சிறுவயதுக் குழந்தைகளுக்கே உரிய விளையாட்டு ஆர்வமும் அவருக்கு இல்லை. காடுகளையும் மலைச்சாரல்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதில் அவருக்கு அதீத ஆர்வம் இருந்தது. செடிகளின் கீழே அமர்ந்து கொண்டு அதன் வேர்களை கிள்ளிப் பார்ப்பது, செடிகளின் மேலே அமரும் பூச்சிகளைப் பிடித்து சோதிப்பது, கிளிஞ்சல், பழைய நாணயங்கள் முதலியவற்றை தேடித் தேடி சேகரிப்பது போன்றவற்றில் முழுக்கவனமும் இருந்தது. பள்ளிக்கு செல்லாமல் எப்பொழுதும் இந்த வேலைகளிலேயே டார்வின் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தார். மேலும் கம்பளிப் புழு எவ்வாறு தனது பரிணாம வளர்ச்சியால் பட்டாம்பூச்சியாக மாறுகிறது, தலைப்பிரட்டை எப்படி தவளையாகிறது என்பன போன்ற உயிரினங்களின் மாற்றங்களைப்பற்றியும், வண்டு, மிருகம், பறவைகளைப்பற்றியும் சிறு வயதிலேயே அறிந்து வைத்திருந்தார்.

 

Êசார்லஸ் டார்வின், ஒருமுறை பள்ளி நண்பர்களை அழைத்து, வண்ண திரவம் ஒன்றை ஒவ்வொரு செடியின் அடியிலும் ஊற்றி அந்த செடிகளை வண்ணமயமாக ஆக்குகிறேன் பார் என்று கூறி ஆச்சரியப் படுத்தினாராம். அதை அவர் அதற்கு முன்பு முயற்சிசெய்து பார்த்ததில்லை. ஆனாலும் மற்றவர்களை ஆச்சாரியப்படுத்திப் பார்ப்பதில் டார்வினுக்கு அலாதிப் பிரியம்.

 

மற்றவர்களுக்கு உற்சாகத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்த வேண்டுமென்றே பொய் சொல்வது எனது சிறுவயது பழக்கம்என்று டார்வின் தன்னுடைய சுயசரிதையில் கூறியுள்ளார்.

 

டார்வினுக்கு அப்போது வயது எட்டு. ஒரு நாள் அவரது நண்பன் அவரிடம்,   “ஒரே விதமான நிலத்தில் வளரும் செடிகளில் பலவிதமான வண்ணப்பூக்கள் எப்படிப் பூக்கின்றன?” என்று கேட்டான்.

 

இது தெரியாதா? நாம் எந்தவிதமான வண்ணத் தண்ணீரைச் செடிகளுக்குப் பாய்ச்சுகிறோமோ அந்தவிதமான வண்ணப்பூதான் அச்செடியில் பூக்கும்!என்று ரீல் விட்டாராம். அந்த வயதில் அவர்கூட அதுதான் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தாராம். மரங்கள் ஏன் பச்சையாக இருக்கின்றன? என்று கேள்விகேட்டால் அதற்கும் நாம் பச்சைத் தண்ணீர் தான் ஊற்றுகிறோம் அதனால் தான் அது பச்சையாக இருக்கிறது என்று நாம் கடி ஜோக் நினைவிருக்கிறதா. இதுபோன்ற குரும்புத்தனங்கள் டார்வினுக்கு ஏராளமாக இருந்தது.

 

டார்வின் செடி கொடிகளைப்பற்றி வெளியான புத்தகங்களைத் தேடிப் படித்தார். பண்டைய கிரேக்க அரிஞர் யூக்ளிட் எழுதிய இயற்கைவாதம் குறித்த நூல்களை ஆர்வமுடன் படித்தார்.அத்துடன் ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவாரின் இயற்கைப் பிரிநிலை தத்துவம்என்ற நூல் டார்வினை மிகவும் கவர்ந்தது. 

