LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பதினோராம் திருமுறை-11

5.2. திருஈங்கோய்மலை எழுபது



402     அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்
இன்ன தென அறியா ஈங்கோயே - ஓங்காரம்
அன்னதென நின்றான் மலை.     1

403     
அந்தஇள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்
கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் - சந்தின்
இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேரு
மலைவளைக்கை வில்லி மலை.     2

404     
அம்பள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்
செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி - கொம்பின்
இறுதலையி னாற்கிளைக்கும் ஈங்கோயே நம்மேல்
மறுதலைநோய் தீர்ப்பான் மலை.     3

405     
அரிகரியைக் கண்டவிடத் தச்சலிப்பாய் ஓடப்
பிரிவரிய தன்பிடியைப் பேணிக் - கரிபெரிதும்
கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே
மையடுத்த கண்டன் மலை.     4

406     
அரியும் உழுவையும் ஆளியுமே ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் - சொரிய
எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே கூற்றம்
திரியாமற் செற்றான் சிலம்பு.     5

407     
ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடுதொடரும் மாக்குறவர் - கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.     6

408     
இடுதினைதின் வேழங் கடியக் குறவர்
வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற - நெடுநெடென
நீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே ஏங்குமணி
பூண்டகழை யேறி பொருப்பு.     7

409     
ஈன்ற குறமகளிர்க் கேழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங் - கூன்றவைத்
தென்னன்னை உண்ணென் றெடுத்துரைக்கும் ஈங்கோயே
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.     8

410     
ஈன்ற குழவிக்கு மந்தி இறுவரை மேல்
நான்ற நறவத்தைத் தான்நணுகித் - தோன்ற
விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல்
வரலாம்நோய் தீர்ப்பான் மலை.     9

411     
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப்
பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் -கண்டிருந்த
மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே
பூமயிலி தாதை பொருப்பு.     10

412     
ஊடிப் பிடியுறங்க ஒண்கதலி வண்கனிகள்
நாடிக் களிறு நயந்தெடுத்துக் - கூடிக்
குணமருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர்
குணமருட்டுங் கோளரவன் குன்று.     11

413     
எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக்
கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள்
சென்றன்று வென்றான் சிலம்பு.     12

414     
ஏழை இளமாதே என்னொடுநீ போதென்று
கூழை முதுவேடன் கொண்டுபோய் - வேழ
இனைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம்
வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.     13

415     
ஏனம் உழுத புழுதி இனமணியைக்
கானவர்தம் மக்கள் கனலென்னக் - கூனல்
இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே நம்மேல்
மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.     14

416     
ஏனங் கிளைத்த இனபவள மாமணிகள்
கானல் எரிபரப்பக் கண்டஞ்சி - யானை
இனம்இரிய முல்லைநகும் ஈங்கோயே நம்மேல்
வினைஇரியச் செற்றுகந்தான் வெற்பு.     15

417     
ஒருகணையுங் கேழல் உயிர்செகுத்துக் கையில்
இருகணையும் ஆனைமேல் எய்ய - அருகணையும்
ஆளரிதான் ஓட அரிவெருவும் ஈங்கோயே
கோளரிக்கும் காண்பரியான் குன்று.     16

418     
ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவத் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில்
தழையிறுத்துக் கொண்டேச்சும் ஈங்கோயே சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று.     17

419     
ஓடும் முகிலை உகிரால் இறஊன்றி
மாடுபுக வான்கை மிகமடுத்து - நீடருவி
மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே
கோச்சீயம் காண்பரியான் குன்று.     18

420     
கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்
உண்டு குளிர்ந்திலஎன் றூடிப்போய்க் -கொண்டல்
இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு
மறைக்கீறு கண்டான் மலை.     19

421     
கருங்களிற்றின் வெண்கொம்பால் கல்லுரல்வாய் நல்லார்
பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன்
கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே
மைக்கொணருங் கண்டன் மலை.     20

422     
கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க
நனைய கலத்துரத்தில் ஏந்தி - மனைகள்
வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார்
குரவரும்பு செஞ்சடையான் குன்று.     21

