LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- எம்.எஸ்.உதயமூர்த்தி

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழகத்தின் ஒரு தலைசிறந்த சிந்தனையாளர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி  இறந்து (21/01/13)  இன்றோடு ஓராண்டு ஆகிறது. சென்னை திருவான்மியூரில் கடந்த வருடம் அவர் இறந்த போது அவருக்கு வயது 80. "உன்னால் முடியும் தம்பி" என்ற தாரக மந்திரத்தைச் சொல்லி இளைஞர்களின் இதயத்தில் தன்னம்பிக்கைப் பயிரை விதைத்து வளர்த்தவர். செம்பனார்கோயில் பகுதிகளில் இருக்கும் வற்றிய நீர்நிலைகளில் தொண்டர்களுடன் சேர்ந்து தூர்வாரி நீர்வளத்தைப் பெருக்கிக் காட்டியவர். இதன் மூலம் மக்கள் எல்லாவற்றிக்கும் அரசாங்கத்தை எதிர்ப்பார்க்காமல்  சாமான்ய மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு சான்றாக விளங்கியவர். இவரது இந்த செயலுக்கு பிறகுதான் பல கிராமங்களில் மக்கள் அரசை எதிர்பார்க்காமல் தாங்களே தங்களது கிராமத்திற்கான பாதையை போட்டுக் கொண்டனர்; சாலையை சீரமைத்துக் கொண்டனர். கோவையில் வற்றிப்போய் பிளாஸ்டிக் எனும் விஷக்கிடங்காக மாறியிருந்த குளங்களை மக்களே ஒன்று சேர்ந்து தூர் வாரியதெல்லாம் இந்த மக்கள் சக்தி இயக்குனரின் கனவு மெய்ப்படலே.

 

எண்ணங்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எப்படி?, உயர்மனிதனை உருவாக்கும் குணங்கள், உன்னால் முடியும் தம்பி,நீதான் தம்பி முதலமைச்சர், உலகால் அறியப்படாத ரகசியம், தலைவன் ஒரு சிந்தனை, என்னை செதுக்கிய எண்ணங்கள்   என்பது உள்ளிட்ட எத்தனையோ நூல்களை எழுதி இளைஞர்களை நல்வழிப்படுத்தியவர். இவரின் “எண்ணங்கள்” புத்தகம் கிட்டத்தட்ட 10 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ் சமூகம் தலை நிமிர  வாழ்வின் இறுதி மூச்சுவரை சமூகத்திற்காக சிந்தித்தவர், உழைத்தவர். இன்று தன்னம்பிகையாய் நடைபோட்டு சமூக அக்கறையுடன் களப்பணி செய்யும் இளைஞர்கள் பெரும்பாலும் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் தாக்கம் இல்லாமல் இருக்க முடியாது. 25 ஆண்டு கால அமெரிக்க தொழில் அதிபர் வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு நாட்டுப்பற்று காரணமாக தாயகம் திரும்பியவர், நதிகளை இணைப்பதன் மூலம் நாட்டை வளம் கொழிக்கச் செய்யலாம் என்று விரும்பியவர். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு கெஜ்ரிவால் போலவும், அன்னா ஹசாரே போலவும் தூய்மையான அரசியலுக்கு அடிகோலியவர் ஆனால் இங்கு உள்ள அரசியல் வியாதிகளின் நரி தந்திரத்தின் காரணமாகவும், மூளை மழுங்கடிக்கப்பட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டார். இன்று உள்ள இந்த விழிப்புணர்வு அன்று இருந்திருந்தால் இவருக்கு பின்னால் தமிழகம் அணிதிரண்டிருக்கும். நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என்று நம்பியவர். இளைஞர்களை தவறான திசையில் செல்லாமல் நெறிப்படுத்த எழுத்து மூலமும், பேச்சு மூலமும், தொடர் சுயமுன்னேற்றப் பயிலரங்கம் மூலமும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். பல சுய முன்னேற்ற நூலாசிரியர்களுக்கு சந்தேகமே இல்லாமல் இவரே முன்னோடியாவார். "ஐயாவின் நூல்கள்தான் என்னை வழிநடத்தியவை" என்று இன்றைக்கும் பலர் நெஞ்சாரக் கூறுவதை கேட்கமுடியும். கிராமத்தில் பிறந்த முதல் பட்டதாரி மாணவர்கள் பலர் இவரின் நூல்களைப் படித்து தொழில் துறையிலும், வாழ்க்கையிலும் பல்வேறு வெற்றிகளை ஈட்டி இன்று வெற்றியாளர்களாக இருப்பதே இதற்கு சான்று.  இயக்குனர் பாலசந்தர் உதயமூர்த்தியின் மேல் உள்ள அபிமானத்தினால் அவரின் சமூக சிந்தனையை சித்தரிக்கும் நோக்கில் "உன்னால் முடியும் தம்பி" என்கிற படத்தை எடுத்ததுடன் படத்தின் நாயகனுக்கு உதயமூர்த்தி என்றும் பெயரிட்டார்.  இளைஞர்கள் ஒருமுறை பார்க்கவேண்டிய படம் "உன்னால் முடியும் தம்பி".