 

உலகத்தில் அனைத்து உயிரினங்களும் பொதுவான ஒரு மூதாதையாரிடமிருந்தே தோன்றின. அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று போராட்டமிட்டுக் கொண்டே இருந்தன. வாழ்தல் வேண்டி நடந்த போராட்டத்தில் வெற்றி பெற்றவை உலகத்தில் வாழ்கின்றன. தோல்வி அடைந்தவை அழிந்து போகின்றன. இயற்கையாக நடைபெறும் இத்தகைய செயல் இயற்கை பிரிநிலைத் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தையே தன்னுடைய நூலில் ஹெர்பர்ட் அடிப்படையாக கூறியிருந்தார்.

 

ஹெர்பர்ட்டின் தத்துவத்தை படித்த டார்வின், முன்னிலும் அதிகமாக காடு, மலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்தார். பலவகையான தாவரங்களின் இலை, பூ, காய், கனி, வேர், விதை, பட்டை போன்றவற்றையும், கிளிஞ்சல்கள், நண்டு, மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களையும், பழைய நாணயங்கள், பலவகையான தாதுப் பொருட்களையும், பல ரகப் பறவை இனங்களையும் அதன் இறகுகள், எலும்புகள் போன்றவற்றையும் சேகாரிப்பதில் தன்னுடைய முழு நேரத்தையும் செலவிட்டார். தன் வீட்டின் ஒரு பகுதியில் இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு, அவற்றை பல ஆராய்ச்சிகள் செய்து பார்த்தார்.

 

டார்வின் தொடர்ந்து இதுபோல் ஆராய்ச்சியில் மூழ்கியிருப்பதில் அவரது  குடும்பத்தினருக்கு உடன்பாடு இல்லை. நடைமுறை வாழ்க்கையை விட்டு விட்டு தனிப்பட்டு வாழ்பவர்களை பைத்தியம் என்றுதானே நினைப்பார்கள். அதைப் போலத்தான் டார்வினையும் ஊரார் பைத்தியம் என்றே நினைத்தார்கள். அவரது தந்தைக்கு தனது மகனின் எதிர்காலம் குறித்து பயம் ஏற்பட்டது. டார்வின் தன்னுடைய குடும்பத் தொழிலான மருத்துவத்தை பயில எடின்பரோ பல்கலைக் கழகத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பினார்.

 

டார்வின், கட்டாயத்தின்போரில் அங்கு சென்றாலும், அவருக்கு அதில் சிறிதும் உடன்பாடில்லை. உடற்கூறு பற்றிய பாடங்கள் அவருக்கு கசந்தன. மேலும் மயக்க மருந்துகூட கண்டு பிடிக்கப்படாத கால கட்டம் அது. கசாப்புக் கடையில் ஆடு, மாடுகளை வெட்டுவதைப் போல மனிதர்களை வெட்டுவதை பார்க்க டார்வினுக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. இரத்தத்தைப் பார்க்கும் போதெல்லாம் வாந்தி வருவது போல் இருக்கும். அதனால் மருத்துவ நூல்களைக்கூட படிக்க அவருக்கு ஆர்வம் வரவில்லை மருத்துவப் பாடங்களின்மீது டார்வினுக்கு வெறுப்பே வந்தது. எனவே, மருத்துவப் படிப்பில் ஆர்வம் வரவில்லை என்றாலும், அந்த இரண்டு வருடத்தில் தன்னுடைய பொது அறிவை அதிகப்படுத்திக்கொண்டார்.

 

  முத்துச்சிப்பிகளைத் தேடிச் செல்லும் வலைஞர்களுடன் டார்வின் கடலில் வெகுதூரம் செல்வார். அப்படி செல்லும் போது ஒரு சமயம் கடற்புழு ஒன்றைப்பற்றி ஆராய்ச்சி செய்து, ஒரு கட்டுரை எழுதி, அதனை அறிஞர் நிறைந்த சபையில் படித்தார். தவிர, ஜான் எட்மன்ஸ்டோன் என்ற அடிமையிடமிருந்து, செத்துப்போன பட்சிகளுக்கு உள்ளே வைக்கோல் முதலியவற்றை திணித்து உயிர் உள்ளவைப்போல வைத்துக் கொள்ளவும் கற்றார். மேலும் இரண்டாவது வருடத்தில் இயற்கையைப்பற்றி ஆராய்ந்த பிளினியன் சங்கத்தில் சேர்ந்தார். ஆனால் இங்கு நிலம் சம்பந்தப்பட்ட ஆய்வுகளே அதிகமாக மேற்கொள்ளப்பட்டன. ராபர்ட் எட்மண்ட் கிராண்ட் என்பவரது பரிசோதனைகளுக்கு டார்வின் உதவினார். மேலும் 1827 மார்ச் மாதம் தன்னுடைய கண்டுபிடிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அதாவது சிப்பியில் காணப்படும் கருப்பு நிற கருவணு ஒரு பெரிய அட்டை வகை மீனினுடையது என்பதை கண்டறிந்தார். நில அமைப்பியல் சார்ந்த சங்கத்தில் தொடர்ந்து இருப்பது டார்வினுக்கு சோர்வளித்தது. ஆனாலும் இங்கு செடிகளை வகுப்பு வாரியாக பிரிப்பதைப்பற்றி கற்றுக் கொண்டார். மேலும் பல்கலைக்கழக அருங்காட்சியத்திற்கும் இத்தகைய பணிகளை செய்வதில் உதவினார். இந்த அருங்காட்சியகம் அந்நாளில் ஐரோப்பாவின் பெரிய அருங்காட்சியகமாக இருந்தது.

