LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பதினோராம் திருமுறை-22

7.2. சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை



வெண்பா

535     அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் -அந்தியில்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.     1

கட்டளைக் கலித்துறை

536     மிடற்றாழ் கடல்நெஞ்சம் வைக்கின்ற ஞான்றுமெல் லோதிநல்லாள்
மடற்றா மரைக்கைகள் காத்தில வேமழு வாளதனால்
அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள் செய்தகொள்கைக்
கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண் காட்டெங் கரும்பினையே.     2

வெண்பா

537     கருப்புச் சிலைஅநங்கன் கட்டழகு சுட்ட
நெருப்புத் திருநெற்றி நாட்டம் - திருச்சடையில்
திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி
எங்கள் இமையோர் இறைக்கு.     3

கட்டளைக் கலித்துறை

538     இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லாரெருக்கு
நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர் சென்னிப்
பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும்
குறைக்கோ வணம்ஒழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.     4

வெண்பா

539     இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில்
முல்லை கமழும் முதுகுன்றில் - கொல்லை
விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற்
சடையானைச் சாராதார் தாம்.     5

கட்டளைக் கலித்துறை

540     தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத்
தாமரைக் கோவணத் தோடிரந் துண்ணினும் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுல காளத் தருவர் கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச் சங்கரரே.     6

வெண்பா

541     சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்
பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் -கங்கை
வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல்
பெரியரா வாரோ பிறர்.     7

கட்டளைக் கலித்துறை

542     பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின் பேரருளின்
சிறப்பார் திருக்கை தரக்கிற்றி யேதிரி யும்புரமூன்
றறப்பாய் எரியுற வான்வரை வில்வளைத் தாய்இரவாய்
மறப்பா வரியர நாண்இடைக் கோத்தகை வானவனே.     8

வெண்பா

543     வானம் மணிமுகடா மால்வரையே தூணாக
ஆன பெரும்பார் அரங்காகக் - கானகத்தில்
அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர்
எம்மானுக் கெய்தா திடம்.     9

கட்டளைக் கலித்துறை

544     இடப்பா கமும்உடை யாள்வரை யீன்இள வஞ்சியன்ன
மடப்பால் மொழியென்பர் நின்வலப் பாகத்து மான்மழுவும்
விடப்பா சனக்கச்சும் இச்சைப் படநீ றணிந்துமிக்க
கடப்பார் களிற்றுரி கொண்டெங்கும் மூடும்எங் கண்ணுதலே.     10

வெண்பா

545     கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலமில்லை- தண்ணலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ் சடைப்புனிதா
வாங்கொன்றை இன்றே மதித்து.     11

கட்டளைக் கலித்துறை

546     மதிமயங் கப்பொங்கு கோழிருட் கண்டவ விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே.     12

வெண்பா

547     கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப்
பெரிதும் பிறதிறத்துப் பேசேன் - அரிதன்றே
யாகப் பிறையான் இனியென் அகம்புகுந்து
போகப் பெறுமோ புறம்.     13

கட்டளைக் கலித்துறை

548     புறமறை யப்புரி புன்சடை விட்டெரி பொன்திகழும்
நிறமறை யத்திரு நீறு துதைந்தது நீள்கடல்நஞ்சு
உறமறை யக்கொண்ட கண்டமும் சால உறப்புடைத்தால்
அறமறை யச்சொல்லி வைத்தையம் வேண்டும் அடிகளுக்கே.     14

வெண்பா

549     அடியோமைத் தாங்கியோ ஆடை உடுத்தோ
குடியோம்ப மாநிதியங் கொண்டோ - பொடியாடு
நெற்றியூர் வாளரவ நீள்சடையாய் நின்னூரை
ஒற்றியூர் ஆக்கிற் றுரை.     15

கட்டளைக் கலித்துறை

550     உரைவந் துறும்பதத் தேஉரை மின்கள்அன் றாயின்இப்பால்
நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்நன் முத்திடறித்
திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கைவன்றாள்
வரைவந் துறுங்கடல் மாமறைக் காட்டெம் மணியினையே.     16

வெண்பா

551     மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை
அணியமர ரோடயனும் மாலும்- துணிசினத்த
செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று
நஞ்சூட்ட எண்ணியவா நன்று.     17

கட்டளைக் கலித்துறை

552     நன்றைக் குறும்இருமற்பெரு மூச்சுநண் ணாத முன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி யாதறி வீர்செறிமின்
கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய் பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக் கொள்மின்களே.     18

வெண்பா

553     கொண்ட பலிநுமக்கும் கொய்தார் குமரர்க்கும்
புண்டரிக மாதினுக்கும் போதுமே- மண்டி
உயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய் ஈர்ப்ப
மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.     19