 

அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய மூவருடனும் பழகி அமெரிக்க வளர்ச்சியை அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்கள் குறித்து நூல் எழுதியவர். தமிழர்களின் காவிரிப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை, மதுவிலக்கு, நதிநீர் இணைப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மிகவும் தெளிவான சிந்தனையுடன் களப்பணி செய்தவர். சமூக அக்கறை உள்ள இளைஞர்கள் இவரது நூல்களை ஒருமுறை படித்தால் இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் அதற்கான தெளிவான தீர்வையும் பற்றிய தெளிவு கிடைக்கும்.  அறிஞர் அண்ணாவை யேல் பல்கலைக்கழகம் அழைத்து கவுரவிக்க காரணமாக இருந்தவர். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது பாமரர்கள்  அவரை ஏற்றுக்கொண்டார்கள், இன்னும் படித்தவர்கள் எம்ஜிஆர்-யை  சினிமாக்காரர் என்று பார்க்கிறார்கள், எனவே என்ன செய்யாலாம் என்று ஆலோசித்தபோது இதயம் பேசுகிறது மணியன் அவர்களால்,டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எம்ஜிஆரை-பற்றி எழுதினால் படித்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நிலையில் எம்ஜிஆரை-அமெரிக்காவில் சந்தித்து, நாட்டை வளப்படுத்தும் விபரங்களை சொல்லி அதுகுறித்து தொடர் எழுதியவர்.    தமிழக அரசால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.அரசியல் என்பது சாக்கடை அல்ல அது நல்லவர்கள் ஒதுங்கிப் போனதால் ஏற்பட்ட அவலம், அதை நல்லவர்கள் இறங்கி வேலைசெய்து, நல்லவர்களுக்காக மக்கள் வாக்கு அளிக்கும்போது மாற்றலாம் என்ற நோக்கில் மதுரை மத்திய தொகுதியில் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் வேட்பாளராக அரசியலில் நின்றவர்.

 

அவரது தேர்தல் பிரச்சாரத்தில், "என்னிடம் நிறைய பணம் இருக்கிறது ஆகவே மக்கள் பணத்தை தொடமாட்டேன், என்னிடம் உள்ள ஆற்றலை, அறிவை உங்களுக்கு செலவிட சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரம் தேவை. என்னைத் தேர்ந்து எடுப்பதன் மூலம் ஒரு நேர்மையாளனை தேர்ந்து எடுக்கிறீர்கள், என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம் நதிகளை தேசியமயமாக்கவேண்டும் என்ற குரலை வலுப்படுத்துகிறீர்கள், என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம் இந்த நாட்டிற்கு நல்ல பல இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கான பாதையை அமைத்து தருகிறீர்கள்" என்று எதார்த்தமாகப் பேசினார். அரசியலுக்கு வருபவர்கள் நன்கு படித்து, அதன்மூலம் சுய வளர்ச்சி பெற்று, வாழ்க்கையை நடத்த தேவையான பொருளாதார வசதியை ஏற்படுத்திக்கொண்டு பிறகு சமூகப் பணி செய்ய அரசியலுக்கு வாருங்கள் என்று கூறினார்.  வாழ்க்கையில் சுயத் தேவைகள் பூர்த்தி அடையாமல் சமூக சேவை செய்ய வருவதும், தேவையான தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் அரசியலுக்கு வருவதுமே ஊழல், பொது சொந்தத்தில் கைவைத்தல் போன்ற அவலங்களுக்குக் காரணம் என்று முழங்கியவர். எனவே சுய வளர்ச்சி- சுய முன்னேற்றம்  - சமுதாய ஈடுபாடு என்ற மூன்று நிலைகளை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறியவர். நல்ல சிந்தனை உள்ளவர்களே சுய ஒழுக்கம் உள்ள, மக்களை வழிநடத்தும் திறமை கொண்ட தலைவனாக வரமுடியும் என்பதை அறிவுருத்தியவர்.