 

டார்வினுக்குத் தனியாக நீண்ட தூரம் நடப்பதில் அலாதி பிரியம் உண்டு. சந்தர்ப்பம் கிடைக்கிம் போதெல்லாம் இயற்கை அழகு நிரம்பிய இடங்களுக்குச் சென்று உலாத்துவார். அப்படி உலாத்தும் பொழுது கூட செடிகளையும், மரங்களையும், பறவைகளையும், விலங்குகளையும் ஆராய்ச்சி செய்வார். பள்ளி விடுமுறை நாட்களில் முப்பது நாற்பது மைல் தூரம் கூட நடந்து செல்வாராம். இவ்வாறு செல்லும்போது இடைப்பட்ட பகுதியில் யாராவது அறிஞர்கள் இருப்பதைப் பற்றி கேள்விப்பட்டால் அங்கு சென்று, நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்.

 

சார்லஸ் டார்வின் தந்தை தனது மகனுக்கு மருத்துவப் படிப்பில் ஆர்வம் இல்லை என்பதை தெரிந்து கொண்டார். சார்லஸ் டார்வினை ஒரு பாதிரியாராக்க முடிவுசெய்தார். அதன் முதற்படியாக ஏதாவது கல்லூரியில் சேர்ந்து ஒரு பட்டம் பெற வேண்டும். என்பதால் சார்லஸ் டார்வினை பத்தொன்பதாவது வயதில் கேம்பிரிட்ஜ் கல்லூரியில் சேர்ந்தார். சார்லஸ் டார்வின் வழக்கம்போல் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

 

சார்லஸ் டார்வின் உலகத்திற்கு இவர் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருந்ததை முன்னரே தெரிந்திருந்ததாலோ என்னவோ டாக்டர் கிராண்ட் என்பவர், டார்வினின் மனத்தில் இயற்கை நூலை படிக்கும்படியான ஆர்வத்தை தூண்டினார். தன்னுடைய கல்வி முதலியவற்றில் சிறிது மாற்றத்தை அறிந்த டார்வினுக்கு மறுபடியும் பழைய பைத்தியம் வந்துவிட்டது. தன்னுடைய கல்வியில் நாட்டத்தை செலுத்தாமல் எந்தநேரமும் கடற்கரை ஓரங்களிலும், மலைப்பகுதிகளிலும் சுற்றிச்சுற்றி பலவித நாணல் தண்டுகளையும், தாவர வகைகளையும் சேகரிப்பதில் அதீத ஆர்வம் காட்டினார். 

 

