|
|||||
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் |
|||||
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் தாலுகா அரசு மருத்துவமனையை செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனையாகத் தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து மாவட்ட மருத்துவமனையாகத் தரம் உயர்த்தி 2021-ம் ஆண்டு அனுமதி வழங்கியதோடு, ரூபாய் 110 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது.
மேலும் தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் தேசியச் சித்த மருத்துவமனை வளாகம் அருகே உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறைக்குச் சொந்தமான இடத்தில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு நிலம் சுத்தம் செய்யப்பட்டு மருத்துவமனை கட்டிடப் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
6 தளங்கள் கொண்ட 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்த வைக்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூபாய் 115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம், ரூ. 7.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - புறநகர் பிரிவு, ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொதுச் சுகாதார ஆய்வகக் கட்டடம் மற்றும் 3 நகர்ப்புறத் துணை சுகாதார நிலையங்களைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
புதிய மாவட்ட மருத்துவமனை 6 மாடி கொண்டது. இக்கட்டடத்தில், 4 அறுவை சிகிச்சை அரங்கம், 3 அவசர அறுவை சிகிச்சை அரங்கம், 111 தீவிரச் சிகிச்சை படுக்கை, 289 படுக்கை கொண்ட பொதுப் பிரிவு என, 400 படுக்கை வசதிகள் உள்ளன.
இந்த மருத்துவமனையில் தரைத்தளத்தில் அவசரச் சிகிச்சைப் பிரிவு, ஊடுகதிர், சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன், மருந்தகம், புற நோயாளி பிரிவு. முதல் தளத்தில் அவசர அறுவை சிகிச்சை அரங்கம், நம்பிக்கை மையம், குடும்ப நலப் பிரிவு, கர்ப்பிணிகளுக்கான புறநோயாளிகள் பிரிவு, கால் போஸ் கோபி உள்ளிட்டவையும். 2வது தளத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சைப் பிரிவு, பிரசவ அறை, மகப்பேறு உயர் தீவிரச் சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு அறுவை அரங்கம், பிரசவ முன் கவனிப்பு அறை, அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு.
3-ஆவது தளத்தில் பிறந்த குழந்தைகள் தீவிரச் சிகிச்சைப் பிரிவு, நீரிழிவு பிரிவு, ரத்த வங்கி, பிரசவ பின் கவனிப்பு பிரிவு, குடும்ப நல அறுவை சிகிச்சைப் பிரிவு. 4வது தளத்தில் ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, பெண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, தீக்காயப்பிரிவு ஆய்வகம்.
5வது தளத்தில் அவசர அறுவை சிகிச்சை அரங்கம், தீவிரச் சிகிச்சைப் பிரிவு, உயர் சார்பு அலகு பிரிவு, பொதுச் சிகிச்சைப் பிரிவு. 6வது தளத்தில் குழந்தைகள் பொதுப் பிரிவு, ஆண்கள் பொதுப் பிரிவு, பெண்கள் பொதுப் பிரிவு என மொத்தம் ஆறு தளத்தில் மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பாகத் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
|||||
| by hemavathi on 12 Aug 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|