|
|||||
கீழடியில் வாழ்ந்த தொல்தமிழர் முகங்கள் வடிவமைப்பு |
|||||
![]()
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டப் பொருள்கள், தங்கப் பொருட்கள் ,வேட்டைக்குப் பயன்படுத்தக்கூடிய பொருள்கள், மரபுசார் கட்டிடக்கலை, யானை தந்ததால் செய்யப்பட்ட பொருள்கள் ,விரல் அளவு பானைகள், ஆட்டக் காய்கள், வட்டச் சில்லுகள், மண்பாண்டங்கள் ,முதுமக்கள் தாழிகள் ,சுடுமண் சிற்பங்கள் ,நாணயங்கள் ,தங்க அணிகலன்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. அவை கீழடியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகமாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தற்போது கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறையுடன் இணைந்து டிஎன்ஏ ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது கீழடி, கொந்தகையில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முகங்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். கணினி உதவியுடன் கூடிய 3டி முக புனரமைப்பு முறையைப் பயன்படுத்தி, இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இவற்றை உருவாக்கியுள்ளனர். மண்டை ஓடுகளின் கீழ் தாடைகள் இல்லாததால், மண்டை அளவீடுகள் மற்றும் தளங்களிலிருந்து கீழ்த்தாடைகளின் வடிவங்களை மதிப்பிடுவதற்கு எலும்பியல் தரநிலைகளைப் பயன்படுத்தியதாக இந்நிறுவனத்தின் பேராசிரியர் வில்கின்சன் கூறினார்.
இது குறித்து காமராஜ் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறை பேராசிரியர் ஜி.குமரேசன் கூறுகையில், "மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் படங்களைப் பெற்ற பிறகு, தசை, கொழுப்பு, மற்றும் தோலை மீண்டும் உருவாக்க மின்னிலக்கச் சிற்பத்தை உருவாக்கினோம். 80% அறிவியல், 20% கலைப்பூர்வமாக முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல் தேய்மான முறைகள், எலும்பு இணைவு கோடுகளின் வெளிப்பாடு, எலும்பின் பொதுவான அளவு போன்ற பல அளவுகோல்கள் ஒருவரின் வயதை நமக்குக் கூற முடியும்" என்று கூறினார்.
கொந்தகையில் கிடைத்த எலும்புக்கூடுகள் சுமார் 50 வயதுடையவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.மேலும் கொந்தகையில் 11 எலும்புக்கூடுகளின் உயரத்தை மட்டுமே மதிப்பிட முடிந்தது. கொந்தகை மக்களின் உயரத்தை அளவிட இது போதுமானதாக இல்லாவிட்டாலும், ஆண்களின் சராசரி உயரம் 170.82 செ.மீ (5 அடி 7 அங்குலம்), பெண்களின் உயரம் 157.74 செ.மீ (5 அடி 2 அங்குலம்) என்று தெரியவந்து உள்ளது. மேலும் டி.என்.ஏ பகுப்பாய்வு மூலம் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறியத் திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
|
|||||
by hemavathi on 29 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|