இவ்வாறு செடி, கொடி, பூச்சிகளை ஆராய்வதில் ஆர்வம் கொண்ட சார்லஸ்டார்வின் ஒருநாள், ஒரு மரத்தடியில் நின்று, அதன் மேற்பட்டையை உரித்துக் கொண்டிருந்தார். அதன் அடியில் இரண்டு பூச்சிகள் இருந்தன. இரண்டையும் இரண்டு கைகளில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மூன்றாவது பூச்சியொன்று வந்தது. அதையும் விடக்கூடாது என்று நினைத்த டார்வின், ஒரு கையிலே வைத்துக் கொண்டிருந்த பூச்சியை வாயிலே வைத்து இடுக்கிக் கொண்டு, மூன்றாவது பூச்சியைப் பிடிக்க முயன்றார். வாயிலிருந்த பூச்சி, தன் கொடுக்கிலிருந்து ஒருவிதமான திரவத்தைக் கக்கியது. அந்த வாசனை இவருக்கு எரிச்சலைக் கொடுத்தது. வாயிலிருந்த பூச்சியைக் கீழே துப்பினார். அது உடனே பறந்து சென்று விட்டது. அந்த பதற்றத்தில் கையிலிருந்த பூச்சியையும் நழுவ விட்டார். மூன்றாவதாக பார்த்த பூச்சியும் மறைந்துவிட்டது. சார்லஸ் டார்வின், கல்லூரியில் பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார். வீட்டிலிருந்த ஒரு வருட காலத்தில் கிரேக்க லத்தீன் இலக்கியங்களைப் படித்து அந்த மொழியில் முழுப்புலமை பெற்றார். ஏனென்றால் தன்னுடைய ஆராய்ச்சிக்கான மூலக்கருத்துக்கள் எல்லாம் கிரேக்க மொழியில் இருந்த தத்துவங்களிலும் சித்தாந்தக் கருத்துக்களில் அதிகம் இருப்பதாகவே உணர்ந்தார் சார்லஸ் டார்வின்.

 

இந்நாளில் அவருடைய உறவினர் வில்லியம் டார்வின் ஃபாக்ஸ் என்பவர் பூச்சிகளை சேகரிக்கும் ஆர்வத்தை உண்டு பண்ணினார்.  ஸ்டாம்புகளை சேகரிப்பதுபோல் பூச்சிகளை சேகரிக்க வேண்டும் என்று ஆர்வம் இவருக்கு ஏற்பட்டது. தாவரவியல் பேராசிரியர் ஜான் ஸ்டீவன் ஹென்ஸ்லோ எழுதிய ’’பூச்சிகளைப் பற்றிய ஆய்வுகள்’’ என்ற புத்தகத்தில் வெளிவந்தன. இவர் ஹென்ஸ்லோவிடம் நெருங்கிப் பழகினார். அந்தப் பழக்கத்தால் ஹென்ஸ்லோ தாசன்என்றே அழைக்கப்பட்டார். இவ்வாறு இவருடைய சிந்தனைகள் வேறு திசைகளில் இருந்தாலும் பரீட்சை நேரம் வந்து விட்டால் உடனே படிப்பில் கவனம் செலுத்துவார். 1831-ம் வருடம் நடந்த இறுதி ஆண்டு பாரீச்சையில் 178 பேரில் 10-வது ரேங்க் பெற்று தேறினார். 

 

இந்நிலையில் பாலேவின் இயற்கை குறித்த நூல் ஒன்றையும், ஜான் ஹெர்ஸ்செல் என்பவரின் தத்துவம் சார்ந்த நூலையும், அலெக்சாண்டர் வோன் ஹம்போல்ட்டின் அறிவியல் சார்ந்த சுற்றுப் பயணங்களின் விளக்கங்களையும் படிக்கும் வாய்ப்பு சார்லஸ் டார்வினுக்கு கிடைத்தது. அதில் ஏற்பட்ட ஆர்வத்தால் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பல இடங்களுக்கு பயணம் செல்லத் திட்டமிட்டார். அதற்கு ஆயத்தமாக ஆடம் செட்ஜ்விக் என்பவருடைய நிலவியல் குறித்த திட்டத்தில் சேர்ந்து கோடையில் அவருடன் வேல்ஸ் என்ற நகரிலுள்ள ஸ்ட்ராட்டா என்ற பகுதிக்கு நிலப்படம் தயாரிக்க சென்று வந்தார். அதன்பிறகு இரண்டு வாரங்கள் தன்னுடைய நண்பர்களுடன் பார்மௌத் என்ற பகுதிக்கு சென்றுவிட்டு திரும்பிய டார்வின் அங்கு ஹென்ஸ்லோவிடமிருந்து தனக்கு வந்த கடிதத்தைக் கண்டார். அதில் ராபர்ட் பிட்ஸ்ராய் என்பவர் தலைமையிலே ஒரு குழு, பீகிள் என்ற கப்பலில் தென்னமெரிக்க கரைப் பிரதேசங்களுக்கு சென்று காலமானி கருவி கொண்டு அந்த நாடுகளின் மணி நேரங்களைக் கணித்துவர இருப்பதால் அந்த குழுவுடன் டார்வினும் சென்றுவர வேண்டுமென்று நான்கு வாரங்களில் அந்தக் கப்பல் புறப்பட இருப்பதாகவும் ஹென்ஸ்லோ குறிப்பிட்டிருந்தார்.  ஆனால் கடற்பயணத்திற்கு சார்லஸ் டார்வினின் தந்தை ஒப்புதல் அளிக்கவில்லை. இது காலவிரயம் என்றார். ஆனால் சார்லஸ் டார்வினின் மைத்துனர் ஜோசய்யா வெட்ஜ்வுட்  டார்வினின் தந்தையை சமாதானம் செய்து சார்லஸ் டார்வின் கடற் பயணம் செய்ய ஏற்பாடு செய்தார். 