423     
கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச்
சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு - மடக்கிளிகள்
கீதந் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல்கீழ்நால்
வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு.     22

424     
கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம்
இறுத்துக்கை நீட்டும்ஈங் கோயே - செறுத்த
கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த
விடமிடற்றி னான்மருவும் வெற்பு.     23

425     
கங்குல் இரைதேரும் காகோ தரங்கேழற்
கொம்பி னிடைக் கிடந்த கூர்மணியைப் - பொங்கி
உருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன்
வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.     24

426     
கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா
திலைகைக்கொண் டேந்திக்கால் வீச - உலவிச்சென்
றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.     25

427     
கன்னிப் பிடிமுதுகிற் கப்பருவ முட்பருகி
அன்னைக் குடிவர லாறஞ்சிப் - பின்னரே
ஏன்தருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே நீங்காத
மான்தரித்த கையான் மலை.     26

428     
கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை
கொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் -துள்ளி
இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம்
மனக்கவலை தீர்ப்பான் மலை.     27

429     
கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக்
கொல்லை எழுந்த கொழும்புறவின் - முல்லையங்கள்
பல்லரும்பு மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும்
கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.     28

430     
கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட
எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி - வல்லே
இருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப்
பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.     29

431     
கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல்
வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் -தண்கோ
டிளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம்
விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.     30

432     
காந்தளங் கைத்தளங்கள் காட்டக் களிமஞ்ஞை
கூந்தல் விரித்தடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி
ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
கார்க்கொன்றை ஏற்றான் கடறு.     31

433     
குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குத்தி
நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் - சிறுகுறவர்
கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே
மைந்நீட்டுங் கண்டன் மலை.     32

434     
கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய
ஏழை இளமந்தி சென்றிருந்து - வாழை
இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே இஞ்சி
சிலையால்தான் செற்றான் சிலம்பு.     33

435     
கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை
மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண் - டொல்லை
இருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய்
வருங்கைக் களைவான் மலை.     34

436     
கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்
கவ்வைக் கடிபிடிக்கும் காதன்மையாற் -செவ்வை
எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர்
குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.     35

437     
கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல்
படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி - நெடுநாகம்
தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே தாழ்சடைமேல்
வண்டூன்றுந் தாரான் மலை.     36

438     
கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல் விளையாடி - வேங்கை
வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை.     37

439     
சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை
மந்த மடப்பிடியின் வாய்க்கொடுப்ப - வந்ததன்
கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே
விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.     38

440     
சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து
கொந்திஇனி துண்ணக் குறமகளிர் - மந்தி
இளமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின்
வளமகளிர் பாகன் மலை.     39

441     
சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி
சேரத் தருக்கி மதுக்கலந்து - வீரத்
தமர்இனிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே இன்பக்
குமரன்முது தாதையர் குன்று.     40

442     
தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம்
வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் - தீயோங்கிக்
கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கொன்றைத் தாரான் வரை.     41

443     
செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப்
பிடியட்ட மாக்களிறு பேர்ந்து - கடம்முட்டி
என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்தழலிற்
பொன்னேர் அனையான் பொருப்பு.     42

444     
சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப்
புனைநீடு பொன்னிறத்த வண்டு - மனைநீடி
மன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம்
சென்னி அணிந்தான் சிலம்பு.     43

445     
செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி - பந்தியாத்
தேக்கிலைகள் இட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே
மாக்கலைகள் வைத்தான் மலை.     44

446     
தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுந்தங் கின்நறவம் மாந்தி - உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே
கோக்குரவை ஆடிகொழுங் குன்று.     45

447     
தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள்தகையத்
தாமரையிற் பாய்ந்துகளும் தண்புறவில் - தாமரையின்
ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும்
வாட்டங்கள் தீர்ப்பான் மலை.     46

448     
தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய்
வள்ளவட்டப் பாழி மடலேறி -வெள்ளகட்ட
காராமை கண்படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச்
சேராமற் செற்றான் சிலம்பு.     47