 

ஓரு நல்லவர், வல்லவர் அரசியலில் கலந்து கெட்டுப்போய்விடக்கூடாது என்று மக்கள் நினைத்ததாலோ என்னவோ அவரால் அந்த தேர்தலில் ஜெயிக்கமுடியவில்லை. ஆனாலும் தோற்றபின் முதல் ஆளாக தொகுதியில் வலம்வந்து நன்றி கூறினார்.

 

அவர் அடிக்கடி கீழ்காணும் மூன்று கருத்துக்களை தொடர்ந்து வலியுறுத்தினார்:

1.நாம் இந்த மண்ணிலே பிறந்ததிற்கு இந்த மண்ணிற்கு ஏதாவது நல்லது செய்தாக வேண்டும்.

2.நாம் இந்த மண்ணை விட்டு செல்லும்போது சில நல்ல அடையாளங்களை இந்த மண்ணில் விட்டு விட்டு , செல்ல வேண்டும்.

3.நமக்கும்,பிறருக்கும்,இந்த சமுதாயத்திற்க்கும் ஆன வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை.உனக்காக மட்டும் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

 

அவர் இந்த மண்ணில் ஆழ விதைத்த விதைகள் இன்னும் பூமியில் முளைத்து வருகிறது. உலகம் முழுதும் அவரின் நூல்களைப் படித்த முன்னேறிய இளைஞர்கள் அவர் கனவுகண்ட அந்த வளமான தமிழகத்தை உருவாக்கும் எண்ணத்துடன் காத்துக்கொண்டுள்ளார்கள். இதற்கு ஒரு உதாரணமாக சமீபத்தில் இவரது நூல்களைப் படித்து அவருடனேயே அவரது இறுதி மூச்சு வரை பயணித்த  செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ என்ற இரு மக்கள் சக்தி இயக்க  இளைஞர்கள் "சட்டப் பஞ்சாயத்து இயக்கம்" என்ற ஒன்றை திரு. சகாயம் ஐஏஸ் அவர்களை சிறப்பு அழைப்பாளராக வைத்து ஆரம்பித்து அதை எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கு அர்ப்பணித்ததை அறிந்திருப்பீர்கள்... எதிர்கால தமிழகத்தின் வளர்ச்சிக்கு இவர் விதைத்துச் சென்றுள்ள வீரிய மிகு விதைகள் தொடர்ந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து தெளிவான சிந்தனையுடன் தமிழகத்தின் அரசியல், சமூக அவலங்களை போக்க காரணமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

 

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும் இன்றைக்கும், என்றைக்கும்.

 

 

டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தியின் நூல்கள் மற்றும் புகைப்படங்களை இங்கே காணலாம்.

http://www.valaitamil.com/dr-m-s-udhayamurthy-photopg242-562-54

 

 

-இலக்கியன்

 

 

 

eb16
by Swathi   on 20 Jan 2014  0 Comments
Tags: MS Udhayamurthy   First Anniversary   டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி   எம்.எஸ்.உதயமூர்த்தி           
 தொடர்புடையவை-Related Articles
இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய் ?  டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்திக்கு ஒரு எழுத்தாஞ்சலி - செந்தில் ஆறுமுகம் இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய் ? டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்திக்கு ஒரு எழுத்தாஞ்சலி - செந்தில் ஆறுமுகம்
நெகிழ வைத்தார் பாலசந்தர் !.. - எம்.எஸ்.உதயமூர்த்தி நெகிழ வைத்தார் பாலசந்தர் !.. - எம்.எஸ்.உதயமூர்த்தி
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.