 

          

-------*--------

 

 

 

          பீகிள் பயணம் 

             

 

பிள்ளைகளின் அறிவு விரைவில் முதிராததற்கு அவர்களுடைய தாயின் அதீதமான அன்பே காரணம்

 

 

    சார்லஸ் டார்வினுக்கு கேம்பிரிஜ் பல்கலைகழகத்தில் ஜான் ஹென்ஸலோ என்பவரின் நட்பு கிடைத்தது. அவர்மூலமாக ராபர்ட் பிட்ஜராய் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்த இருவரும் இணைந்து தென் அமெரிக்க கடற்கறைப் பகுதியில் ஆய்வுசெய்ய 1831 ஆம் ஆண்டு கடல் பயணம் மேற்கொண்டனர்.

 

  கடல் பயணங்களில் ஆங்கிலேயர்கள், பூகோள வல்லுனர், தாவர வல்லுனர், வானியல் வல்லுனர், பிராணிவர்க்க வல்லுனர் போன்றவர்களையும் அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி பிட்ஜ்ராயும் ஒரு தாவர வல்லுனரை அழைத்துச் செல்ல விரும்பினார். அந்த சமயத்தில்தான் ஜான் ஹென்ஸ்லோ சார்லஸ் டார்வினை சிபாரிசு செய்தார். பிட்ஜ்ராய்க்கு டார்வினைப் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது.

 

Ê  நிவேதிதாவை பாரதி சந்தித்ததும் எப்படி அவருக்குள் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டதோ. வள்ளலாரின் சிந்தனைகளை எப்படி தந்தை பெரியாருக்கு எப்படி பகுத்தறிவு சிந்தனையைத் தூண்ட காரணமாக இருந்ததோ, தென்னாப்பிரிக்காவில் இனவெறிப்போராட்டம் எப்படி காந்திக்கு இந்தியாவில் போராடுவதைப் போல் ஒரு பயிற்சிக் கலமாக இருந்ததோ அதேப்போல் சார்லஸ் டார்வினுக்கு இந்த பீகிள் பயணம், பெரிய மாறுதலை ஏற்படுத்தியது.

 

Ê  சார்லஸ் டார்வின் சுயசரிதையில், “பீகிள் பயணம் என்னுடைய வாழ்கையில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி. என் முழு வாழ்க்கையையும் அது நிர்ணயித்துவிட்டது. நான் எதற்காக பிறந்தேன் ஏன் இந்த பூமிக்கு வந்தேன் என்னுடைய எதிர்காலம் என்ன? என்பது குறித்து இந்த பயணம்  என் மனதைப் பக்குவப்படுத்தியது. இயற்கையின் மீது எனக்கு இருந்த தாகத்தையும் அற்வையும் இந்தப் பயணம் விரிவுபடுத்தியது. இயற்கைபற்றிய அறிவை நான் முழுமையாகப்பெற இந்த பயணம் எனக்கு மிகவும் உதவியது. இந்த உலகத்திற்கு பயன்படும் ஒரு மனிதனாக என்னை ஆக்கியது இந்த பயணம். அந்த ஐந்து வருட காலத்தில்தான் இயற்கைத் தத்துவங்கள், விலங்குகள், அதன் குணாதிசயங்கள், அவற்றுள்ளிருக்கும் ஒருமைப்பாடுகள் வேறுபாடுகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிந்தது. இல்லையெனில் நானும் கடவுள் தான் மனிதனை படைத்தார். அவனுடைய விலா எலும்பிலிருந்து பெண்ணை படைத்தார் என்று சொல்லும் மூடர்களில் ஒருவனாகவே இருந்திருப்பேன்என்றார்.

