|
||||||||||||||||||
வெளியே சொல்லாதே… |
||||||||||||||||||
![]()
கடற்கரைக்குப் போயிருக்கிறீங்களா? கடலலைகள் எழுந்து விழுறதைப் பார்த்திருக்கிறீங்களா? அலைகள் ஏன் எம்பி எம்பிக் குதிச்சோடி வருது? அது ஒரு பெரிய கதை. அந்தக் கதைதான் இந்தக் கதை.
முதலில் இந்த அலைகள் யார்ணு சொல்லணுமே.... அவை கடலம்மாவோட மக்கள். அப்படீண்ணா அலைக்குழந்தைகளோட அப்பா யார் தெரியுமா? இப்பூமிக்கே தந்தையான சூரியன். சூரியன் ரொம்ப உயரத்தில் வான வீட்டில் அல்லவா வசிக்கிறாரு. நம் அலைக்குழந்தைகளுக்கு அப்பாவைப் பாக்கணும்ணு ஆசை வரும். அப்பாவைப் பாக்ககப்போகும்போது நீலப்போர்வை விரிச்சமாதிரி இருக்கும் வானத்தை சுத்திப் பாக்கலாமே. அப்படீண்ணு நெனச்சுக்குவாங்க.
இந்த ஆசை வந்துட்டாப்போதும் கடலம்மாவோட ஈடுப்பில் உட்காந்துகிட்டே அப்பாவைப் பாத்து கைகளை நீட்டும். ஆனால் எட்டாது. அப்பாவைப் பாக்கணும்ணு அலைக்குழந்தைக முயற்சி பண்றதைப் பாத்த கடலம்மா "உங்க அப்பா ரொம்ப உயரத்தில் இருக்கிறாரு. அவரை எட்டிப் பாக்கத்தான் முடியுமே தவிர எட்டிப் பிடிக்க முடியாது'' ணு சொல்லுவாங்க. ஆனால் அம்மா சொல்றதை எந்தக் குழந்தையாவது கேட்டிருக்குதா?
"அம்மா சொல்றது பொய்... பெரிய பெரிய கப்பல்களை எல்லாம் நாம் இந்தப் பிஞ்சுக் கைகளால் பந்து போல் தட்டி விளையாடியிருக்கோம். சின்ன படகுகளையும் தோணிகளையும் தூக்கியெறிந்து பிடித்து விளையாடற எங்களால அப்பாவைப் பாக்க முடியாதா?'' அலைக்குழந்தைகள் அவங்களுக்குள்ளே பேசிக்குவாங்க.
பலதடவை முயற்சி செஞ்ச பிறகுதான் அலைக்குழந்தைகளுக்கு ஓர் உண்மை புரிஞ்சுது. இப்படி அம்மா மடியில் உட்காந்துகிட்டு சங்கு புங்குணு குதிச்சா அப்பாவைப் பாக்க முடியாது. வேறு ஏதாவது செய்யணும். என்ன செய்யலாம்ணு? அலைக் குழந்தைகள் யோசிக்கத் தொடங்கினங்க.
"அப்பாவோட ஊருக்கு இந்த உருவத்தில் போக முடியாது. அதற்கு உருவம் மாறணும். அப்போதுதான் அந்த ஊருக்குள்ளே நொழைய முடியும்ணு'' ஒரு அலை சொல்லிச்சு
"வேடத்தை மாத்தி ஆரும் பாக்க முடியாத மாதிரி ஆவியாகிப்போகணும். அதுக்குச் துணிச்சல் உள்ளவங்க வரலாம்ணு" ஒரு துணிச்சல்காரி அலை சொல்ல நாங்க வர்றோம்ணு கொஞ்சம் பேர் தாயாரானாங்க. கொஞ்சம்பேர் சந்தேகப்பட்டு, பயப்பட்டு தயங்கி நிண்ணாங்க.
அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் அலைக்குழந்தைகள் நீராவியாக வேடம் மாறினாங்க. அப்பாவை பார்க்கறதுக்காக தங்கள் பயணத்தைத் தொடங்கினாங்க.
வானத்திலே உயர்ந்துபோன அலைக் குழந்தைகள் கீழே பார்த்தாங்க ஆகா.எத்தனை அழகான காட்சிகள்...!
அவங்க அம்மாவான கடலம்மாவோட நெஞ்சில் தத்தித் தவழும் அவங்களோட தம்பி தங்கைகளைப் பாக்கப் பாக்க அவர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியல.
அவர்கள் உற்சாகமா சிரிக்க முயற்சி செய்தபோதுதான் அதைக் கண்டுபிடிச்சாங்க. அவங்க உடம்போட எடை ரொம்ப குறைஞ்சிருக்கு ஆகா... பஞ்சு போல் எங்கும் பறந்து திரியலாம்....
அவர்கள் மேலும் உயர உயரப் பறக்கத் தொடங்கினாங்க. அதுக்குள்ளே ஒரு அலைக்குழந்தை "இங்கே பாருங்கள் நம் ஒடம்போட நிறம் மாறிருச்சு. கருத்துப் போய்விட்டோம்ணு" பயத்தோடு கூவிச்சு.
அது மட்டுமல்ல உடம்புக்கு இப்போது எடை கூடிணது மாதிரியும் இருக்கு இதுவரை பயணம் செஞ்ச மாதிரி இனி போக முடியாது போலிருக்குதே... அப்படீண்ணு நெனச்சாங்க. அவங்க எல்லாரும் கொஞ்ச நேரம் ஒரே இடத்திலே ஒண்ணு சேந்து நிண்ணாங்க.