கட்டளைக் கலித்துறை

554     வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம்
அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந் தேனுழக்கிச்
செந்தா மரைச்செவ்வி காட்டும் திருவடிக் குஞ்செல்லுமே
எந்தாய் அடித்தொண்டர் ஓடிப் பிடித்திட்ட இன்மலரே.     20

வெண்பா

555     மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும் - கலந்திருந்து
கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன்
தெண்ணீர் சடைக்கரந்த தே.     21

கட்டளைக் கலித்துறை

556     தேவனைப் பூதப் படையனைக் கோதைக் திருவிதழிப்
பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்ற
மூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறை
நாவனை நான்மற வேன்இவை நான்வல்ல ஞானங்களே.     22

வெண்பா

557     நானும்என் நல்குரவும் நல்காதார் பல்கடையில்
கானிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் - வானவர்கள்
தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூர்த்த
எம்பெருமான் என்னா இயல்பு.     23

கட்டளைக் கலித்துறை

558     இயலிசை நாடக மாய்எழு வேலைக ளாய் வழுவாப்
புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழு தாகிநின்ற
மயிலியல் மாமறைக் காடர்வெண் காடர்வெண் தில்லை மல்கு
கயலியல் கண்ணியங் கார்அன்பர் சித்தத் தடங்குவரே.     24

வெண்பா

559     அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று
மடங்காதல் என்வளைகொள் வார்த்தை - நுடங்கிடையீர்
ஊருரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே
ஆருரன் செல்லுமா றங்கு.     25

கட்டளைக் கலித்துறை

560     அங்கை மறித்தவ ரால்அவி உண்ணும்அவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.     26

வெண்பா

561     நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம்
கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ - வட்டுக்
கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த
கொடுங்குன்றப் பேயின் கொடிறு.     27

கட்டளைக் கலித்துறை

562     கொடிறு முரித்தன்ன கூன்தாள் அலவன் குருகினஞ்சென்
றிடறுங் கழனிப் பழனத் தரசை எழிலிமையோர்
படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவை நஞ்சம்
மிடறு தடுத்தது வும்அடி யேங்கள் விதிவசமே.     28

வெண்பா

563     விதிகரந்த செய்வினையேன் மென்குழற்கே வாளா
மதுகரமே எத்துக்கு வந்தாய் - நதிகரந்த
கொட்டுக்காட் டான்சடைமேல் கொன்றைக்குறுந் தெரியல்
தொட்டுக்காட் டாய்சுழல்வாய் தொக்கு.     29

கட்டளைக் கலித்துறை

564     தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந் தேநிலவும்
நக்கு வருங்கண்ணி சூடிவந் தார்நறும் புன்னைமுன்னம்
அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு
மிக்கு வரும்வரும் போதவ ரைக்காண வெள்குவனே.     30

வெண்பா

565     வெள்காதே உண்பலிக்கு வெண்டலைகொண் டூர்திரிந்தால்
எள்காரே வானவர்கள் எம்பெருமான் -வள்கூர்
வடதிருவீ ரட்டானத் தென்அதிகை மங்கைக்
குடதிருவீ ரட்டானங் கூறு.     31

கட்டளைக் கலித்துறை

566     கூறு பெறுங்கண்ணி சேர்கருங் கூந்தல்சுண் ணந்துதைந்து
நீறு பெறுந்திரு மேனி நெருப்புப் புரைபொருப்பொத்
தாறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன் துவலைசிந்த
வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்கு வெண்ணிறமே.     32

வெண்பா

567     நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா
புறம்புறமே நாள்போக்கு வாளோ - நறுந்தேன்
படுமுடியாப் பாய்நீர் பரந்தொழுகு பாண்டிக்
கொடிமுடியாய் என்றன் கொடி.     33

கட்டளைக் கலித்துறை

568     கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்டக் கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறும்அஞ்சி நஞ்சம்இருந்தநின் கண்டத்தையே.     34

வெண்பா

569     கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ்
சுண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் - தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகுவரே தீக்கொடுமை
பேசுவரே மற்றொருவர் பேச்சு.     35

கட்டளைக் கலித்துறை

570     பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடு காட்டயலே
தீச்சுற்ற வந்துநின் றாடல் என் னாஞ்செப்பு முப்பொழுதும்
கோச்சுற்ற மாக்குடை வானவர் கோன்அயன் மால்முதலா
மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே.     36

வெண்பா

571     மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாள்அரக்கன்
துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் -தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்
திருச்சத்தி முற்றத்தான் தேசு.     37


திருச்சிற்றம்பலம்

by   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.