|
||||||||
கடலூர் தேவநாதன் எனும், ஒரு 'தமிழ் ழகரப் பைத்திய தாத்தா'நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும் |
||||||||
பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைகளில் மடக்கி பழக்க வேண்டிய பயிற்சி'தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்த தமிழின்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற பாவேந்தரின் வரிகளை, பி.சுசீலாவின் குரலில் கேட்கும்போது, காதினில் தேன் வந்து பாயும்.
ஆனால், இன்றைய பாடகர்கள், நடிகர்கள், வானொலி, தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் சிலரின் நாவில், தமிழ்... 'டமிலாகவும், தமிலாகவும், தமிளாகவும்' உருமாறி, படாதபாடு படுகிறது.
அவர்களுக்கு, அவர்களின் ஒலிப்புத் தவறைச் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பாளர்களாகிய சில தமிழறிஞர்களின் பேச்சு கூட, தமிழன்னையின் காதில் செங்குருதியைத்தான் வரவழைக்கிறது.
இந்த தவறை யார் சுட்டிக் காட்டுவது?
'தாய்க்கொரு பிழை நேர்ந்தால் மகற்கல்லவோ... தமிழே, உனக்கொரு பிழை நேர்ந்தால் எமக்கல்லவோ?'
என, உள்ளம் வருந்தி, உச்சரிப்புப் பிழை திருத்துவதே என் பணி என உறுதி பூண்டு, ?? ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளிகளுக்கும், மேடைகளுக்கும் ஓடியோடி திருத்தும், கடலூர் தேவநாதன் எனும், ஒரு 'தமிழ் ழகரப் பைத்திய தாத்தா'வை, சென்னை ஆயிரம் விளக்கில் சந்தித்தோம்.
வறுமையிலும் செம்மைசிறியதொரு அறை, வீடாய் மாறி இருக்க, இருமலையே தமிழாய் சுரம்பிரிக்க, 83 வயதான அந்த தமிழ்த் தாத்தாவின் சொல்லில், அர்ஜுனனின் அம்புக்குரிய வேகமும், தர்மனின் முடிவுக்குரிய விவேகமும் இருக்கின்றன.
தேவநாதன், தமிழில் பட்டம் பெற்றவரோ, தமிழ்த் துறையில் வேலை பார்த்தவரோ... அல்ல. அவர், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து, சாதாரண அரசுப் பணியில் சேர்ந்து, 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்.
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், தென் மாவட்டத்தில் வேலை பார்த்தபோது, படித்தவர், பாமரர் என்ற வேறுபாடில்லாமல், அவர் சந்தித்தவர்களில், 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள், 'ழ'கரத்தை 'ள'; 'ல'கரமாக மாற்றி உச்சரித்திருக்கின்றனர்.
மழையை 'மலை' என்றும், வாழையை 'வாலை' என்றும், கிழவியைக் 'கிளவி' என்றும்... இன்னும், எண்ணற்ற சொற்களை ஒலி மாற்றிப் பேசி, தாம் பேசுவதே சரியான தமிழ் எனவும் வாதிட்டிருக்கின்றனர்.
பிறகு, ஒருநாள், தன்னையும் அறியாமல், தேவநாதனின் நாவிலும், அந்த எழுத்துக்கள் பிறழ ஆரம்பித்திருக்கின்றன.
உடனடியாக, இடமாறுதல் வாங்கிக் கொண்டு, தமது கடலூர் மாவட்டத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறார்.
ழகரம் சுத்தமாகப் பேச, என்ன பயிற்சி எடுத்துக் கொண்டீர்கள் என்றால், ''என் தாய், தந்தை, ஊர் மக்கள் சுத்தமாகப் பேசினர்; நானும் அவ்வாறே பேசுகிறேன். செந்தமிழும் நாப்பழக்கம் என்பது இதுதான்,'' என்கிறார்.
''சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டில், முக்கால் வாசிப்பேர், தமிழை சரியாக உச்சரிப்பதில்லை,'' என, குமுறுகிறார்.'வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறோம்? வராத விருந்தாளியை, வா... வா என்றழைப்பதால், யாருக்கு என்ன லாபம்' என்பவர்களோடு, அவரால் இணங்க முடியவில்லை.
அதெப்படி, ''ஆங்கிலத்தை, வெள்ளைக்காரனைப் போல் பேசத் துடிப்பவர்கள், தமிழை, தமிழனை போல் பேசாவிட்டால், விட முடியுமா?'' எனச் சீறுகிறார்.
மொழி வாழ...''ஒரு மொழியை அதிக காலம் வாழ வைப்பது, எழுத்துக்களோ; நூல்களோ அல்ல. அந்த மொழியைச் சுத்தமாகப் பேசும் மக்கள் தான்,'' என, பிடிவாதம் பிடிக்கிறார்.
