|
||||||||
அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது... |
||||||||
உயர்நிலைப் பள்ளியை முடித்த பிறகு கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடுகிறது. இந்த வேறுபாட்டிற்கு குடும்பப் பொருளாதாரம், கலாச்சார மாற்றங்கள், வாழ்வியல் கூறுகள், கல்வி முறைகள், அரசாங்கக் கொள்கைகளில் உள்ள வேறுபாடுகள் எனப் பலவித காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சமீபத்திய தரவுகளின்படி, உலகளவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் சுமார் 40% முதல் 50% வரை மட்டுமே கல்லூரிப் படிப்பைத் தொடர்கின்றனர். இருப்பினும், இந்த சதவீதம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. வட அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசியா போன்ற வளர்ந்த நாடுகளில் பரவலாக 60 முதல் 80% வரையிலும் வளரும் நாடுகளான ஆப்பிரிக்கா, தெற்காசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் 50% சதவீதத்திற்கும் குறைவாகவே கல்லூரிகளில் சேருகின்றனர். இக்கட்டுரையில், அமெரிக்காவில் நிலவும் சேர்க்கைப் பற்றியும், தமிழக மாணவர்களின் கல்லூரி சேர்க்கை குறித்தும் விவாதிப்போம். அமெரிக்காவில் ஏறத்தாழ 60% சதவீதம் மாணவர்களே உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்த உடனேயே கல்லூரியில் சேருகின்றனர். பொருளாதார நிலைமைகள், உயர்கல்வி கொள்கைகளில் மாற்றங்கள், கலாச்சார போக்குகள் போன்றவற்றால் சதவீதம் ஆண்டுதோறும் சிறிது ஏற்ற இறக்கமாகக் காணப்படுகிறது. உதாரணமாக, தேசிய கல்வி புள்ளியியல் மையம் (NCES) படி, 2021 இல் 62.7% பேர் உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு உடனடியாகக் கல்லூரியில் சேர்ந்தனர். பெரும்பாலான அமெரிக்கக் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிகக் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். பன்னிரண்டாம் வகுப்புவரை இலவசமாகப் பயின்று பின் பெரும் பொருட்செலவில் பட்டப்படிப்பு மேற்கொள்வது என்பது, எளிய நடத்தர மக்களுக்கு எளிதல்ல. பல மாணவர்கள் கல்லூரிகளில் உள்ள விடுதியில் தங்கித்தான் படிப்பார்கள். இது போன்ற பிற செலவுகளுக்கு அதிக நிதி உதவிகள் தேவைப்படுகிறது. இதனால் அவர்கள் பணத்தைச் சேமிக்கும் வரை கல்லூரி படிப்பைத் தாமதப்படுத்துவார்கள். உதவித்தொகையைப் பெறவும், பிற வேலைகளைச் செய்தும் சேமிக்கத் தொடங்குவர். சில மாணவர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருந்தாலும் கூட ஒரு சில ஆண்டுகள் கழித்துத்தான் கல்லூரியில் சேருகின்றனர். அந்த இடைவெளியில் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட படிப்புத் துறையில் ஈடுபடுவதற்கு முன் தங்கள் தொழில் ஆர்வங்களை ஆராய நேரம் ஒதுக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் எதிர்கால இலக்குகளில் தெளிவு பெற, வேலை செய்ய, பயணம் செய்ய அல்லது செய்முறை தொழில் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மூத்த மகளும் உடனே கல்லூரியில் சேரவில்லை. ஓர் ஆண்டு கழித்துத்தான் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு எப்போதும் கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மாநிலமாகும். உலகின் பல்வேறு நாடுகளுக்குத் தமிழகத்திலிருந்து சென்று வேலை செய்து குடிபெயர்ந்துள்ளனர். சராசரியாக பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களில் 80% சதவீதம் பேர் இளங்கலை பட்டப் படிப்புவரை செல்வது வழக்கம். ஆனால், தற்போது இந்தியாவின் "யுமிஸ்" (UMIS) (பல்கலைக்கழக தகவல் அமைப்பு) தரவுகளின்படி தமிழ்நாட்டில் 40% சதவீதம் மாணவர்கள் கல்லூரியில் சேரவில்லை என்பது புலனாகிறது. தமிழ் நாட்டில் தரமான கல்லூரிகள் இருந்தும் மாணவர்கள் சேராமல் இருப்பதற்கு அவர்களின் பொருளாதார பின்னடைவுகளைத் தாண்டியும் பல காரணங்கள் உண்டு. குடும்ப சவால்கள், சமூகக் கட்டமைப்பு, பொருளாதாரத் தேக்கம், பொது நுழைவுத் தேர்வுகள், வணிகமயமாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் எனக் கூறலாம். ஏழை