449     
தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து - வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு.     48

450     
தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின்
கானமர்கற் பேரழகு கண்குளிர - மேனின்
றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர்
வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.     49

451     
தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல்
ஓகை செறியாயத் தோடாட - நாகம்
இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல்
வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.     50

452     
நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம்
இறவி லியங்குவான் பார்த்துக் - குறவர்
இரைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கை
விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.     51

453     
நாக முழைநுழைந்த நாகம்போய் நன்வனத்தில்
நாகம் விழுங்க நடுக்குற்று -நாகந்தான்
மாக்கையால் மஞ்சுரிக்கும் ஈங்கோயே ஓங்கியசெந்
தீக்கையால் ஏந்தி சிலம்பு.     52

454     
நாகங் களிறுநு(ங்)க நல்லுழுவை தாமரையின்
ஆகந் தழுவி அசைவெய்த - மேகங்
கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே ஓங்கு
பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.     53

455     
பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை
கணவ னிடந்திட்ட கட்டி - உணவேண்டி
எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கங்கை ஏற்றான் மலை.     54

456     
பன்றி பருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித்
தென்றி மணிகிடப்பத் தீயென்று - கன்றிக்
கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர்
மருவரியான் மன்னும் மலை.     55

457     
பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த செம்முகமாத் - தேறிக்கொண்
டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.     56

458     
பிடிபிரிந்த வேழம் பெருந்திசைதான் கோடிப்
படிமுகிலைப் பல்காலும் பார்த்திட் - டிடரா
இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர்
குருவருட்குன் றாய்நின்றான் குன்று.     57

459     
பொருத கரியின் முரிமருப்பிற் போந்து
சொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் - கருமந்தி
முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும்
திக்குகக்கச் செற்றான் சிலம்பு.     58

460     
மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்
குறவர் சிறார்குடங்கைக் கொண்டு - நறவம்
இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே மூன்று
வளவெயில்தீ யிட்டான் மலை.     59

461     
மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.     60

462     
மரையதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்த
புரையிதணம் பூங்கொடியார் புக்கு -நுரைசிறந்த
இன்நறவுண் டாடி இசைமுரலும் ஈங்கோயே
பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.     61

463     
மலையர் கிளிகடிய மற்றப் புறமே
கலைகள் வருவனகள் கண்டு -சிலையை
இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே மாதைப்
புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.     62

464     
மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறஒளிர்
முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் - அத்தகைய
ஏனற் புனம்நீடும் ஈங்கோயே தேங்குபுனல்
கூனற் பிறையணிந்தான் குன்று.     63

465     
மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல்
முந்தி இருந்து முறைமுறையே - நந்தி
அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம்
வளைந்தோடச் செற்றான் மலை.     64

466     
மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண்
முந்திப் பறித்த முறியதனுள் -சிந்திப்போய்த்
தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே செஞ்சடைமேல்
வானாறு வைத்தான் மலை.     65

467     
முள்ளார்ந்த வெள்ளிலவம் ஏறி வெறியாது
கள்ளார்ந்த பூப்படியும் கார்மயில்தான் - ஒள்ளார்
எரிநடுவுட் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே
புரிநெடுநூல் மார்பன் பொருப்பு.     66

468     
வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை
அளைந்து வடுப்படுப்பான் வேண்டி - இளந்தென்றல்
எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்பு
வில்லிக்குக் கூற்றானான் வெற்பு.     67

469     
வான மதிதடவல் உற்ற இளமந்தி
கான முதுவேயின் கண்ணேறித் - தானங்
கிருந்துயரக் கைநீட்டும் ஈங்கோயே நம்மேல்
வருந்துயரந் தீர்ப்பான் மலை.     68

470     
வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து
காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப - வேயணைத்து
மாப்பிடிமுன் ஓட்டும்ஈங் கோயே மறைபரவு
பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.     69

471     
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகிய தென் றஞ்சிமுது மந்தி -பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.     70


திருச்சிற்றம்பலம்

by   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.