 

   பீகிள் பயணம், 1831-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 27ஆ-ம் நாள் ஆரம்பித்தது. ஐந்துவருட கடற்பயணத்தில் சார்லஸ் டார்வின் என்ன செய்தார் என்பதுபற்றி பிட்ஜ்ராய் கூறுகையில்,  ‘‘பீகிளில் இருந்தவர்கள் அனைவரும் கடற்கரையை அளந்து கொண்டு, விளக்கப்படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரத்தில், டார்வின் தன்னுடைய நேரத்தையும் நிலங்களைப்பற்றி ஆராய்வதிலும், தன்னுடைய ஆய்விற்குத் தேவையானவற்றை சேகரிப்பதிலுமே அதிக நேரம் செலவிட்டார்’’ என்று கூறியுள்ளார். டார்வின், தன்னுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களை குறிப்பெடுத்துக்கொள்வார். தன் கடற்பயணம் குறித்த தகவல்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும், குடும்பத்திற்கும் உடனுக்குடன் அனுப்புவார்.

 

  நிலவியல், பூச்சிகளை சேகரித்தல், கடல்வாழ் உயிரினங்களை பகுத்தறிவது ஆகியவற்றில்  மிகுந்த அறிவு பெற்றிருந்தார். ஆனால் மற்ற துறைகளுக்கு அவர் புதியவர். அதனால் அத்துறை சார்ந்த மாதிரிகளை, நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு சேகரித்து வைத்திருந்தார். கடலில் பயணம் செய்ததால் அவருக்கு தொடர்ந்து ஒவ்வாமை ஏற்பட்டது. இதனால் அவருடைய விலங்கியல் சார்ந்த ஆய்வுகள் பெரும்பாலும் கடலின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் நுண்ணுயிர்களைப் பற்றியே இருந்தன.

 

  கடற்பயணத்தில் முதலில் செயிண்ட் ஜாகோ பகுதியில் எரிமலைப்பாறை பிளவுகளை டார்வின் பார்த்தார். பின் பிட்ஜ்ராய் நிலவியல் கோட்பாடுகள் குறித்து லீல்லி எழுதிய புத்தககத்தை டார்வினுக்கு கொடுத்தார். அந்த புத்தகத்தில் நிலம் எவ்வாறு மெதுவாக உயர்கிறது என்பதையும் பேரிடற்காலங்களில் எப்படி சரிவடைகிறது என்பதைப்பற்றி எழுதப்பட்டிருந்தது. இந்தக் கோட்பாடுகளை ஒட்டியே தன்னுடைய கருத்துக்களையே சார்லஸ் டார்வின் கொண்டிருந்ததால் நிலவியல் தொடர்பான புத்தகம் ஒன்றை எழுத விரும்பினார்.

 