நடுத்தர மாணவர்கள் உயர்கல்வியை நோக்கி நகர போதிய ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும். குடும்ப சவால்கள் அவர்களை வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன. பொதுத் தேர்வுகள்மூலம் கல்வியை மையப்படுத்துவது உலகளவில் பல நாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். இந்த தரப்படுத்தப்பட்ட தேர்வுகள் மாணவர்களின் கல்வித் திறனையும் உயர்கல்விக்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்கும் ஒரே மாதிரியான அளவுகோலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்த அணுகுமுறை மாணவர்களுக்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் சில விளைவுகளை ஏற்படுத்துகிறது. அனைத்து மாணவர்களின் கல்விப் பின்னணி, அவர்கள் படித்த பள்ளிகளைக் கருத்தில் கொள்ளாமல், ஒரே மாதிரியாக மதிப்பிடுவதற்கான தரப்படுத்தப்பட்ட பொதுவான தேர்வுகள் நடைபெறுகின்றன. இது வேறுபட்ட தர நிர்ணய முறைகள் பாடத்திட்டங்களிலிருந்து எழக்கூடிய சார்புகளைக் குறைக்க உதவுகிறது. தொலைதூர கிராமங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் வளர்ந்த நகரங்களில் உள்ள மாணவர்களுக்கும் கல்வித் தரங்கள் வேறுபடுகின்றன. பள்ளிக்கல்வி கட்டமைப்பும், ஆசிரியர்களின் பின் புலமும், பாடத்திட்டங்களும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும், மாநிலத்தில் உள்ள எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. அரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் என இங்குப் பாடம் கற்பிக்கும் வழிமுறைகள் பலவாறாக உள்ளன. எனினும் கல்லூரிகளில் சேர்வதற்கு மட்டும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வுகள் என்பது மாணவர்களிடையே கடின உழைப்பு, மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும், இது அவர்களின் திடமனத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கிறது. இந்தத் தேர்வுகள் பெரும்பாலும் ஒரே நாளில் மாணவர்களின் அவர்கள் அளிக்கும் பதில்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுகின்றன. இது அவர்களின் உண்மையான அறிவாற்றலையும் திறனையும் துல்லியமாகப் பிரதிபலிப்பதில்லை. குறிப்பாக அதிகப் பணம் செலுத்திச் சிறப்புப் பயிற்சி பெறும் மாணவர்கள் அந்தத் தேர்வில் விரைவாகத் தேர்ச்சி பெறுகிறார்கள். இது கல்விகற்றலின் புரிதலையும் பகுத்தாய்வு செய்யும் திறனையும் கட்டுப்படுத்தி, அவர்களின் படைப்பாற்றளையும் தொலை நோக்கு சிந்தனைத் திறன்களையும் வெளிக்கொணராமல் மாய்த்துவிடக்கூடும். பொதுத் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டிலும் கலை, அறிவியல், உடற்கல்வி, சமூக திறன் மேம்பாடு போன்ற கல்வியின் மற்ற முக்கிய அம்சங்களை வெளிக்கொணர ஏற்பாடுகள் செய்யலாம். மிகவும் சமநிலையான அணுகுமுறைக்குத் தொடர்ச்சியான பாட மதிப்பீடுகள், கல்வி இலாகாக்கள் மூலம் நேர்காணல்கள் எனப் பல மதிப்பீட்டு முறைகளை பொதுத் தேர்வுகளுக்கு மாற்றாகப் பரிசீலிக்கலாம். இது ஒரு மாணவரின் தனித்திறன், செய்திறனைப் பற்றிய முழுமையான பார்வையை ஊக்குவிக்கவும், தேவையற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், மேலும் சமமான கல்விச் சூழலை மேம்படுத்தவும் உதவும். போதுத் தேர்வில் தொடர்புடைய ஏற்றத்தாழ்வுகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்ய அரசுகள் முயல வேண்டும். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எவ்வாறு தொழில்ரீதியாக வெற்றிபெற முடியும் என்பது குறித்த விழிப்புணர்வை அறிஞர்களும், இலாப நோக்கற்ற நிறுவனங்களும் ஊர் ஊராக முகாம்கள் அமைத்து கற்பிக்க வேண்டும்! கல்லூரிகளில் சேராதவர்கள் எந்த ஒரு தீய வழிகளிலும் செல்லாமல் நல்லதொரு சமுதாயத்தை நோக்கிப் பயணிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்!
– முருகவேலு வைத்தியநாதன், மேரிலாந்து ,அமெரிக்கா |
||||||||
by Swathi on 04 Sep 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|