அப்போ அவ்வழியே ஒருத்தரு வந்தாரு. அவர் அலைக்குழந்தைகளுக்கு நல்லா தெரிஞ்சவரு. அவரு வேறு யாருமல்ல. காத்து மாமா...
காத்து மாமாவோட உதவியாலே அங்கும் இங்கும் சுத்தினாங்க. ஆனால் மாமாவுக்கு இவங்களையும் இழுத்துக்கிட்டு நடப்பது சிரமமாகத் தெரிஞ்சது. அவர் நீராவியாக மாறிய அலைக்குழந்தைகளை அங்கேயே விட்டுட்டு அவர் பாட்டுக்கு போய்ட்டாரு.
அந்தரத்தில இருந்த அலைக்குழந்தைகளோட மனசில மெல்ல மெல்ல பயம் வந்து நிறைஞ்சுது. நம்ம அம்மாவும் தம்பி தங்கைகளும் ரொம்ப தொலைவில் இருக்காங்க. அப்பாவைப் பாக்கலாம்ணு வந்தா அவரும் எட்ட முடியாத தூரத்தில இருக்காரு. இப்ப என்ன செய்றது? அம்மா பேச்சைக் கேட்காமல் புறப்பட்டது தப்பாயிருச்சா? இப்படி நெனக்க நெனைக்க அவங்களுக்கு அழுகை முட்டிக்கிட்டு வந்துச்சு அவங்க ஒண்ணாச் சேந்து அழத் தொடங்கினாங்க.
அழ அழ அவங்களோட உருவம் மாறுவதைக் அவங்க உணர்ந்தாங்க. உருண்டு திரண்டு.. முத்துப் போல மாறிட்டாங்க. அப்படி மாறிட்டாதலே அவங்களாலலே வான வீதியிலே நடக்க முடியாமப் போச்சு எல்லாரும் கீழே விழத்தொடங்கினாங்க.
கொஞ்சம் பேர் தரையில் விழுந்தாங்க. கொஞ்சம் பேர் வீட்டு மேல விழுந்தாங்க. கொஞ்சம் பேர் மரத்து மேலே விழுந்தாங்க அப்படி விழுந்தவங்க கொஞ்சம்பேர் பூமிக்குள்ளே போய்ட்டாங்க. கொஞ்சம் பேர் அம்மாவைப் பாக்க ஓடத் தொடங்கினாங்க. ஒருவழியா காடு மேடு சுத்தி கடலம்மாகிட்ட போய்ச் சேந்தாங்க.
அவங்களைக் கண்டதும் அவங்களோட தம்பி தங்கச்சிக ஓடி வந்தாங்க "என்னாச்சு... அப்பாவைப் பார்த்தீங்களா? அவரு என்ன சொன்னாரு? எங்களையெல்லாம் கேட்டாரா..? " அப்படீண்ணு கேட்டாங்க.
.
இக்கேள்விகளைக் கேட்டு பயணம் போன பாவம் அலைக் குழந்தைகள் என்ன சொல்லும்? அப்பாவைப் பார்க்கமால் ஏமாந்து வந்துவிட்டோம்ணு சொன்னால் அவங்க நம்மைக் கேலிசெய்வாங்களேணு நெனச்சாங்க.
"நம் அப்பா எவ்வளவு அழகானவர் தெரியுமா? அப்பாவின் மாளிகையை நீங்கள் பாக்கணுமே. அவ்வளவு பெரிய மாளிகை இந்த ஒலகத்திலேயே இல்லை...'' அப்படீண்ணு சொன்னாங்க.
பயணம் போகாத அலைக்குழந்தைகள் ஆச்சரியத்தோடு வாயைப் பிளந்தபடி கேட்டுக்கிட்டிருந்தாங்க.
இவங்க பேசறத அவங்க அப்பாவும் கேட்டுக்கிட்டிருந்தாரு. அவங்க அப்பாங்கறது யார்ணு ஞாபகம் இருக்கா. நம்ம சூரியன்.
அலைக்குழந்தைகளோட முயற்சி தோத்துப்போனதில் அவருக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆனா என்ன செய்றது? அலைக்குழந்தைகளை எப்படி சிரிக்க வைக்கறதுண்ணு யோசிச்சாரு சூரியன்.
"அலைக்குழந்தைகளோட முயற்சிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? என்னைப் பாக்கத்தானே வந்தாங்க.. நான் வேறு ரொம்ப அழகாக இருக்கிறேன்ணு வேற சொல்லியிருக்காங்க அவங்க சொன்னது உண்மைதாண்ணு காட்டணும்ணு" நெனச்சாரு.
அவரும் மாறுவேஷம் போட்டாரு. ரொம்ப அழகானவராகக் காட்சி தந்தார். அதுதான் வானவில். வானவில்லைப் பார்த்த அலைக் குழந்தைகள் சந்தோஷத்தோட எம்பி எம்பிக் குதிச்சாங்க.
நீங்க வானவில்லைப் பாத்திருக்கிக்கீங்களா. மழை பெய்த உடனே வெயிலடிக்கும்போது வெளியே வந்து சூரியனுக்கு எதிரான தெசையில் பாருங்க. வானவில்ல பாக்கலாம். உங்களுக்கும் வானவில்லை ரொம்ப புடிக்கும்.
கடற்கரைக்குப் போயிருக்கிறீங்களா?. கடல் அலைகள் எழுந்து விழுறதைப் பார்த்திருக்கிறீங்களா? அலைகள் ஏன் எம்பி எம்பிக் குதிச்சோடி வருகிறது?.அது ஒரு பெரிய கதை. அந்தக் கதைதான் இந்தக் கதை.
|
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|