|
||||||||||||||||||
சங்க இலக்கியத்தில் கல்வி - தமிழ் மைந்தன் ஜான் ரிச்சர்டு, லெட்டர்கென்னி, அயர்லாந்து |
||||||||||||||||||
![]() தமிழ்ச் சங்க இலக்கியப் பாடல்கள் நுணுக்கமான செய்திகளை நச்சென்று நான்கு வரியிலோ அல்லது இரு வரியிலோ கூறியவை. அத்தகைய நுணுக்கமான கவிதைகளை எழுதுவதற்கு நீண்ட வாசிப்பும், சிறந்த அறிவாற்றலும் இருந்திருக்க வேண்டும். அது கல்வியின் வழியே தான் கிடைத்திருக்க வேண்டும். இத்தகைய கல்வி குறித்து சங்க இலக்கியங்கள் கூறியவை என்ன என்பது குறித்த தேடலின் விளைவு கீழே காணும் கட்டுரை.
"கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை"
என்பார் உலகப் பொதுமறை தந்த பேராசான் திருவள்ளுவர். வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, ஒரு மனிதன் தன் வாழ்வில் பெறவேண்டிய செல்வங்களில் முதன்மையான செல்வம் கல்விச் செல்வமே என்பது தமிழ் கூறும் நல்வழியாகும்.
சங்கத் தமிழ் இலக்கியப் பாடல்களில் பொதிந்திருக்கும் உட்கூறுகளும், மிக நுட்பமான செய்திகளும், சமூக, அறிவியல், மருத்துவ, வானவியல் அறிவுக் களஞ்சியங்களும், அதை இயற்றிப் பாடிய புலவர் பெருமக்கள் மிகப் பெருங் கல்வி பயின்று நுட்பமான அறிவாற்றலைப் பெற்றவராகவே திகழ்ந்திருக்கின்றனர் என்பதும் தெளிவாகப் புரியும்.
மேலும், சங்க காலத் தமிழ் மரபில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் சரிநிகர் சமமாகக் கல்வி பயின்று, பெரும் திறன் கொண்டு விளங்கினர் என்பதைப் பெண்பாற் புலவர்களான ஒளவையார், காக்கை பாடினியார், பொன்முடியார், வெண்ணிக் குயத்தியார், பெருங்கோப்பெண்டு, ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி, மாற்பித்தியாார், மாறோக்கத்து நப்பசலையார், வெறிபாடிய காமக்கண்ணியார் ஆகியோரின் தமிழ்ப் புலமை வழியாக அறியலாம்.
மொழி ஆற்றல் மட்டுமன்றி, எல்லாத் துறைகளிலுமே கல்வியில் சிறந்துக் கோலோச்சிய தமிழ்ச் சான்றோர்கள் படைத்த படைப்பிலக்கியங்களில் கல்வி குறித்த செய்திக் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அத்தகையக் குறிப்புகளில் ஒரு சிலவற்றையேனும் தொகுத்தளிக்க முற்படுகிறேன்.
அறியாமை என்னும் கொடுநோயை போக்கவல்லது கல்வி ஒன்றேயாகும். இதனைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியார் பின்வருமாறு உரைக்கிறது.
"இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து"- (நாலடியார் 132)
மேலும்,
"குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு" - (நாலடியர் 131)
சீராக வாரப்பட்ட தலைமுடியின் அழகும், வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும் மஞ்சட் பூச்சின் அழகும் மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல; நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு - நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று தம் மனம் அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால் மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும், என்ற விளக்கி கல்வியுடைமையின் சிறப்பை அழகாக எடுத்து இயம்புகிறது.
திருக்குறள் படைத்த பெருமகனார், தமிழ்ப் பேராசான் வள்ளுவர், கல்வியின் சிறப்பை அதிகாரம் நாற்பதில் அழகாக விளக்குகிறார்.
கல்வி அதிகாரத்தின் முதல் குறளாக அமைவது,
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"- (குறள் 391)
ஒருவர் தாம் கற்பவற்றை தவறில்லாமல் கற்று அதன்படி ஒழுகி வாழ வேண்டுமென்று அறிவுறுத்துக் கூறுகிறார். கல்வி அதிகாரம் கல்வியின் சிறப்பாக எடுத்துரைக்கிறது.
வெற்றிவேற்கையில் அதிவீரராமபாண்டியர்,
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”
என்று வலியுறுத்திக் கூறுகிறார். ஆக, மண்ணில் ஒருவர் இருந்து வாழக்கூடிய ஏழ்மை நிலை அடைந்தாலும், தான் கல்வி கற்கும் நற்செயலை நிறுத்தி விடுதல் கூடாது என்று நமக்கு விளக்கிக் கூறுவது தெள்ளெனப் புரியும்.