   பீகிள் கப்பல் பிரேசில் வந்தது. அங்கிருந்த வெப்பமண்டல காடுகளைக்கண்டு சார்லஸ் டார்வின் மிகவும் மகிழ்ந்தார். ஆனால் அங்கிருந்த அடிமைத்தனத்தைக்கண்டு மிகுவும் வருந்தினார். பீகிள் கப்பல் சிலி நாட்டை அடைந்தபோது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அந்தப் பகுதியில் நிலப்பரப்பு உயர்ந்ததற்கான அடையாளங்களை சார்லஸ் டார்வின் கண்டார். கடலின் மேற்பரப்பில் ஒருவகை சிப்பி போன்ற கடல்வாழ் உயிரினங்கள் வந்ததையும் ஒருவகை பாடும் பறவைகள் கூட்டமாக வாழ்ந்து வருவதையும் பார்த்தார். ஆனால் அவை தீவிற்கு தீவு வித்தியாசப்படுவதையும் கண்டறிந்தார். அதேபோல ஒரு தீவிலுள்ள பிராணியும், பறவையும், பட்டுப்பூச்சி வகையறாக்களும், அடுத்த தீவுகளில் இருப்பதைவிட மாறுபட்டிருப்பதையும் கண்டார். மேலும் ஆமைகளின் ஓடுகளும் சிரிய அளவில் மற்ற தீவுகளில் இருந்து வித்தியாசப்பட்டிருப்பதையும் கண்டார். அந்த ஓடுகளை சேகரித்துக் கொண்டு வரவேண்டுமென்று நினைத்தார். ஆனால் அது முடியாமல்போனது. மேலும் ஒரு நாட்டின் தொன்முதற் குடியினர் வேறொரு நாட்டில் குடியேறும்போது தங்களுடைய மகிழ்ச்சி, நகைச்சுவை உணர்வை இழப்பதைக் கண்டார். அதற்கெல்லாம் காரணம் அந்நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலை என அறிந்தார். இவ்வாறு ஒரே இன ஜீவராசி தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாறுபட்டிருப்பதை கண்டார். பிறகு காலப்பகாஸ் தீவுகளிலுள்ள பறவைகளையும், பிராணிகளையும் ஆராய்ந்தார். அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒவ்வொரு வகையில் அதாவது உடற்கூறுபாட்டில் சம்பந்தம் கொண்டிருப்பதை அறிந்தார்.  கடலுக்கருகில் பவழத்தீவுகள் எப்படி உருவாகின்றன என்பதை பீகிள் கடல் பயணத்தில் அறிந்து கொண்டார். இவ்வாறாக சார்லஸ் டார்வினின் பீகிள்பயணம் அவருக்கு பல்வேறு ஆய்வுகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

 

   பிட்ஜ்ராய் தன்னுடைய கடற்பயணம் குறித்த விவரங்களை எழுதத் தொடங்கினார். டார்வினின் நாட்குறிப்பை படித்த அவர் அதையும் தன்னுடைய விவரக்குறிப்பில் சேர்த்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். ஒருவழியாக தன்னுடைய ஐந்து வருட கடற்பயணத்தை முடித்துக் கொண்டு பீகிள் குழுவினர் 1836 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆ-ம் தேதி நாடு திரும்பினர். அதற்கு முன்பாகவே அறிவியல் அறிஞர்கள் வட்டாரத்தில் சார்லஸ் டார்வினுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. அதற்கு காரணம் 1835-ஆம் ஆண்டில் ஹென்ஸ்லோ டார்வினின் நிலவியல் சார்ந்த கடிதங்களை துண்டு பிரசுரங்களாக  பல அறிஞர்களுக்கு கொடுத்திருந்தார். பீகிள் பயணம் முடிந்து, நாடு திரும்பிய சார்லஸ் டார்வின், தன்னுடை ஊரான ஸ்ரூஸ்பாரிக்குச் சென்றார். அங்கிருந்து உடனடியாக கேம்பிரிட்ஜ்- சென்று ஹென்ஸ்லோவை சந்தித்தார். அவர் சார்லஸ் டார்வின் கொண்டு வந்திருந்த மாதிரிகளை வகைப்படுத்த இயற்கை ஆய்வாளர்களை சந்திக்க வேண்டுமென்று ஆலோசனை கொடுத்தார். மேலும் தாவிரவியல் தொடர்பான மாதிரிகளை ஆய்வு செய்வதாகவும் கூறினார். அவர் தாவிரவியல் அறிஞர் என்பதால் அவரால் அது குறித்து ஆய்வு மேற்கொள்ள முடியும். இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள, சார்லஸ் டார்வினின் தந்தை பண உதவி செய்தார். தன்னுடைய மகன் தன்னுடைய சொந்த பணத்திலேயே ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்று விரும்பினார்.

 

Ê  சார்லஸ் டார்வின், லண்டனில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சென்று நிபுணர்களை சந்தித்து தன்னுடை சேகரிப்புகள் குறித்து கலந்துரையாடினார்.  சார்லஸ் டார்வின் தன் ஆய்வுகள், கடற்பயணம் குறித்தும் அனைவரும் பாராட்டினர். அவருடைய மாதிரிகளை வைத்துக்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ள விலங்கியல் ஆய்வாளர்கள் முன்வந்தனர். அவர்களுக்கு அதிக அளவிலான வேலை இருந்தது. ஏனென்றால் சார்லஸ் டார்வின் ஆயிரக்கணக்கான மாதிரிகளை தன்னுடைய கடற்பயணத்தின்போது சேகரித்துக் கொண்டு வந்திருந்தார்.

