ஏரிகளைச் சீரமைத்து வரும் இளைஞர் நிமல் ராகவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த நாடியம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிமல் ராகவன். நீர்த் தேவையும் அதனை உருவாக்கி சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் கற்றறிந்து ஏரிகளைப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் நிமல் ராகவன். இந்நிலையில் இளம் வயதிலேயே பொதுச் சிந்தனையுடன் ஏரிகளைச் சீரமைத்து வரும் நிமலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; "இளம் வயதிலேயே பொதுச் சிந்தனையுடன் ஏரிகளைச் சீரமைத்து வரும் நிமல் ராகவனுக்கு பாராட்டுகள். எடுத்துக்காட்டெனச் செயல்பட்டு இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் அவருக்கு வாழ்த்துகள். நீர்நிலைகளைத் தூர்வாருதல் – பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் என்பது நீர்மேலாண்மையில் முக்கியமானது. தற்போது கூட நமது அரசின் சார்பில் 2,473 ஏரிகள், 344 அணைக்கட்டுகள், 4,879 கி.மீ வரத்துக் கால்வாய்கள், கால்வாய்கள் / ஆறுகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீர்நிலைப் பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும். நம்முடைய இளைஞர்களும் – தன்னார்வலர்களும் – சூழலியல் அமைப்புகளும் நிமல் ராகவன் போன்று தத்தமது பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைத்திட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
|