அவர், 15 ஆண்டுகளுக்கு முன், 'ழகரப் பணி மன்றம்' என்ற, அமைப்பைத் தோற்றுவித்து, ஆர்வம் உள்ளவர்களுக்கு, இன்றும், அழகுத் தமிழ் பழக்குகிறார்.
''தமிழைப் பிழை இன்றி பேசுவது ஒன்றும், கம்ப சூத்திரம் இல்லை. கொஞ்சம் ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். நாவைக் கட்டுப்படுத்தும் சூத்திரத்தை அறிந்து, முயன்றால், இரண்டே மணி நேரத்தில், நல்ல தமிழ் நாவில் விளையாட ஆரம்பிக்கும்,'' என்கிறார்.
நுனி நாக்கை உள் மடித்து, மேல் அண்ணத்தில் படாமல் காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும். அதே நாவை, நடு அண்ணத்தில் வைத்து, 'ழ்' என்று காற்று விட்டால், 'ள்' பிறக்கும்.
நாவை, மேல் வரிசை பல்லில் வைத்து, உச்சரித்தால், 'ல்' பிறந்து விடுவதாக, அழகுத் தமிழ் பழக்குகிறார்.
துண்டு சீட்டு''நுனி நாக்கை, நடு அண்ணத்தின் மீது வைத்து, பழகும்போது, 'ற்' பிறக்கும்.
பல் வரிசைக்கு அருகில் வைத்துப் பழகினால், 'ர்' பிறந்து விடும்.
நுனி நாக்கை, நடு அண்ணத்தின் மீது வைத்து உச்சரித்தால், 'ண்' பிறந்து விடும்.
நடு அண்ணத்திற்கும், பல்வரிசைக்கும் இடையில் நாவை வைத்தால், 'ன்' பிறந்து விடும்.
'ந்' பல்வரிசையில் நாவை வைத்து உச்சரிக்கும்போது பிறக்கிறது.
இந்த எளிமையான சூத்திரத்தைக் கற்று, பழகினால், செந்தமிழால் சிந்து பாடலாம்,'' என்கிறார்.
இதற்காகவே, உச்சரிப்புப் பிழை செய்யும் தமிழறிஞர்களின் கூட்டங்களுக்கு சென்று, 'தமிழுக்கு உங்கள் தூய தொண்டு தேவை, தமிழை திருத்தமாக பேசுங்கள்' என்ற, துண்டு சீட்டோடு நிற்கிறார். பலர் திருந்தி இருக்கின்றனர்; சிலர் வருந்தி இருக்கின்றனர். வருந்தி திருந்தியோர், அடுத்தவர்களை அழைத்து வந்திருக்கின்றனர்.
அப்படி நிறைய மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறார் இவர்.சிலர், புதிய கிளை மன்றங்களைத் திறந்திருக்கின்றனர்.
ழகரப் பணி கிளை மன்றங்கள், அந்தமான், போடி நாயக்கனூர், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஆகிய நான்கு இடங்களில், தமிழ்ப் பணி ஆற்றுகின்றன.
நன்றாக 'ழகரம்' பேசுவோருக்கு, விருது களையும், சான்றிதழ்களையும் அளித்து, ழகரப் பணி மன்றத்தினர் கவுரவிக்கின்றனர்.
தமிழ் வாழ கோரிக்கை'தமிழ்' என்பதை, 'TAMIL' எனவும், 'தமிழ்நாடு' என்பதை, 'TAMILNADU' எனவும் எழுதுவது பிழை. அவை முறையே, 'THAMIZH, THAMIZHNAADU' என, மாற்றப்பட வேண்டும் என, தமிழக அரசிடம் தொடர்ந்து, 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளார்.
பள்ளி மாணவர்களின், அறிவியல் தமிழ் பாடத்தில், தமிழ் ஒலிப்பு முறை பற்றிய படம், திருத்தப்பட வேண்டும் என்ற இவரின் நெடு நாளைய கோரிக்கை நிறைவேறி இருப்பதே, இவருக்கான நம்பிக்கையைத் தருகிறது.
தமிழ் பற்றி பேச, தமிழ் அறிஞர் தேவை இல்லை. தமிழ் உணர்வு இருந்தாலே போதும். ஆனாலும், 'செம்மொளித் தமில் பேசும் தமிலா, நீ தமிலன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று, வீண் பெருமை பேசுபவர்களால், தமிழ் தலை குனிந்து தான் அழும். |
||||||||
by Swathi on 22 Jun 2014 1 Comments | ||||||||
Tags: Tamil Lakara Paithiyam Thatha Cuddalore Devanathan Serve Tamil கூடலூர் தேவநாதன் தமிழ் ழகரப் பைத்திய தாத்தா | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|