|
|||||
சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்! |
|||||
சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம் திறக்கப்பட்டு உள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டியார் உள்ளிட்ட பல பிரபலங்களின் ஆதரவுடன் தமிழ் இசையை வளர்க்கும் நோக்கத்துடன் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், சென்னையில் 1943-ம் ஆண்டு, தமிழ் இசைச் சங்கத்தை ஆரம்பித்தார். சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள் மட்டுமல்லாது இசையும் கூத்தும் வல்லபாணர், பாடினியர், விறலியர் போன்றோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாள இசைக்கருவிகள் ஆகியவற்றின் துணையோடு சிறப்பாக பாடியுள்ளனர். உடுக்கை, கல்லலகு, கின்னரம், குடமுழவம், தக்கை, தமருகம், கல்லவடம், கிணை முதலான இசைக் கருவிகள் புழக்கத்தில் இருந்துள்ளன. இதை நாம் சங்க காலப் பாடல்கள் வாயிலாக அறிகின்றோம். அவ்வாறு அறியப்பட்ட ஒரு சில இசைக் கருவிகளை இப்போதும் பார்க்க ஏற்பாடு செய்து உள்ளனர். அண்மையில் சென்னை பாரிமுனையில் அமைந்திருக்கும் தமிழ் இசைச் சங்கத்தின் இரண்டாவது மாடியில் “தொல் இசைக் களஞ்சியம்” என்ற பெயரில் சிறிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டு உள்ளது. இக்காட்சியகத்தில் 80 பழமையான இசைக்கருவிகள் காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளன. வட இந்தியர்கள் வாசிக்கும் தாளக் கருவியான நகரா, இன்றும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி கோயில்களில் வாசிக்கப்படும் பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவை, பழமையான ஸ்ருதிப் பெட்டி, படகு வடிவில் அமைந்த யாழ், மடக்கு வீணை, மயில்நாக வீணை போன்ற பழமையான கருவிகள் காட்சியகத்தில் இடம்பெற்று உள்ளன. இது தவிர பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் தாய் சண்முகவடிவு வாசித்த வீணை, புல்லாங்குழல் வித்வான் மறைந்த என். ரமணி உபயோகப்படுத்திய தம்பூரா, விக்கு விநாயகராம் வாசித்த கடம், பாடகி நித்யஸ்ரீயால் வழங்கப்பட்ட அவரது பாட்டி டி.கே. பட்டம்மாள் உபயோகப்படுத்திய ஸ்ருதிப் பெட்டி, பாடலாசிரியர் பாபநாசம் சிவன் தன் கைப்பட எழுதிய இரண்டு கீர்த்தனைகள் மற்றும் அவர் உபயோகப்படுத்திய கண் கண்ணாடிகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை வாசித்த இரண்டு நாதஸ்வரங்கள் காட்சி அரங்கின் நடுவே காட்சியளிக்கிறது. அமைதியாக இருந்த களஞ்சியத்தின் வலது ஓர மூலையில் உள்ள ஹாலில் ஏதோ பேச்சுச் சத்தம், அதைக் கேட்டு உள்ளே நுழைந்தால், இடதுபக்கம் ”தவில்” இசைக்கருவி செய்வது எப்படி என்பதன் வீடியோ ஒளிபரப்பாகிறது. இதுபோல் பல்வேறு இசைக்கருவிகளின் தயாரிப்பை வீடியோவாக வெளியிடுவது என்பது நிர்வாகத்தின் திட்டங்களில் ஒன்று. ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் வீடியோவிற்கு எதிரே ஜப்பானிய இசைக்கருவிகள் இடம்பெற்று உள்ளன. இக்கருவிகள் தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும் இணைப்பை வலியுறுத்துகிறது எனலாம். அதன் மேலே ஜப்பானிய பெண் அந்த இசைக் கருவியை வாசிப்பது போல் ஓவியம் சிறப்பாக உள்ளது. இசைக் கருவிகளின் அருங்காட்சியகத்தில் ஆங்காங்கே பிரபல சங்கீத வித்வான்களின் ஓவியங்கள் அற்புதமாகக் காட்சி அளிக்கின்றன. அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களின் பதிவேடு உள்ளது, அதில் 1940 -50 - ஆம் ஆண்டுகளில் விஜயம் செய்த பிரபலங்களின் குறிப்பும் கையெழுத்தும் உள்ளன. மொத்தத்தில் தொல்லிசைக் களஞ்சியம், தமிழ் மக்கள், இசை படிப்பவர்கள், இசை விரும்பிகள் போன்றோர் பார்க்கவேண்டிய இடமாகும். சென்னை வரும் சுற்றுலாப் பயணிகள், சென்னையை சுற்றிப்பார்க்கும் இடங்களின் பட்டியலில் இனி தொல்லிசைக் களஞ்சியம் அருங்காட்சியகத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அருங்காட்சியக பார்வையாளர் கட்டணமாக இருபது ரூபாய் வசூலிக்கப்படுகிறது. செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். திங்கட்கிழமை விடுமுறை நாள் ஆகும். |
|||||
by Mani Bharathi on 21 Apr 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|