பெண்பாற் புலவர்களில் ஒருவரான பெருமாட்டியார் ஒளவையார் மூதுரையில்,
"கவையாகி கொம்பாகி காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சபை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதான் நின்றான் மரம்"
எனக் காடுகளில் உயர்ந்து வளர்ந்திருக்கும் மரங்களெல்லாம் மரங்களல்ல. மாறாக நன்குக் கற்றறிந்த சபையின் நடுவே, ஓலைச் சுவடியில் எழுதப் பெற்றிருக்கும் செய்தியை வாசிக்க மாட்டாதவன், மரத்திற்கு ஒப்பானவன் என்று கல்லாதோரை இடித்துரைக்கிறார்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான, அரையனார் என்ற புலவர் பெருந்தகை இயற்றிய பழமொழி நானூற்றில், கல்வி கற்க வேண்டிய இளமைப் பருவத்தை
"ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்"
என்று எடுத்துரைக்கிறார்.
அதாவது, ஒருவர் தன் ஓடத்தில் ஏறி ஆற்றைக் கடந்த பின் ஓடத்திற்கான கூலியைக் கேட்க மாட்டார். அதைப் போலவே கல்வியைக் கற்றற்குரிய இளமைக் காலத்தில் கல்லாதவன் முதுமையடைந்த பின் கற்று வல்லவனாதல் இயலாது என்று எடுத்தியம்புகிறார்.
இவ்வாறாக, கல்வியின் அவசியத் தேவையை எடுத்துரைக்கும் சங்கத் தமிழ் இலக்கியங்கள் கற்றோரின் சிறப்பையும் எடுத்துக் கூறத் தவறுவதில்லை.
திருக்குறளில்,
“கண்உடையார் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண் உடையார் கல்லாதவர்” (குறள்-395)
என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
கற்றவர்க்குக் கல்வியே பெரும் அழகைக் கொடுக்கும். அவர்கள் வேறு அணிகலன்கள் ஏதும் அணியவேண்டாம். கற்றவர்கள் மேலும் அணிகலன்களை அணிந்துகொண்டு தம்மை அழகுபடுத்த விரும்புவது நன்கு வடிவமைத்த அணிகலனை மேலும் அழகுபடுத்துவதைப் போன்றது ஆகும் என்பதை நீதிநெறி விளக்கத்தில் குமரகுருபரர் பின்வருமாறு பாடுகிறார்..
"கற்றார்க்குக் கல்வி நலனே கலன்அல்லால்
மற்றுஓர் அணிகலம் வேண்டாவாம்; முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா; யாரே
அழகுக்கு அழகு செய்வார்"
இதைப் பற்றிய சிந்தனையையே நான்மணிக்கடிகையில் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.
“கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
புற்கந்தீர்த்து இவ்வுலகின் கோளுணரும்-கோளுணர்ந்தால்
தத்துவமான நெறிபடரும் அந்நெறி
இப்பால் உலகின் இசைநிறீஇ-உப்பால்
உயர்ந்த உலகம் புகும்”
இதைப் போன்ற, கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கும் சங்க இலக்கியப் பாடல்கள் தமிழ் மொழியில் வெள்ளமென நிறைந்திருக்கின்றன.
இத்தகைய அறிவுரைகளே, நம் முன்னோரைக் கல்வி கற்கத் தூண்டியிருக்கின்றன. தமிழ்ப் புலவர் பெருந்தகையரின் அறிவுரையை ஏற்று கேள்விச் செல்வத்தைத் தன்பால் புகுத்தி நம் முன்னோரும் சிறப்புற்று வாழ்ந்து, கல்வியின் விழுதுகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர். இத்தகைய அறிவிற் சிறந்த முன்னோரின் வழி வந்த நாம், கல்வியின் சிறப்பை எத்திக்கும் எடுத்துரைத்து, கல்வியால் சிறந்து புகழ் பெற்று வாழ்தல் அவசியமன்றோ?
"கற்றது கைமண்ணளவு
கல்லாதது உலகளவு"
என்பதையுணர்ந்து நாள்தோறும் புதியவை கற்போம். நாம் கற்பதைப் பிறருக்கும் பகிர்வோம்.
கல்வி நமது உரிமை, கற்பது நமது கடமை!
தமிழ்ச் சங்க இலக்கியப் பாடல்கள் நுணுக்கமான செய்திகளை நச்சென்று நான்கு வரியிலோ அல்லது இரு வரியிலோ கூறியவை. அத்தகைய நுணுக்கமான கவிதைகளை எழுதுவதற்கு நீண்ட வாசிப்பும், சிறந்த அறிவாற்றலும் இருந்திருக்க வேண்டும். அது கல்வியின் வழியே தான் கிடைத்திருக்க வேண்டும். இத்தகைய கல்வி குறித்து சங்க இலக்கியங்கள் கூறியவை என்ன என்பது குறித்த தேடலின் விளைவு கீழே காணும் கட்டுரை. "கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவர்க்குமாடல்ல மற்றை யவை" என்பார் உலகப் பொதுமறை தந்த பேராசான் திருவள்ளுவர். வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, ஒரு மனிதன் தன் வாழ்வில் பெறவேண்டிய செல்வங்களில் முதன்மையான செல்வம் கல்விச் செல்வமே என்பது தமிழ் கூறும் நல்வழியாகும்.
திருக்குறளில்,
|
||||||||||||||||||
by hemavathi on 08 Apr 2025 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|