 

   லீல்லி, அக்டோபர் 29ஆ-ம் தேதி டார்வினை சந்தித்தார். அப்பொழுது அவர் உடற்கூறு ஆய்வாளரான ரிச்சர்டு ஓவனை டார்வினுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் ராயல் கல்லூரியில் உள்ள அறுவை மருத்துவர்களைக் கொண்டு டார்வினின் புதைப்படிவ எலும்புகள் குறித்து ஆய்வுகள் செய்துவந்தார். தன்னுடைய ஆய்வின் மூலம் வியப்பிற்குறிய பல உண்மைகளை கண்டுபிடித்தார் நீர் யானையைப்போன்ற பெரிய உருவத்தையும் எலி போன்ற முகத்தையும் உடைய ஒரு பிராணியின் எலும்பை சார்லஸ்டார்வின் கொண்டு வந்திருந்தார். பலவகையான உயிரினங்களைப் பற்றியும் ஓவன் இனம் கண்டார். இந்த வகை உயிரினங்களை ஒத்த சிறிய வகை உயிரினங்கள் தென்னமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்து வருவதையும் கண்டார். அதே வருடம் டிசம்பர் மாதத்தில் கேம்பிரிட்ஜில் தங்கி தன்னுடைய சேகரிப்புகள் குறித்த குறிப்புகளை திருத்தி எழுதினார் சார்லஸ் டார்வின். இவ்வாறு அவர் எழுதிய முதல் கட்டுரையில் தென்னமெரிக்க நிலப்பரப்பு சிறிது சிறிதாக உயர்ந்துகொண்டு வருவதைப்பற்றி குறிப்பிட்டார். மேலும் 1837 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆ-ம் தேதி லீல்லியின் ஆதரவுடன் நிலவியல் வல்லுனர்களின் முன்னிலையில் படித்தார். அந்நாளில் தன்னுடைய பாலூட்டிகள் மற்றும் பறவை இனங்களை பற்றிய மாதிரிகளையும் விலங்கியல் வல்லுனர்களிடம் முன்வைத்தார். இதையடுத்து பறவையியல் வல்லுனரான ஜான் கௌட், காலப்பாகஸ் என்னும் பறவை இனங்கள், கருங்குருவி மற்றும் பாடும்பறவை போன்றவற்றின் கலப்பு என்ற சார்லஸ் டார்வினின் கருத்தை முன்மொழிந்தார். பிப்ரவரி 17-ஆம் தேதி டார்வின் நிலவியல் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்பொழுது டார்வினின் புதைப்படிவங்களை கொண்டு ஓவன் கண்டுபிடித்தவற்றை லீல்லி படித்தார்.

 

   இவ்வாறு பீகிள் பயணத்தை முடித்துக்கொண்டு வந்து பல உண்மைகளையும் கண்டறியும் மனிதராக மற்றவர்கள் போற்றும் வகையில் இருந்த டார்வின், இந்தப் பயணத்தின் வாயிலாக, “ஒரு இனம் மற்றொரு இனமாக மாறும்என்ற பேருண்மையை கண்டறிந்தார். இதற்கு தன்னுடைய நிலவியல் சார்ந்த மாதிரிகளை எடுத்துக் காட்டினார். தொடர்ந்து ஜூலை மாதத்தில் உயிரினங்களின் மாற்றம் தொடர்பான தன்னுடைய குறிப்பேட்டில் நான் கருதுகிறேன்என்று முதல் பரிணாமக் கொள்கைக் குறித்த மரத்தை வரைந்தார். மொத்தத்தில் பீகிள் பயணம் அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அந்த பயணத்திற்கு பின்புதான். வழிவழியாக உலகம் நம்பிக் கொண்டிருந்த ஆதாம் ஏவாள் கதை ஒரு ஹம்பக்என்று மக்கள் நினைக்க ஆரம்பித்தார்கள்.

 

 

 

 

 

 

-தொடரும்..............

by Swathi   on 30 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.